பெரியார் – உ.வே.சா. சந்திப்பும் சொல்லாடலும்

தமிழ்ப் புலவர்களை, மேதாவிகளைத் தெரியாதவன் அல்ல; தமிழ் இலக்கியங்களின் தன்மையை உணராதவனல்ல.

இன்றைய புலவர்கள், தமிழ் அபிமானிகள் தியரிடிகல், புத்தகம் படித்த புலவர்கள் என்றால், நான் பிராக்டிகல் (அனுபவ) தமிழ் அறிவு உடையவன் என்று கருதியிருப்பவன்.

(பெரியார்)

 

ஓர் இலக்கியச் சர்ச்சை

ஒரு பக்கம் தமிழகத்தில் உயிர்ப்பான மிகப் பெரிய மக்கள் திரள் போராட்டங்கள் நடந்துவருகின்றன. மறுபக்கத்தில் அதற்குக் குறைவில்லாமல் இலக்கியச் சர்ச்சைகளும் நடந்துவருகின்றன. அதிலொன்று கடந்த பிப்ரவரி மாதம் காலச்சுவடு இதழில் வெளிவந்த ப.சரவணனின் “ஐயருக்கு எதிரான அபவாதம்” என்ற கட்டுரை. இந்தக் கட்டுரையின் சான்றாதாரக் குறிப்பு தொடர்பான ஒரு பிரச்சினையை, பொ.வேல்சாமி தனது முகநூல் பக்கத்தில் கிளப்பினார். மார்ச் மாதம் காலச் சுவடு இதழில் ப. சரவணனும் சான்றாதாரக் குறிப்பு தொடர்பான கேள்விக்கு விரிவான எதிர்வினையை ஆற்றியுள்ளார். அத்துடன் அவ்விதழின் வாசகர் கடிதப் பகுதியில் பொ.வேல்சாமியும், பா.மதிவாணனும் பார்ப்பனர்-வேளாளர் கூட்டு மற்றும் விலகல், கருத்து நிலை சார்பு, ‘ஐரோப்பியரின் தமிழ்த் தொண்டு என்னும் சூழ்ச்சி’ ஆகியவற்றை மையமிட்டு மேலும் சில  பிரச்சினைகளைக் கிளப்பியுள்ளனர்.

மறதிகளும் நினைவுகளும்

வரலாறு என்பது நினைவுகள் மட்டுமல்ல; மறதிகளும்கூட. சாதகமானவற்றை நினைவு உறுத்துவதும் பாதகமானவற்றை மறந்து விடுவதும் வரலாற்றின் ஒரு பண்பு ஆகும். அவ்வாறு வரலாற்றில் மறந்துவிடப் பட்ட ஒன்று, ‘உ.வே.சா. – தமிழ்த் தொண்டு – தமிழ்த் தாத்தா’ என்று பார்ப்பனர்கள் உ.வே.சா.வைக் கொண்டாடி, கட்டியமைத்த புனிதப் பிம்பங்களைப் பற்றிய பெரியாரின் சொல்லாடல். பொதுவாகப் பார்ப்பனர்கள் கட்டியமைத்த புனிதப் பிம்பங்களைத் தம் வாழ்நாள் முழுக்கவும் பெரியார் தகர்த்து வந்தார். வருணம், சாதி, இந்துமதம், இந்து/இந்திய தேசியம் ஆகிய தளங்களில் பெரியாரின் சொல்லாடல்கள் நன்கு அறியப்பட்டதே. ஆனால் “தமிழ்த் தாத்தா உ.வே.சா.” என்று பார்ப்பனர் கட்டியமைத்த புனிதத் திருவுருவின் மீது பெரியார் முன்வைத்த சொல்லாடல்கள் மட்டுமன்று, உ.வே.சா. உள்ளிட்ட தமிழ்ப் புலவர்களுக்கு, ஒரு வணிகராகத் “தமிழ்த் தொண்டு”களுக்குப் பெரியார் உதவி புரிந்ததும், ‘வெறும் வாய்மொழித் தகவல் மட்டும்தானா அல்லது குடிஅரசுச் சான்றுகள் ஏதேனும் இதற்கு உண்டா’ என்று உ.வே.சா.-வியல் ஆய்வு வல்லுநர் களுமே ஐயுறும் நிலையில்தான் உள்ளனர். ஆகவே, உ.வே.சா. பற்றிய ‘பார்ப்பனர் என்ற காழ்ப்புணர்வோடு’ பெரியார் முன்வைத்த சொல்லாடல்கள் எவை, அவற்றுக்கு இலக்கிய வரலாறு எழுதியலில் ஏதேனும் இடம் உண்டா என்பன குறித்த சில குறிப்புகளே இக்கட்டுரை.

