குடி அரசின்’ நான்காவது ஆண்டு முதல் இதழில் எழுதியிருந்த தலையங்கத்தைப் பார்த்த நண்பர்கள் பலர் நமது இயக்கத்தைப் பற்றியும் நம் ‘குடி அரசின்’ வளர்ச்சியைப் பற்றியும் வாழ்த்துக் கூறி பல கடிதங்கள் எழுதி இருக்கின்றார்கள். உதாரணமாக காரைக்குடி ‘குமரன்’ பத்திரிகையும், அதன் ஆசிரியர் திரு. முருகப்ப செட்டியார் அவர்களும், அமராவதிப்புதூர் திரு. பிச்சப்பா சுப்பிரமணிய செட்டியாரும், கானாடுகாத்தான் திரு. வையி. சு. ஷண்முகம் செட்டியார் அவர்களும், மதுரை, அருப்புக்கோட்டை, திருப்பூர், கோயம்புத்தூர், திருச்சி, நாகப்பட்டணம், கும்பகோணம், மாயவரம், தஞ்சை, திருச்செங்கோடு, மாரண்டள்ளி, அம்பலூர், சென்னை, கொளும்பு முதலிய இன்னும் பல இடங்களிலிருந்து பல நண்பர்களும் எழுதி இருக்கின்றார்கள். அவற்றுள் சிலர் ‘குடி அரசை’ லிமிட்டெட் கம்பெனியாய் ஏற்படுத்துவதை ஆதரித்தும் பலர் அதைத் தடுத்தும் எழுதியிருக்கிறார்கள். ஆனாலும் சுயமரியாதை இயக்கத்தை ஒரு தனி ஸ்தாபனமாக்கி அதற்கு வேண்டிய சங்கம், பிரசாரம் காரியஸ்தலம் முதலிய ஏற்பாடுகள் செய்யும் விஷயத்தில் யாவரும் ஒரே அபிப்பிராயமாகத்தான் எழுதி...