‘இந்து’ மதப் போர்வைக்குள் பதுங்கிக் கிடக்கும் பார்ப்பன பயங்கரவாதம் முகமூடியைக் கிழித்தது ஈரோடு மாநாடு 

‘இந்து’, ‘இந்துத்துவம்’ என்ற கூச்சல் களுக்குப் பின்னால் பதுங்கிக் கிடப்பது பார்ப்பனர்களும் பார்ப்பனியமும்தான் என்ற உண்மையை வரலாற்றிலிருந்தும் பா.ஜ.க. பரிவாரங்களின் ஆட்சி அதிகார செயல்பாடு களிலிருந்தும் ஏராளமான தகவல்களை முன் வைத்தது, ஈரோட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய ‘இந்து’ பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு. மாநாட்டில் உரையாற்றிய பலரும் உண்மையான எதிரிகளை அடையாளப் படுத்தும் சரியான மாநாடு என்று பாராட்டினர்.
வெற்று ஆரவாரங்கள் – தனி நபர் துதிகள் இல்லாமல் தொடக்கம் முதல் இறுதி வரை அறிவார்ந்த கருத்துகளையும் சிந்தனைகளையும் முன் வைத்ததும், மாநாட்டுப் பார்வையாளர்கள் இறுதிவரை செவிமெடுத்ததும் இந்த நாட்டின் சிறப்பாகும்.
மாநாட்டு நிகழ்ச்சிகள் பற்றிய ஓர் தொகுப்பு:
ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில் “இந்து பார்ப்பன-பயங்காரவாத எதிர்ப்பு மாநாடு” நவம்பர் 8 ஞாயிறு பகல் 11 மணியளவில் ஈரோடு பவானி ரோடு கே.கே.எஸ்.கே. திருமண மண்டபத்தில் பார்ப்பன மதவெறிச் சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட பகுத்தறிவு எழுத்தாளர் கள் தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்பர்க்கி நினைவரங்கத்தில் மிகுந்த எழுச்சியோடு நடை பெற்றது.

மாநாட்டு துவக்கத்தில் மேட்டூர் டிகேஆர் இசைக் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
மாட்டை விட மனுசன் என்ன கேவலமா?
உங்கள் மனுதர்ம கூட்டத்திற்கே ஆணவமா?
பசுவதை சட்டம் என்று நடிக்கிறீங்களே!
உங்கள் பார்ப்பன மதத்தை காக்கதுடிக்கிறீர்களே! 
என்ற பாடலும், அடுத்து,
தொட்டாலே தீட்டுப்படுமா… 
நாங்கள் தொடாதப்பொருள் எதுவாம்?
பார்த்தாலே பாவதோஷமா…
நாங்கள் பார்க்காதக்காட்சி எதுவாம்? 
என்று மேட்டூர் கோவிந்தராஜ் தனது வெண்கலக் குரலில் பாடியது, மாநாட்டிற்கு வருகை தந்த அனைவரையும் எழுச்சியோடு உற்சாகப்படுத்தியது. இசைக் குழுவில் மேட்டூர் முத்துக்குமார், அருள்மொழி, கோவை இசைமதி ஆகியோரின் பாடல்களுக்கு தோழர்கள் குமரப்பா, சீனிவாசன், காளியப்பன் ஆகியோரின் நேர்த்தியான இசையால் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டனர்.

