கூட்டணிக்கு திகில் நிறைந்த திரைக் கதைகள்

மோடி ஆட்சிக்கு எத்தனை மார்க் போடுவீர்கள் என்று மருத்துவர் இராமதாசிடம் ‘நியூஸ் 18’ தொலைக் காட்சி பேட்டியில் கேட்டபோது ‘சைபர்’ மார்க்குக்கும் கீழே போடுவேன் என்றார், மருத்துவர் இராமதாஸ்.

‘கழகங்களின் கதை’ என்று எடப்பாடி ஆட்சியின் ஊழல்களைத் தொகுத்து நூலாக்கி, ஆளுநரிடம் தந்து ஆட்சியின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியதும் அதே பா.ம.க.தான்!

இவையெல்லாம் 5 ஆண்டுகள் முன்போ, 2 ஆண்டு களுக்கு முன்போ நடந்தவை அல்ல; சில மாதங்களுக்கு முன்னால்!

இப்போது மீண்டும் மோடி ஆட்சியே வரவேண்டும் என்று வாக்கு கேட்க வருகிறது பா.ம.க. மோடி எடப்பாடி ஆட்சி தொடர வாக்களியுங்கள் என்று கூட்டணியில் ஒன்று சேர்ந்து ‘கோரஸ்’ பாடுகிறது. இதை நியாயப் படுத்த அவர்கள் என்னவெல்லாம் பேசுகிறார்கள்…. அப்பப்பா… காதில் புகை வருகிறது!

“அதே பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் நாங்கள் கைகோர்த் திருப்பது இழந்த உரிமைகளை மீட்பதற்குத்தான். வெளியி லிருந்து கொடுத்தக் குரலை கூட்டணியில் இணைந்து வலியுறுத்தவிருக்கிறோம்” என்கிறார் அன்புமணி.

எடப்பாடியின் எட்டு வழிச் சாலை விரிவாக்கத்துக்கு நிலம் பறித்தபோது கதறியழுத மக்களிடம் போய் கூறிப் பாருங்கள்! மீண்டும் எடப்பாடியும் மோடியும் ஆட்சிக்கு வரவேண்டும்; அப்போதுதான் எட்டு வழிச் சாலைத் திட்டத்தை நிறுத்த முடியும் என்று!

நீட் தேர்வில் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் கிராமப்புற மாணவர்களிடம் போய் சொல்லிப் பாருங்கள்! மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்; அப்போதுதான் ‘நீட்’டை தடுத்து நிறுத்த முடியும் என்று! அப்போது தெரியும் உங்கள் கதை!

இப்படி எல்லாம் மக்கள் காதுகளில் பூ சுற்ற முடியாது; வாக்காளர்கள் இப்போது நிறையவே விழிப்படைந்து விட்டார்கள்.

எப்படி திரைக்கதைகளை நீங்கள் எழுதினாலும் நீங்கள் ஓட்டக்கூடிய ‘ரீல்’களில் மக்கள் ஏமாறப் போவது இல்லை.

பெரியார் முழக்கம் 07032019 இதழ்

You may also like...