உ.வே.சா. பற்றிய பெரியாரின் சொல்லாடல்களை ஒரு தமிழியல் மாணவனாக விளங்கிக் கொள்ள, வையாபுரிப்பிள்ளையின் ‘மகாமகோபாத்தியாய டாக்டர் சாமிநாதையர்’ என்ற கட்டுரையை அடிப்படையாகக் கொள்கிறேன். இக்கட்டுரை திருவல்லிக்கேணி ஹிந்து இளைஞர் சங்கத்தில் உ.வே.சா.வின் உருவப்படத்தைத் திறந்து வைத்து, ஆற்றிய உரைக்குறிப்புகளை அடிப் படையாகக் கொண்டு, எழுதிய தமிழ்ச் சுடர் மணிகள் நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை ஆகும்.

உ.வே.சா. பற்றிய பெரியாரின் சொல்லாடல்கள்

காலனிய அரசு இயந்திரத்திலும், சமூக வெளி களிலும் பிற சமூகங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, பார்ப்பனர் முன்னுக்குச் சென்று முழு அதிகாரம் செலுத்தி வந்தனர். வெறும் அலுவல் இயந்திரப் பதவிகள் என்பன மாத்திரமல்லாமல், அரசியல், அறிவுத்துறைகள், கருத்து நிலை வட்டாரங்கள் என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தினர். இதனைத் தனது அனுபவத்தால், பட்டறிவால் உணர்ந்த, தந்தை பெரியார் என்கிற ஈ.வெ. ராமசாமி (1879-1973) சமத்துவ சமுதாயம் நோக்கிய பயணத்தில் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பை ஒரு மைய அச்சாகக் கொண்டிருந்தார்.

குறைந்தபட்சம் இரண்டு சந்தர்ப்பங்களில், உ.வே.சா. பற்றி தமது எழுத்துகளில் தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளார். முதலாவது சந்தர்ப்பம் 1930ஆம் ஆண்டுகளில் வெவ்வேறு நேரங்களில் தமிழ் மொழி-இலக்கியத் துறையில் பார்ப்பனரல்லாதாரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பார்ப்பனர் முன்னிலை பெறும் “பார்ப்பனச் சூழ்ச்சிக்கு” உதாரணமாக, உ.வே.சா. பற்றிய சொல்லாடல்களை முன்வைத்துள்ளார். பிறிதொரு சந்தர்ப்பம், தமிழ் அபிமான மிகையுணர்ச்சி மேலோங்கிய தருணமான அறுபதாம் ஆண்டுகளில், “தமிழ் ஒரு நியூ சென்ஸ் – தமிழ்ப்புலவர்கள் சமூக துரோகிகள்” எனப் பெரியார் விமர்சனம் செய்தபோது, ‘பெரியாருக்குத் தமிழும் தெரியாது, தமிழ்ப் புலவர்கள் பற்றியும் தெரியாது’ என எதிர்மொழிகள் எழுப்பப்பட்டதற்குப் பதிலாக, 1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் தேதி ‘விடுதலை’யில் ‘தமிழ்’ என்ற தலைப்பில் எழுதிய தலையங்கத்தில் தமிழ்ப் புலவர்கள் பற்றி தமக்குத் தெரியும் என்று சில நிகழ்வுகளை நினைவுகூரும்போது, உ.வே.சா.வைப் பற்றிய ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

