1. உண்மை இராமாயணம்
காட்சி – 23
(அந்தப்புர அலங்கார மண்டபத்தில் கைகேயி உல்லாசமாய் உலாவிக் கொண்டிருக்க, மந்தரை ஆத்திரத்தோடு மாடியிலிருந்து இறங்கி வந்து)
மந்தரை : அம்மா! இனிக் கொஞ்ச நேரத்திற்குள் வரப்போகும் பேராபத்தை உணராத போங்காலத்திற்குள்ளான கைகேயி! என்ன நீ கவலையற்று உல்லாசமாக உலாவுகிறாயே. சிறிது நேரத்தில் உன் தலைமேல் இடி விழப்போகிறது! நீ ஒழிந்தாய்! உன் மகன் அழிந்தான்! உன் நாடு நகரம் எல்லாம் பறிபோகப் போகிறது! கைகேயி! நான் என்ன சொல்லுவேன்! (அழுகிறாள்)
கைகேயி : என்னடி மந்தரை உளறுகிறாய்! உனக்கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா? புத்தி சுவாதீனம் இல்லையே? சற்று முன் மாடிக்குப்போகும்போது நல்ல புத்தியோடு இருந்தாயே! இது என்ன அதிசயமாய் இருக்கிறது!
மந்தரை : மதிகெட்ட மனுஷியே! எனக்கொன்றும் பைத்தியம் இல்லை. உனக்கு ஆபத்து வந்துவிட்டது. நீயும் “உன் மகனும்” உன் செல்வாக்கும் அழிந்து ஒழிந்தீர்கள்.
கைகேயி : சீ! வாயை மூடு. பிசாசே! உளராதே. புத்திகெட்டவளே! தசரதச் சக்கரவர்த்தியின் பட்ட மகிஷி நான். இராமனின் தாய் நான். எனது ஆசை மணாளன் சக்கரவர்த்தியும் என் அருமை மகன் இராமனும் இருக்கும்போது, எனக்கு என்னடி ஆபத்து வரப்போகிறது? உலகம் எல்லாம் ஒழிந்த பிறகல்லவாடி எனக்கு ஏதாவது கஷ்டம் வரவேண்டும்.
மந்தரை : அம்மா கைகேயி! உண்மையாக வந்துவிட்டது கேடு. கிட்ட நெருங்குகிறது. உனக்
கொன்றும் தெரியவில்லை. நாளைக்கு நாம் எல்லோரும் தெருவில் திரியும், சாதாரணப் பெண்களாக ஆகப்போகிறோம். இது உண்மை! உண்மை!
கைகேயி : அடி மந்தரை! நீ என்னமோ உளறுகிறாய் என்றே கருதுகிறேன். எனக்கு என்ன ஆபத்து வர முடியும்? நீ சொல்வது எனக்கு ஒன்றும் புரியவில்லை.
மந்தரை : புரியவில்லையா? கேடுகாலம் கிட்ட நெருங்கியவர்களுக்கு ஒன்றும் புரியாது என்பது உண்மைதான். சொல்லுகிறேன் கேள். இராமனுக்கு அயோத்தி பட்டாபிஷேகம் நடக்கப் போகிறது. நம் வீடுவீதியும் தவிர, ஊரெல்லாம் அலங்காரம் ஆகிவிட்டது.
கைகேயி : (மிக்க ஆனந்தத்தோடு) அப்படியா? உண்மையாகவா?
மந்தரை : ஆமாம்! சத்தியமாக.
கைகேயி : (மேலும் ஆனந்தமாக) எப்போது?
மந்தரை : நாளைக்கே நடக்கப்போகிறது. அதற்கு வேண்டிய எல்லாக் காரியங்களும் மிக மிகத் துரிதமாக நடைபெறுகிறது.
