இதுதான் கீதை குழப்பமும் முரண்பாடும்

கீதை மற்றொன்றையும் செய்கிறது என்று ஆய்வறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். எந்தவித உரிமையும் அளிக்கப்படாமல் வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு சமூகரீதியிலும் பொருளியல் ரீதியிலும் பின்னுக்கு தள்ளப்பட்ட மக்கள் எதையும் கேட்காமல், எந்தத் தேவைக்கும் குரல் எழுப்பாமல் ஆமைகளைப்போல் அடங்கிக் கிடப்பதற்கான மனப்பான்மையை இந்நூல் உருவாக்குகிறது. வளர்க்கிறது. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்கின்ற மூடநம்பிக்கையை இவர்கள் மனத்தில் விதைத்து எவ்வித எழுச்சியும் ஏற்படாமல் கவனித்துக் கொள்ளும் கேவலமானதையும் கீதை செய்கிறது.

அர்ச்சுனனின் அய்யங்களைத் தீர்க்கும் வகையில் கிருஷ்ணன் கூறியதாக எழுதப்பட்ட பாடல்கள் குழப்பத்தைத்தான் ஏற்படுத்துகின்றன. போரிடுவது சத்திரிய ஜாதி தர்மம். ஆகவே போரிடு. அறைகூவலை ஏற்றுப் போரிடு. இல்லையேல் கோழை எனத் தூற்றப்படுவாய். போரிட்டு வென்றால் அரச உரிமை. ஆகவே போரிடு. போரில் மாண்டாலும் மேல் உலகப் பதவி கிடைக்கும். எனவே போரிடு. என்றெல்லாம் போரிடத் தூண்டியவன் கிருஷ்ணன். அடுத்த நிமிடத்தில் “ஆசையைத் துறந்து, கருமத்தைச் செய்யாமல், பற்றற்ற நிலையில் இருப்பவன் அமைதி அடைகிறான்” என்று அறிவுரையையும் கூறுகிறான். இந்த முரண்பாடான கருத்துகளைக் குறிப்பிட்டு அர்ச்சுனன் கேள்வி கேட்டதும் குழப்புகிறான் கிருஷ்ணன்! ஞான யோகமும் கருமயோகமும் ஒன்றுதான் என மழுப்புகிறான். கரும வினை ஆற்றுவதே யாவற்றிலும் முக்கியமானது என்கிறான். ஒரு முறை ஞானமே கருமத்திலும் சிறந்தது என்கிறான். மறுமுறை கருமமே ஞானத்தைவிடச் சிறந்தது என்கிறான். ஆளைக் குழப்பாதே! இரண்டில் எது சிறந்தது என்பதைக் கூறு என்று கேட்கிறான். அர்ச்சுனன் கருமத்தைத் துறப்பதைவிடவும் கருமத்தை மேற்கொள்வதுதான் சிறந்தது எனக் கிருஷ்ணன் முடிவு கூறுகிறான். கருமத்தைத் துறத்தல் சாத்தியமாம். கருமத்தைச் செய்தல் யோகம் எனப்படுமாம். இரண்டையும் ஒன்றாகக் காண வேண்டும் என்கிறான். மீண்டும் கிருஷ்ணன் குழப்புகிறான் அல்லவா? அதுதான் கீதை!

நிமிர்வோம் அக்டோபர் 2019 மாத இதழ்

You may also like...