கோத்தபய வருகைக்கு எதிர்ப்பு இலங்கை தூதரக முற்றுகை: கழகத் தோழர்கள் கைது

இலங்கை அதிபராகியுள்ள ‘போர்க் குற்றவாளி’ கோத்தபய ராஜபக்சே இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிடச் சென்ற திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்தபோது இலங்கை அரசின் இராணுவ செயலாளராக செயல்பட்டவர் கோத்தபய ராஜபக்சே. அவர் இப்போது சிங்கள பெரும்பான்மையினரின் ஓட்டுகளைப் பெற்று அதிபராகி விட்டார். இனப் படுகொலை நடந்தபோது அதிபராக இருந்த ராஜபக்சே பிரதமர் பதவிக்கு வந்து விட்டார். ராஜபக்சே மற்றும் கோத்தபய ராஜபக்சே சகோதரர்கள் மீது போர்க் குற்ற விசாரணை நடத்தி தண்டிக்கப்பட வேண்டும் என்று உலகம் முழுதும் தமிழர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இந்திய அரசின் வரவேற்பையேற்று கோத்தபய ராஜபக்சே இந்தியா வந்துள்ளார். இந்தியா அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்துள்ளது. தலைநகர் டெல்லியில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ம.தி.மு.க.வினர் ஜந்தர் மந்தர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானார்கள்.

சென்னையில் நவம்பர் 29 அன்று பகல் 11 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடச் சென்ற கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் இரா. உமாபதி தலைமைதாங்கினார்.

கோத்தபய ராஜபக்சே, ஈழத் தமிழர் இனப் படுகொலையில் முக்கிய பங்காற்றியவர். அவருக்கு இந்திய அரசு வரவேற்பு அளிப்பது தமிழர்களின் உணர்வுகளை அவமதிப்பதாகும். கோத்தபய ராஜபக்சேயிடம் பேச்சுவார்த்தை நடத்தும் இந்திய அரசு இப்போதாவது ஏற்கனவே அய்.நா.வில் இலங்கை அரசே கொண்டு வந்த தீர்மானத்தை மதித்து மனித உரிமை மீறல் குறித்த கலப்பு விசாரணையை நடத்துமாறு இலங்கை அதிபரிடம் வலியுறுத்த வேண்டும்.

ஈழத் தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந் தளிப்பதாக இலங்கை அரசு தந்த உறுதிமொழியை செயல்படுத்துமாறு வற்புறுத்துவதோடு தமிழர் பகுதியில் துப்பாக்கி ஏந்திய இராணுவம் நிறுத்தப் பட்டிருப்பதை திரும்பப் பெற்று தமிழர்களின் அமைதியான வாழ்க்கையை உறுதி  செய்ய வேண்டும்.  தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதையும் படகுகள் பறிமுதல் செய்வதை நிறுத்தவும் வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து இந்தப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் ஈழவேந்தன், அண்ணாமலை, மயிலை சுகுமார் மற்றும் கழகத் தோழர்கள், மே 17 இயக்கத்தைச் சார்ந்த 3 தோழர்களும் பங்கேற்று கைதானார்கள். 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரியார் முழக்கம் 05122019 இதழ்

You may also like...