கைகேயி : ஹப்பா! என் மனம் குளிர்ந்ததடி. இந்த நல்ல சேதியைச் சொன்ன உனக்கு நான் என்ன பரிசளிப்பது? இந்தா! இந்த நவரத்தினமாலை. நீட்டு! கழுத்தை. இந்த நற்செய்தியை எனக்குச் சொல்லி நீ இவ்வளவு உணர்ச்சியை ஊட்டினது மிகவும் சரி. நான் நீ சிலேடையாகச் சொன்னதை உணராமல் உன் மேல் கோபித்துக் கொண்டேன். அது என் மதியீனம் தான். மன்னிப்பாய்! என் அருமைக் கண்மணி! என் உயிரினும் சிறந்த மாணிக்கமே! பரதனினும் பதினாயிரம் பங்கு மேம்பட்ட, என் ஆசைப்பொக்கிஷம் இராமனுக்கு முடிசூட்டு நடப்பது எனக்கு எத்தனை மகிழ்ச்சியைக் கொடுக்கத் தக்க செய்தி! மன்னனின் அறிவே அறிவு! நல்ல காரியம் செய்தாய்! இராமன் மங்களகரமாக முடிசூட்டப்பெற்று அவன் ஆசை தீர பல்லாண்டு அரசாளட்டும்! மந்தரே! இம் மகிழ்ச்சியான சேதி கொண்டு வந்த உனக்கு மற்றுமொரு வணக்கம். நீட்டு! கழுத்தை. இந்தா! இந்தா! இந்த மாலையைப் போட்டுக் கொண்டு முடிசூட்டு விழாவுக்கு நம்வீட்டில் ஆகவேண்டிய காரியங்களையும் அலங்காரங்களையும் செய்! மன்னன் முடிசூட்டை நாளைக்கே வைத்தாரே! அவருடைய குணத்தையும் அன்பையும் யோசனையையும் நான் எப்படி வியப்பேனடி! அரசன் வாழி! இராமன் வாழி! அயோத்தி வாழி! நீயும் நானும் வாழி! போய் வேலையைப்பார்.
மந்தரை : (இரத்தின மாலையைப் பிடுங்கி எறிந்துவிட்டு) அய்யோ பைத்தியக்காரி! சூது வாதரியாத பேதைப் பெண்ணே! உனக்கு ஏற்பட்ட கேடு காலத்தின் உச்சம், நெருப்புக்கட்டி சிவப்பு பனிக்கட்டியாகத் தோன்றுகிறது. அரசன் உன்னிடம் காட்டும் கள்ளத்தனமான அன்பினும், இராமன் உன்னிடத்தில் நடிக்கும் பொய்யான பக்தியிலும், ஈடுபட்ட நீ அவற்றை மெய்யென்று நம்பி, வெறிகொண்டவள் போல இப்படிப் பேசுகிறாய். இராமன் யார்? பரதன் யார்? இந்த நாடு யாருடையது? இது உன்னுடையதல்லவா? இது யாருக்குக் கிடைக்க வேண்டியது? உன் வயிற்றில் பிறந்த பரதனுக்கல்லவா? இதன் பின் வாரிசுதாரர் யாராய் இருக்கவேண்டும்? கேகயமன்னனின் பெண் வாரிசான உன் வயிற்றில் பிறந்த சந்ததிக்கல்லவா? நான் யாவும் அறிந்தவள். அதனால் சொல்லுகிறேன், கேள்! முதலாவதாக, இவ்வளவு அவசரமாக இந்தப்பட்டாபிஷேகம் இன்று நினைத்து, நாளைக்கே ஏன் நடக்கவேண்டும்? அதுவும் உன் மகன் பரதன் இல்லாத சமயத்தில் ஏன் நடத்தப்பட வேண்டும்? அய்யோ பரிதாபத்துக்குரிய பைத்தியக்காரி! உனக்குக் கூடத் தெரியாமல், உன் “ஆசைக் கணவன்” சக்கரவர்த்தி முடிசூட்டைப்பற்றி உன்னைக்கலவாமல், உன்னிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல், பட்டாபிஷேகத்தை இவ்வளவு இரகசியமாகவும் திருட்டுத்தனமாகவும் ஏன் நடத்த வேண்டும்? உன் ஆசைப் பொக்கிஷம் இராமனாவது தனக்கு நடக்கப்போகும் முடிசூட்டைப் பற்றி ஒரு வார்த்தையாவது உன்னிடம் ஏன் சொல்லக் கூடாது? உன் தகப்பானாருக்குக் கூட, முடி சூட்டுக்கு வரும்படி அழைப்பு அனுப்பவில்லையாம்! உன் மகன் பரதனுக்கும் தெரிவிக்கவில்லையாம்! இவற்றையெல்லாம் பற்றி நன்றாய் நிதானமாய் யோசித்துப் பார்! இன்று இராமனுக்குப் பட்டம் போய்விட்டால், பிறகு அவன் வாரிசுக்கு அவன் வயிற்றில் பிறந்த பிள்ளைக்குத்தான் பட்டம் போகுமே தவிர உன் மகனுக்கு எப்படி வரும்? நான் சொல்லுவனவற்றைக் கவனமாகக் கேள்! இந்த அரசு உன்னுடையது. வாரிசுக் கிரமப்படி இது பரதனுக்குச் சேரவேண்டியது.