முதல் சந்தர்ப்பத்தில் மூன்று இடங்களில் உ.வே.சா. பற்றி பெரியார் விமர்சனம் செய்துள்ளார். முதல் இடம், 1933ஆம் ஆண்டு நடக்க இருந்த ‘தமிழர் அன்பர் மாநாடு’ தொடர்பாகக் குடிஅரசு இதழில் விவாத மொன்று நடந்தது. அந்த விவாதத்தில் தனது கருத்து களைப் பதிவு செய்த கட்டுரையொன்றில் (குடிஅரசு, 19-11-1933) பெரியார், ‘பார்ப்பனர்கள் தமிழர்கள் என்ற தலைப்புக்குள் புகுந்து கொண்டு, பார்ப்பனரல்லாதார் என்ற உணர்ச்சியை நசுக்கி, பார்ப்பன ஆதிக்கம் பழைய படிக்குத் தொடர வேண்டும்’ என்று “சூழ்ச்சி” செய் கின்றார்கள் என எச்சரிக்கை செய்கின்றார். பார்ப்பனர் களுக்கு உடன்பட்டு நடக்கிற பார்ப்பனரல்லாதாருக்குக் கூட பார்ப்பனர்கள் எவ்வாறு தீமைகள் செய்து வருகின்றார்கள் என்பதற்கு உதாரணமாகப் பின்வரும் விஷயத்தைக் குறிப்பிடுகின்றார்:

சமீப காலத்தில் தமிழில் மிக மேன்மையாய் தேறிய ஒரு பார்ப்பனரல் லாதாருக்கு, அதாவது சென்னை டி.பி. மீனாக்ஷிசுந்திரம், எம்.ஏ., பி.எல். (இவர் பார்ப்பனருக்கு அனுகூலமாகவும் சுய மரியாதை இயக்கத்துக்கு விரோதமாகவும் வேலை செய்வதற்காக காங்கிரசினால் 2,000 ரூ. கொடுத்து உதவி செய்யப்பட்ட தோழர் டி.பி. கிருஷ்ணசாமிப் பாவலரது தம்பியாவார்) இவர் கல்வி விஷயத்தில் மிக்க தேர்ச்சி யுடையவர். பல விஷயங் களில் பண்டிதர். தமிழை ஒரு சந்தோஷத் திற்காக படித்து இம்மாகாண மாணவர் களில் உயர்தர வகுப்பில் தேறியவர். தமிழில் உயர்தர வகுப்பில் தேறியவருக்குப் பரிசளிக்கவென்று திருவாடுதுறை பண்டார சன்னதியவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட 1,000 ரூபாய் பரிசை பரிசு முறைப்படிக்கு அடைய தகுதி உடையவர். இப்படிப்பட்ட இவர் பார்ப்பனரல் லாதாராய் இருப்பதால் இவ்வருஷப் பரிசு இவருக்கு வழங்கப்படாமல் போயிற்று. இந்தப் பெருமை தோழர் மகா மகோபாத்தியாயர் வே.சாமிநாதையர் அவர்களுக்கே சேர்ந்தது. பார்ப்பன ரல்லாதார் செய்யும் தற்காப்பு காரியங்கள் பார்ப்பன துவேஷமாய் போய் விடுகிறது. பார்ப்பனர் செய்யும் சகலவித கொடுமை களும் அவர்களை பட்டதாரிகளாகவும் பதவிதாரர்களாகவும் ஆக்கிவிடுகிறது. (பெரியார், 2017-1: 71-72)

இந்தக் குறிப்பை மேலும் தெளிவுபடுத்திக் கொள்ள முடியவில்லை. தெ.பொ.மீ. பரிசு பெறுவதை எவ்வாறு உ.வே.சா. தடை செய்தார் எனத் தெரியவில்லை. ஆனால், உ.வே.சா. பார்ப்பனரல்லாத ஒரு சிறந்த தமிழ் மாணவர், அறிஞர் மீது வெறுப்பு காட்டினார் என்பது பெரியார் கூற்றின் சாரம்.

