அனுமானுக்கு ‘கம்யூனிட்டி’ சான்றிதழ்

இராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்குப் போன உ.பி. முதல்வர் ஆதித்யநாத் – ஹனுமான் தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்று பேசியிருக்கிறார். இதற்கு இராஜஸ்தான் ‘சர்வ பிராமண மகாசபை’ என்ற பார்ப்பன அமைப்பின் தலைவர் சுரேஷ் மிஸ்ரா என்பவர் ஹனுமான் ஒரு ‘பிராமணன்’ அவனை எப்படி ‘தலித்’ என்று கூறலாம் என்று எதிர்ப்பு தெரிவித்து, 3 நாட்களுக்குள் ஆதித்யநாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். ‘அனுமானுக்கு’ உ.பி. அரசும், ‘பிராமண’ மகாசபையும் ‘ஜாதிச் சான்றிதழ்’களை தயாரித்து வைத்திருக்கின்றன போலும். தேர்தல் பிரச்சாரத்தில் மத அடிப்படையில் வாக்கு கேட்கக் கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் விதி. ‘அனுமானை’யும் ‘இராமனை’யும் கூறி உ.பி. முதல்வரே ‘இந்து’க்கள் வாக்குகளை வாங்கி விடலாம் என்று பேசி வருவதற்கு தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறதோ, நமக்குத் தெரியாது.

இதற்கிடையே உ.பி. மாநிலத்தில் ‘பீம்சேனை’ என்ற தலித் அமைப்பின் தலைவர் சந்திரசேகர், உ.பி. முதல்வருக்கு ஒரு சவால் விடுத்திருக்கிறார். அனுமான் தலித் என்றால், அந்தக் கோயில்களில் ஒரு தலித்தை அர்ச்சகராக்குவீர்களா? அனுமான் கோயில்களை எல்லாம் ‘தலித்’ மக்களிடம் ஒப்படைப்பீர்களா? என்று கேட்டுள்ளார்; நியாயமான கேள்வி. சஞ்சீவி மலையையே தூக்கிக் கொண்டு போனவன் என்றும், இலங்கையை தீயிட்டுப் பொசுக்கியவன் என்றும் அனுமான் இராமாயணத்தில் வர்ணிக்கப்படுகிறான். மரம் வெட்டியாகவும், வேறு ஒரு நாட்டுக்குப் போய் தீ வைத்து எரித்த சர்வதேச பயங்கரவாதியாகவும் சித்தரிக்கப்படும் அனுமானுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கி ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக சேர்த்துக் கொண்டிருக்கிறார் உ.பி. முதல்வர். இதுவும்கூட சரிதான்!

ஆர்.எஸ்.எஸ்.சில் சேருவதற்கு இதைவிட வேறு தகுதி என்ன வேண்டும்?

பெரியார் முழக்கம் 06122018 இதழ்

You may also like...