சாதிய சமூகத்தை ஜனநாயகப்படுத்த முயன்றவர்

பார்ப்பனர்களின் பார்வையில் வி.பி.சிங் கொடிய எதிரியாகவே பார்க்கப்பட்டார். ‘துக்ளக்’ சோ வி.பி.சிங் மீது நஞ்சு கக்கியதோடு அதற்காக அவர் அரசியல் எதிரியான காங்கிரசோடுகூட சமரசத்துக்கு தயாராக இருந்தார்.

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பலியான இன்னொரு விஷயம்வி.பி.சிங்கின் மரணம் பற்றிய செய்தியாகும். அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதி வரும் மும்பை பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பர்ஸானா வெர்ஸெ கூறுவது போல, வி.பி.சிங் தான் இறப்பதற்கு ஒரு தவறான தருணத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

“மக்களின் எதிரிகள் எதைப் புகழ் கிறார்களோ அதை நாம் இகழ வேண்டும். அவர்கள் எதை இகழ்கிறார்களோ அதை நாம் புகழ வேண்டும்” என்றார் மாவோ.அது வி.பி.சிங் விஷயத்திற்கும் ஓரளவு பொருந்தும்.எனவே, அவரைப் பற்றி இந்து பாசிசவாதிகளின் மிக சாதுரியமான, மிக சாமர்த்தியமான பிரதி நிதியான “சோ’ ராமசாமி கூறியுள்ளதைக் காண்போம்:

“வி.பி.சிங்கின் (ஆட்சிக்) காலம் நெறி தவறிய காலம். அந்த மனிதரை நான் எப்போதுமே எதிர்த்து வந்திருக்கிறேன்.ஆக, எனது கருத்துக்கள் ஒரு சார்பானது என்று கருத உங்களுக்குச் சுதந்திரம் உண்டு.அவர் காங்கிரசி லிருந்து வெளியே வந்த நொடியிலிருந்து, ஏன் அதற்கு முன்பேயும் கூட, நான் வி.பி.சிங்கையும் அவரது அரசியலையும் விமர்சித்து வந்திருக் கிறேன். நான் சந்திரசேகரை எச்சரித்தேன், ஹெக்டேவை எச்சரித்தேன், ஜனதா கட்சி யிலிருந்த எனது நண்பர்கள் அனைவரையும் எச்சரித்தேன் : வி.பி. சிங்கிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.

ஆனால் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு, மத்திய அரசாங்கத்தில் காங்கிரசை அகற்றுவதில் தான் அவருக்கு விருப்பம் இருந்ததேயன்றி, பிரதமராவதில் விருப்பம் இருக்கவில்லை என்று அவர்கள் கருதினர். ஆனால், நான் அதுதான் அவரது சூதாட்டம் என்று கூறினேன். பிரதமராவது, பிரதமர் பதவிக்கு அவரது பெயரை மற்றவர்கள் முன்மொழியச் செய்வது, பிறகு அந்தப் பதவியை மிகுந்த தயக்கத்துடன் ஏற்றுக் கொள்வது. சந்திரசேகருக்கு துரோகம் இழைத்து வி.பி.சிங்கை பிரதமராக்கிய தேவிலால், சந்திரசேகரை பிரதமராக்க வி.பி.சிங்கிற்குத் துரோகம் இழைப்பார் என்று எழுதிய ஒரே பத்திரிகையாளன் நான் தான்.

கடைசியில் அதுதான் நடந்தது.ராஜிவ் காந்தியின் அமைச்சரவையில் பணியாற்றிய வி.பி.சிங் வெளியாட்களை நியமித்து அவரை உளவுபார்த்தார்.தனது சொந்தப் பிரதமருக்கே இப்படிச் செய்பவர், கற்பனை செய்து பார்க்கக் கூடிய மிக மோசமான துரோகியாகத்தான் இருக்க வேண்டும்.அவர் இதைச் செய்த நொடி யிலிருந்தே அந்தமனிதரை அபாயகரமானவராக நான் பார்த்தேன்.மண்டல் அறிக்கைக்கு அவர் புத்துயிர் தரும் வரை இட ஒதுக்கீட்டை ஆதரித்தவராக அவர் இருந்ததில்லை.மண்டல் கமிஷன் ஜனதா கட்சிக் காலத்தில் நியமிக்கப் பட்டது. ஆனால், அந்த அறிக்கை ஜனதா கட்சி அரசாங்கம் கவிழ்ந்த பிறகு தாக்கல் செய்யப் பட்டது.