இந்த காரணத்தினாலேயே, அரசர் பரதனை அவன் திருமணம் முடிந்தவுடனே உன் தகப்பன் வீட்டுக்கு கேகய நாட்டுக்கு அனுப்பி, இந்தப் பத்து வருஷ காலமாக அவனை இந்தப் பக்கமே வரவொட்டாமல் செய்து, அவனைப்பற்றி குடிகளுக்கும் ஒன்றும் தெரியவொட்டாமலும் செய்துவிட்டார். இராமனையும் உன்னிடத்தில் அதிக அன்பும் பக்தியும் உள்ளவன் போல் நடிக்கும்படி செய்திருக்கிறார். குடிகளிடத்திலும் இராமனையே அதிகமாக மேல் விழுந்து பழகும்படியும், குடிகளிடம் செல்வாக்குப் பெறும்படியாக நடிக்கும்படியும் ஏற்பாடு செய்திருக்கின்றார். எல்லாவற்றையும் விட ஒரு முக்கிய விஷயத்தைக் கேள்! அதாவது அரசரானவர், மந்திரிகள், குருமார்கள் உள்ள கூட்டத்தில், “பரதன் இங்கு இல்லாத காலமே முடிசூட்டுக்கு ஏற்ற காலம்” என்றும் இராமனிடமும் அரசர், “இராமா! பரதன் இங்கு வருவதற்குள் இந்த முடிசூட்டு நடந்தாக வேண்டும். அவன் வந்தால் பிறகு…” என்றும் சொல்லியிருக்கின்றார். இராமனும் கோசலையும் கொஞ்சிக் குலாவி ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருக்கிறார்கள்! அவள் வீடு பண்டிகை வீடாக இருக்கிறது! இவற்றையெல்லாம் பற்றி ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு, நல்ல நடுநிலையான புத்தியோடு சிந்தித்துப் பார்! இவற்றிலிருந்து உன் கணவனிடத்திலும், இராமனிடத்திலும் உள்ள சூழ்ச்சி, வஞ்சகம், துரோகம் முதலிய கெட்ட குணங்கள் உனக்கு விளங்குகிறதா? இல்லையா? பார்? “இராமனென்ன, பரதனென்ன, இரண்டும் ஒன்றுதானே” என்கிறாயே. அப்படிப்பட்ட இராமன் தனது முடிசூட்டைப்பற்றி ஒரு வார்த்தையாவது உன்னோடு கலந்தானா? சொன்னானா? முடிசூட்டுக்காக ஊரெல்லாம் அலங்காரம் செய்யும்போது உன் வீதி மாத்திரம் ஏன் விடப்பட்டிருக்கின்றது? இராமன் தாய் கோசலை வீட்டில், எவ்வளவு ஆனந்தமாகக் களியாட்டம் நடக்கிறது? பார்! இராமன் அரசனானவுடன் கோசலைதான் அரசன் தாயாகவும், பெரிய ராணியாகவும் ஆகப் போகின்றாள். சீதையே இனி அயோத்திக்கு ராணியாவாள். சீதையின் தாய், தகப்பன் சுற்றத்தார்களுக்கே இந்த ராச்சியத்தில் பந்து ஜன உரிமையும் ஆதிக்கமும் இருக்கப்போகின்றது. பிரஜைகளும் மற்ற அரசர்களும் இராமனைத்தான் அரசனாக மதித்தும், சீதையைத்தான் ராணியாக