மோடி ஆட்சி – கருத்தாளர்களையும் ஒடுக்குகிறது ஓராண்டு காலம் சிறையில் வாடும் புரட்சிகர சிந்தனையாளர்கள்

புரட்சிகர சிந்தனையாளர்கள் எழுத்தாளர்களை நகர்ப்புற தீவிரவாதிகள் என்று முத்திரைக் குத்தி ஓராண்டு காலமாக சிறையில் அடைத்து வைத்துள்ளது மோடி ஆட்சி. ஹிட்லர் ஆட்சியில் நடந்த அதே அடக்குமுறைகள் அப்படியே பின்பற்றப்படுகின்றன.

“புனே அருகே பீமா-கோரேகான் பகுதியில் மாவோயிஸ்ட்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். புலனாய்வு செய்ததில் பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய ஒரு திட்டம் தீட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது. பீமா-கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் இருவருக்கு பிரதமரைக் கொலை செய்யும் முயற்சி யில் பங்கிருக்கிறது,” இப்படி சொல்கிறது காவல் துறை.

புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தின் மூத்த நிர்வாகியான வரவர ராவ் உள்ளிட்ட 9 செயல் பாட்டாளர்கள், கடந்த ஓராண்டு காலமாக சிறையில் இருக்கிறார்கள்.

பேஷ்வா பார்ப்பனர்களுக்கு எதிராக தலித்துகள் பெற்ற வெற்றியின் 200வது ஆண்டு கொண்டாட்டம் 2018 ஜனவரி 1ஆம் தேதி புனே அருகே உள்ள பீமா-கோரேகானில் நடைபெற்றபோது வன்முறை வெடித்தது. அதில் ஒருவர் மரணம் அடைந்தார். காவல் துறையினர் உள்பட மக்கள் சிலரும் காயமடைந்தனர்.

ஆரம்பத்தில் வன்முறையைத் தூண்டியதாக இந்து அமைப்புகளின் பிரதிநிதிகளான சம்பாஜி பிடே மற்றும் மிலிந்த் எக்போடே மீது வழக்கு தொடரப் பட்டது. மிலிந்த் எக்போடே கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சம்பாஜு பிடே இன்னும் தலைமறைவாக உள்ளார்.

பின்னர் புரட்சிகர சிறுத்தைகள் ஜாட்டிய அனாட்சியின் (ஆர்.பி.) தலைவர் சுதிரா தவாலே, நாக்பூரைச் சேர்ந்த மனித உரிமைகள் வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங், டெல்லியைச் சேர்ந்த செயல்பாட்டாளர்கள் ரோனா வில்சன், நாக்பூர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஷோமா சென், பி.எம்.ஆர்.டி.எப். முன்னாள் உறுப்பினர் மகேஷ் ராவுத் ஆகியோரை 2018 ஜூன் மாதம் முதலாவது வாரத்தில் புனே காவல் துறையினர் மும்பை, நாக்பூர் மற்றும் டெல்லியில் கைது செய்தனர்.

அவர்கள் நகர்ப்புறங்களில் மாவோயிஸ்ட் அமைப்புகளின் உயர்நிலை நிர்வாகிகளாக இருந்தார்கள் என்று காவல் துறை தரப்பில் சொல்லப்படுகிறது. அவர்களுடைய வீடுகளில் சோதனை நடத்தியபோது மின்னணு சாதனங்கள், கணினி டிஸ்க்குகள், ஆவணங்களைப் பறிமுதல் செய்ததாகவும் அவற்றை புனே தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ள தாகவும், ஆய்வகத்தில் இருந்து அந்தப் பொருட்களின் கண்ணாடி பிம்பங்களை சேகரித்திருப்பதாகவும் காவல் துறையினர் கூறுகின்றனர்.

ஆவணங்களை ஆய்வு செய்ததில், ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதைப் போல பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய மாவோயிஸ்ட்கள் சதித் திட்டம் தீட்டியிருந்ததை நாங்கள் கண்டுபிடித்தோம் என்றும் காவல் துறை கூறுகிறது. இந்த ஆதாரத்தின் அடிப்படையில் தான் மேற்படி ஐந்து பேரையும் கைது செய்ததாகக் காவல் துறையினர் குறிப்பிடு கின்றனர்.

அதன்பிறகு, செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்டோரின் வீடுகளில் மகாராஷ்டிர காவல் துறையினர் சோதனைகள் நடத்தினர். புரட்சிகர எழுத்தாளர் சங்க நிர்வாகி பென்டியலா வரவர ராவ் வீட்டிலும் சோதனை நடந்தது. ஹைதராபாத்தில் வரவர ராவ் கைது செய்யப்பட்டு, அவரை காவல் துறையினர் புனேவுக்கு அழைத்துச் சென்றனர்.

வரவர ராவ் உள்ளிட்ட 5 பேர் 2018 ஆகஸ்ட்டில் கைது செய்யப்பட்டனர்.