சிந்திக்க வைத்த கருத்தரங்கம்
மாநாட்டின் முதல் அமர்வாக கருத்தரங்கத்திற்கு வருகை தந்த அனைவரையும் தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவக்குமார் வரவேற்று உரையாற்றினார். கருத்தரங்கத்திற்கு தலைமை வகித்த கழக மாநில பொருளாளர் திருப்பூர் துரைசாமி உரையாற்றினார்.
அவர் தனது உரையில், “உலகத்தின் எந்த நாட்டி லும் இல்லாத ஜாதியக் கட்டமைப்பு இந்தியாவில் பார்ப்பனர்களால் வஞ்சகமாகப் புகுத்தப்பட்டது. இந்து மதத்தில் இருந்துகொண்டு ஜாதியை ஒழிக்க முடியாது, ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றால் முதலில் தங்களது சுயஜாதி பற்றினை விடவேண்டும். சிலர் மதம் மாறினாலும் கூட தங்களது சுய ஜாதி பட்டப் பெயரை பெருமையாக போட்டுக் கொள் கின்றனர். காரணம் அவர்கள் மதம் மாறினாலும் தங்கள் மூளையில் உள்ள பார்ப்பன சித்தாந்தங்களை விட மறுத்ததன் விளைவுதான். மேலும் பாஜக அரசு நாம் என்ன உணவை உண்ணவேண்டும் எந்த உடையை உடுத்த வேண்டும். எந்த மொழியை பேச வேண்டுமென, தீர்மானிக்கிறார்கள். எனவே பா.ஜ.க.வின் பாசிச போக்கை தடுத்து நிறுத்த நாம் பெரியாரையும், அம்பேத்கரையும் ஒன்றிணைத்து வலிமையான போராட்டக் களங்களை உருவாக்க வேண்டும்” என கூறினார்.
பின்னர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில், “எங்கள் பார்வையில் மக்களைப் பிளவுபடுத்தும் பார்ப்பனீய மதவாதம்” என்ற பொதுத் தலைப்பில் கருத்தரங்கம் தொடங்கியது.

பெண்கள் பார்வையில்
“பெண்கள் பார்வையில்” என்கிற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில அமைப்பாளர் திருப்பூர் சிவகாமி பேசினார். அவர் தனது உரையில், “அனைத்து மதங்களும் பெண்களை அடிமை படுத்திதான் வைத்திருக்கிறது. அதிலும், பார்ப்பன இந்துமதம் பெண்களுக்கு எதிராக பல்வேறு வடிவங்களில் பாசிச சிந்தனையோடு கொடுமைகளை நிகழ்த்தி அவர்களை பாவயோனிகள் என இழிவு படுத்தி சிறுமைப்படுத்தி வைத்திருக்கிறது.
நமது நாட்டு பெண்கள் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு பெயரால் தமக்கு தாமே விலங்கு போட்டுக் கொண்டுள்ளனர். அன்றுமுதல் இன்று வரை இந்துமதம் கலாச்சார பண்பாட்டு பெயரால் பெண்களை அடிமைப்படுத்தியே வைத்திருக்கிறது. இப்படிப்பட்ட கொடுமையான இந்துமதத்தை வேரறுக்க பெண்கள் தங்களை இழிவுபடுத்ததுகின்ற மனுதர்மத்தை எதிர்த்து வலிமையாக போராட வேண்டும்” என கூறினார்.

பகுத்தறிவாளர் பார்வையில்
“பகுத்தறிவாளர் பார்வையில்” என்ற தலைப்பில் பேசிய எழுத்தாளர் மதிமாறன் தனது உரையில், “உலகம் முழுவதும் பாசிச கொள்கைகள் உருவாவதற்கு முன்பே இந்தியாவில் பார்ப்பன கொடுமைகள் உருவாகிவிட்டன. மனுதர்மம் என்பது மனித உரிமைக்கு எதிரானது, உலக சர்வாதிகாரியான ‘ஹிட்லரைவிட பார்ப்பனர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக செய்த கொடுமைகள் கொடூர மானது. இந்துத்துவவாதிகள் மனித உரிமைகள் பற்றி பேசவே கொஞ்சமும் அருகதையற்றவர்கள்.
மனிதனை தொட்டால் தீட்டு, பார்த்தால் பாவம், அவர்கள் வசிப்பதற்கு ஊருக்குவெளியே சேரி என்று கொடுமைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இன்றைக்கு மாட்டை காப்பாற்றுகிறோம் என்று சொல்லிக்கொண்டு மனிதர்களை கொல்வதற்கு துணிந்திருக்கிறார்கள்.இந்துத்துவாதிகளின் இஸ்லாமிய எதிர்ப்பு என்பது, உண்மையிலேயே தலித் மக்களுக்குகெதிரான எதிர்ப்பு குறியீடாகத்தான் பார்க்கவேண்டியுள்ளது.
தலித் மக்கள்தான் அதிக அளவில் இஸ்லாம் மதத்திற்கு மாறுகிறார்கள் என்ற காரணமும் இவர்கள் ஒடுக்குமுறைக்கு ஒரு காரணமாக இருக்கிறது. செத்த மாட்டை சாப்பிட வேண்டாம் என்று அம்பேத்கர் கூறினார். செத்தமாடு தான் தீண்டாமையை உருவாக்குகிறது என்றும் சொன்னார். இஸ்லாம் மதமும் செத்த விலங்குகளை சாப்பிடக் கூடாது என்கிறது. தலித் மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஒன்றிணைக்கும் இந்தப் பண்பாட்டுக் கூறுகளே இந்துத்துவவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு மூலகாரணமாக உள்ளது” என கூறினார்.

