கருத்துரிமைக்கு தடை போட்டால்…

தேர்தல் அரசியல் கட்சிகளிலும் ஜனநாயக அமைப்பு முறைகளிலும் மக்கள் நம்பிக்கைகளை இழந்து விட்டார்கள் என்பதை ஆங்காங்கே மக்கள் நடத்தும் போராட்டங்கள் வெளிப்படுத்தி வருகின்றன. மக்களின் வாழ்வாதாரங்களை முடக்குதல், இயற்கை வளங்களைச் சுரண்டுதல், பெரும் தொழில் நிறுவனங்கள்- பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக மக்கள் உரிமைகளைப் பறிக்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குதல், ஜாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதில் அலட்சியம் காட்டுதல் என்று நீண்ட பட்டியலிட முடியும்.

விரக்தி அடைந்த மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் உணர்ந்து, அவர்களுக்காக மக்களைத் திரட்டும் போராட்டங்களை தேர்தல் அரசியலில் பங்கெடுக்காத இயக்கங்கள், உள்ளூர் அமைப்புகள், சுற்றுச் சூழலாளர்கள், ஜாதி ஒழிப்பு அமைப்புகள்தான் களமாடி வருகின்றன. குறிப்பாக சமுதாய அக்கறை கொண்ட இளைஞர்கள், இந்த இயக்கங்களை முன்னெடுத்து வருகிறார்கள் என்பது நம்பிக்கையூட்டும் செய்தி.

இந்த இயக்கங்களை கடுமையாக ஒடுக்கிட ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் காவல்துறை செயல்பட்டு வருகிறது. அமைதி வழியிலான ஆர்ப்பாட்டங்கள், மறியல், பட்டினிப் போராட்டம், முற்றுகைப் போராட்ட வடிவங்கள்தான் தமிழகத்தின் அறவழிப் போராட்ட கலாச்சாரம். இந்தப் போராட்டங்கள் நடத்துவோர் மீதும் வழக்குகளைப் பதிவு செய்து, நீதிமன்றத்துக்கு இழுத்தடிக்கும் அணுகுமுறையை இப்போது காவல்துறை தொடங்கியிருக்கிறது. இந்தப் போக்கு அமைதி வழிப் போராட்ட வடிவங்களை வன்முறைகளுக்கு திசைதிருப்பி விடும் வாய்ப்புகள் இருப்பதைப் பற்றி காவல்துறை கவலைப்படுவதாகவே தெரியவில்லை. இந்த அணுகுமுறைகளிலும்கூட காவல்துறை பாகுபாடு வெட்ட வெளிச்சமாகவே தெரிகிறது. எந்த ஒரு பேரணி ஊர்வலத்துக்கும் அனுமதி மறுப்பதை கொள்கையாக்கிவிட்ட காவல்துறை, ஆர்.எ°.எ°.பேரணிகளுக்கும் அவர்களின் ஆத்திரமூட்டும் கூட்டங்களுக்கும் தாராளமாக அனுமதிக்கிறது.

ஆண்டுதோறும் சட்டம் ஒழுங்குக்கு சவால்விட்டு வரும் விநாயகன் அரசியல் ஊர்வலங்களை எதிர்த்து பெரியார் இயக்கமான திராவிடர் விடுதலைக் கழகம், பெரியார் கைத்தடியுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை காவல்துறையிடம் அறிவித்து அவர்கள் அனுமதிக்கும் இடத்தில் அமைதியாக நடத்தி வருகிறது. அதே விநாயகன் ஊர்வலத்தில் பங்கேற்கும் இந்து முன்னணி அமைப்பாளர் இராமகோபாலன், திருவல்லிக்கேணி இ°லாமியர் பகுதி வழியாக ஊர்வலத்தை திருப்ப முயற்சிப்பதும், அவர் கைது செய்யப்படுவதும் வழக்கமாகிவிட்டது. இந்த ஆண்டு திராவிடர் விடுதலைக் கழகத்தினர் மீது வழக்கு பதிவு செய்து ‘சம்மன்’ அனுப்பியுள்ள சென்னை மாநகர காவல்துறை, இராமகோபாலன், அவரது இந்து முன்னணியினர் மீதும் எந்த வழக்கையும் ஏன் பதிவு செய்யவில்லை? ஏன் இந்த இரட்டை அணுகுமுறை?

‘குண்டர்’ சட்டத்தை காவல்துறை ஒரு ஆயுதமாக கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவதை சென்னை உயர்நீதிமன்றமும் ஒரு வழக்கில் சுட்டிக் காட்டியிருக்கிறது. மக்கள் பிரச்சினைக்காக ஜாதி ஒழிப்புக்காக மாநில உரிமைக்காக ஈழத் தமிழர் உரிமைகளுக்காகப் போராடும் சமூகக் கவலை கொண்ட இளைஞர்கள் மீது ‘குண்டர் சட்டங்களை’ காவல்துறை ஏவி விடுவது வன்மையான கண்டனத்துக்குரிய அணுகுமுறை. ‘மிசா, தடா, பொடா’ என்று ஆள் தூக்கி சட்டங்கள் இல்லாத நிலையில் ‘தேச பாதுகாப்புச் சட்டம்’ குண்டர் சட்டங்களை கவசமாக்கிக் கொள்கிறது காவல்துறை.

நீதிமன்றங்களின் அனுமதியோடு தான் கருத்துகளை வெளிப்படுத்த முடியும் என்ற நிலையை காவல்துறை உருவாக்கி வருவதும் ஆளும் அதிகார கட்சிகளும் ஆளும் வர்க்கமும் இதற்கு பச்சைக் கொடி காட்டுவதும், ஏற்கனவே உருக்குலைந்து போய் நிற்கும் ‘ஜனநாயக’ அமைப்பை சிதைத்து ஒழித்துவிடும் என்பதை ஆளும் வர்க்கமும் காவல்துறையும் உணர வேண்டும்!

நிமிர்வோம் நவம்பர் 2017 இதழ்

You may also like...