மத்திய அரசுப் பணிகளில் தமிழர்களின் வேலை வாய்ப்பு உரிமைகள் பறிப்பு

“முஜே தமில் நஹி மாலும், இந்தி மே போலோ” (எனக்கு தமிழ் தெரியாது, இந்தியில் சொல்). இன்று தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், இரயில்வே பயணச் சீட்டு பெறும் இடங்கள், வாழ்நாள் காப்பீடு, பொதுக் காப்பீடு மற்றும் பொதுத் துறை வங்கிகளில் பணி யாற்றும் ஊழியர்களிடம் தமிழர்கள் இவ்வார்த்தைகளை எதிர் கொள் கிறார்கள். டெல்லி அரசுகளின்  கயமைத்தனத்தினால், சூழ்ச்சியினால் கடந்த பத்தாண்டுகளாக  தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசுத்துறைகளில் தமிழர்களுக்கான வேலை வாய்ப் புரிமை தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது.

இது சேவைத்துறைகளில் மட்டு மல்லாது தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசின் தொழிற்துறைகளான (Factories & Enterprises)  என்.எல்.சி (NLC), ஓ.என்.ஜி.சி (ONGC), பி.எச்.இ.எல் (BHEL), துப்பாக்கி தொழிற்சாலை, டாங்கி தொழிற்சாலை, இராணுவ உடை தயாரிப்பகம், (Defence Factories) இணைப்பு பெட்டி தொழிற்சாலை, கல்பாக்கம் அணுமின் நிலையம்  ஆகிய தொழிற்சாலைகளில் இந்த நிலைதான்.

மத்திய அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங் கள், வங்கிகளில்  அதிகாரிகள் அளவிலான பணி நியமனங்களுக்கு  அகில இந்திய அளவில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத் தேர்வுகளில் முதற்கட்ட அப்ஜெக்டிவ் (objective) வினாத்தாள்கள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் இருக்கிறது. இரண்டாம் கட்ட எழுத்துமுறை தேர்வுகளை (Descriptive)  இந்தியிலோ  அல்லது ஆங்கிலத்திலோ எழுதலாம் என்று விதிமுறைகள் வகுக்கப்பட் டுள்ளன. நேர்முகத்தேர்வுகளும் (Interview) டெல்லியில் மையமிட்டு நடத்தப் பட்டு, நேர்முகத்தேர்வுகளை நடத்தி மதிப்பெண் அளிப்பவர்கள் பெரும் பாலும் வட மாநிலங்களை சேர்ந்தவர் களாக இருப்பதால் இந்தி பேசுபவர் களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தமிழகத்தை சேர்ந்தவர்கள் பின்னுக்கு தள்ளப்படுகிறார்கள். இலட்சங்களில் மாத ஊதியம் பெறும், இவ்வாறு தேர்வு செய்யப்படும் அதிகாரிகளே எதிர்காலத்தில் அந்த நிறுவனங் களுக்கு தலைமைப் பொறுப்புகளுக்கு வருகிறார்கள், இவ்வாறு தலைமைப் பொறுப்புகளுக்கு தமிழகத்தை சேர்ந்த வர்களை வரவிடாமல் தடுப்பதற்கான டெல்லியின் சூழ்ச்சியினால்  இப் பணியிடங்களுக்கு தமிழர்கள் ஒருவர் கூட நியமிக்கப்படுவதில்லை

இதே நிலைதான் அதிகாரிகள் அல்லாத பணியாளர் அளவிலான தேர்வுகளுக்கும். பணியாளர் அளவிலான தேர்வுகள் மாநில அளவிலோ அல்லது மண்டல அளவிலோ நடத்தப்படவேண்டும் என்று பல ஆணைகள், தீர்ப்புகள்  உள்ளன. ஆனால் இவை எல்லாம் காற்றில் விடப்பட்டு, படிப்படியாக தளர்த்தப்பட்டு  மத்திய அரசின் ஆதிக்கப் போக்கினால் இப்பணிகளும் அகில இந்திய அளவில் நடத்தப்படு கின்றன.

உதாரணத்திற்கு 2006 ஆண்டுவரை மத்திய பணியாளர் தேர்வாணையம் மண்டல அளவிலேயே தேர்வுகளை நடத்தி வந்தது, தபால் துறை தபால் உதவியாளர் பணியிடங்களுக்கு 2014 வரை மாநில அளவில் நடத்தி வந்தது.   அப்போது இத்தேர்வுகளில் அப்ஜெக்டிவ் (Objective) மற்றும் நேர்முகத்தேர்வு (Interview) மூலமாக இரண்டு கட்ட நிலைகளில் பணி நியமனச் சேர்க்கை நடைபெற்று வந்தன. இதனால் அந்தந்த மாநில மக்களுக்கான வேலை வாய்ப்புகள் மத்திய அரசு நிறுவனங்களில் கிடைத்து வந்தது.