மதித்தும், கோசலையைத்தான் அரசன் தாயாக மதித்தும், மரியாதை செய்வார்களே தவிர, உன்னையும் உன் மகனையும் அவன் மனைவிமாரையும் இனி யாரும் சட்டை செய்யமாட்டார்கள். கோசலையும் இவ்வளவு நாள் உன் மீதிருந்த பொறாமைக்குப் பழி வாங்கித்தீருவாள்! உனது இழிவும், துன்பமுமே அவள் ஆனந்தம். தொலைந்தது! இன்றோடு அயோத்தியில் கேகய நாட்டுச் சந்ததியின் பெயரும் சம்பந்தமும் தொலைந்தது! இன்றோடு கைகேயியின் அந்தஸ்து, தொலைந்தது! இன்றோடு பரதனின் எதிர்கால வாழ்வு. நீயும். நானும், பரதனும், பரதனின் மனைவிமாரும் இனி அயோத்தியில் இருந்தால் அனாமதேயப் பேர்வழிகளாகத் தெருவில் திரிய வேண்டியதுதான். அதுமாத்திரமா? பரதன் இனிமேல் அயோத்திக்கு வருவானேயானால் அவன் உயிருக்கு ஆபத்துதான். புறப்படு! இப்போதே நாம் இருவரும் உன் தகப்பன் வீடு போய்ச்சேருவோம். பரதனைக் கண்ணிலாவது பார்த்துக் கொண்டிருப்போம். இங்கிருந்து மதிப்பற்று, மானங்கெட்டு எதிரியின் முன் வாழ என்னால் முடியாது. உனக்கும் அது யோக்கியதை அல்ல. அதைவிட உயிரை விட்டுவிடுவதே மேல். நான் சொல்வதை அலட்சியமாகக் கருதாதே!
கைகேயி : (புன்சிரிப்புடன், பயத்துடன், வீரத்துடன், மிகுந்த யோசனையுடன், ஒரு பெரு மூச்சு. பிறகு மந்தரை தோளில் கைபோட்டு அணைத்து, அவள் தலையைத் தடவிக் கொடுத்து) மந்தரை! நீ சொல்லுவது, நான் யோசிக்க யோசிக்க என் புத்திக்குச் சரி என்றுதான், தோன்றுகிறது, ஒன்றைக் கூட மறுக்க முடியாது. ஆனால் என் மனம் நம்பமாட்டேன் என்கிறது. என்றாலும் அரசர் இதைப்பற்றி என்னிடம் ஏன் சொல்லி இருக்கக் கூடாது? இராமன் அவன் தாயாரிடம் போய்ச் சொல்லிக்கொண்டு, மகிழ்ச்சி அடைந்து தன்னை முடிசூட்டுக்குத் தயார் செய்து கொண்டிருப்பவன், அவனிடத்தில் எவ்வளவோ பிரியமாய் இருக்கிற என்னிடம் ஏன் வந்து சொல்லி இருக்கக் கூடாது? அரசன் தான் ஆகட்டும்! பரதனுக்குத் தெரிவித்து அவனை ஏன் முடிசூட்டு விழாவிற்கு வரவழைத்திருக்கக் கூடாது? என் தகப்பனுக்கு ஏன் அழைப்பு அனுப்பி இருக்கக் கூடாது? அப்படி என்ன பெரிய அவசரம் ஏற்பட்டுவிட்டது? மேலும் முடிசூட்டுக்கு ஊரெல்லாம் அலங்கரித்தவர்கள், என் வீதியையும், என் வீட்டையும் மாத்திரம் ஏன் அலங்கரித்திருக்கக் கூடாது, இவையெல்லாம் எனக்குமிகுந்த