பகுத்தறிவுப் பாவலர் உடுமலை நாராயண கவி பா. விஜய் செப்டம்பர் 25-ந் தேதி உடுமலை நாராயண கவி பிறந்தநாள்.

கவிஞன் மானுடத்தின் ராஜ கம்பீரம். தோற்றத்தால் இளைத்தாலும், செல்வத்தால் சிறுத்தாலும் சீற்றத்தால் நிமிர்ந்து நிற்கும் ஆளுமையுடையவன் கவிஞன். யார் விமர்சிப்பினும் தன் படைப்பை உலகின் உச்சியில் வைத்து போற்றிக் கொள்வான். தன் கண்ணீரை யும் வியர்வையுமே தன் படைப்புகளுக்கு பாசனமாக ஊற்றிக் கொள்பவன்.

அப்படி ஒரு ஆளுமை கவிஞர்தான் உடுமலை நாராயண கவி.

சக மனிதனை மதித்தாலே தன் கிரீடம் சரிந்து விடும் என்று கருதும் படைப்பாளி அல்ல அவர். ஒரு ஏழை விவசாயக் குடும்பத்திலே பிறந்து கோடம்பாக்கம் மூலம் பாட்டொலிக்கும் திசையில் எல்லாம் தன் பாட்டுக் குதிரை பறந்த போதும் அதே இயல்போடு அதே இதயத்தோடு வாழ்ந்த ஒரு அற்புத ஒளிக்கீற்று அவர்.

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப் பேட்டையில் உள்ள பூவிளைவாடி எனும் சின்ன ஊரில் முத்தம்மாள், கிருஷ்ணசாமி தம்பதியருக்கு பிறந்த இவர் நாராயணசாமியாகவே அழைக்கப் பட்டார். வறுமை இவரை வாழ்க்கையில் செதுக்கியது. பசி ஒரு கட்டத்தில் வயிற்றுக்கு பழகிப்பழகி புன்னகையாக மாறியது. கிராமத்தின் மண்ணின் ஏரோட்டி காற்றின் மொழியை பாட்டாய் பாடியும் நாராயணசாமியின் வாழ்க்கை குடிசை துவாரத்தின் வழி ஆகாயத்தை தரிசித்தது.

போராட்ட குணமுள்ளவர்களின் இதய நிலத்திலேதான் பீறிட்டு ஊற்றெடுக்கும் கலையின் தாகம். நாடகம் என்பது தான் அக்கால கட்டத்து படைப்பாளிகளின் அறிவாயுதம். அதை சரியாக பயன்படுத்தியவர்களில் நாராயணசாமியும் ஒருவர். முத்துசாமி கவிராயர் அவரை மதுரைக்கு அழைத்துச் செல்ல அங்கே நாடக கம்பெனியில் கிராமியக் கலைகளான புரவியாட்டம், சிக்குமேளம், தம்பட்டம், உடுக்கடிப்பாட்டு, ஒயில்கும்மி என ஆட்டங்களை கற்றுத் தேர்ந்தார். தமிழிலும் பாட்டெடுத்து பாட வல்லவரானார்.

மீண்டும் பூவிளைவாடி அங்கே தமிழ் விளையாடி கவிதைகளோடு சேர்த்து முத்தாளையும் கல்யாணம் செய்து கொண்டவர் கதர் ஆடை விற்பனை ஆரம்பித்தார். தேசப் பாட்டுகளைப் பாடிக் கொண்டே வியாபாரம். புதுமை. மக்களின் வரவேற்பு பெருக, கதராடை விற்பனையும், கவிஞரின் கற்பனையும் சூடு பிடித்தது. வியாபாரத்தை அதிகப்படுத்த பெரிய பொருளாதார இழப்பு அவர் முதுகில் அமர்ந்து முடக்கியது.

