தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கியது பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனுக்கு மதிப்புறு முனைவர் பட்டம்
பேராசிரியர் நா. வானமாமலையின் மாணவரும், நாட்டார் வழக்காற்றியல், வாய்மொழி வரலாறு, அடித்தள மக்கள் வரலாறு, பொருள்சார் பண்பாடு போன்ற துறைகளில் பெரும் பங்காற்றி வருபவருமான பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் (ஆ.சி.) அவர்களுக்கு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் (னு.டுவை.) வழங்கப்பட்டது. 22.10.2019ஆம் நாள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேராசிரியர் ஆ.சி.க்கு இப்பட்டம் வழங்கப்பட்டது. தமிழியல் ஆய்வுப் புலத்தில் 50 ஆண்டு கால அயராத பணிக்குக் கிடைத்த அங்கீகாரம் இது. தேர்ந்த களஆய்வு, பரந்தபட்ட நூலறிவு, அறிஞர்களுடன் நடத்தும் விவாதங்கள், உழைக்கும் மக்கள் சார்பு ஆகியவை அவருடைய தனித்தன்மை. எந்த விருதையும் அவர் தேடிச் சென்றதில்லை. அவருக்கு கல்விப்புலம் சார்ந்த இவ்விருதினை வழங்குவதில் தமிழ்ப் பல்கலைக்கழகம் பெருமை சேர்த்துக் கொண்டது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்போம். பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
ஆ. சிவசுப்பிரமணியன் 1960ஆம் ஆண்டுகளின் இறுதிப் பகுதியில் தமிழியல் ஆய்வுப் புலத்தில் அடியெடுத்து வைத்தவர். தமிழக நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் பண்பாடு, தமிழ்க் கிறித்தவம், வாய்மொழி வரலாறு, அடித்தள மக்கள் வரலாறு, தமிழ் இலக்கியம் போன்ற துறைகளில் அவர் ஏராளமான பங்களிப்புகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்.
ஆ. சிவசுப்பிரமணியன், பேராசிரியர் நா. வானமாமலையிடம் தமிழியல் ஆய்வு முறையியல்களைக் கற்றுக்கொண்டார். நா.வா. தொடங்கிய நெல்லை ஆய்வுக் குழுவில் தொடக்க காலம் முதல் செயல்பட்டு வந்தவர். தமிழகத்தில் ஒரு புலமைத் துறையாக 1960களில் கருக்கொள்ளத் தொடங்கிய நாட்டார் வழக்காற்றியலுக்குள் நா. வானமாமலையால் ஆற்றுப்படுத்தப் பட்டார். களப்பணிகள் மூலம் தரவுகளைச் சேகரித்து, வகைப்படுத்தி, பகுப்பாய்வு செய்யும் முறையை நா.வா.விடம் ஆ. சிவசுப்பிரமணியன் கற்றுக் கொண்டது ஆய்வுலகில் அவரைச் சிறப்புடன் தனித்துக் காட்டுகிறது. நாட்டார் வழக்காற்றியல் புலத்தை உருப்படுத்தியதோடு, தமிழியல் வட்டாரத்தில் அத்துறையை வேர்ப்பிடித்து வளரச் செய்தவர்களில் ஒருவராகவும் திகழ்கிறார்.
1970கள் முதல் தமிழியல் ஆய்வுலகில் முனைப்புடன் இயங்கத் தொடங்கிய இவர், இன்று வரை நன்கு அறியப்பட்ட ஆய்வாளராக இருக்கின்றார். இவர் விரிந்த ஆழமான வாசிப்புப் பழக்கம் கொண்டவர் என்பதை இவருடைய எழுத்துக்கள் மெய்ப்பிக்கின்றன. மரபுவழிப்பட்ட வரலாற்று முடிவுகளையும் எழுத்துக்களையும் விசாரணைக்கு உட்படுத்தி, மக்களின் வழக்காறுகளை அடிப்படையாகக் கொண்டு அடித்தள மக்கள் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் பணியினைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இவர் எழுதிய ஆய்வு நூல்கள் இவ்வகையைச் சார்ந்தவை. ஆய்வுக்குப் பயன்படும் வகையில் அடித்தள மக்களின் வழக்காறுகளைப் பதிப்பித்துள்ளார். வெகுசனத் தேவைகளுக்காகக் குறுநூல்களை எழுதியுள்ளார்.
