சென்னையில் மாவீரர் நாள் – சட்ட எரிப்பு நாள் கருத்தரங்கம்

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் மயிலாப்பூர் பகுதிக் கழகம் சார்பில் நவம்பர் 25ஆம் நாள் மாவீரர் நாள் சட்ட எரிப்பு நாள் கருத்தரங்கம் நவம்பர் 26 மாலை சேப்பாக்கத்திலுள்ள பத்திரிகையாளர் அரங்கில் எழுச்சியுடன் நடைபெற்றது. மயிலைப் பகுதி கழகப் பொறுப்பாளர் இராவணன் தலைமை தாங்கினார். நாத்திகன், பெரியார்-அம்பேத்கர்-ஈழப் போராளிகள் குறித்துப் பாடல்களைப் பாடினார்.

ஈழப் போரில் இன்னுயிர் ஈத்த மாவீரர்களின் நினைவாக நினைவுச் சுடரை மருத்துவர் தாயப்பன் ஏற்றினார். இரண்டு நிமிடம் மவுனம் அனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவர் தாயப்பன், ‘ஈழம் நமது கடமை’ எனும் தலைப்பில் உரையாற்றினார். தொடர்ந்து தோழர்கள் ஜாதி ஒழிப்புப் போராளிகள் நினைவாக ஜாதி ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றனர். ‘பெரியாரின் இன்றைய தேவை’ எனும் தலைப்பில் விடுதலை இராசேந்திரனும், ‘சட்ட எரிப்புப் போராட்டம்’ குறித்து கொளத்தூர் மணியும் விரிவாகப் பேசினர். அரங்கம் முழுதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. அனைவருக்கும் மயிலைப் பகுதி தோழர்கள் மாட்டுக்கறியுடன் இரவு உணவு வழங்கினர்.

 

சென்னை கருத்தரங்கில் தோழர்கள் ஏற்ற உறுதி மொழி

“பெரியாரின் ஆணையை ஏற்று அரசியல் சட்டத்தின் ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளை 1957ஆம் ஆண்டு நவம்பர் 26ல் 10,000 பேர் எரித்து, 3 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைவாசத்தை ஏற்ற கருஞ்சட்டை மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்.

சிறைக்குள்ளேயும், விடுதலையான ஒரு மாதத்துக்குள் சிறைக்கு வெளியிலும் சிறைக் கொடுமையால் உடல் நலம் பாதித்து வீரமரணத்தைத் தழுவிய 18 போராளிகளின் லட்சிய நெருப்பை நெஞ்சில் ஏந்துகிறோம்.

ஜாதி ஒழிப்புக்காக பெரியார் விட்டுச் சென்ற போராட்ட மரபை முன்னெடுக்கவும், சுயஜாதி மறுப்பு உணர்வோடு- ஜாதி ஆதிக்க- ஜாதி வெறி சக்திகளை எதிர்த்துக் களமாடவும் உறுதி ஏற்கிறோம்.

வாழ்க பெரியார்!

வீழட்டும் பார்ப்பனிய ஜாதியமைப்பு”

பெரியார் முழக்கம் 29112018 இதழ்

 

You may also like...