அதே நாள் வழக்கறிஞரும், மனித உரிமை செயல்பாட்டாளருமான சுதா பரத்வாஜ், சிவில் உரிமைகள் செயல்பாட்டாளர் கவுதம் நவ்லங்கா, சுதிரா தவாலேவுக்காக வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் மற்றும் உரிமைப் போராளி அருண் பெரைரா, எழுத்தாளரும் உரிமை செயல்பாட் டாளருமான வெர்னான் கோன்சால்வ்ஸ் ஆகியோர் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர்.

ஐந்து செயல்பாட்டாளர்கள் கைதுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அக்டோபர் 25 ஆம் தேதி வரை அவர்களை அவரவர் வீடுகளில் வைத்திருக்குமாறு நீதிமன்றம் உத்தர விட்டது. பிறகு கவுதம் நவ்லங்காவுக்கு வீட்டுக் காவலில் இருந்து ஜாமீன் அளிக்கப்பட்டபோது, மீதி நான்கு பேரையும் 2018 நவம்பரில் காவல் துறையினர் கைது செய்தனர்.

பல விஷயங்களில் அவர்கள் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அவர்களில் அருண் பெரைராவும், வரவரராவும் ஏற்கெனவே மாவோயிஸ்ட் அனுதாபிகள் என்ற குற்றச் சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலித் பேராசிரியர் ஆனந்த் டெல்ட்டும்ப்டேவும் 2019 பிப்ரவரியில் கைது செய்யப்பட்டார். இருந்த போதிலும், அது சட்டவிரோதமான நடவடிக்கை என்று புனே நீதிமன்றம் அதை ரத்து செய்துவிட்டது.

வரவர ராவின் மனைவி ஹேமலதா 2019 ஏப்ரலில் இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் வரவர ராவை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

2018 தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட சுரேந்திர காட்லிங்க, ஷோம சென், சுதிர் தவாலே, மகேஷ் வாவுத், ரோனா வில்சன் ஆகியோரும், 2018 ஆகஸ்ட்டில் கைது செய்யப்பட்ட வரவர ராவ், சுதா பரத்வாஜ், சுதிர் தவாலே, அருண் பெரைரா, வெர்னான் கோன் சால்வஸ் ஆகியோரும், முழுமையாக ஓராண்டு முடிந்துவிட்ட நிலையிலும் புனே எரவாடா சிறையில் இன்னும் விசாரணைக் கைதிகளாக உள்ளனர்.

இந்த வழக்கில் காவல் துறையினர் குற்றப் பத்திரிகையை 2018 நவம்பரில் தாக்கல் செய்தனர். இணைப்பு குற்றப் பத்திரிகையை 2019 பிப்ரவரியில் தாக்கல் செய்தனர். குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 10 மாதங்களாகிவிட்டன. இருந்தாலும், வழக்கில் அதிக முன்னேற்றம் நடக்கவில்லை. அவர்களுடைய ஜாமீன் மனுக்கள் இன்னும் நிலுவையில் உள்ளன.

பிபிசியிடம் பேசிய வரவர ராவின் மனைவி ஹேமலதா, “விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஜாமீன் மனுக்கள் மீது 6 மாதங்களாக வாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஜாமீன் மனு மீது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய நீதிபதி விசாரணையை மீண்டும் நடத்த விரும்புகிறார்,” என்று கூறினார்.

“நாங்கள் உயர் நீதிமன்றத்தை அணுகினால், விசாரணை நீதிமன்றம் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கிறார்கள். விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தால் நாங்கள் உயர் நீதிமன்றத்தை நாடலாம். இருந்தாலும் விசாரணை நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரிக்கவோ அல்லது ஜாமீன் வழங்கவோ இல்லை. அங்கே தாமதிக்கப் படுகிறது. விசாரணை நடவடிக்கையில் முன்னேற்றம் காணவோ அல்லது ஜாமீன் வழங்கவோ இல்லை” என்று வேதனையுடன் குறிப்பிட்டார் ஹேமலதா.

இதுவரை 10 நீதிமன்ற விசாரணைகள் முடிந்துள்ளன. ஒரு வாக்குமூலம் கூட இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்று அவர் கூறினார். “இந்த மனுவைக் காரணம் காட்டி ஜாமீன் மனு மீது உத்தரவு பிறப்பிப்பதை அவர்கள் தாமதம் செய்கிறார்கள். அந்த நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக உள்ள சிவாஜி பவார், இந்த வழக்கில் இன்னும் 290 விசாரணைகள் உள்ளதாகக் கூறினார்” என்று ஹேமலதா தெரிவித்தார்.