பா.ஜ.க.வுக்கும் அவருக்கும் கடுமையான கருத்து வேறுபாடு ஏற்படத் தொடங்கிய போது, பா.ஜ.க.விடமிருந்து பிற்பட்ட வகுப்பினரை அக்கட்சியிடமிருந்து எடுத்துக் கொள்வதன் மூலம் அக்கட்சியினரை அடக்கி வைக்க முடியும் என்று வி.பி. சிங் கருதினார்.அதன் காரணமாகத் தான் மண்டல் கமிஷன் மூலம் அவர் இந்தியா விற்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டார் என்று நினைக்கிறேன்.இந்த நாட்களில் பள்ளிச் சிறுவர்கள் கூட முற்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர் என்று பேசுகின்றனர். இந்த அபாயகரமான போக்குக்கான பழியை வி.பி.சிங் மீதுதான் சுமத்த வேண்டுமேயன்றி வேறு யார் மீதும் அல்ல. அவர் தனது பதவிக்காக, இந்து சமுதாயத்தை சீர் செய்ய முடியாத அளவுக்குப் பிளவுபடுத்திவிட்டார்.”

உலகின் புகழ்பெற்ற இலவச கலைக் களஞ்சியமான ‘விக்கி பீடியா’வில் ‘சோ’ ராமசாமி என்னும் பக்கம் உள்ளது. அதில் அவர் வி.பி.சிங் பற்றிக் கூறியவைதான் மேலே காணப்படுபவை. ஆனால் இந்து சமுதாயத்தில் உருக்குப் போன்ற “அய்க்கியத்தை”க் கொண்டு வரப் பாடுபட்ட / பாடுபடும் சாவர்க்கர், கோல்வால்கர், வாஜ்பேயி, எல்.கே. அத்வானி, நரேந்திர மோடி, தொகாடியா, சுதர்ஷன் போன்றவர்களைப் பற்றி ‘சோ’வின் கருத்துக்கள் ‘விக்கிபீடியா’வில் இதுவரை பதிவு செய்யப்படாமல் இருப்பது, இந்திய மக்களின் அவப்பேறுதான்! எனினும் அவை, வேறு இடங்களில் – குறிப்பாக அவரது ஊதுகுழலான ‘துக்ளக்’கில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, ‘இந்தியாவின் மிகச் சிறந்த நிர்வாகி என அரசு பயங்கரவாதியான நரேந்திர மோ(ச)டி புகழப்பட்டிருப்பதைக் காணலாம்.

முதலில் ‘சோ’ கூறும் அரை உண்மை ஒன்றை எடுத்துக் கொள்வோம்: மண்டல் கமிஷன் ஜனதா கட்சி ஆட்சியின்போதுதான் (1977 – 79) அமைக்கப்பட்டது என்று கூறுகிறார். உண்மைதான். அந்த கமிஷனின் அறிக்கை ஜனதா கட்சி அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதற்குப் பிறகுதான் தாக்கல் செய்யப்பட்டது என்கிறார். அதுவும் உண்மைதான். ஆனால் இந்த உண்மைகளை முழுமையாக்கக் கூடிய இன்னொரு உண்மையைத்தான் அவர் மூடி மறைத்து விடுகிறார். ஜனதா கட்சி ஆட்சி வீழ்ச்சியடைந்த பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்த காங்கிரசின் இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி அரசாங்கங்கள் அந்த அறிக்கையைக் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கிடப்பில் போட்டு வைத்திருந்தன.