இரண்டாவது இடம், சென்னையில் உ.வே.சா.வுக்கு சதாபிஷகம் கொண்டாடப்பட்ட வேளையில், அந் நிகழ்வை தமிழ் மொழி, இலக்கியத் துறையில் வேலைகள் செய்த பார்ப்பனரல்லாதாரை அழுத்திவைப்பதற்கு, தமிழ்த் தொண்டு செய்தார் என்பதற்கல்லாமல் உ.வே.சா. பார்ப்பனர் என்ற காரணத்திற்காகவே, அவரைப் புகழ்ச்சி செய்யும் “பார்ப்பன சூழ்ச்சி” என 1935 ஆம் ஆண்டும் மார்ச் 10ஆம் தேதி வெளிவந்த குடிஅரசு கட்டுரையில் வருணித்தார். இக்கட்டுரையின் ஓரிடத்தில் உ.வே.சா. பற்றிய பெரியாரின் மதிப்பீடு உள்ளது. அது வருமாறு:

டாக்டர் சாமிநாத அய்யர் அவர்கள், அவருக்கு முன்னிருந்த சில புலவர்களாலும், சென்னைச் சர்வகலா சங்கத்தாராலும், சில புத்தகங்களின் மூல பாடங்களும், சில புத்தகங்களின் ஒவ்வொரு பகுதியும் உரைகளும் வெளி யிடப்பட்டிருந்த சங்க இலக்கியங் களையும், முழுப்பாகமும் வெளிப் படாமலேயிருந்த சில புத்தகங்களையும், பெரும் பாலும் பார்ப்பனரல்லாதாரின் துணை கொண்டு தேடிப்பிடித்து ராமநாதபுரம் அரசர், திருவாடு துறை மடத்தார் போன்றவர்களின் உதவி பெற்று அவைகளை அச்சிட்டு வெளிப்படுத்தி, அதன் மூலம் பிரயாசைப்பட்டதற்கு ஏற்ற பொருள் லாபமும் பெற்றிருந்தாலுங்கூட விடா முயற்சியுடன் தமிழ்ப் புத்தகங்களை, அதிலும் பழய சங்க இலக்கியங்கள் என்பன பலவற்றை ஒழுங்கான முறையில் சீர்திருத்தி வெளியிட்டமைக்காகத் தமிழ் அபிமானிகள் அவருக்கு நன்றி பாராட்ட வேண்டும் என்பதை நாமும் மனப் பூர்வமாக ஆதரிக்கின்றோம். (பெரியார், 2017-1: 102)

இந்தக் கூற்றில், முழுமையாக வெளி யாகாமல் இருந்த இலக்கியங்களையும் சங்க இலக்கியங்களைப் பார்ப்பனரல்லாதார் உதவிகள் பெற்று, உ.வே.சா. ஒழுங்கானமுறையில் சீர்திருத்தி, விடாமுயற்சியுடன் வெளியிட்டார். இதற்காகத் தமிழபிமானிகள் நன்றி பாராட்ட வேண்டும். அதற்குப் பிரயாசைப்பட்டதற்கு ஏற்ற பொருள் லாபமும் உ.வே.சா பெற்றார். இவ்வாறு சாதகமான முறையில் உ.வே.சா.வை மதிப்பிட்ட போதும், கட்டுரையின் மையமாக இம் மதிப்பீடு அமையவில்லை. உ.வே.சா.வைப் போற்றிப் பாராட்டிப் புகழ்ந்துரைக்கும் பார்ப்பன பத்திரிகைகள் ஏன் பார்ப்பனரல்லாதார் தமிழ்ப் பணிகள் பற்றி பேசுவதே இல்லை என்ற கேள்விகள்தாம் மையமாக உள்ளன.