பயத்தை உண்டாக்கும் சங்கதியாகவே தோன்றுகிறது. இராமன் தான் ஆண்டுகொண்டு போகட்டுமே என்று நினைத்தாலும், பிறகு இப்படிப்பட்டவர்கள் என்னதான் செய்யமாட்டார்கள்? பரதன் உயிருக்கே ஆபத்தாய் முடியும் என்பது உண்மை. ஆம்! ஆம்! இதில் ஏதோ சூழ்ச்சி புதைந்து இருக்கிறது. மந்தரை! உம் மீது நான் வீணாகக் கோபித்துக் கொண்டேன். நம் குரு வசிஷ்டர் கூட, இதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்பதைப் பார்த்தால் உண்மையாக இது சூழ்ச்சிதான். நீ சொன்னதுபோல் எனக்கு ஆபத்துதான், கேடுதான். என் மகன் பரதன் வாழ்வுக்கும் – ஏன் – அவன் உயிருக்கும் ஆபத்துதான். நாம் உயிரோடு வாழ்வதில் பயனில்லை! பயனில்லை! அடி மந்தரை! என் அருமைத் தோழி! இதற்கு நீதான் ஒரு வகை சொல்ல வேண்டும். எனக்கு இப்போது என்ன செய்வதென்றே தோன்றவில்லை. என் புத்தியே எனக்கு சுவாதீனம் இல்லை. வயிற்றுக்குள் என்னமோ குழம்புகிறது. மனம் பதறுகிறது. நெஞ்சம் குமுறுகிறது. ரத்தம் கொதிக்கிறது. தலை நடுங்குகிறது. அம்மா! நீயே துணை! நீயே கதி! நீ தான் என்னையும் என் மகனையும் இந்தக் கேட்டிலிருந்தும், ஆபத்திலிருந்தும், எதிரிகளிடமிருந்தும் காப்பாற்றிக் கொடுக்க வேண்டும். உன்னையே தஞ்சம் அடைகின்றேன். (என்று கூறி அழுகுரலுடன் மந்தரையின் மீது சாய்ந்து விழுகின்றாள்.)
மந்தரை : (தானும் அழுகுரலுடன்) அம்மா! கைகேயி! துக்கப்படாதே! அழுவதில் பயன் இல்லை! ஜாக்கிரதையாய் வேலை செய்ய வேண்டும்! நான் சொல்லுகிறபடிக் கேள்! ஒன்றும் காலம் கடந்துவிடவில்லை. மார்க்கம் இல்லாமலும் போகவில்லை. முதலில் நாளை நடக்கப் போகும் பட்டாபிஷேகம் நிறுத்தப்பட வேண்டும். பிறகு ராமன் நாடு கடத்தப்பட வேண்டும். இவ்வளவு சூழ்ச்சிக்கும் துரோகத்திற்கும் சம்மதித்து, நாடுபெறப் பேராசை கொண்ட இவன், இங்கு இருந்தால் பரதன் உயிருக்குக் கேடு செய்வதில் சிறிதும் பின்வாங்கமாட்டான். ஆதலால் அவன் நாடு கடத்தப்பட்டாக வேண்டும். அதுவும் காட்டிற்கே துரத்தப்பட வேண்டும். பிறகு பரதனை வரவழைத்து முடிசூட்டு வைபவம் செய்து கொள்ளலாம். தெரிந்ததா?
கைகேயி : ஆம்! இவை மிகவும் சரியான காரியந்தான். நல்ல யோசனைதான். அதை எப்படிச் செய்வது? அதற்கும் நீதான் வழி சொல்ல வேண்டும்.