பிரதமர் பதவிக்கு வரும் வரை வி.பி.சிங், மண்டல் கமிஷன் பற்றிப் பேசவே இல்லை என்று துணிந்து புளுகுகிறார் ‘சோ’. 1989ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வி.பி.சிங்கின் தலைமையிலிருந்த ஜனதா தளம், தி.மு.க., தெலுங்கு தேசம் கட்சி, அஸ்ஸாம் கண பரிஷத் முதலியன உள்ளிட்ட ‘தேசிய முன்னணி’ போட்டியிட்டது. தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கையில் இருந்த முக்கிய வாக்குறுதிகளி லொன்று, அது ஆட்சிக்கு வந்தால், மண்டல் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப் படும் என்பதாகும். அந்த வாக்குறுதியையும் உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையை முன்நிறுத்தி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வி.பி. சிங், பிரதமராகும் வரை அந்தப் பரிந்துரைகளை ஆதரித்துப் பேசவில்லை என்று ஆர்.எஸ்.எஸ். இன் ‘நசிகேதன் விருதை’ வாங்கிய ஒரே தமிழ் நாட்டுப் பத்திரிகையாளரான ‘சோ’ அபத்தமாகப் பேசுகிறார்.

யாரும் தட்டிக் கேட்க மாட்டார்கள் என்னும் தைரியத்தில் ஓர் அப்பட்டமான பொய்யைத் துணிச்சலாகக் கூறிய ஒருவரின் வாயிலிருந்து அடுக்கடுக்கான மற்ற பொய்கள் வருவதில் என்ன ஆச்சரியம் : “பா.ஜ.க.வுக்கும் அவருக்கும் கடுமையான கருத்து வேறுபாடு ஏற்படத் தொடங்கியபோது, பா.ஜ.க.விட மிருந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அக்கட்சியிடமிருந்து எடுத்துக் கொள்வதன் மூலம் அக்கட்சியினரை அடக்கி வைக்க முடியும் என்று வி.பி. சிங் கருதினார்.அதன் காரணமாகத் தான் மண்டல் கமிஷன் அறிக்கையை அவர் நடைமுறைப்படுத்தினார்.” வரலாற்று நிகழ்வு களின் காலவரிசையை அவரால்தான் எத்தனை எளிதாக மாற்றியமைக்க முடிகிறது. தனது வழக்கமான இரட்டை நாக்குடன்தான் பா.ஜ.க. மண்டல் குழு பரிந்துரைகளை அணுகியது. பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கூடவே கூடாது என வெளிப் படையாகச் சொல்வதற்குத் துணிச்சலில்லாத பா.ஜ.க., முன்னேறிய சமூகத்தினரை வகுப்பு மாணவர்களைத் தூண்டிவிட்டது. அருண் சோரி போன்ற சந்தர்ப்பவாதப் பத்திரிகை யாளர்களைத் தூண்டிவிட்டு, இட ஒதுக்கீடுக்கு எதிரான கட்டுரைகளை எழுத வைத்தது.

மண்டல் குழுவின் பரிந்துரைகளால் பிளவுபட்டுப்போன ‘இந்து சமுதாயத்தை’ சீர் செய்யும் முறையில் அய்க்கியப்படுத்துவதற்காக பா.ஜ.க., ‘ரத யாத்திரை’யைத் தொடங்கியது. மதத்தின் பெயரால் நாட்டு மக்களை மீண்டும் சீர் செய்ய முடியாத அளவுக்கு (அது 2008 நவம்பர் மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் வரை நீடித்துள்ளது) பிளவுபடுத்தியது. ‘தாவா’வுக்கு உரியதாகச் சொல்லப்பட்ட பாபர் மசூதியைத் தகர்ப்பதற்கு சங் பரிவாரம் செய்து வந்த எல்லா முயற்சிகளையும் முறியடித்த வி.பி.சிங், ‘ரத யாத்திரை’யின் மூலம் மதப் பகைமையைக் கிளப்பி நாட்டில் ரத்தக் களரியை ஏற்படுத்தத் திட்டமிட்ட எல்.கே.அத்வானியைக் கைது செய்யும்படி பீகார் மாநில முதலமைச்சருக்கு உத்தரவிட்டார். பாபர் மசூதி தகர்க்கப்பட்ட 1992 டிசம்பர் 6ஆம் நாள்தான் இந்திய மக்களின் ஒற்றுமை ‘சீர் செய்ய முடியாத’ வகையில் தகர்க்கப்பட்டது.