தலித்துகள் பார்வையில்
“தலித்துகள் பார்வையில்” என்ற தலைப்பில் தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன் உரையாற்றினார். அவர் தனது உரையில், “ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவ சக்திகள் முன்வைக்கக் கூடிய பயங்கரவாத செயல் திட்டங்களை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நிகழ்த்துவது மட்டுமல்லாமல் மனுஸ்மிருதி எரிப்பு இராமாயண, மகாபாரத எதிர்ப்பு உள்ளிட்ட செயல்திட்டங்களையும் ஜாதிய அமைப்பினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய சூத்திரர்கள் (பிற்படுத்தப்பட்ட மக்கள்), தலித் மக்கள் ஆகியோரை ஒன்றிணைக்க கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு செயல்திட்டத்தை முன்வைத்து நாம் இயங்கும்போதுதான் அது இந்துத்துவ சக்திகளுக்கு மிகப் பெரிய பேரடியாக இருக்கும்” என கூறினார்.

இஸ்லாமியர் பார்வையில்
“இஸ்லாமிய பார்வையில்” என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் ஆளூர் ஷாநவாஸ் உரையாற்றும் போது, “பெரியார் இஸ்லாமியர் அல்ல ஆனால் இஸ்லாமியர்களின் தலைவர்.பெரியார் பெண் அல்ல ஆனால் பெண்களின் தலைவர். பெரியார் ஒரு தலித் அல்ல ஆனால் ஒட்டு மொத்த தலித் மக்களின் தலைவர், ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் குறி யீடாக கருதப்படுபவர் பெரியார். இஸ்லாமியர்கள் சிறு வயது முதல் மதரீதியான கட்டளைகளுக்கு கீழ்படிந்து மார்க்க கல்விகளை கற்றவர்கள், கடவுள் பக்தி மிக்கவர்கள் ஆனால் மதமே இல்லை, கடவுளே இல்லை என்று சொன்ன மிகப்பெரிய நாத்திக தலைவரான பெரியார் அவர்களை இஸ்லாமியர்கள் தங்களது, தலைவராக இன்றைக்கு ஏற்றுக் கொண்டிருப்பது மிகப் பெரிய சமூக மாற்றம்.
பெரியாரின் நேர்மையான கொள்கை ரீதியான உழைப்பினால் போராட்டங்களினால் சிறுபான்மை மக்கள் பல்வேறு உரிமைகளை இன்று பெற்றிருக் கிறார்கள். காயிதே மில்லத் அவர்கள் தீவிர மதம் மற்றும் கடவுள் பற்றாளர். இஸ்லாமியர்களுக்கான அரசியலை தீவிரமாக முன்னெடுத்தவர். ஆனால் கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியார் அவர்களையும், காயிதேமில்லத் அவர்களையும் சமூக நீதி கோட்பாடு என்ற தத்துவம்தான் ஒன்றாக இணைத்தது. பெரியார் உருவாக்கிய உறுதியான அடிப்படை கட்டுமானம் இன்றுவரை இருப்பதால் தான் எங்களை போன்ற சிறுபான்மை மக்களும் நம்பிக்கையுடன் இந்த நாட்டில் வாழ்கிறார்கள்” என கூறினார்.
இறுதியாக, திராவிடர் விடுதலைக் கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிறைவுரை யாற்றினார். முடிவில் கோபிநாத் நன்றி கூறினார்.

