எது பிரிவினை மனப்பான்மை? புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

பிண்ணாக் குநிறம் பிளவிலாக் குளம்புகள்

வெண்முகம் நீள்காது மிகமிக அழகு

தெருவில் புகுந்து தெருவிலென் வீட்டின்

அருகில் வந்ததும் அருமை! அருமை!

வீட்டினுள் புகுந்து காட்டுத் தழையென்று

சுவடிகள் துணிகளை மென்று தின்றதும்

சொல்லொணாப் புதுமை! சொல்லொணாப் புதுமை!

வாய்தி றந்து வண்ணம் பாடித்

தூய்மையைத் துடைத்ததும் மெச்சத் தக்கது.

துணிவாய் அடுக்களைச் சோற்றுப் பானையை

உருட்டி முழுதும் இனிதாய் உண்டதைப்

பார்க்கப் பார்க்கப் பார்ப்போர் கண்கள்

மகிழ்ச்சி மத்தாப் பாக விளங்கின.

தன்னுளம் தாங்காது வீட்டின் தலைவன்

வாய்பெ ருத்த வடக்குக் கழுதையே!

வெளியே போநீ என்று விளம்பினேன்

இதுபி ரிவினை மனப்பான்மை என்று

கத்துகின் றதே கழுதை! கத்துகின் றதே கழுதை!

நிமிர்வோம் பிப் 2018 இதழ்

You may also like...