உண்மையில் இந்தப் பார்ப்பனர்கள் தமிழ் பாஷையின் மேலும், தமிழ் அபி விருத்தியிலும், ஆசையுடையவர் களானால் இந்த டாக்டர் அய்யர் அவர்களை இன்று பார்ப்பனர்கள் கவுரவம் பண்ணுவதற்குக் காரணமாக இருந்த அவருடைய ஆசிரியரான காலஞ்சென்ற மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களைப் பற்றியோ, கும்பகோணம் காலேஜில் தமிழாசிரியராக இருந்த காலஞ்சென்ற தியாகராஜச் செட்டியார் அவர் களைப் பற்றியோ குறிப்பிடாமல் இருந்திருக்க முடியாது. ஆனால் இவர்களைப் பற்றிப் பொது ஜனங்கள் தெரிந்து கொள்ளும்படி செய்யவோ, இவர்கள் அய்யர் அவர் களுக்குச் செய்த நன்றியை எடுத்துக் காட்டவோ எந்தப் பார்ப்பனரும், எந்தப் பார்ப்பனப் பத்திரிகையும் முன்வர வில்லை.

அன்றியும் தமிழைப் படிப்பாரும், ஆதரிப்பாரும், படிப்பாருக்கு உதவியளிப் பாரும், இல்லாதிருந்த காலத்தில் மதுரையில் தமிழ்ச்சங்கத்தை ஏற்படுத்தி, அதன் பயனையும் பெரும்பாலும் பார்ப்பனர்களே அடையும்படி செய்து அச்சங்கத்தின் வளர்ச்சிக்காகவே சாகும் வரையிலும் உழைத்து காலஞ்சென்ற பாண்டித்துரை தேவர் அவர்களைப் பற்றி மனதினாலாவது இந்தப் பார்ப்பனர்கள் நினைத்ததுண்டா?

தொல்காப்பியம் போன்ற தமிழ் இலக்கணங்களையும் மற்றும் பல இலக்கி யங்களையும் மிகுந்த பிரயாசையுடன் தேடி வெளியிட்ட காலஞ்சென்ற சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களைப் பற்றி இந்தப் பார்ப்பனர்கள் ஒரு வார்த்தை யேனும் பேசுவதுண்டா?

தற்பொழுது கரந்தை தமிழ்ச் சங்கத்தை வைத்து நிர்வகித்து பெரும் பாலும் தனது வாழ்நாளை அதற்காகவே அர்ப்பணம் பண்ணி வரும் தோழர் உமாமகேசுவரன் பிள்ளை அவர்களின் முயற்சிகளுக்கு இந்தப் பார்ப்பனர்கள் துணை செய்யாவிட்டாலும்கூட பாதகஞ் செய்யாமல் இருக்க வேண்டும் என்றாவது நினைக்கிறதுண்டா? (பெரியார், 2017-1:

102-3)

இந்தக் கேள்விகள்தாம் கட்டுரையின் மையம். இப்படி நடந்துகொள்வதற்குப் பார்ப்பனர்களுக்கு ‘ஒரு அந்தரங்க நோக்கம்’ இருக்கின்றது என்கிறார் பெரியார். அது ‘எந்தத் துறையில் எடுத்துக் கொண் டாலும், பார்ப் பனர்களே விளம்பரமும், அதன் மூலம் ஆதிக்கமும், அதன் மூலம் பண லாபமும் பெறு வதற்கும், எந்தத் துறையிலும் பார்ப்பனரல்லா தார் இழிவுபடுத்தப்படுவதற்கும், அழுத்தப்படு வதற்கும், தலையெடுக்காமல் இருப்பதற்கும், தேசியப் போர்வை முதலான போர்வை களைப் போர்த்திக் கொண்டு தேசிய வாதப் பார்ப்பனர் செய்யும் சூழ்ச்சியே ஆகும் (பெரியார், 2017-1: 102-4). இந்த நோக்கத்திற்கு உ.வே.சா. பார்ப்பனர் களுக்குப் பயன்பட்டிருக்கிறார் என்பது பெரியாரின் வாதம்.

