பேராசிரியர் அறிவரசன் முடிவெய்தினார்

தென்காசி – கடையம் நகர் இல்லத்தில் பேராசிரியர் அறிவரசன் 4.3.2020 அன்று இரவு 7.00 மணியளவில் முடிவெய்தினார். ஆழ்வார் குறிச்சிக் கலை அறிவியல்  கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி 1996இல் ஓய்வு பெற்றவர். இயற்பெயர் குமாரசாமி.

அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக்கிய தமிழ்க்காப்புப் போர்வாள்களில் ஒருவர். அங்குத் தமிழ்ப் பேராசிரியராகத்  திகழ்ந்த மு. அருணாசலம், இவரின் பெரியப்பா.

ஈழத்தில் வாழ்ந்த நினைவுகளை ‘ஈழத்தில் வாழ்ந்தேன் இரண்டாண்டுகள்’ எனும் நூலாக எழுதியுள்ளார். நூலைச் சென்னை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மீனாட்சிபுரம் மதமாற்றத்தை ‘விடுதலைபுரம்’ என்னும் காப்பியமாகப் பாடியுள்ளார்.

மதமா? மனிதமா?,  யார் இந்த இராமன்?,  திராவிடர் இயக்க வரலாறு, சோதிடப் புரட்டு – முதலிய நூல்களின் ஆசிரியரான இவர் பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளில் உறுதி காட்டியவர்.

‘விடுதலை’, ‘உண்மை’ இதழ்களின் துணையாசிரியராக முன்பு பணியாற்றியவர்.  ‘மக்கள் தாயகம்’ எனும் மாத இதழைக் கடையத்திலிருந்து தொடர்ந்து நடத்தி வந்தார். கடையம் திருவள்ளுவர் கழகத்தை  நிறுவிச்  செயல்பட்டு வந்த இவர், அதன் வெள்ளிவிழாவை அண்மையில் சிறப்புற  நடத்தியதோடு, அரிய மலர் ஒன்றையும்   வெளியிட்டுள்ளார்.

ஈழத்தில் கிளிநொச்சியை தலைநகரமாகக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள், திறனுள்ள ஆட்சி நிர்வாகம் நடத்தியபோது விடுதலைப் புலிகளுக்கு தமிழ் உரை நடை – இலக்கணப் பயிற்சிகளை அளிக்க மேதகு பிரபாகரன் அழைப்பையேற்று பல மாதங்கள் கிளி நொச்சியில் தங்கி போராளிகளுக்கு பயிற்சி அளித்த பெருமை அவருக்கு உண்டு.

பிரான்சு,  ஆத்திரேலியா, கனடா, சுவிட்சர்லாந்து முதலிய நாடுகளுக்கு  ஆண்டுதோறும் சென்று, ஈழ இளையோருக்குத் தமிழ் பயிற்றுவிக்கும் பணியைத் தொடர்ந்து செய்து வந்தார்.

இவரது துணைவியார் ஞானத்தாய் , திருச்சி பெரியார் நாகம்மை ஆதரவற்றோர் காப்பகப் பொறுப்பாளராகப் பல்லாண்டு பணியாற்றியவர்.

முத்துச்செல்வி, தமிழ்ச்செல்வி,  செல்வநம்பி, அழகியநம்பி  இவரின் மக்கள்.

பேராசிரியர் மு.செ. அறிவரசனார்  பெயர், தமிழின எழுச்சி வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும். திராவிடர் விடுதலைக் கழகம் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

5.3.2020 அன்று அவர் உடல் , நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது விருப்பப்படி இறுதி வணக்கத்துடன் ஒப்படைக்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 12032020 இதழ்

You may also like...