வினாக்கள்… விடைகள்…!
நான்கு மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரசை எழுப்புவதற்கான அலாரமா? காங்கிரசை அப்படி எழுப்பிவிடத்தான் முடியுமா? – அமர்த்தியாசென்
இதற்கு நீங்களே விடை கூறிவிட்டால், மற்றொரு நோபல் பரிசை தட்டிக்கொண்டு போய் விடலாம், சார்.
பிணையில் விடுதலையான லாலுபிரசாத், சாமி தரிசனத்துக்குப் போனபோது, ஒரு போலீஸ் அதிகாரி, லாலு கால்களைக் கழுவினார். ஜார்கண்ட் அரசு விசாரணைக்கு உத்தரவு. – செய்தி
அதெல்லாம் சுத்தமாகத்தான் கழுவி இருப்பார். நம்புங்கள். இதற்கெல்லாம் விசாரணையா?
நம்மால் என்ன செய்ய முடியுமோ அதைத்தான் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூற வேண்டும். – மன்மோகன்சிங்
“பொருளாதார நெருக்கடி தற்காலிகமானது தான்; விரைவில் சரியாகி விடும்” என்ற நம்மால் செய்ய முடிந்த கொள்கையை அப்படியே சரியாகச் சொல்லணும்! ஆமாம்.
இறை நம்பிக்கைதான் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்! – ஜெயலலிதா பேச்சு
அதனால என்னங்க பயன்? இறை நம்பிக்கை எதிர்க்கட்சிகளையே இல்லாமல் ஒழிக்குமா? அதைச் சொல்லுங்க.
மகாராஷ்டிரா காங்கிரஸ் ஆட்சி வீட்டுவசதி வாரிய ஊழல் விசாரணை அறிக்கையை நிராகரித்ததற்கு ராகுல் எதிர்ப்பு. – செய்தி
இப்படியே போனால், ஒரு நாள் காங்கிரஸ் காரர்கள் எல்லாம் சேர்ந்து, ராகுலை நிராகரிக்கப் போறாங்க, பாருங்க.
ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம். – கெஜ்ரிவால் சூளுரை
இதெல்லாம் ஒரு சூளுரையா? ஊழல் வழக்குகளை எதிர்கொண்டு சந்திக்கக்கூடிய ஆட்சியை அமைப்போம் என்று வீரத்தோடு சூளுரைங்க சார்…!
இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத் தினால் 65,000 நெசவாளர்களுக்கு இந்த அரசில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.-முதல்வர் ஜெயலலிதா
இந்த அரசில் ‘இலவசமாக’ கிடைக்கக்கூடிய ஒரே வேலைவாய்ப்பு, இந்த இலவசத் திட்டங்கள் வழியாக மட்டும்தான் என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் மேடம்!
இந்தியா திரும்பினார், தூதரக அதிகாரி தேவயானி. – செய்தி
அப்பாடா! இனி கவலை வேண்டாம். சாப்பாடு மட்டும் போட்டாலே போதும்! இந்தியாவில் வீட்டு வேலைக்கு ஊதியம் இல்லாமல் ஆட்கள் கிடைப்பார்கள்.
டெல்லியில் ஆட்சியமைத்துள்ள ‘ஆம் ஆத்மி’ கட்சி குறித்து கலைஞர், ஜெயலலிதா, மவுனம். – செய்தி
வேறு என்ன செய்வதாம்? ‘ஊழலுக்கு எதிரான மக்கள் தீர்ப்பு’ என்று கருத்து தெரிவிக்கவா முடியும்?
பெரியார் முழக்கம் 16012014 இதழ்