மூன்றாவது இடம், மறைமலையடிகளின் “அறிவுரைக் கொத்து” என்னும் நூல் சென்னைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் வைக்கப் பட்டதற்கு எதிராகப் பார்ப்பன பத்திரிகைகள், ‘அந்நூலில் உள்ள ‘தமிழ்நாட்டவரும் மேல்நாட்டவரும்’ என்ற கட்டுரை தமிழ் மக்களை இழிவுபடுத்தியும் அடிமைப்புத்தி ஏற்படும் படியும் கேவலப்படுத்தியும் எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே அந்நூலைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தி லிருந்து நீக்க வேண்டும்’ என்று பிரச்சாரம் செய்துவந்தன. இதை எதிர்த்து, மறைமலையடிகளின் கட்டுரை வாதங்களை ஆதரித்து, “போக்கிரித்தனமான புகார்” என்றொரு கட்டுரையை, 1935ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி பெரியார் எழுதியுள்ளார். அக்கட்டுரையின் தொடக்கத்தில் மறைமலையடிகளையும் உ.வே.சா. வையும் ஒப்பிட்டு, உ.வே.சா. மீது விமர்சனங்கள் செய்துள்ளார். அக்கூற்று வருமாறு:

உதாரணமாக இன்று தமிழ்பாஷையின் பேரால் பெருநிதி திரட்டிக் கொண்டவரும் பெரும் புகழ் அமைத்துக் கொண்டவரும் தமிழுக்குத் தாயக மெனவும் விளம்பரப்படுத்தப்பட்டு மகாமஹோ பாத்தியாயர் எனப் பட்டம் சூட்டப் பெற்ற வருமான தோழர் உ.வே.சாமிநாதையர் அவர்களை ஒரு தட்டில் வைத்து சுவாமி வேதாச்சலமவர் களை மற்றொரு தட்டில் வைத்து நிறுக்கப்படுமானால், எத்தனை சுவாமிநாதய்யர்களைப் போட்டால் சுவாமி வேதாச்சலம் வீற்றிருக்கும் தட்டை அசைக்க முடியும் என்பதை, ஒவ்வொரு நேர்மையான மகனும் தன் தன் நெஞ்சில் கையை வைத்து உண்மை உணர்வோடு பார்ப்பானானால் நன்றாய் விளங்கிவிடும்.

தோழர் சுவாமிநாதய்யர் அவர்கள் வெகுகாலமாக பல தமிழ்ப் பெரியாரும், தமிழ் அபிமானிகளும் சேர்த்து வைத்திருந்த தமிழ் இலக்கியச் சுவடி களையும், அவற்றிற்கு அவ்வப்போது பல அறிஞர் களும், பண்டிதர்களும் குறித்து வைத்து இருந்த உரைகளையும், கருத்துகளையும் கைப்பற்றி அவற்றில் பார்ப்பனரல்லாதாருக்கு அனுகூல மாகவும், பார்ப்பனர்களுக்கு பிரதிகூலமாகவும் இருந்த கூற்றுகளை மாற்றியமைத்து ஆற்றிய நூல்கள் போலவே எல்லாவற்றையும் பார்ப் பனீயத்துக்கு அரணாக்கிப் பதிப்பித்துப் பயன் பெற்றார் என்பதல்லாமல் தன் சொந்த மனோ தர்மத்தில் யாவருக்கும் பயன்படும்படி பார்ப்பன முறையில் ஏதாவது புத்தகமோ, வியாசமோ எழுதி இருக்கின்றாரா என்று பார்த்தால் நாம் கூறுவதில் உண்மை இருக்கின்றதா? இல்லையா? என்பது செவ்வன விளங்கும். (பெரியார், 2017-1: 93)

இந்தக் கூற்றில் பெரியார், தமிழின் பேரால் உ.வே.சா. பெருநிதி திரட்டிக் கொண்டார், தமிழ் அபிமானிகள் சேர்த்து வைத்திருந்த சுவடி களையும், அவ் விலக்கியங்களுக்குப் பண்டி தர்கள் எழுதி வைத்திருந்த உரைகளையும் கைப்பற்றிப் பார்ப்பனியத்திற்கு அரண் செய்யும் வகையில் திருத்தம் செய்து பதிப்பித்தார், சொந்தமாக நூல்கள், கட்டுரைகள் எழுத வில்லை ஆகிய விமர்சனங்களை வைக்கின்றார்.