‘வி.பி.சிங் காங்கிரசிலிருந்து வெளியே வந்த நொடியிலிருந்தே, ஏன் அதற்கு முன்பிருந்தே, அவரது அரசியலை’ விமர்சித்து வந்ததாக ‘சோ’ கூறுகிறார். வி.பி.சிங்கின் தொடக்கக் கால அரசியல் அப்பழுக்கற்றதாக இருந்ததா, இல்லையா என்பதில் நமக்கு அக்கறை இல்லை. ராஜிவ் காந்தியின் அமைச்சரவையில் சேர்ந்ததற்குப் பின் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளிலிருந்து தான் அவர் நமது அக்கறைக்குள் ‘வி.பி.சிங்’ ஆக மாறுகிறார்.

வி.பி.சிங், ராஜிவ் காந்தியின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக நியமிக்கப்படும் வரை, அவர் மற்ற அரசியல் கட்சித் தலைவர்களைப் போலவே செயல் படுவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்புக்கு உகந்த வகையில் தொழில், வர்த்தகம் தொடங்குவதற்காக மத்திய அரசு கடைப்பிடித்து வந்த லைசென்ஸ் முறையைத் தளர்த்த ராஜிவ் காந்தி எடுத்த கொள்கை முடிவைச் செயல்படுத்துவதில் வி.பி.சிங் இறங்கினார். தங்கக் கட்டிக் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக, தங்கத்தின் மீதான வரியைக் குறைத்தார். கள்ளக் கடத்தல் மூலம் வந்து சேரும் தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்யும் போலீஸாருக்கு, அந்தத் தங்கத்தில் சிறு பகுதி இலவசமாகத் தரப்படும் என அறிவித்தார். ஆனால் அவர் மேற்கொண்ட வேறு நடவடிக்கைகளை ராஜீவால் சகித்துக் கொள்ள முடியவில்லை.அதாவது, வி.பி.சிங் வருமான வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக நிதியமைச்சகத்தைச் சேர்ந்த அமலாக்கப் பிரிவின் இயக்குநருக்கு அதிக அதிகாரங்கள் கொடுத்தார். அச்சமயம் அவரது நம்பிக்கைக்குரியவராக இருந்தவரும் அமலாக்கப் பிரிவின் இயக்குநருமான புரே லால் என்பவரின் கீழ் பணியாற்றிய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் – பல பண முதலைகளின் வீடுகள், அலுவலகங்கள் ஆகியனவற்றை திடீர் சோதனையிட்டு அவர்கள் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததைக் கண்டு பிடித்தனர்.