மாட்டிறைச்சி உணவு
கருத்தரங்கம் மூன்று மணியளவில் நிறை வடைந்தது. மாநாட்டு அரங்கிலேயே குறைந்த விலையில் மாட்டிறைச்சிக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 4 மணியளவில் நிகழ்ச்சிகள் வீதி நாடகத்துடன் தொடர்ந்தன.
செயல்வீரர் மேட்டூர் கருப்பரசன் நினைவு நாடகக்குழுவினரின் “மனுசனைப் பாருங்கள் மனுதர்மர்த்தை தீயில் கொளுத்துங்கள்” என்கிற முழுக்கத்தோடு வீதி நாடகம் நடைபெற்றது. தோழர்கள் கொளத்தூர் குமரேசன், சேலம் பிரபு, நங்கவள்ளி கிருஷ்ணன், மேட்டூர் அருள்மொழி, விருதுநகர் கணேசமூர்த்தி, திருப்பூர் சங்கீதா, கனல்மதி, புதுவை மதிவாணன் ஆகியோரின் நடிப்பு ஜாதி மதவாத, பார்ப்பன இந்து பயங்கரவாதிகளுக்கு சாட்டையடி கொடுக்கும் வகையிலும், பொது மக்களுக்கு கருத்துக்கள் எளிய முறையில் புரியும் வகையிலும் மிக சிறப்பாக அமைந்தது.

மதவாதிகள் பார்வையில்
மாநாட்டின் இரண்டாவது அமர்வாக பார்ப்பனீய மதவாதிகள் பார்வையில் – கருத்துரிமை, வளர்ச்சி, உணவு, உடை, விழாக்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் தொடங்கியது. ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி வரவேற்புரை யாற்றினார். கருத்தரங்கத்திற்கு தலைமையேற்று மாநில பரப்புரை செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன் உரையாற்றினார். அவர் தனது உரையில்,
“வேதமதமான பார்ப்பன மதமே, இந்து மதமாக உருமாறியிருக்கிறது. வேத, பார்ப்பன இந்து மதம் ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான பல்வேறு பயங்கரவாத செயல்களை அன்றுமுதல் இன்றுவரை தொடர்ந்து செய்து வருகிறது. பார்ப்பன பாசிச சிந்தனைகளை கொண்ட இந்துத்துவ வாதிகள், இன்று நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் “அசுர” பலத்தோடு இருக்கிறார்கள். அரசின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய நிர்வாகம், நீதித்துறை, கல்வி உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் பல்வேறு பாசிச இந்துத்துவ சிந்தனைகளை புகுத்தி வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்சின் பின்புலத்தோடு ஆட்சிக்கு வந்திருக்கின்ற பாஜக இந்துத்துவ சிந்தனைகளை பார்ப்பன பயங்கரவாத செயல்களை இன்றைக்கு வெளிப்படையாக நடைமுறைப்படுத்தி வருகின்றன. ராமனின் பிள்ளைகளுக்குத்தான் இந்த நாட்டில் இடம் உண்டு என்றும், மற்றவர்கள் நாட்டை விட்டு வெளியே வேண்டும் என்ற நச்சு கருத்துக்களை கூறி வருகின்றனர். மதுவிற்கு எதிராக பாடல் எழுதினார் என்பதற்காக தோழர் கோவன் மீது தேச துரோக வழக்கைப் பாய்ச்சும் அரசு ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியார் மீது தனது பாசிச நச்சு பேச்சுகளால் சேற்றை வாரி இறைக்கும் பா.ஜ.க.வை சேர்ந்த பார்ப்பனர் எச்.ராஜா போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகி றது. இதுதான் ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்கிற பார்ப்பன மனுதர்ம நீதி இத்தகைய மனுதர்ம நீதி இந்த மண்ணிலிருந்து அகற்றப்பட வேண்டும்” என்றார்.

விழாக்கள்
“விழாக்கள்” என்ற தலைப்பில் கழக பேச்சாளார் கோபி வேலுச்சாமி உரையாற்றுகையில், “வருடம் முழுவதும், ஆரிய பண்பாட்டை பறைசாற்றும், பண்டிகைகளை பார்ப்பனர்கள் நம்மீது திட்டமிட்டு திணித்துவிட்டனர். நமக்காகவே காலமெல்லம் உழைத்த பெரியார் அம்பேத்கர் போன்ற தலைவர்களின் பிறந்தநாள் நினைவு நாட்களை கூட இன்றைக்கு பார்ப்பன இந்துத்துவவாதிகள் ஆக்கிரமித்துக் கொண்டனர். பகுத்தறிவு பிரச்சாரத்திற்கு ஒளி, ஒலி அமைக்கக்கூட தடை போடும் காவல்துறையினர் பக்தியின் பெயரால் பண்டிகைகளின் பெயரால் அனுமதியின்றி ஒலிப் பெருக்கிகள் வைப்பதை அனுமதிக்கின்றனர்.
இது அவர்களின் மூளையில் ஏற்பட்ட நவீன பார்ப்பன சிந்தனைதான் காரணம்” என உரை யாற்றினார்.