இதுமட்டுமின்றி தொடர்பில்லாத வழக்கு களிலும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளிலும், அவர்கள் பொய்யாக சேர்த்து வருகிறார்கள். “கண்ணிவெடிகள் புதைத்தார்கள் என்று சட்டீஸ்கரில் ஆஹிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல கர்நாடகாவிலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது. ஜாமீன் வழங்கினாலும் கூட அவர் சிறையிலேயே இருக்க வேண்டும் என்பதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபடு கிறார்கள்” என்று ஹேமலதா குற்றம்சாட்டினார்.

“இந்திய தலைமை நீதிபதிக்கு நான் ஒரு கடிதம் எழுதியுள்ளேன். அதற்கு எந்தப் பதிலும் வரவில்லை. தெலங்கானா முதல்வருக்கு நான் கடிதம் எழுதினேன். அதற்கு எந்தப் பதிலும் வரவில்லை. அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்த காலத்தில் மகாராஷ்டிர (முன்னாள்) ஆளுநர் வித்யாசாகர் ராவும், வரவரவாவும் ஒரே சிறையில் அடைக்கப் பட்டிருந்தனர். அவருக்கும் நாங்கள் கடிதம் எழுதினோம். அவர் அதை வெறுமனே முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்து விட்டார். அவ்வளவுதான். அதற்கு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,” என்று சோகத்துடன் கூறினார் ஹேமலதா.

“கடந்த ஓராண்டு காலம் மிகவும் சிரமமானதாக இருக்கிறது. வரவர ராவ் கடந்த காலத்தை தாங்கிக் கொள்ளும் மனநிலையில் இல்லை. வயதும் ஆரோக்கியமும் ஒத்துழைக்காது. சட்டீஸ்கர் பயணம் காரணமாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு மீண்டும் மூலநோய் ஏற்பட்டுள்ளது. அதனால் அவருக்கு அதிக உதிரப் போக்கு ஏற்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

“ஷோமா சென் மூட்டுவலியால் அவதிப்படுகிறார். ஆனால் அந்தப் பெண்மணிக்கு கட்டில் எதுவும் தரப்படவில்லை. வரவர ராவுக்கு கட்டில் மற்றும் நாற்காலி கூட அளிக்கப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக சிறை சென்றிருக்கிறார். ஆனால் எங்கேயும் இவ்வளவு மோசமாக நடத்தப்பட்ட தில்லை. சுரேந்திர காட்லிங் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு இதயத்தின் ரத்தக் குழாயில் ஸ்டென்ட் வைக்கப்பட்டுள்ளது” என்றும் ஹேமலதா தெரிவித்தார்.

பத்து நாட்களுக்கு முன்பு புனேவுக்கு சென்றதாகவும், அங்கு நிலைமை நன்றாக இல்லை என்றும் அவர் கூறினார். “புனே சிறையில் கட்டுப்பாடுகள் விநோதமாக உள்ளன. சிறையில் அவரை நான் சந்திக்க வேண்டும் என்றால், நான் அவருடைய மனைவி என்று ஹைதராபாத் காவல் துறையினரிடம் இருந்து சான்றிதழ் பெற்று வர வேண்டும் என்கிறார்கள். அவருடைய பெயரை தன் பெயரின் பிற்பகுதியில் சேர்த்திருப்பவர்கள் மட்டுமே அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்கள். எனது மகள்கள் திருமணத்திற்குப் பிறகு பிற்பாதி பெயரை மாற்றிக் கொள்ளவில்லை. எனவே அவரை சந்திக்க அவர்களுக்கு அனுமதி தருகிறார்கள். மகன்கள் வழியிலான பேரக் குழந்தைகள் சிறைவாசிகளைச் சந்திக்க அனுமதிக்கிறார்கள். மகள்கள் வழியிலான பேரக் குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது. எங்களுக்கு மகன்கள் கிடையாது. என் மகள்களின் பிள்ளைகள் அவரைச் சந்திக்க அவர்கள் அனுமதிப்பதில்லை” என்று ஹேமலதா தெரிவித்தார்.

“கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருடைய மனைவி, தன்னுடைய பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றிக் கொள்ளவில்லை. எனவே தனது கணவரை சந்திக்க அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, நாங்கள் சார்ந்துள்ள கோஷ்டி எது என்று படிவத்தில் பூர்த்தி செய்து தர வேண்டும் என்றும் வற்புறுத்துகிறார்கள். கோஷ்டி (பயபே) என்ற ஒரு பகுதி அந்தப் படிவத்தில் இருக்கிறது. அவர்கள் எந்த கோஷ்டி அல்லது கும்பலையும் சேர்ந்தவர்கள் அல்ல, அரசியல் கைதிகள் என்று நான் அவர்களிடம் சொன்னேன். ஆனால், அவர்களுக்குப் புரியவில்லை. எனவே நான் அந்த இடத்தில் புரட்சிகர எழுத்தாளர்கள் சங்கம் என்று எழுதிக் கொடுத்தேன்” என்றார் ஹேமலதா.                      ட

பெரியார் முழக்கம் 24102019 இதழ்

You may also like...