ஹிந்துஸ்தானில் கரையும் காஷ்மீர்! – அபூர்வானந்த்

(நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு 2019ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மற்றும் மாநில அந்தஸ்தைப் பறித்தது. 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர், 5 ஆண்டுகளில் காஷ்மீர் மிகப்பெரிய வளர்ச்சிக் கண்டிருப்பதாகப் பாஜகவும், சங்கிகளும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் காஷ்மீரத்து அமைதியின் பின்னால் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் அரச வன்முறைகளை விவரித்து டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் அபூர்வானந்த் தி வயரில் எழுதிவரும் தொடரின் ஒரு பாகம் தமிழில்)
அவமானம், அநீதி மற்றும் அடக்குமுறையின் மற்றொரு ஆண்டு கடந்துவிட்டது. காலண்டர் ஆண்டில் ஏற்படும் மாற்றம் இந்தச் சூழ்நிலைகளில் மாற்றத்தைக் கொண்டு வருமா? நான் ஒரு காஷ்மீரியாக இருந்திருந்தால், ஆகஸ்ட் 5 தேதியைக் காலண்டரில் பார்த்ததும் இதுதான் என் நினைவுக்கு வந்திருக்கும். இந்த அவமானத்தையும், அநீதியையும், அடக்குமுறையையும் என்னால் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணம் என் பார்வையிலேயே என்னைச் சிறுமைப்படுத்துகிறது.
இத்தகைய அவமானம் மற்றும் அடக்குமுறையை எனக்கு நினைவூட்டும் தேதி இந்தியாவின் பிற பகுதிகளுக்கு மகிழ்ச்சியான நாளாக இருப்பதை நான் சோகத்துடனும் வேதனையுடனும் பார்க்கிறேன். எனக்கு அடக்குமுறையின் சின்னமாகத் தெரிவதுதான் அவர்களுக்கு வெற்றிச் சின்னமாகத் தெரிகிறது. ஒரு நிலத்தை முழுவதுமாக இந்துஸ்தானின் ஒரு பகுதியாக ஆக்குவதற்குக் கையகப்படுத்திய மூர்க்கத்தனமான மகிழ்ச்சி.
இந்தியாவிற்கு அதிகாரமில்லை
ஆகஸ்ட் 5, இந்த நாளில்தான் காஷ்மீர் இந்திய அரசியலமைப்பை முழுமையாக ஏற்றுக்கொண்டதாகப் போற்றிக்கொள்கிறார்கள். இதைவிடப் பெரிய பொய்யோ, ஏமாற்றமோ இருக்க முடியாது. 370வது சட்டப்பிரிவை ரத்து செய்தபோது, இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவை நாடாளுமன்றமே கொன்றது. காஷ்மீரிகளை இந்தியாவுடன் இணைக்கும் நூலை அறுப்பதாகத்தான் இந்த நீக்கம் இருந்தது.
சட்டப்பிரிவு 370 என்பது இந்தியாவுக்கும் காஷ்மீருக்கும் இடையிலான சுவர் அல்ல, அது இருவரின் இதயங்களையும் ஒன்றிணைக்க ஏற்படுத்தப்பட்டது. இந்திய அரசோ அல்லது நாடாளுமன்றமோ அதை மாற்ற முடியாது என்பதுதான் அப்போது இந்தியா அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதி. எந்த விதமான மாற்றத்திற்கும், ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபையின் ஒப்புதல் கட்டாயமாக இருந்தது. அது இல்லாத நிலையில், மாநில சட்டப் பேரவையின் ஒப்புதலுடன் மட்டுமே எந்த மாற்றமும் செய்ய முடியும். ஆனால், சட்டப் பேரவையே தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, ஒன்றிய ஆட்சியை அமல்படுத்தியபோது, ஆளுநரின் ஒப்புதலை, சட்டப் பேரவையின் ஒப்புதலுக்கு இணையாக எப்படிக் கருத முடியும்?
சட்டமன்றம் என்பது மக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர்கள். ஆனால் ஆளுநர் மக்கள் பிரதிநிதி அல்ல; அவர் ஒன்றிய அரசின் பிரதிநிதி. பிறகு எப்படி அவர் சட்ட சபைக்கு சமமாகக் கருதப்பட்டார்? ஆனால் அது வெட்கமின்றிச் செய்யப்பட்டது, உச்ச நீதிமன்றமும் சரி என்று ஏற்றுக்கொண்டது! ஜம்மு காஷ்மீரில் இருந்து ஒரு மாநிலத்தின் அந்தஸ்தைப் பறித்து, அதன் சட்டமன்றத்தைக் கலைத்ததன் காரணம் மற்றும் நோக்கம் என்ன? சட்டசபை மற்றும் அதை இரண்டு பகுதிகளாகப் பிரிப்பது? இரண்டு பகுதிகளையும் யூனியன் பிரதேசங்களாக மாற்றுவதா?