வளர்ச்சி
“வளர்ச்சி” என்ற தலைப்பில் உரையாற்றிய மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், தனது உரையில், “பார்ப்பனீய மதவாதிகள் பார்வையில் வளர்ச்சி என்பது உழைப்பவர்களை கீழ் ஜாதியாகவும், அவர்களது உழைப்பை உறிஞ்சி கொழுப்பவனை மேல் ஜாதியாகவும் வைத்துள்ளது. இதுதான் பார்ப்பனீய சமூக கட்டமைப்பாகும், முதலாளித்துவமும், ஜாதியமும் ஒரு புள்ளியாகவும், ஜாதியையும், வர்க்கத்தையும் ஒரு மையப் புள்ளியாகவும், இன்றைக்கு பார்ப்பனீயம் தான் ஒன்றிணைக்கிறது. வளர்ச்சி என்று பார்த்தால் இந்த நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இன்றுவரை இந்தியாவில் பார்ப்பனீய பனியா கும்பல்கள்தான் வளர்ச்சியடைந்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கான வளர்ச்சி என்பது இன்றுவரை இல்லை. இத்தகைய பார்ப்பன-பனியா கும்பலை வளர்த்து விடும் வளர்ச்சி என்பது நமக்குத் தேவையில்லை எனவே அம்பேத்கர் பெரியார் சிந்தனைகளை உள்வாங்கிய மார்க்சீயம் உருவானால் தான் நம் மக்களுக்கு உண்மையான வளர்ச்சி ஏற்படும்” என்று கூறினார்.

உணவு உடை
“உணவு உடை” என்கிற தலைப்பில் உரையாற்றிய கழக வெளியீட்டுச் செயலாளர் கோபி இராம இளங்கோவன் தனது உரையில், “ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த நாட்டில் தோளில் துண்டு போடவும், முழங்காலுக்கு கீழே வேட்டி கட்டவும், நமது பெண்கள் மேலாடை கூட அணிய கூடாது என்றும் அடக்கு முறைகளை ஏவியவர்கள், இந்து பார்ப்பன பயங்கரவாத சிந்தனை கொண்டவர்கள் அனுமதிக்க மறுத்தனர். இக்கொடுமைகளுக்கு எதிராக போராடி உரிமைகளை நமக்கு பெற்றுத் தந்தவர் பெரியார் மற்றும் அம்பேத்கர். அவர்களுடைய ஓய்வறியா உழைப்புத்தான் நம்மக்களை தலை நிமிர்த்தியது. பெண்களை போகப் பொருளாகவும், அடிமைகளாகவும், விளம்பர கருவிகளாவும், பார்ப்பனியம் சித்தரித்தது. அதை உடைத் தெறிந்தவர் பெரியார்.
வேதகாலங்களில் மாட்டுக்கறியை தின்ற பார்ப் பனர்கள் இன்றைக்கு ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்கள் மாட்டுக்கறியை அதிகம் சாப்பிடுகிறார்கள் என்ற காரணத்தினால் பசு இந்துக்களின் தாய்; பசுவதை கூடாது என்கிறார்கள். ஒரு மாட்டிற்காக மனிதர்களை கொல்வது என்பது பார்ப்பன இந்து பயங்கரவாதத்தின் உண்மை முகமாகும். பசு மாட்டை உண்ணக் கூடாது என்னும் பார்ப்பனர்கள் பசு மாட்டின் இரத்தத்தில் உருவாகும் பாலையும் நெய்யையும் இனி சாப்பிட மாட்டோம் என உறுதி கூறுவார்களா?” என்று கேட்டார்.

