காங்கிரசைப் புதையுங்கள்

காங்கிரசுக்காரர்கள் பொதுமக்களிடம் ஓட்டுப் பெறுவதற்காகப் பிரசாரம் செய்த காலையில் பல மேடைகளில் தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி உள்பட எல்லாக் காங்கிரஸ்காரர்களும் இப்போது எங்களுக்கும், சர்க்காருக்கும் தான் யுத்தம் என்றும், ஜஸ்டிஸ் காங்கிரஸ் பிரிவு இதில் காட்டக் கூடாது என்றும் சொல்லி ஓட்டுப் பெற்றபின், இப்போது மந்திரி பதவி பெறுவதும், சர்க்காரை நடத்திக் கொடுப்பது மூலம் சர்க்காரோடு யுத்தம் செய்கிறோம் என்று சொல்லிக் கொள்வதோடு ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதுதான் எங்கள் வேலை ஆதலால் சர்க்காரிடம் எங்களுக்குப் போர் இல்லை என்பதாக அதாவது நேற்று கும்பகோணத்தில் தோழர் சத்தியமூர்த்தி கோர்ட்டில் காங்கிரசார் செய்ததாக ஏற்பட்ட காலித்தனக் கேசில் சாட்சி சொல்லும் போது “”ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பது தான் எங்கள் வேலை” என்று சாட்சிப் பெட்டி மேல் இருந்து கொண்டு தைரியமாய் சொன்னது, காங்கிரஸ்காரர்களின் மனப்பான்மையை நன்றே விளக்கிக் காட்டக்கூடியதாகும்.

ஆனால் இவர்கள் இப்படி வாயினால் சொல்லிக் கொண்டிருக்கலாம். காரியத்தில் இந்தியா முழுவதிலுமே எல்லாப்  பாகங்களிலிருந்தும், “”காங்கிரஸ் கட்சியை ஆழக் குழிதோண்டி புதைக்க வேண்டும்” என்று சொல்லிக் கொண்டும் அதற்கு ஆவன செய்து கொண்டும் வருகிறார்கள். அதற்கு உதாரணம் வேண்டுமானால் கீழே காண்க@

ஹைதராபாத்திலிருந்து வெளிவரும் “”இந்திய சமஸ்தானங்களும், ஜமீன்தார்களும்” மாதப் பத்திரிகை “காங்கிரசைப் புதையுங்கள்’ என்ற மகுடமிட்டு ஒரு வியாசத்தை வரைந்திருக்கிறது. அவ்வியாசத்தில் பின் வரும் விஷயம் காணக் கிடக்கிறது.

“”ஜஸ்டிஸ் கட்சியின் விடா முயற்சியின் பயனாகவும் அவர்கள் தளராத ஊக்கத்தோடு காங்கிரசை எதிர்த்து பிரசாரஞ் செய்து வந்ததின் பயனாகவும் பொது மக்கள் விழிப்படைந்து காங்கிரசின் ஒழுக்கக் கேடுகளையும், அதன் நிலையையும் கண்டு கொள்ள முடிந்தது. அதனால் இந்த பெரும் புகழ் ஜஸ்டிஸ் கட்சிக்கே உரித்தானது. பொது மக்களும் அவர்களுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள். நாட்டிற்காக தன் நலத்தை பேணாது, பிற நலத்திற்கு உழைத்து வரும் ஆனரபில் ராஜா பொப்பிலி, சர்.எ. பாத்ரோ, திவான்பகதூர் எ. ராமசாமி முதலியார் போன்ற அரும்பெரும் தேசீயத் தலைவர்களைக் கொண்டு அக்கட்சி நிற்கிறது. உண்மையாகவே அவர்கள் தேசீயத் தலைவர்களாகக் கொள்ளல் வேண்டும். இக்கட்சி ஒரு நோக்கத்தோடே காங்கிரசோடு எதிர்த்து போராடுகிறது. இன்று தென்னாட்டில் காங்கிரஸ்காரர்கள் எங்கேயாவது தோற்றார்கள் என்றால், அத் தோல்வி ஜஸ்டிஸ் கட்சியாரால் தான் ஏற்பட்டதென்று சொல்லவேண்டும்.

குடி அரசு  கட்டுரை  24.11.1935

You may also like...