இனி என்ன செய்யப்போகிறோம்? – குறுந்தகடு வழக்கிலிருந்து விடுதலை
2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இன அழிப்புப்போர் உச்சத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இங்கு தமிழ் நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அப்போதைய பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் பல்வேறு வகையில் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
ஈழத்தின் இன அழிப்பு குறித்து பெதிக வின் சார்பில் ”இனி என்ன செய்யப்போகிறோம்?” எனும் தலைப்பில் காணொலி குறுவட்டு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் ஈழத்தில் நடைபெறும் போர் குறித்து தமிழக மக்களுக்கு உண்மைகளை விளக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
அப்போது அக்குறு வட்டுக்களை வைத்திருந்ததாக கூறி தற்போதைய திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெளியீட்டு செயலாளர் தோழர் கோபி இராம.இளங்கோவன் அவர்கள் காப்புரிமைச்சட்டத்தின் கீழ் தமிழக அரசால் கைது செய்யப்பட்டு 2½ மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
பிறகு அந்த வழக்கில் கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன் அவர்களும் சேர்க்கப்பட்டார்.இந்த வழக்கு கோபி குற்றவியல் நீதி மன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்றது.
இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த 20.10.2015 அன்று கோபி நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.இவ்வழக்கை தள்ளுபடி செய்து கழக தோழர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது.
இவ்வழக்கில் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்கள் மற்றும் வழக்கறிஞர் குணசேகரன்,வழக்கறிஞர் செல்வி ஆகியோர் வாதாடினார்கள்.
பெரியார் முழக்கம் 29102015 இதழ்