கருத்துரிமை
இறுதியாக, “கருத்துரிமை” என்ற தலைப்பில் பேசிய மூத்த வழக்கறிஞர் திருமலை ராஜன் தனது உரையில், “இந்த நாட்டில் எந்த பிரச்சனையாக இருந்தாலும், கருத்துரிமை சார்ந்த பிரச்சனையாக இருந்தாலும், நாம் நீதி கேட்டு போகும் இடம் நீதிமன்றங்கள் தான். அப்படிப்பட்ட நீதி மன்றங்களில் பார்ப்பன பயங்கரவாதிகள் (தற்போது ஆட்சியில் இருப்பவர்கள்) நீதிபதிகள் நியமனத்தில் நீதிபதிகளும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழு மூலம்தான் நீதிபதிகளாக தேர்வு செய்யப்படவேண்டுமென ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்தார்கள். உச்சநீதிமன்ற நீதிபதிகளே உயர் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளை கொலீஜியம் முறையில் நியமிப்பதற்கு இவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இவர்கள் கொண்டுவர முயற்சிக்கும் சட்டம் என்பது நீதிபதிகள் நியமனத்தில் மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்லாது நாட்டில் பிரபலமாக இருப்பவர்களையும் நீதிமன்ற நியமனக் குழுவில் இடம்பெற்று நீதிபதிகள் நியமனம் செய்யலாம் என்று கூறுகிறார்கள். பிரபலமானவர்கள் என்பவர் இவர்களின் பார்வையில் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் போன்றவர்களை போல் பல காவி சிந்தனை உள்ளவர்களை இக்குழுவில் புகுத்தி நீதித் துறையில் காவிமயமாக்க முயற்சிக்கிறார்கள் இக்குழு நேரடியாக நீதிபதிகளை நியமனம் செய்தால் நம்மை போன்றவர்கள் நமக்கான நியாயங்கள் உரிமைகள் பெற நீதிமன்றம் சென்றால் நமக்கான நீதி பார்ப்பன இந்துத்துவ காவி பயங்கரவாதிகளால் கேள்விக் குறியாக ஆக்கப்படும் அபாயம் உள்ளது” என்று கூறினார்.

இந்து பார்ப்பன – பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு
இறுதியாக இந்து பார்ப்பன – பயங்கரவாத எதிர்ப்பு பொது மாநாடு தொடங்கியது, ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் சண்முகப்பிரியன் வரவேற்புரையாற்றினார். கழக மாநில அமைப்பு செயலாளர் ஈரோடு ரெத்தினசாமி மாநாட்டிற்கு தலைமையேற்று உரையாற்றினார். அவர் தனது உரையில், “இந்துத்துவ காவி பயங்கரவாதிகள், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப் பட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஜாதி மத கலவரங்களை தொடர்ச்சியாக தூண்டி விட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதற்கு முயற்சி செய்து வருகின்ற சூழ்நிலையில் பெரியார் பிறந்த இந்த ஈரோட்டில் இந்த மாநாட்டை நாங்கள் நடத்து கிறோம். மதச்சார்பற்ற நாட்டில் அரசு அலுவலகங்களில் மத வழிபாடு கூடாது என உள்ள அரசு ஆணைகளை அரசு அலுவகங்கள் நடைமுறை படுத்தவேண்டும் என கோரி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்பாட்டங் களை நடத்தி அதிகாரத்தில் உள்ளவர்களிடம் அரசாணைகளை மனுவாகக் கொடுத்தோம் அதன் மூலமாக ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆயுத பூஜை உள்ளிட்ட மதவழிபாடு கொண் டாட்டங்களை கணிசமான அளவில் தடுத்து நிறுத்தி யிருக்கிறோம். இந்த மாநாட்டிற்கு கூட காவல் துறையில் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து விட்டனர். காவல் துறையின் இத்தகைய நடவடிக்கைகள் இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள் வழங்கியிருக்கின்ற கருத்துரிமை மற்றும் பேச்சுரிமைக்கு எதிரானதாகும், இத்தகைய அடக்கு முறைகளுக்கு எதிராக ஒத்த கருத்துடைய சக்திகளை திரட்டி வெகுவிரையில் ஈரோடு மாநகரில் மிகப்பெரிய போராட்டங்களை நாம் முன்னெடுத்து நடத்துவோம்” என்று கூறினார்.