அவர்களது திடீர் சோதனைக்கு உட்பட்டு வரி ஏய்ப்புச் செய்ததாகக் கண்டுபிடிக்கப் பட்டவர்களில் முக்கியமானவர்கள் அம்பானி நிறுவனத்தை நிறுவிய திருபாய் அம்பானியும், இந்தி சினிமா நடிகர் அமிதாப் பச்சனும் ஆவர். அம்பானியின் வரி ஏய்ப்புக்களை கட்டுப் படுத்துவதற்காக வி.பி.சிங், ரிலையன்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்து வந்த பாலிஸ்டர் நூல் இழையைத் தயாரிப்பதற்கு வேண்டிய மூலப் பொருளை, திறந்த பொது உரிமம் மூலம் இறக்குமதி செய்யப்படுவதை நிறுத்தி அந்த மூலப் பொருளை வாங்குவதற்கு சிறப்பு உரிமம் பெற வேண்டும் என்னும் விதியை உருவாக்கினார். காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நிதி உதவி செய்து வந்த பண முதலைகளின் மீதே வி.பி.சிங் கை வைக்கத் தொடங்கியதால், பெரு முதலாளிகளின் நிர்பந்தத்தின் பேரில் ராஜிவ் காந்தி அவரை நிதித் துறையிலிருந்து மாற்றி பாதுகாப்பு அமைச்சராக்கினார். அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது தான் போபர்ஸ் பீரங்கிகளை வாங்கியதிலும், ஜெர்மனியிலிருந்து நீர்முழ்கிக் கப்பல்கள் வாங்கியதிலும் ஊழல்கள் நடந்திருப்பதையும் கண்டுபிடித்தார். அதனால் ஆத்திரமுற்ற ராஜிவ் காந்தி அவர் மீது ஓர் அபாண்டமான குற்றச்சாட்டைச் சுமத்தி 1986இல் அவரைப் அவரை பதவி நீக்கம் செய்தார்.அதாவது தனியார் உளவு நிறுவனம் ஒன்றின் மூலமாக வி.பி.சிங், இந்திய பிரதமரான ராஜிவ் காந்தி மீது உளவு பார்த்துக் கொண்டிருந்தார் என்பதுதான் அந்தக் குற்றச்சாட்டு.

இதைத்தான் ‘சோ’ உளவு பார்த்தவர் என்றும் சொல்கிறார். அப்படி உளவு பார்த் திருந்தாலும் (இதையும் ஒரு வாதத்துக்குத்தான் சொல்கிறோம்) அது தவறு அல்ல. ஆனால் ராஜிவ் காந்தியின் போபர்ஸ் ஊழல் ‘சோ’வுக்கு ஒரு பெரிய விஷயமல்ல; மாறாக, அந்த ஊழல் பேர்வழியை உளவு பார்ப்பதுதான் பெரும் குற்றம்.

வி.பி.சிங், பிரதமர் பொறுப்பில் இருந்தது ஓராண்டுக்கும் குறைவான காலமே (2 டிசம்பர் 1989 முதல் 10 நவம்பர் 1990).பா.ஜ.க. வெளியி லிருந்து தரும் ஆதரவைக் கொண்டே அரசாங் கத்தை நடத்த வேண்டிய நிர்பந்தம் அவருக்கு இருந்ததால், அவர் சில அரசியல் சமரசங்களை செய்து கொள்ள வேண்டி யிருந்தது. அவர் பதவி ஏற்ற சில நாட்களுக் குள்ளேயே பெரும் சவாலொன்றை அவர் எதிர்கொண்டார். அவரது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த முப்டி முகம்மது சயீதின் (முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர்; இந்திய அரசாங்கத்தில் ஒரு முஸ்லிம் உள் துறை அமைச்சராக்கப்பட்டது அதுவே முதல்முறை) மகள், காஷ்மீர் விடுதலைப் போராளிக் குழு வொன்றால் கடத்திச் செல்லப் பட்டார். அந்த சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்ட காங்கிரஸ், நாட்டின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் தகுதி வி.பி.சிங்கிற்கு இல்லை எனக் கடுமையான விமர்சனம் செய்தது. அந்த விமர்சனத்தைத் தணிக்கும் வகையிலும், அமைச் சரின் மகள் கடத்தப்பட்டதால் காஷ்மீரில் ஏற்பட்ட கொந்தளிப்பைத் தணிக்கும் வகையி லும் அவரது அரசாங்கம் அந்தப் போராளிக் குழு வின் நிபந்தனைகள் சிலவற்றை ஏற்று, அக்குழு கோரியபடி சில கைதிகளை விடுதலை செய்தது.

