பெரியாரியல் பேரொளி தோழர் பட்டுக்கோட்டை சதாசிவம் முடிவெய்தினார்
கழகத் தோழர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார் ”பட்டுக்கோட்டை சதாசிவம் !”
பெரியார் கொள்கைக்காகவே வாழ்ந்த பெரியார் பெருந்தொண்டர் பட்டுக்கோட்டை வளவன் எனும் சதாசிவம் (76), ஜனவரி 19, 2016 பிற்பகல் 3 மணியளவில் தஞ்சை மருத்துவமனையில் கழகத் தோழர்களிட மிருந்து விடைபெற்றுக் கொண்டார்.
கடந்த சில ஆண்டுகளாக திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களோடு நெருக்கமாக வாழ்ந்து வந்தார் சதாசிவம். மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் தங்கி, அவ்வப்போது கழக நிகழ்ச்சிகளுக்கும் ஊருக்கும் சென்று வருவார். கழகத் தோழர்கள் உடல்நலிவுற்ற அவருக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து வந்தனர். தஞ்சை நகராட்சியில் பணியாற்றிய காலத்திலேயே தனது சொந்த செலவில் திராவிடர் கழகம் சார்பாக கிராமப் பிரச்சாரங்களை தொடர்ந்து நடத்திய பெருமைக்குரியவர்.
இந்தப் பயணத்தின் வழியாக பல பேச்சாளர்களை உருவாக்கியவர். பரப்புரைத் திட்டங்களையும் மக்களிடம் சென்றடையத்தக்க வகையில் கருத்துகளை வடிவமைத்துத் தருவதிலும் ஆற்றல் மிக்கவர். கடும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் கொள்கை மீதான உள்ள உறுதி குலையாமல் வாழ்ந்தவர். திருக்குறளிலிலும் விரிவான ஆய்வுகள் செய்து அதில் பற்று வைத்திருந்தார்.
அண்மைக்காலமாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு,கழகம் நடத்தும் பொதுக் கூட்டங்கள், மாநாடுகள், செயலவைக் கூட்டங்கள் அனைத்திலும் உடல் நலிவைப் பொருட்படுத்தாமல் பங்கேற்று வந்தார். டிசம்பர் முதல் தேதி, சென்னை நகரை கடும் வெள்ளம் சூழ்ந்தபோது, நடந்த கழக மாநாட்டிலும் பங்கேற்று, முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து மீண்டு வந்தார். ஈரோடு, சேலத்தில் நடந்த கழக மாநாடுகளிலும் பங்கேற்றார். பகுத்தறிவு பரப்புரைக்கான கருவிகள், ஒலி பெருக்கி வசதிகளோடு தனது சொந்த செலவில் தயாரித்து வைத்திருந்த வாகனத்தை கழகத்துக்கு நன்கொடையாக வழங்கினார். கழகத் தோழர்களிடம் நெருக்கமாக உறவு கொண்டு கழகத்தினரையே குடும்பமாக ஏற்றுப் பழகி வந்த ஒரு கொள்கை வீரர், விடை பெற்றுக் கொண்டு விட்டார்.
மரணத்துக்கு முதல் நாள் மேட்டூர் படிப்பகத்தில் இருந்த அவருக்கு உடல்நிலை மோசமாகவே, முதலுதவி சிகிச்சைகள் வழங்கி, தோழர்கள் அவரது சொந்த ஊரான பட்டுக்கோட்டைக்கு அவரது மகள் இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர். உடல்நிலை மேலும் மோசமாகவே தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, மருத்துவமனையில் மரணம் அவரைத் தழுவிக் கொண்டது. அவருக்கு நித்தியா, திலகவதி என்ற மகள்களும், எஸ்.எஸ்.மணியன் என்ற மகனும் இருக்கிறார்கள்.
பட்டுக்கோட்டையில் இன்று(20.01.2016) நடக்கும் இறுதி நிகழ்வுகளில் கழகத் தலைவர், கழகத் தோழர்கள் பங்கேற்கிறார்கள்.
பெரியாரின் உறுதி மிக்க தொண்டர் சதாசிவம் அவர்களுக்கு கழகம் வீரவணக்கம் செலுத்துகிறது.