நிலவன்
மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்த தலைவர்களின் உரை தொடங்கியது, முதலில் தமிழ்தேச நடுவம் அமைப்பின் பொறுப்பாளர் நிலவன் உரையாற்றும்போது, “பெரியார் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் பார்ப்பன இந்து மதத்திற்கும் அது கட்டமைத்த ஜாதிய கொடுமைக்களுக்கு எதிராகவும், வலிமையாக போராடினார்கள். அப்படி போராடி உரிமைகளை பெற்றுத்தந்த நமது தலைவர்கள் பெரியார் அம்பேத்கரைப் பிரிக்கும் நோக்கத்தோடு இன்றைய நவீன தமிழ் தேசியவாதிகள் தங்கள் மூளையில் பார்ப்பன நச்சு சிந்தனை கருத்துகளை ஏற்றிக் கொண்டு பெரியார் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான தலைவர் என்றும் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர் என்று அவதூறுகளை பரப்பி அவர்களை பிரித்துவிடலாம் என்ற கனவில் பெரியார் அம்பேத்கர் மீது இன்று சேற்றை வாரி வீசுகிறார்கள். இவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது” என்று கூறினார்.

கண.குறிஞ்சி
அடுத்து உரையாற்றிய மக்கள் சிவில் உரிமை கழகத்தை சார்ந்த கண.குறிஞ்சி தனது உரையில், “பார்ப்பன இந்துமதத்தை சார்ந்த காவி பயங்கர வாதிகள் இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் வலிமையாக உட்கார்ந்து கொண்டு கருத்துரிமை பேச்சுரிமை எழுத்துரிமைகளுக்கு எதிராவும், ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிராவும், பாசிச சிந்தனையோடு செயல்படுகிறார்கள். தங்களது பாசிச தத்துவங்களுக்கு எதிராக கட்டுரைகள் எழுதுகிறார்கள், மக்களிடையே பிரச்சாரம் செய்கிறார்கள் என்ற காரணத்திற்காக நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே, கல்பர்க்கி போன்ற பகுத்தறிவு எழுத்தாளர்களை இந்துத்துவ காவி பயங்கரவாதிகள் படுகொலை செய்து இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியிருக்கின்ற உரிமைகளை தங்கள் காலில் போட்டு மிதித்து தங்களின் இந்து பாசிச கொடூர முகத்தினை நமக்கு காட்டியுள்ளனர்” என உரையாற்றினார்.
தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது, பார்ப்பன பயங்கர வாதங்களை விளக்கி சிறப்புரை யாற்றினார்.

அதியமான்

அடுத்துப் பேசிய ஆதி தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் தனது உரையில், “இதுவரை நாம் பார்ப்பனர்களிமிருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கு மட்டுமே பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறோம். ஆனால் இந்த பார்ப்பன பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் நேரடியாக எந்தவிதமான தாக்குதல்களையும் (அறிவுசார்) நடத்த வில்லை. அப்படி நாம் நேரடியான தாக்குதல்களை நடத்தியிருந்தால் நம்மை அவர்கள் பலவீனமாக பார்த் திருக்க மாட்டார்கள். ஆனால் பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளை கொண்டு அவர்களின் உண்மையான கொள்கை களை உள்வாங்கி, நேரடியாக பார்ப்பன இந்துத்துவ பயங்கரவாத தாக்குதல்களை நடத்தவேண்டிய அவசியமும், சூழலும் தேவையும் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்து பார்ப்பன பயங்கரவாதம் என்று சொல் வதற்குகூட அஞ்சுகின்ற சூழ்நிலையில் நேரடியாக நம் எதிரி யார் என்று சுட்டிக்காட்டி, அது இந்து பார்ப்பன பயங்கரவாதம் தான் என்று எடுத்துச் சொல்கிற ஒரு இயக்கம் இருக்குகிறது என்றால் அது திராவிடர் விடுதலைக் கழகம் மட்டும் தான் என்ற உண்மையை இந்த மாநாடு பறைசாற்றுகின்றது” என்று கூறினார்.

இறுதியாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாநாட்டு பேருரையாற்றினார்.
மாநாட்டின் முடிவில் மாவட்ட அமைப்பாளர் சென்னிமலை செல்வ ராசன் நன்றி கூறினார். மிக குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட “இந்து பார்ப்பனப் பயங்கரவாத மாநாட்டை” மாநில அமைப்பு செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, மாநில பொருளாளர் திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் தங்களது கடும் உழைப்பின் மூலம் மாநாட்டை மிக நேர்த்தியாக வடிவமைத்து வெற்றிகரமாகவும் நடத்தி முடித்தனர். அவர்களுக்கு துணையாக ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி, மாவட்ட செயலாளர் வேணுகோபால், தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில அமைப்பாளர் ஆசிரியர் சிவக்குமார், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகப் பிரியன், மாவட்ட அமைப்பாளர் சென்னிமலை செல்வ ராஜ் மற்றும் கோபிநாத் உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் மாநாட்டிற் காகப் பணியாற்றினர்.