பின்னர் இவை அகில இந்திய அளவிலான தேர்வுகளாக மாற்றப் பட்டு இத்தேர்வுகளில் இந்தி பேசுபவர் களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக சூழ்ச்சிகள் செய்யப்பட்டு  எழுத்துமுறை (Descriptive)  வினாத் தாள்கள் இந்தியில் நுழைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல்  அப்ஜெக்டிவ் (Objective) வினாத்தாள்களும்  ஆங்கிலத்துடன் இந்தியிலும் இருப்ப தால், இந்தியைத் தாய்மொழியாக கொண்டவர்களுக்கு, வினாக்களை எளிதில் புரிந்து கொண்டு விடை யளிப்பது மிகவும் எளிதாக இருக்கிறது. மற்ற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே விடையளிக்க வாய்ப்புகளை இந்திய அரசு ஏற்படுத்தித் தந்து இந்தி பேசும் மக்களுக்கு சாதகமாக நடந்துகொள்கிறது என்பதை இங்கு சுட்டிக்காட்டுகிறோம். மிக உயரிய முதல்நிலை IAS, IPS பணியிடங்களுக்கு தேர்வுகளை நடத்தும் UPSC கூட தேர்வுகளைத் தமிழில் நடத்துகிறது. ஆனால் மக்களிடையே நேரடியாக தொடர்பு கொண்டு களத்தில் பணி யாற்றும் இப்பணியிடங்களுக்கு நாம் பலமுறை வலியுறுத்தியும் இந்திய அரசானது தமிழில் தேர்வுகளை நடத்த மறுக்கிறது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

இவ்வாறு இந்தி பேசும் வேற்று மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத் தில் சிறு நகரங்களுக்கும், மாவட்ட தலைநகரங்களுக்கும் பணியமர்த்தப் பட்டு பெருவாரியாக பணியாற்றி வருகிறார்கள். இதனால் தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசின் சேவைகளைப் பெறவேண்டுமானால் அங்கு பணியாற்றும் இந்தி மட்டுமே தெரிந்த வேற்று மாநிலப் பணியாளர் களிடம், இந்தி தெரிந்தால் மட்டுமே சென்று அவர்களின் சேவையை பெற முடியும் என்ற நிலை தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் இவ்வாறு இந்தி பேசும் பணியாளர்களை வைத்துக் கொண்டு நிர்வாகத்தை நடத்துவதிலும் தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்கள் பல சிக்கல்களை சந்திக்கின்றன. வேற்று மாநிலத்தில் இருந்து பணியாற்ற வரும் ஊழியர்கள் மீண்டும் தமது மாநிலத்திற்கே செல்ல பணியிட மாற்ற விண்ணப்பம் செய்து, அப்பணியிட மாற்றத்திலேயே குறியாக இருப்பதால் இம்மாநிலத்தில் உள்ள பணிகளில் சுணக்கம் காட்டுகின்றனர். பணியிட மாற்றம் கிடைத்த பின்பு காலியாகும் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப் படுவது இல்லை அவ்வாறு நிரப்பப் பட்டாலும் அதிலும் இந்தி பேசுபவர்களே மீண்டும் வருகிறார்கள். இவற்றைக் களையக்கோரி சம்பந்தப் பட்ட மத்திய அரசின் தலைமை நிர்வாகிகளும், தொழிற்சங்கங்களும்  பலமுறை இந்திய அரசிற்கு கோரிக்கை வைத்தும் இவை காது கேளாதார் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறது.

மத்திய அரசு பணியிடங்களில் தேவைக்கேற்ப மண்டல அளவிலோ அல்லது மாநில அளவிலோ பணி யிடங்களை நிரப்பிக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இருந்தும் (Radheshyaam Vs Union of India) மத்திய அரசானது தான் தோன்றித்தனமாக வடவர்களை பணிகளில் திணிப்பதையே கருத்தாக கொண் டுள்ளது. தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளை தமிழர்களுக்கு மறுக்கும் இந்த ஆபத்தான போக்குகளை தடுத்து நிறுத்த  வேண்டியது அவசரம்; அவசியம்.

– நமது செய்தியாளர்

இந்தி பேசும் வேற்று மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில்

பெருவாரியாக பணியாற்றி வருகிறார்கள்.

பெரியார் முழக்கம் 01122016 இதழ்

You may also like...