படைப்பாளிகளுக்கு உடன் பிறந்தது கடன். கடன் தந்தவர்கள் கழுத்தில் கைவைக்க, தன் மானத்தையே வாழ்வின் சன்மானமாக கொண்டு வாழ்ந்த நாராயணசாமி அவ்வளவு பேர் முன்பும் சபதம் செய்தார். பெற்ற தொகையை வட்டியோடு செலுத்தும் வரை ஊர் திரும்பேன் என்று. மதுரை சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக கொட்டாய் அவரையும் ஏற்று கொண்டது.

அவருடைய கலைத்திறன் கவித்திறன் கண்டு வியந்த நாடக கம்பெனியினர் ஆயிரம் ரூபாய் பரிசாக கொடுக்க, அதில் பெருந்தொகைக்கு புத்தகங்கள் வாங்கி மீதித் தொகையை கடன் கொடுத்தவர்களுக்கு திருப்பி செலுத்தி விட்டு ஊருக்குள் காலடி எடுத்து வைத்த அந்த பாட்டுக்காற்று, கலைவாணர் என்.எஸ் கேவுடன் கிடைத்த நட்பு அவரை திரை உலகை நோக்கி திசை திருப்பியது. அறிஞர் அண்ணா, கலைஞர், பாவேந்தர் போன்றோரின் அறிமுகங்கள் அவரை பாட்டுலக பவனியை பட்டித்தொட்டி எங்கும் பரவ செய்தது. நாடக ஊடகத்துள் தன் எண்ணங்களை சாட்டையடிகளாய் சுழலவிட்ட நாராயணசாமிக்கு இயக்குனர் ஏ.நாராயணன் அழைப்பு விடுக்க, கிராமபோன் கம்பெனிக்கு பாட்டெழுத சென்று சந்திர மோகனா எனும் படத்தில் முதல் பாடல் இயற்றுகிறார். அப்போது தமிழ் திரை உலகில் பாபநாசம் சிவன் போன்றோர் கோலோச்சிக் கொண்டிருந்த காலம்.

சட்டென எளிய தமிழ் சொற்கள், ஏழைகள் உணர்ந்த வலி, கிராமங்கள் காணும் வாழ்க்கை, திண்ணைகளில் பேசும் மொழியை பாட்டுக்குள் கொண்டு வந்தவுடன் பரப்பரப்பு பற்றியது. பேரறிஞர் அண்ணாவின் ஓர் இரவு, வேலைக்காரி போன்ற படங்களில் பாடல்கள் எழுத ஆரம்பித்தவர் மளமளவென மழை மழையென எழுதி கொட்ட தொடங்கினார். ஒரு கால கட்டத்தில் தயாரிப்பாளர்கள் அவரை கவிராயர் என அழைத்து பாட்டுகளை எழுதி வாங்க காத்திருக்கும் காலம் வந்தது.

ஒருசாண் வயிற்றை நிரப்ப போராடியவரின் தமிழுக்கு திரை உலகம் சிம்மாசனம் வழங்கியது. ஆனாலும் உடனே தலையில் கொம்பு முளைத்து விடாமல் தன்னை ஒரு விவசாயியின் மனோ நிலையிலேயே வைத்து கொண்டார்.

1952-ல் வெளியான கலைஞரின் பராசக்தி, கலைஞரின் நெருங்கிய நண்பரான கவிராயருக்கு பெரும் பெயர் கொடுத்தது. அதில் உடுமலை நாராயண கவி இயற்றிய ‘கா கா கா’ பாடல் அக்கால கட்டத்தில் பகுத்தறிவு பிரசாரத்தின் பாட்டு வாகனமாகவே மாறியது. பகுத்தறிவு பார்வை கூர்மையானது அவர் எழுத்தில்.. நாட்டுப்புற மொழிக்குள் இருந்த இயலையும்  நையாண்டித்தனத்தையும் தன் பாட்டு வண்டிக்குள் ஏற்றிக் கொண்டு அந்த கொங்கு நாட்டு கொள்கை ரெயில், கோடம்பாக்க வளாகத்தில் வெற்றி வலம் வந்தது.