நாட்டார் வழக்காற்றியல் புலத்தில் முன்னும் பின்னும் சமகாலத்திலும் நிகழ்ந்தவற்றை ஆ. சிவசுப்பிரமணியன் நேர்மையோடு பதிவு செய்வதோடு மதிப்பீடும் செய்கிறார். நாட்டார் பண்பாட்டு உருவாக்கம் இவரின் தனித்தன்மையான ஆய்வுப்புலம். நாட்டார் தெய்வங்கள் (பூச்சியம்மன் வில்லுப்பாட்டு, தர்க்கா வழிபாடு), வாய்மொழி வழக்காறுகள் (வாய்மொழிக் கதைகள், சாமியாடும் மனைவி), நம்பிக்கைகள், சடங்குகள் (ஆடிப்பாவை, மழைச் சடங்குகள், மந்திரம் சடங்குகள்), பொருள்சார் பண்பாடு (உப்பிட்டவரை, தோணி, பனை மரமே… பனைமரமே, ஓட்டப்பிடாரம் கத்தரிக்காய், விளக்குமாறாகும் தாவரங்கள், தாவர வழக்காறுகள்) அடித்தள மக்களின் வாழ்வியல் போன்றவற்றில் கூர்மையான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
வரலாற்றுப் புலத்துக்கு ஆ. சிவசுப்பிரமணியன் குறிப்பிடத் தகுந்த பங்களிப்புகளைச் செய்துள்ளார். தற்போது வழக்கிலிருக்கும் வரலாறுகளின் போதாமையை அவர் நன்கு உணர்ந்ததால் வாய்மொழி வரலாறு, கீழிருந்து வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்தல், வரலாற்றை இடைமறித்தல், உள்ளூர் வரலாற்றை எழுதுதல், சமூக வரலாற்றையும் பண்பாட்டு வரலாற்றையும் அரசியல் பார்வையுடன் அணுக வேண்டியதன் தேவை ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். அவர் எழுதிய ‘பொற்காலங்கள்’, ‘அடிமை முறையும் தமிழகமும்’, ‘வ.உ.சி.யும் முதல் தொழிலாளர் வேலை நிறுத்தமும்’, ‘ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்’, ‘வ.உ.சி வாழ்வும் பணியும்’, ‘தமிழ் அச்சுத் தந்தை அண்ட்ரிக் அடிகளார்’, ‘அடித்தள மக்கள் வரலாறு’, ‘கோபுரத் தற்கொலைகள்’, ‘ஆகஸ்ட் போராட்டம்’, ‘சமபந்தி அரசியல்’, ‘பிள்ளையார் அரசியல்’, ‘தமிழக வண்ணார் – வரலாறும் வழக்காறுகளும்’, ‘பிராமண போஜனமும் சட்டிச் சோறும்’ போன்ற வரலாற்று நூல்கள் முக்கியமானவை. ஏறக்குறைய பத்தாண்டுகளாக “உங்கள் நூலகம்” மாத இதழில் முக்கியமான வரலாற்று நூல்களை அறிமுகப்படுத்தும் பணியினைத் தொடர்ந்து செய்து வருகிறார்
வரலாற்றறிஞர்களால் கண்டுகொள்ளப்படாத தமிழ்க் கிறித்தவம் குறித்து இவர் மேற்கொண்ட ஆய்வுகள் முக்கியமானவை. ‘கிறித்தவமும் சாதியும்’, ‘கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்’ போன்ற நூல்கள் குறிப்பிடத் தகுந்தவை.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டயப் படிப்பு முடித்த பின் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் பயிற்றுநராக 1967 ஜூலை முதல் 2001 மே வரை பணியாற்றிய ஆ. சிவசுப்பிரமணியன் முதுகலைப் பட்டமோ முனைவர் பட்டமோ பெற்றவரல்லர். ஆனால், அவருடைய ஆய்வு நூல்களும் கட்டுரைகளும் கல்விப் புல ஆய்வாளர்களுக்குப் பெரிதும் உதவுகின்றன. அவருடைய நூல்களிலிருந்து மேலைநாட்டு ஆய்வாளர்களும் தமிழ் நாட்டு ஆய்வாளர்களும் எடுத்தாளும் மேற்கோள்கள் ஏராளம். கல்விப்புலம் சார்ந்த, சாராத ஆய்வாளர்கள் பலர் இவரிடம் ஆய்வு தொடர்பாக விவாதித்துத் தமது ஆய்வுகளைச் செழுமைப்படுத்தி வருகின்றனர். உழைப்பும் நேர்மையும் கொண்ட பல ஆய்வாளர்களைத் தமிழ் ஆய்வுலகுக்கு அறிமுகப்படுத்தும் பணியையும் ஆ. சிவசுப்பிரமணியன் செய்து வருகிறார்.
பெரியார் முழக்கம் 07112019 இதழ்