வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (22) தலைநகர் மீட்புப் போரில் திராவிடர் கழகம் வாலாசா வல்லவன்
தமிழரசு கழகத்தைத் தொடங்கிய ம.பொ.சி., மீண்டும் காங்கிரசுக்குள் தன்னை இணைத்துக் கொள்ளவே தீவிர முயற்சிகளில் ஈடுபட்டார். இது குறித்து ம.பொ.சி.யே இப்படி எழுதுகிறார். (சென்ற இதழ் தொடர்ச்சி) காங்கிரசிலிருந்து வெளியேறி விடுவதென்று தமிழரசுக் கழகம் எடுத்த தீர்மானத்தின் ஆங்கில நகலை எனது கையெழுத்துடன் நேருஜிக்கு அனுப்பி வைத்தேன். அவர், “தமிழரசுக் கழகம் எடுத்த துரதிருஷ்டமான முடிவு எனக்குக் கிடைத்தது” என்று மட்டுமே குறிப்பிட்டு பதில் எழுதினார். “தமிழரசுக் கழகத்தார் அனுப்பிய ராஜினாமாக்களை ஏற்று பதில் எழுதவேண்டாம்; மேற்கொண்டு அவர்கள் எப்படி நடக்கிறார்கள் என்பதைக் கண் காணித்து வாருங்கள்” என்று நேருஜி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு எழுதியதாகக் கேள்விப்பட்டேன். பிரதமர் நேருஜி என்பால் காட்டிய பேரன்பு காரணமாக ஒன்றரையாண்டு காலம் நான் காங்சிரசில் நீடித்திருக்க அவகாசம் கிடைத்தது. (ம.பொ.சி. ‘நேருஜி என் ஆசான்’ பக். 93 முதல் 100 வானதி பதிப்பகம், சென்னை-17) சென்னை நகர் பிரச்சினை 1953 சனவரி முதல் 1953...