காஷ்மீரிகளை இழிவுபடுத்துவதற்காக இதைச் செய்யவில்லை என்றால், வேறு என்ன காரணம்? உண்மையில், இப்போது, அவர்கள் முற்றிலும் டெல்லியின் தயவில் இருக்கிறார்கள் என்றும், மேல்முறையீடு செய்வதற்கு எங்கும் செல்ல முடியாது. இந்தியாவில் வேறெந்த மாநிலமும் இந்த அவமானத்தைச் சந்தித்த தில்லை. எந்த முழு மாநிலமும் உடைக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்படவில்லை. இது ஜம்மு காஷ்மீரில் செய்யப்பட்டது. இது ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட தண்டனை. அதன் தாழ்வு மனப்பான்மையை நிரந்தரமாக்குவதற்காக இது செய்யப்பட்டது.
இந்துமயமாக்கலுக்கு இருந்த தடை
இதனுடன் இன்னொரு அர்த்தமும் இருந்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் மட்டும் தான் இசுலாமிய முதல்வரைக் கொண்டிருந்தது. இசுலாமியர்கள் அரசியல் ஆதிக்கத்தில் இருந்த இடம். இது ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) சித்தாந்தத்திற்கு முற்றிலும் எதிரானது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஆர்.எஸ்.எஸ்ஸின் தீன்தயாள் உபாத்யாயாவும் முஸ்லிம்களை அரசியல் ரீதியாகத் தோற்கடிக்கும் நோக்கத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார். “இசுலாமியர்கள் இந்தியாவில் இருக்க முடியும் மற்றும் இங்கே வாழ முடியும், ஆனால் அவர்கள் எங்கும் அரசியல் முக்கியத்துவம் பெற அனுமதிக்க முடியாது.” அதுதான் ஆர்.எஸ்.எஸ்.சித்தாந்தம்.
எனவே காஷ்மீரில் இசுலாமிய மக்களை ஒடுக்குவதற்காக டெல்லி தனது ஆட்களை லெப்டினன்ட் கவர்னர்களாக அனுப்பியது. டெல்லியின் உத்தரவை அங்கு அமல்படுத்த வேண்டும். ஆர்.எஸ்.எஸ்.ஸின் இந்துமயமாக்கலின் பாதையில் – ஜம்மு-காஷ்மீர் என்ற கடைசித் தடையை முடிவுக்குக் கொண்டுவர எடுக்கப்பட்ட நடவடிக்கை இதுவாகும். அதனால்தான், இந்தியாவுடனான ஜம்மு காஷ்மீரின் உறவின் அடையாளமான 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு சரியாக ஒரு வருடம் கழித்து, அயோத்தியில் பாபர் மசூதி நிலத்தில் ராமர் கோவிலுக்கு பூமி பூஜை செய்யப்பட்டது, அது தற்செயல் நிகழ்வு அல்ல. ஒரு இசுலாமியர்களின் நிலத்தை இந்துத்துவவாதிகள் ஆக்கிரமித்தது மட்டுமல்ல அது, இசுலாமியர்களின் அடையாளத்தை அழிப்பதன் அடையாளமாகவும் இந்த ராமர் கோவில் உள்ளது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதைப் போலவே ஜம்மு காஷ்மீரும் இடிக்கப்பட்டிருக்கிறது. பாபர் மசூதி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது போல் ஜம்மு காஷ்மீர் நிலமும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது.
