மெக்காலே மீட்டுத் தந்த கல்வி உரிமை!

பிரிட்டிஷ் ஆட்சியில் வைதீக வெறி பிடித்த பார்ப்பனர்கள், பார்ப்பனர்களுக்கு மட்டும் சமஸ்கிருத கல்லூரியை ஏற்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த அழுத்தத்தினால் பிரிட்டிஷ் ஆட்சி காசியில் ஒரு சமஸ்கிருத பள்ளியைத் தொடங்கி, அடுத்து கல்கத்தாவிலும் ஒரு சமஸ்கிருத பள்ளியை தொடங்கும் முயற்சிகளில் இறங்கியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்து மத சீர்திருத்தவாதியும் பார்ப்பனருமான இராஜாராம்  மோகன் ராய், “சமஸ்கிருதக் கல்வியானது இந்தியாவை என்றென்றும் இருளில் ஆழ்த்திவிடும். இந்திய குடிமக்களின் முன்னேற்றத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு அக்கறை இருக்குமானால் கணிதம் இயற்கை தத்துவம், வேதியல் உடற்கூறு இயல் ஆகிய பயனுள்ள அறிவியலைக் கற்றுக் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கவர்னர்  ஜெனரலுக்கு கடிதம் எழுதினார். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் வந்தன. பல ஆண்டுகாலம் கருத்து வேறுபாடுகள் நீடித்த பிறகு, பிரிட்டிஷ் அரசு சமஸ்கிருதக் கல்வித் திட்டத்தை கைவிட்டது. இந்த துணிச்சலான முடிவை எடுத்தவர் கவர்னர் ஜெனரல். அமைச்சரவை சட்டக் குழு உறுப்பினரான தாமஸ் பேபிங்டன் மெக்காலே பிரபு (1800-1859). 1855ஆம் ஆண்டு அரசு கல்விக் கொள்கைக் குறித்து அவர் முன் வைத்த குறிப்பு மிகவும் ஆழமானது.

“பிரிட்டிஷ் அரசு மத சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிப்பதோடு அனைத்து மதத்தினரிடமும் பாகுபாடின்றி நடந்து கொள்ள வேண்டும். முக்கியமான பிரச்சினைகளில் தவறான வழிகளைப் போதிப்பதும் அற்பப் பயனை விளைவிப்பதுமான சமஸ்கிருத இலக்கியங்களைக் கற்றுக் கொடுப்பது என்பது, பகுத்தறிவுக்கும் ஒழுக்க நெறிக்கும் ஏற்புடையது அன்று. அத்தோடு அது நடுவுநிலையும் ஆகாது. சமஸ்கிருதம் வெறும் தரிசு நிலம். அதைக் கற்பதனால் அறிவு விளையாது. அதில் வானளாவிய மூட நம்பிக்கைகள் நிறைந்துள்ளன என்பதால் அந்த இலக்கியங்களைக் கற்பிக்க வேண்டும் என்று நம்மிடம் கூறுகிறார்கள். அதற்கு நாம் இசைந்தோமெனில் திரிபுபடுத்தப்பட்ட வரலாறு, தவறான வானவியல், ஏமாற்று மருத்துவம் ஆகியவற்றையே கற்பிக்க நேரிடும். இந்த மோசடிகள் நேர்மையற்ற ஒரு மதத்தின் புனித  நூல்களில் இருப்பதனால் அவை கற்பிக்கப்பட வேண்டும் என்பது மூடத்தனம். இந்தியரைக் கிறித்துவத்திற்கு மாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து நாம் விலகியே இருந்துள்ளோம். இனியும் அவ்வாறே தொடர்வோம். அதற்காக, ஒரு கழுதையைத் தொட்டுவிட்டால் சுத்தி செய்வதற்கு என்ன மந்திரங்கள் கூற வேண்டும், ஓர் ஆடு கொல்லப்பட்டால் அதற்குப் பரிகாரங்கள் எந்த வேதப் பாடலைப் பாட வேண்டும் என்பதை இளைஞர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக நாட்டின் நிதியைச் செலவிட வேண்டும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது.

இன்றைய நிலையில் நமக்கும்  நம்மால் ஆளப்படும் கோடிக்கணக்கான மக்களுக்கும் இடையே தொடர்பு ஏற்படுத்தித் தரும் ஒரு வர்க்கத்தை உருவாக்குவதற்காக சிறந்த ஒரு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நிறத்திலும் இரத்ததிலும் இந்தியர்களாகவும் ஒழுக்கத்திலும் பண்பாட்டிலும் செயல் முறையிலும் ஆங்கிலேயர்களாகவும் உள்ள ஒரு வர்க்கத்தை உருவாக்குவோம்.”

இப்படி துணிவுடன் அறிவித்தார் மெக்காலே. இந்தத் திட்டம்தான் பார்ப்பனருக்கு மட்டுமே உரிமை வழங்கிய சமஸ்கிருத கல்வி முறையை தகர்த்து, அனைவருக்குமான கல்விக்கு கதவு திறந்தது. இதற்கு மெக்காலேவுக்கு நன்றி சொல்ல வேண்டும். மெக்காலே கல்வி முறையில் மாற்றங்கள் வேண்டும் என்பது வேறு; ஆனால் அன்றைய சூழலில் இது மிகவும் முற்போக்கான நடவடிக்கைத்தான்.

பெரியார் முழக்கம் 07072016 இதழ் (பார்ப்பனிய சமஸ்கிருத எதிர்ப்பு சிறப்பிதழ்)

You may also like...