நிமிர்; அதுவே மனித அடையாளம் – கவிஞர் இன்குலாப் – ‘ஒவ்வொரு புல்லையும்’ கவிதைத் தொகுப்பிலிருந்து

தொட்டில் தொடங்கிச்

சுடுகாடு வரைக்கும்

சடங்குகளாலே

வாழ்க்கை கனத்தது.

ஒவ்வொரு சடங்கிலும்

உருவிய பூணூலுடன்

பணத்தையும் மலத்தையும்

பறிமுதல் செய்தான்.

அதிகார மாதிரி

அறிவு மாதிரி

ஆதிக்கம் அனைத்துக்கும்

அவன் முன்மாதிரி.

எந்த ஒரு புயலிலும்

வேர் பெயராத் தர்ப்பையாய்

ஒவ்வொரு மூளையிலும்

பார்ப்பான் வளர்ந்தான்.

வேதம் படித்தாலும்

மறுக்கப்பட்டாலும்

பூணூல் போட்டாலும்

போடாவிட்டாலும்

ஆதிக்கக்காரன்

ஒவ்வொருவனுக்குள்ளும்

ஆணவம் பிடித்த

பார்ப்பான் இருக்கிறான்.

அடங்கிக் கிடக்கும்

ஒவ்வொரு அடிமைக்கும்

அந்த பார்ப்பானே

குறிக்கோள் ஆகிறான்.

நந்தனின் குறிக்கோள் பார்ப்பனியம்

நமக்கும் குறிக்கோள் பார்ப்பனியம்

இந்தச் சூழலில்

தந்தை பெரியார்…..

****

மானுடம் சுமந்த துயரம் அனைத்தையும்

வரித்துக் கொண்டதுபோல்

கறுத்த சட்டையுடன்

தள்ளாடும் உடம்பைத் தாங்கும் கைத்தடியால்

தள்ளாடும் மானுடத்தைத்

தாங்க வந்ததுபோல்.

நிமிரவே மறந்து

நெடுநாள் கிடந்தேன்…

முதுகில் அந்தக் கைத்தடி தட்டத்

திரும்பினேன்… அந்த

ஞாயிறு சுட்டது.

“நிமிர்

நிமிரத் தெரியாதது விலங்கு

மனித அடையாளம் நிமிர்வது”

தோளில் போட்ட துண்டை எடுத்துக்

கக்கத்தில் வைத்துக்

கைகட்டி நின்றேன்…

“துண்டை எடுத்துத் தோளில் போடு

வீசு கைகளை…

தேவைப்பட்டால்

கட்டச் சொன்னவன் முகத்தில் வீசு.”

(கவிஞர் இன்குலாப் – ‘ஒவ்வொரு புல்லையும்’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

நிமிர்வோம் ஆகஸ்ட் 2019 மாத இதழ்

You may also like...