மந்தரை : அம்மா! உனக்குத் தெரியாதாது ஒன்றும் நான் சொல்லிவிடப் போவதில்லை என்றாலும் சொல்கிறேன் கேள்! அரசர் உனக்குக் கொஞ்ச காலத்துக்கு முன்பு, இரண்டு வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அதாவது இரண்டு விஷயம் நீ என்ன கேட்டாலும் அவற்றைத் தருவதாக ஒப்புக்கொண்டிருக்கின்றார். அது எப்போது என்று கேட்பாயோ? இதோ சொல்லுகின்றேன். முன்னொரு காலத்தில் மீனக்கொடியுடையவனாகிய சம்பராசுரன் என்னும் தமிழ் அரசனோடு திவேதன் என்னும் அரசன் போரிடும்போது, தமிழ் அரசனை எதிர்க்கமாட்டாமல் திவேதன் உனது கணவனை உதவிக்கு அழைத்தான். உன் கணவன் அதற்கு இசைந்து அத்தமிழரசனுடன் யுத்தத்திற்குச் சென்றான். அதில் உன் கணவன் அடிபட்டு மூர்ச்சையாகி, எதிரிகையில் சிக்கும் சமயத்தில், நீ மிக சாமர்தியமாகத் தேரைச் செலுத்தி அவரைத் தப்பித்துக் கொள்ள செய்திருக்கின்றாய். மறுபடியும் ஒரு சமயம் இது போலவே உன் கணவனுக்கு ஆபத்து ஏற்பட்ட போதும், இது போலவே, மிக சாமர்த்தியமாய்த் தேரை நடத்தி அவரது உயிரைக் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறாய். அப்போது நீ இல்லாது இருந்தால், அவர்பாடு ஆபத்தாய் முடிந்திருக்கும். ஆதலால் நீ செய்த இந்த இரண்டு உதவிக்கும், உன் கணவர் நன்றிகாட்டுவதற்காக உன்னை “உனக்கு வேண்டிய ஏதாவது இரண்டு விஷயங்களைக் கேள். அவை எவையானாலும் தருகிறேன்” என்று வாக்குறுதி தந்திருக்கிறார். அவற்றை இப்போது கேள்! ஒன்று நாளை நடக்கும் பட்டாபிஷேகம் பரதனுக்கு நடக்க வேண்டும். மற்றொன்று ராமன் காட்டுக்குப் போகவேண்டும் என்று கேள்! மன்னன் மறுக்காமல் கொடுத்துதான் ஆகவேண்டும்! இதை கேட்பதில் பயப்படவேண்டியதில்லை. நாடு ஏற்கெனவே உன்னுடையதுதான் இது நியாயமாகவே பரதனுக்குச் சேர வேண்டியதுதான். எப்படியென்றால், உன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று மன்னன் உன் தந்தையைக் கேட்கும்போது, உன் தந்தை உன்னை 60,003ம் தாரமாகக் கொடுக்க முடியாதென்று மறுத்துவிட்டார். அதற்கு மன்னவன் உன்னையே முதலாவது தாரமாகக் கருதிப், பட்ட மகஷியாய் உன்னையே ஏற்றுக்கொள்வதாகவும், அப்படிப்பட்ட மகிஷியாகிய உன் வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்கே நாட்டை பட்டாபிஷேகம் செய்து கொடுத்து விடுவதாகவும் வாக்குறுதி செய்து, அன்றே நாட்டைச் சுலபமாகக் கொடுத்துவிட்டார். அதிலிருந்து மன்னன் உனக்காக நாட்டை ஆட்சி புரிந்துவருகின்றார் என்றுதான் சொல்லவேண்டும். ஆதலால் நாட்டைப் பரதனுக்கு முடிசூட்ட வேண்டுமென்று கேட்பதில் யாதொரு நியாய விரோதமும் இல்லை. அயோத்தி நாட்டைப் பற்றி இந்தப்படியான ஒரு உரிமை உனக்கும் உன் மகனுக்கும் இருந்ததினால்தான், மன்னன் பரதனை அவன் பாட்டன் ஊருக்கு விரட்டிவிட்டதும், இராமன் உன்னிடமும் குடிகளிடமும் வெகு அன்புடையவன் போல் நடந்து வரும்படி செய்து வந்ததும், பரதன் இல்லாதபோது உன் தந்தைக்கு அழைப்பு அனுப்பாமலும், உனக்குத் தெரிவிக்காமலும், தெரியாதிருக்கும்