இரண்டாவது சந்தர்ப்பத்தைக் காண் போம். ‘விடுதலை’ இதழின் தலையங்கத்தில் உ.வே.சா. பற்றிய பெரியாரின் வாசகங்கள் பின்வருமாறு :

ஒரு வேடிக்கை நிகழ்ச்சி: உ. வே. சாமிநாத அய்யர் நான் “பிரபு” வாயிருக்கும் போது வந்து புலவர் முறைப்படி என்னைப் பார்த்துவிட்டுப் போன சில நாட்களுக்குப் பின், ஒருநாள் ரயில் பிராயாணத்தில் அவர் இருக்கும் வண்டியில் நான் ஏறி ஒருபுறம் உட்கார்ந்தேன்; வண்டியில் இருந்த மக்கள் என்னைக் கவனித்தார்கள். அப்போது அவரிடம் “நாயக்கர் வந்து ஏறினார்” என்று சொன்னார்கள். அது ஈரோடு ஸ்டேஷன் ஆனதால் இராமசாமி நாயக்கர்தான் என்று கருதி என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். உட்கார்ந்த உடன் நான் வணக்கம் தெரிவித்தேன். அவர் என்னை உற்றுப் பர்த்தார். பார்த்ததும் பொருளாதாரத்தில் எனது நிலை தாழ்ந்துவிட்டதாகக் கருதி கண் கலங்கினார். கலங்கி “வியாபாரத் தொழில் அப்படித்தான் சகடக் கால்போல்” என்று கூறிக்கொண்டு “சௌகரியமா?” என்று கேட்டார்.

அவர் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்றால், அவர் என்னிடம் வந்து பேசிய காலம் என்னை பிரபு என்று கருதி வந்து பயன்பெற்ற காலம். அடுத்தாற் போல் ரயிலில், பிரயாணத்தில் என்னை அவர் சந்தித்த காலம் நான் காங்கிரசில் சேர்ந்து கதர் கட்டிக்கொண்டு, சட்டைப் போடாமல் ஒரு மடிசஞ்சி மூட்டையை வைத்து அதன் மீது உறைந்து கொண்டிருந்த காலம். பிறகு நான் அன்றைய எனது நிலை பற்றிப் பேசிய பிறகு மகிழ்ச்சியுடன் ஊத்துக்குழி ஸ்டேஷனில் இறங்கிக் கொண்டார். அந்த சம்பவம் அவர் அவினாசியில் நடந்த ஒரு சமய மாநாட்டுக்கு தலைமை தாங்கச் சென்ற சமயம். (2017 – 1: 676-77)

இந்த நினைவுகூரலைப் பெரியார், தன்னைப் பெரிய தமிழ்ப் புலவருடன் தொடர்புப்படுத்திக் கொண்டு பெருமைப் பட்டுக் கொள்வதற்காகச் செய்யவில்லை. தமிழ்ப் புலவர்கள் “தகுதி எல்லாம் “இலக்கியங்களை” உருப்போட்டு ஒரு சொல்லுக்கு பல பொருள் சொல்லி மக்களை மருளச் செய்து காசு வாங்குவதுதான் உயர்ந்த தொழிலாகும். அந்தக் காலத்தில் எங்கள் குடும்பத் தையும் என்னையும் அறியாத புலவர்கள் தமிழ்நாட்டில் அருமை. புலவரைப் பற்றி என் கருத்து “புலவர் என்றால் சொந்த புத்தி இல்லாதவன், புளுகன்” என்று தான் உரை கூறுவேன்” என்ற அவர்கள் பற்றிய தன் கருத்தை எடுத்துக் கூறுவதற்காகத்தான் உ.வே.சா. பற்றிய நிகழ்வை எடுத்துக் கூறியுள்ளார் (பெரியார்,2017-1:677). இந்தச் சம்பவத்தையடுத்து நா.கதிரைவேற்பிள்ளை பற்றிய ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்த பிறகு, 60ஆம் ஆண்டுகளிலும் தமிழ்ப் புலவர்கள் பற்றிய நிலை மையைப் பின்வருமாறு சொல்கிறார்:

