தூக்குத் தண்டனைக்கு உள்ளாவது யார்?

இந்தியாவில் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற இயக்கம் தீவிரமடைந்து வருகிறது. இராஜீவ் கொலை வழக்கில் 23 ஆண்டு காலத்துக்கும் மேலாக சிறையில் வாழும் 7 தமிழர்கள் தூக்குத் தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் சிறைவாசிகள். ஆனாலும், ஏனைய சிறைவாசி களுக்கு வழங்கப்படும் உரிமைகள் இவர்களுக்கு மட்டும் மறுக்கப்படுகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் தூக்குத் தண்டனைக்கு உள்ளாகிறவர்கள், சமூகப் பொருளாதார நிலைகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களாக இருக்கின்றனர் என்ற ஆய்வை  கடந்த வெள்ளிக் கிழமை (மே 6, 2016) டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. இதுவரை தூக்கிலிடப்பட்டவர் களில் பெரும்பான்மையினர், எழுதப் படிக்கத் தெரியாத தற்குறிகள். மதச் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் மற்றும் ஏழைகளாகவே இருப்பதை ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது.

தற்போது தூக்குத் தண்டனைக்காக காத்திருக்கும் 385 பேரில் 241 பேர் முதன்முறையாக குற்றம் செய்தவர்கள். இதில் பல இளஞ்சிறார்களும் உண்டு. இளம் சிறார்களையும் முதியவர்களையும் தூக்கிலிடக் கூடாது என்பது கொள்கை நடைமுறையாக இருந்தாலும் இளஞ்சிறார்கள் என்பதற்கான சான்றுகளைக் காட்டி இவர்களால் நிரூபிக்க முடியவில்லை. குற்றம் செய்தபோது 18 வயதுக்கும் 21 வயதுக்கும் இடையே இருந்த 54 பேர் இப்போது தூக்குத் தண்டனைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். 7 பேர் 60 வயதைக் கடந்தவர்கள். 12ஆம் வகுப்பு படிப்பைக்கூட முடிக்காதவர்களும், தலித், இஸ்லாமியர், பிற்படுத்தப்பட் டோர் மற்றும் ஏழ்மைக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர்களும் தான் இந்தத் தண்டணைக்கு உள்ளாகிறார்கள். தங்களுக்கான சிறந்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடும் வாய்ப்புகளும் இவர்களுக்கு இல்லை. இது குறித்து ‘இந்து’ ஆங்கில நாளேடு (மே 9) தலையங்கம் ஒன்றை எழுதியுள்ளது.

வசதியும் செல்வாக்கும் மிக்கவர்களுக்கே சாதகமான ஒரு நீதித் துறை அமைப்புதான் இங்கே இருக்கிறது. சமூக பொருளாதார நிலையில் கடைகோடியில் கிடக்கும் மனிதர்களே தூக்குத் தண்டனைகளுக்கு உள்ளாகிறார்கள். எனவேதான் தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்கிற கொள்கை சமூகக் கண்ணோட்டத்தில் முன் வைக்கப்படுகிறது என்று, ‘இந்து’ ஏடு, அத்தலையங்கததில் சுட்டிக் காட்டியுள்ளது.

பெரியார் முழக்கம் 12052016 இதழ்

You may also like...