மாநாட்டில் ஈரோடு வடக்கு ஈரோடு தெற்கு, சேலம் மேற்கு மற்றும் கிழக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், கோவை, கரூர், திருச்சி, தூத்துக்குடி சிவகங்கை, விருதுநகர், திருவாரூர் மற்றும் சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தோழர்கள் பங்கேற்றனர்.
ஈரோட்டில் நடைபெற்ற இந்து பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டின் வெற்றியைக் கண்ட கழகத் தோழர்கள் அடுத்த மாநாடு சென்னை யிலும், அதனை தொடர்ந்து சேலத்திலும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்து விட்டனர். கழகத் தலைவரும், தமிழகத்தில் முக்கிய நகரங்களில் இம்மாநாடு தொடர்ச்சியாக நடை பெறும் என பலத்த கரவொலிக் கிடையே அறிவித்தார்.

ஈரோடு வழிகாட்டுகிறது…
இந்து பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு நவம்பர் 8ஆம் தேதியன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை ஈரோடு கே.கே. எஸ்.கே. அரங்கத்திலும், மாலையில் திறந்தவெளி மாநாடு, ஈரோடு திருநகர் காலணி அருகிலும் நடத்துவது என திட்டமிட்டு, கழகத் தோழர்கள் மாலை நடைபெறவிருந்த மாநாட் டிற்கு காவல்துறையின் அனுமதி கோரி மாநில அமைப்பு செயலாளர் ஈரோடு ரெத்தினசாமி தலைமையில் கடந்த 21.10.2015 அன்று ஈரோடு கருங்கல் பாளையம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் சிவக்குமார் வசம் கடிதம் கொடுத்தனர். மாநாட்டு அனுமதி கொடுத்து உடனடியாக பரிசீலிப்பதாக கூறிய காவல்துறையினர் 15 நாள் களுக்கு மேல் கால தாமதப்படுத்தி அனுமதி கடிதம் தராமல் மாநாடு நடைபெறும் தேதிக்கு முதல்நாள் 7.11.2015 அன்று மதியம் 12.50 மணியளவில் திறந்தவெளி பொது மாநாட்டிற்கு அனுமதி மறுத்து கடிதம் கொடுத்தனர். இது குறித்து ஈரோடு காவல்துறை துணை கண்காணிப் பாளார் சம்பத், ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோரிடம் அனுமதி மறுப்பு குறித்து மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் சென்னை உயர்நீதி மன்ற கழக வழக்கறிஞர் துரை. அருண், ஈரோடு இரத்தினசாமி ஆகியோர் கேட்டபோது அரசு அறிவுறுத்தல் பேரில்தான் அனுமதி மறுக்கப்படு கிறது என்ற காரணத்தை தெரிவித்தனர். மேலும், பொது மாநாடு நடைபெறவிருந்த திருநகர் காலனி பகுதியில் 300க்கும் மேற்பட்ட அதிரடிப் படையினர், காவல்துறை உயர் அதிகாரிகள் வஜ்ரா வாகனங்களை கொண்டு வந்து நிறுத்தியும் தோழர்களை கைது செய்வதற்கு 20க்கும் அதிகமான பேருந்துகளை கொண்டு வந்து நிறுத்தியும் தங்களது, பார்ப்பன இந்துத்துவ பாசத்தை வெளிப் படுத்தினர்.
உடனடியாக கழகத் தலைவரிடம் ஆலோசனை பெற்ற நிர்வாகிகள், காவல்துறை தடையை வேறு வகையில் எதிர் கொள்ளலாம் என முடிவு செய்து பொது மாநாட்டை கே.கே.எஸ்.கே. அரங்கத்திலேயே தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி முடித்தனர். காவல் துறையின் நடவடிக்கையைக் கண்டித்து ஒத்த கருத்துள்ள ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து ஈரோடு மாநகரில் மிகப் பெரிய அளவில் திராவிடர் விடுதலைக் கழகம், போராட்டங்களை நடத்துமென நிர்வாகிகள் அறிவித்தனர்.
செய்தித் தொகுப்பு: மன்னை இரா.காளிதாசு

பெரியார் முழக்கம் 12112015 இதழ்

 

You may also like...