‘சாப்பாடில்லாம தவிக்குதுங்க சனம்

கூப்பாடு போட்டு தினம் குமுறுதுங்க உயிர்

காப்பாத்த கஞ்சி தண்ணி ஊத்துங்க என்றால்

தாப்பாள போடுறாங்க பாருங்க’

என்று காகத்திடம் சொல்வது போல் இரக்க மற்றவர்களின் இதயத் தோலை உரித்துக் காட்டும் வரிகள்.

விவசாயி திரைப்படத்தில் கவிராயர் எழுதிய பாடல்;

நல்ல நல்ல நிலம் பார்த்து

நாமும் விதை விதைக்கணும்

நாட்டு மக்கள் மனங்களிலே

நாணயத்தை வளர்க்கணும்

பள்ளி என்ற நிலங்களிலே

கல்வி தன்னை விதைக்கணும்

பார்முழுதும் மனித குல

பண்பு தனை விதைத்து

பாமரரின் நெஞ்சங்களில்

பகுத்தறிவை விதைத்து

என்று என்னெவெல்லாம் விதைக்க வேண்டும் என்ற பட்டியல் இடுவார்.

இரத்தக் கண்ணீர் திரைப்படம் அதில் குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது? என்ற வரி அனைவரது மனதிலும் ஆழப்பதிந்த வரிகள்.

1949-ல் வெளியான நல்ல தம்பி படத்தில்

“மனுசன மனுசன் ஏய்ச்சு பொழச்சது

அந்த காலம்

பழமை நீங்கி பொது உடமை கோருவது

இந்த காலம்

மழை வரும் என்றே மந்திரம் ஜெபிச்சது

அந்த காலம்

மழையை பொழிய வைக்கவே எந்திரம் வந்தது இந்த காலம்

பக்தி முக்கியம் அந்த காலம்

படிப்பு முக்கியம் இந்த காலம்”

என்ற பாட்டு கலைவாணரின் காட்சியில் ஒரு மாபெரும் பகுத்தறிவு எழுச்சியை செய்த பாட்டு.

அதே போல் 1955-ல் முதல் தேதி என்ற படத்தில் ஜி. ராமனாதன் இசையில் கலைவாணர் குரலில் வரும் பாட்டு; மாதச் சம்பளம் வாங்கும் நகர வாழ்க்கை பற்றி கவிராயர் எழுதுவார்;

“ஒன்னுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம் இருபத்தொன்னுல இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்”; இப்பாடலும் நகைச்சுவை உணர்வு கலந்த பாடலாக பெரும் வெற்றி பெற்றது.

இத்துடன், வேலைக்காரி, ஓர் இரவு, ராஜகுமாரி, நல்லதம்பி, பராசக்தி, மனோகரா, பிரபாவதி, காவேரி, சொர்க்க வாசல், தூக்குத் தூக்கி, தெய்வப்பிறவி, மாங்கல்ய பாக்கியம், சித்தி, எங்கள் வீட்டு மகாலட்சுமி, ரத்தக்கண்ணீர், ஆதி பராசக்தி, தேவதாஸ் போன்ற படங்களை தன் பாட்டுகளால் அலங்கரித்த கவிராயர் தனது 82 வயதில் காலத்தோடு ஐக்கியமானார்.

2008-ம் ஆண்டு இந்திய அஞ்சல் துறையில் இவரது முகம் பதிவானது. மணிமண்டபம் இவருக்காக உருவானது. உடுமலை நாராயண கவி என்னும் பெயர் காற்றின் அலைவரிசைகளில் என்றும் பகுத்தறிவு வீச்சாகவும், உழைக்கும் மக்களின் உணர்ச்சியாகவும் கலந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.

கட்டுரையாளர் : திரைப்படப் பாடலாசிரியர்

நன்றி : ‘தினத்தந்தி’

நிமிர்வோம் அக்டோபர் 2019 மாத இதழ்

You may also like...