அமைதியின் பின்னால் வன்முறை
இப்போது காஷ்மீரில் நிலம் கையகப்படுத்தப்படலாம், காஷ்மீர் பெண்களும் தங்களுடையதாக இருக்கலாம் என்று இந்துத்துவவாதிகளிடம் கொண்டாட்ட அலை ஓடியதில் ஆச்சரியமில்லை. 370வது சட்டப்பிரிவை ரத்து செய்வதை ஆதரிப்பவர்களின் உண்மையான தன்மையைப் புரிந்து கொள்ள இந்த ஆபாசமான கூச்சல் போதும். ஆகஸ்ட் 5, 2019க்குப் பிறகு காஷ்மீர் பெரும்பாலும் அமைதியாக இருக்கிறது. அங்கு பெரிய எதிர்ப்பு எதுவும் காணப்படாததால் பலர் ஆச்சரியப்படுகிறார்கள். காஷ்மீர் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர் அல்லது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். அதன் சமூகத்தின் முக்கிய நபர்களும் கைது செய்யப்பட்டனர். காஷ்மீரின் முக்கிய பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டனர் மற்றும் யாரேனும் பேசினால் பின்விளைவுகள் ஏற்படும் என அச்சுறுத்தப்பட்டனர்.
அத்தகைய சூழ்நிலையில், காஷ்மீரிகள் அமைதியாக இருப்பதன் மூலம் அதிக மன பலத்தை வெளிப்படுத்தியிருக்கலாம். காஷ்மீர் மக்கள் வாழும் நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் ராணுவம் இருக்கும் போது, அதற்கு மதிப்பு இல்லை என்றால், எதிர்ப்பைக் காட்ட வேறு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். காஷ்மீர் மக்களின் மவுனத்தைத் தங்கள் ஒப்புதலின் ஒப்புதலாகக் கருதுபவர்கள், இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகளில் அவர்களின் உண்மையான பதிலைக் கேட்டிருக்க வேண்டும். காஷ்மீரில் எங்கும் வேட்பாளரை நிறுத்த பாஜக துணியவில்லை. அவ்வாறு செய்ய முடியவில்லை. எப்படியிருந்தாலும், கடந்த ஐந்தாண்டுகளாக லெப்டினன்ட் கவர்னர் (துணைநிலை ஆளுநர்) மூலமாகவே பாஜக ஆட்சி செய்து வருகிறது! காஷ்மீர் அமைதியாகி, வளர்ந்து கொண்டிருக்கிறது என்றால், மக்களிடம் சென்று வாக்குக் கேட்க பாஜகவுக்கு ஏன் தைரியம் வரவில்லை? பாஜக ஆதரித்த அனைவரும் மோசமாகத் தோற்றனர். தற்போது ஜம்மு காஷ்மீரில் சட்டசபைத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது . ஆனால் ஆளுநர்களுக்கு அதீத அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே சட்டசபை அமைந்தாலும், துணைநிலை ஆளுநர்கள் இருக்கும்வரை, சட்டமன்றத்திற்கு அதிகாரம் இருக்காது.

இனி காஷ்மீரிகளின் காஷ்மீர் இல்லை
இந்த ஐந்து ஆண்டுகளில், காஷ்மீரிகள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் ஒன்றிய பாஜக அரசின் வன்முறையை அனுபவித்திருக்கிறார்கள். எந்த ஒரு ஊழியரையும் காரணம் கூறாமல் பணிநீக்கம் செய்யலாம். காஷ்மீரின் நிலத்தை அனைத்து விதிகளையும், கட்டுப்பாடுகளையும் தளர்த்தி முதலாளிகளிடம் ஒப்படைக்கலாம். காஷ்மீரின் ஆப்பிள் வியாபாரம் அழிக்கப்படலாம். ஆனால் காஷ்மீரிகளின் மவுனத்தில் அதற்கு ஆழ்ந்த மறுப்பு இருப்பது இந்திய அரசுக்குத் தெரியும்.
சமீபத்தில், காஷ்மீரில் யோகா தினத்தைக் கொண்டாட பிரதமர் முடிவு செய்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு, அதிகாலை 3 மணி முதல் அங்கு இருக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், அவர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடைவதற்கு முன்பு அவர்களின் காலணிகளைக் கழற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த அவமானத்திற்குப் பிறகு, மூடிய மைதானத்தில் அவர்களின் படம் இந்தியாவில் ஒளிபரப்பப்பட்டது. இது இந்திய அரசின் அதிகாரத்தைக் காட்டுவதாகவே இருந்தது. ஒரு மோசமான, வன்முறை காட்சி!
காஷ்மீரின் உதடுகள் தைக்கப்பட்டு அதன் மார்பில் இந்திய அரசின் துவக்கம் உள்ளது. காஷ்மீரின் அன்பைப் பாதுகாப்பதற்கான இந்திய வழி இதுதானா? அல்லது அதன் மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமா இது?
தமிழில்: பிரகாசு

பெரியார் முழக்கம் 08.08.2024 இதழ்

You may also like...