திவிகழக கூட்டங்கள்

‘சித்தோடு’ கிளைக் கழகம் நடத்திய ஜாதி எதிர்ப்பு கூட்டம்
திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு (தெற்கு) மாவட்டம் சித்தோடு கிளைக் கழக சார்பில் “எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம் இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும்” என்ற முழக்கத்துடன் மற்றும் “கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்” சித்தோடு அருகில் உள்ள ஜே.ஜே நகரில் 21.02.2016 மாலை 6.30 மணி யளவில் சங்கர் தலைமையில், எழிலன் முன்னிலை யில் நடைபெற்றது. கூட்டத்தின் துவக்கத்தில் முருகேசன் பெரியாரியல் பாடல்கள் பாடினார். காவலாண்டியூர் சித்துசாமி மற்றும் ஈசுவரன் ஆகியோர் கொள்கை விளக்க உரையாற்றினர். தொடர்ந்து காவை இளவரசன், “மந்திரமல்ல தந்திரமே” நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.
அதைத் தொடர்ந்து வீரன் (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) சிறப்பானதொரு உரை நிகழ்த்தினார். நிறைவாக கோபி வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். கூட்ட துவக்க முதல் இறுதி வரை மக்கள் திரளாக இருந்து நிகழ்ச்சியை கேட்டனர். கமலக்கண்ணன் நன்றியுரை கூற கூட்டம் நிறைவு பெற்றது.
ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் சன்முகப் பிரியன், அமைப்பாளர் குமார், பொருளாளர் கிருட்டிண மூர்த்தி, நகரச் செயலாளர் சிவானந்தம், அரங்கம்பாளையம் கிருட்டிணன், பிரபு பெருமாள் மலை ராசன்னா, செல்வம், முருகன், சித்தோடு சி.எம். நகர் பிரபு, சி.மேட்டுப்பாளையம் கைலாசம், கொங்கம்பாளையம் சத்தியராஜ், ராஜேஷ் மற்றும் காஞ்சிக் கோவில் தோழர்களும் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர். கழகத்தின் அறிமுகக் கூட்டம் இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

குமரி மாவட்டத்தில் ‘காதலர் நாள்’ கொண்டாட்டம்
திராவிடர் விடுதலைக் கழகம், குமரி மாவட்டம் சார்பாக மாவட்டத் தலைவர் வே.சதா தலைமை யில் 14-02-2016 காலை10.00 மணிக்கு அவருடைய இல்லத்தில் ‘காதலர் தின விழா – சாதி ஒழிப்பு நாளாக’க் கொண்டாடப்பட்டது. கழகத் தோழர் தமிழ்மதி மற்றும் அவரின் வாழ்விணையர் தமிழ்ச் செல்வி ஆகியோர் கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். தமிழ்மதி, “சாதியை ஒழிக்கவே சாதி ஒழிப்பு நாள் திராவிடர் விடுதலைக் கழகத் தால் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது” என்று விளக்கி பேசினார். நிகழ்வில் மஞ்சு குமார், இராஜே° குமார், சகிலா பொன் மலர், அ. மணி கண்டன், இராசேந்திரன், சூசையப்பா ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

சங்கராபுரத்தில் காதலர் தினத்தில் ஜாதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
பிப்ரவரி 14, காதலர் தினத்தை முன்னிட்டு ஜாதிய ஆணவ படுகொலைகளை கண்டித்து, விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 13.2.2016 சனிக்கிழமை மாலை 3 மணி யளவில் சங்கராபுரம் அருகே பகண்டை கூட்டுச் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழக அரசையும் காவல்துறையையும் வலியுறுத்தி கீழ்க்கண்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
• ஜாதி மறுப்பு காதலர்களுக்கு தனி பாதுகாப்பு சட்டம் இயற்று.
• ஜாதி மறுப்பு தம்பதியர்களின் குழந்தைகளுக்கு அரசு மற்றும் தனியார் துறையில் தனி இட ஒதுக்கீடு வழங்கு.
• ஜாதி ஆணவ படுகொலையில் ஈடுபடுபவர் களை தண்டிக்க கடுமையான சட்டம் இயற்று.
• வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலிமை யோடு நடைமுறைப்படுத்து.
கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ந. தமிழ்க்குமரன் தலைமை தாங்கினார். மா. குமார் வரவேற்புரையாற்றினார். தமிழ் படைப்பாளர் சங்கத்தின் தலைவர் குறிஞ்சி அரங்க. செம்பியன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட தலைவர்
வே. ஏழுமலை, துணை தலைவர் இரா. பூமாலை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்ந்த சிகாமணி, விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர்
ச.கு. பெரியார் வெங்கட், கழக மாவட்ட அமைப்பாளர் தெ.செ. நாவப்பிள்ளை, ந. வெற்றி வேல், க. ராமர் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மு.நாகராஜ், வீ. முருகன், ரா. முருகன், ரா. வெங்கடேசன், செ.வே. ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட துணை செயலாளர் ம. குப்புசாமி நன்றியுரையாற்றினார்.

பெரியார் முழக்கம் 25022016 இதழ்

You may also like...