இன்று தமிழில் “மேதாவிகள்” டாக்டர்கள் ஏராளமாக ஆகிவிட்டார்கள். பூச்சும், பொட்டும், நாமமும்தான் அவர்கள் தலையில் விளங்குகிறதே தவிர, தலையில் இருக்க வேண்டியது அறவே இல்லை. புலவரை இடித்துரைக்க இந்த நாட்டில் என்னைத் தவிர வேறு எவரும் முன்வரப் பயப்படுகிறார்கள். (2017 – 1: 667)

பெரியாரின் அதிர்ச்சி தரத்தக்க கருத்துகளில், தமிழ்ப் புலவர்கள் பற்றிய இந்த மதிப்பீடும் ஒன்று. ஆனால், இன்றைய அளவில் வரலாறு, மொழியியல், சமூகவியல், மானிட வியல், நாட்டார் வழக்காற்றியல் முதலான புலமை வட்டாரங்களோடு ஊடாடி, தமிழ்ப் புலமை வட்டாரத்தில் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளன. ஆனால், தமிழ்ப் பட்டப் படிப்புகள் என்பது நவீன சமூக அறிவியல் படிப்புகளுடன் போதிய அளவு தொடர் பில்லாததாய், தனித்துப் பெயரளவிலான ‘இலக்கியப் பயில்வை’ மட்டுமே கொண்டதாய் இன்றளவிலும் நடத்தப்படுகின்றன. பெரியார் எதிர் பார்த்த அளவிற்குச் சாதி காப்பாற்றும் தமிழ் மொழியின் கூறுகள், தமிழ் இலக்கியக் கூறுகள் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட வில்லை என்பதும் உண்மையே. சாதி ஒழிப்புக்கு, தமிழ்ச் சமூக முன்னேற்றத்திற்குப் பயன்படக் கூடிய வகையில் தமிழ்ப் புலவர்கள் செயலாற்ற வேண்டும் என்ற பெரியா ரின் எதிர்பார்ப்பு இன்னும் நிறைவேறவில்லை.

இரண்டு சந்தர்ப்பங்களிலும் பெரியாரின் சொல் லாடல்களை மொத்தமாகச் சேர்த்து வைத்து நோக்கினால், உ.வே.சா. பற்றிய பெரியாரின் மதிப்பீடுகள் பின்வருவன:

1)    புதிதாகத் தமிழுக்கு ஆக்கம் தரும் வகை யிலான நூல்கள், கட்டுரைகள் எழுதாத, பழம் இலக்கியங்களை மட்டுமே போற்றும் மனநிலை உடைய தமிழ்ப் புலவர்களில் உ.வே.சா.வும் ஒருவர்.

2)    தமிழ் அபிமானிகள் சேர்த்து வைத்திருந்த சுவடிகளையும், அவ்விலக்கியங்களுக்குப் பண்டிதர்கள் எழுதி வைத்திருந்த உரை களையும் கைப்பற்றிக் கொண்டார்.

3)    சங்க இலக்கியங்களைத் திருத்தமான முறையில் விடாமுயற்சியுடன் பதிப்பித்தார்.

4)    பார்ப்பனியத்திற்கு அரண் செய்யும் வகையில் பழந்தமிழ் நூல்களையும் உரைகளையும் திருத்தம் செய்து பதிப்பித்தார்.

5)    தம் முயற்சிகளுக்கு ஏற்ற பொருள் லாபங் களைப் பெற்றார். தன்னைத் தமிழ்த் தொண்டு களுக்காக “தியாகம்” செய்துகொள்ள வில்லை. இது பார்ப்பனர் ஆதிக்கம் செலுத் துவதற்காகக் கட்டமைத்த கதையாடல்.

6)    பாரப்பனரல்லாதார் உதவிகள் பெற்றிருந்த போதிலும், அவ்வகுப்பு மாணவர்கள், அறிஞர்கள் மீது உ.வே.சா. வெறுப்பு காட்டினார். தமிழ் மொழி, இலக்கியத் துறையில் பார்ப்பனரல்லாதாரை அழுத்தி வைக்கும் தேசியப் பார்ப்பனர் சூழ்ச்சிக்கு உ.வே.சா. பயன்பட்டார்.

– ‘உங்கள் நூலகம்’

நிமிர்வோம் ஏப்ரல் 2018 இதழ்

You may also like...