படியும் செய்த திருட்டுத்தனமாக முடிசூட்டை அவசர அவசரமாக நடத்தத் துவங்கினதும், மன்னன் மந்திரிகளிடமும் இராமனிடமும் “பரதன் வருவதற்கு முன் முடிசூட்டு நடந்தாக வேண்டும்” என்று சொல்லி அவசரப்படுத்தியதுமாகும். அப்படிக்கு இல்லாவிட்டால் இந்தப்படி ஏன் நடக்க வேண்டும்? ஆதலால் நீ வேறு ஒன்றும் யோசிக்க வேண்டாம்! நாடு உனக்குச் சொந்தம் என்கின்ற உண்மை இதெல்லாம் எனக்குத் தெரிந்த காரியமேயாகும். உனக்கும் தெரிந்திருக்குமென்றே கருதி இருந்தேன். உன் புருஷன் உன்னிடம் வைத்த பொய்க்காதலாலும், இராமன் உன்னிடம் நடந்து காட்டிய பொய் அன்பினாலும் நீ மறந்து விட்டாய். அரசனிடம் நீ இதையெல்லாம் சொல்லிக்காட்டி, நாடு பரதனுக்கு ஆக்க வேண்டும் என்றும், இராமன் காட்டுக்குப் போக வேண்டும் என்றும், கடிந்து கண்டிப்பாக சொன்னாயேயானால், அரசன் தலைகுனிந்து தனது வஞ்சகத்துக்கு வெட்கப்பட்டுப் பேசாமல் ஒப்புக்கொள்வாரேயொழிய மாட்டேன் என்று மறுத்துக் கூறவே மாட்டார். சந்தேகமே வேண்டாம்! நீ மாத்திரம் தைரியமாகவும், பிடிவாதமாகவும் இருக்க வேண்டும்! மனம் இளகி ஏமாந்து விடாதே!
கைகேயி :- மந்தரே! நீ சொன்னது எல்லாம் உண்மையே! இப்போதுதான் எனக்கு ஒவ்வொன்றாய் ஞாபகம் வருகிறது. உண்மையில் அரசனையும் இராமனையும் நம்பி ஏமாந்து போனேன். நீந்தத் தெரியாத ஒருத்தி ஆழமான ஆற்றில் நழுவி விழுந்து முழுகப் போகும் கடைசித் தருணத்தில், தோணி கொண்டு வந்து தூக்கிப் போட்டு கரையேற்றினது போல், எனக்கு நீ நல்ல ஆபத்துக் காலத்தில் உதவி செய்தாய். உனக்கு எப்படி நன்றி காட்டுவேன்! நீ இல்லாதிருந்தால் என் கதி என்னாவது? என் பிள்ளை கதி என்னாவது? இந்த நாடு எப்படியோ போய்த் தொலையட்டும்! என்றாலும், என்னுடையவும் என் மகனுடையவும் வாழ்வு என்னாவது? அய்யோ! நினைக்க நினைக்க பயமாய் இருக்கிறதே? இவ்வளவு வஞ்சகனா அரசன்? இவ்வளவு அயோக்கியனா இராமன்? இந்தக் குருவும் மந்திரிகளும் இவ்வளவு இழி மக்களா? கொஞ்சம் கூட அறியாமல் போனேனே! இப்படிப்பட்ட பயித்தியக்காரியாகிய நான் எதற்காக உலகில் இருக்க வேண்டும். தகுதி உடையவர்களுக்குத்தான் உலகம். அறிவற்ற என்போன்ற பயித்தியக்காரிகள் உலகத்தை விட்டுவிடுவதே மேல். என் மகனுக்காகப் பார்க்கின்றேன். இல்லாவிட்டால் இப்படிப்பட்ட வஞ்சக அயோக்கியர்கள் முன்னால் வாழ்வதைவிட, உயிர் விடுவதே மேல் என்று துணிவேன். இருக்கட்டும்! இப்போது என்ன முழுகிப் போய்விட்டது! வரட்டும் மன்னவன்! இரண்டிலொன்று பார்த்துவிடுகிறேன்! நான் இனி ஏமாந்து போவேன் என்று நீ சிறிதும் கருதாதே! போய் உன் வேலையைப் பார். (என்று அனுப்பி விடுகின்றாள்:)
(காட்சி முடிகிறது)
(குடிஅரசு – நாடகம் – 03.01.1948)