காஷ்மீர் பிரச்னையில் கிடைத்த அனுபவத்தாலோ என்னவோ, பஞ்சாபில் பயங்கரவாதிகளை ஒடுக்குதல் எனும் பெயரால் கடுமையான போலிஸ் ஒடுக்குமுறைகளை ஆதரித்து வந்த அந்த மாநிலத்தின் ஆளுநராக இருந்தவரும், காங்கிரஸ்காரருமான சித்தார்த் ஷங்கர்ரேவை அகற்றி அவருக்குப் பதிலாக நிர்மல் குமார் முகர்ஜி என்னும் மூத்த அதிகாரியை ஆளுநராக நியமித்தார். அங்கு நீண்ட காலம் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்கி, பொதுத் தேர்தலை விரைவில் நடத்த ஏற்பாடு செய்தார். மேலும், இந்திரா காந்தி ஆட்சியின் போது, அமிர்தசரஸ் பொற்கோவிலில் இந்திய ராணுவம் நடத்திய ‘ஆப்ரேஷன் ப்ளு ஸ்டார்’ நடவடிக்கை களுக்காக இந்திய அரசாங்கத்தின் சார்பில் மன்னிப்புக் கேட்பதற்காக அமிர்தசரசில் இறங்கி பொற்கோவிலுக்கு நடந்தே சென்றார்.

வி.பி.சிங் பிரதமர் பதவியிலிருந்து விலகிய வுடனேயே, தனக்கு அளிக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி.வகை பாதுகாப்பு ஏற்பாடுகளை விலக்கிக் கொள்ளும்படி அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டார்.கடைசி வரை எந்த போலிஸ் படையின் பாதுகாப்பும் அவருக்கு இருந்ததில்லை.1992இல் இந்தியாவின் துணைக் குடியரசுத்தலைவராக தாழ்த்தப்பட்டவர் ஒருவர் இருக்க வேண்டும் என்று கூறி, கே.ஆர்.நாரா யணின் பெயரைப் பரிந்துரைத்தவர் வி.பி.சிங் தான்.

1990களின் இறுதியில் தீவிரமான அரசியலி லிருந்து வி.பி.சிங் ஒதுங்கி நின்றார்.தேவே கவுடாவும், அய்.கே.குஜ்ராலும் அடுத்தடுத்துப் பிரதமர்களாக இருந்த அய்க்கிய முன்னணி அரசாங்கத்திற்கு அவ்வப்போது ஆலோசனை வழங்கி வந்தார். தேர்தல் அரசியலின் வரம்புகளை உணர்ந்ததாலோ என்னவோ, மக்கள் பிரச்சனைகளில் நேரடியாகத் தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்ளத் தொடங்கினார். டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் உள்ள குடிசைப் பகுதி மக்கள் வெளியேற்றப்படுவதற்கு எதிரான போராட்டங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதால் வெளியேற்றப் படும் மக்களுக்கு ஆதரவாகப் போராடும் தலைவர்களுடன் போராட்டத்தில் பங்கேற்றார். இத்தனைக்கும் அவர் பதினேழு ஆண்டுகளாக சிறுநீரகம் பாதிக்கப்பட்ட வராகவும், ரத்தப் புற்றுநோயால் அவதிப் பட்டவராகவும் இருந்தார். கடைசி வரை அம்பானிகளுக்கு அவர் சிம்ம சொப்பனமாகவே இருந்தார். உத்திரப் பிரதேசத்திலுள்ள காஸியாபாத் தொகுதியிலுள்ள டட்ரி என்னுமிடத்தில், மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க 2500 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது. விவசாயிகளுக்கு மிக அற்பத் தொகையே இழப்பீடாகத் தரப்பட்டது. அவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்ற அவர் முலாயம் சிங் அரசால் கைது செய்யப்பட்டார்.

எந்த பதவியையும் அவர் விரும்பவில்லை. அவரது நிம்மதி புகலிடமாக கடைசி வரை வரைந்து கொண்டிருந்த ஓவியங்களும், எழுதிக் கொண்டிருந்த கவிதைகளும்தான்.

‘கீற்று’ இணையதளம்

நிமிர்வோம் ஜுன் 2018 இதழ்

You may also like...