கழகத்தின் சார்பில் வேலூரில் ஆர்ப்பாட்டம் : உயர்நீதிமன்றம் அனுமதி

6.11.2015 அன்று வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மாட்டிறைச்சி வைத்திருந்ததாக உத்திரபிரதேசத்தில் கொல்லப்பட்ட அக்லக் படுகொலையை கண்டித்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமலில் உள்ள மாட்டிறைச்சிக்கான தடையை நீக்கக் கோரியும், தொடரும் ஜாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்தக் கோரியும், 30.10.2015 அன்று வேலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி கழகத்தின் சார்பில் வேலூர் சத்துவாச்சேரி காவல்நிலையத்தில் 21.10.2015 அன்று மனு அளிக்கப்பட்டது.
மனு அளித்த அன்றைய நாளே வேலூர் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் வேலூர் மாவட்டத்தில் காவல்துறை சட்டம் அமுலில் இருப்பதாகவும், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளித்தால் பதட்டமான சூழல் உருவாகும் எனவும் கூறி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார்.
அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து கழகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு 29.10.2015 அன்று விசாரணைக்கு வந்தது. 30.10.2015 அன்று அரசு தரப்பின் விளக்கங்களைக் கேட்ட நீதிமன்றம் கழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட வாதங்களை ஏற்று வேலூரில் 6.11.2015 அன்று தலைமை தபால் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் கழகத்தின் சார்பில் கழக வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை. அருண் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி கழகத் தரப்பு வாதங்களை எடுத்துரைத்தனர்.

பெரியார் முழக்கம் 04112015 இதழ்

You may also like...