நீட் மருத்துவக் கல்வி தரத்தை உயர்த்துமா? மருத்துவர் இரா. செந்தில்
நீட் தேர்வை நியாயப்படுத்தும் வாதங்களை அழுத்தமாக மறுக்கிறது இக்கட்டுரை
- அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வை நியாயப்படுத்துவதற்காக பாரதிய ஜனதா கட்சி கூறுகின்ற நான்கு அடிப்படைக் காரணங்கள்:-
- இது தரமான மருத்துவக் கல்விக்கு வழி வகுக்கும்.
- இது தனியார் மருத்துவக் கல்லூரிகளின் வணிக மயத்தைத் தடுத்து, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்தும்.
- இது இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான, தரமான கல்வியை உருவாக்கும் என்பது தான்.
- மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் நுழைவதற்கு சம நிலையை ஏற்படுத்தும்
இந்த நான்குமே அபத்தமான, உண்மை யில்லாத பொய்ப் பிரச்சாரங்கள்.
இந்திய மருத்துவக் கல்வியின் தரம் குறைந்ததாக இருக்கிறது என்பதிலும், இந்தியா வில் மருத்துவக் கல்வி இந்தியா முழுமையும் ஒரே சீரானதாக இல்லை என்பதிலும் இரண்டாவது கருத்து இருக்க முடியாது. மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது மிகவும் அவசியம். உலகம் முழுவதும் மருத்துவக் கல்வி என்பது ‘’மருத்துவப் பயிற்சி’’ என்று அழைக்கப்படு கிறது. இந்தியாவில் மட்டும் தான் அது ‘’மருத்துவக் கல்வி’’ என்று அழைக்கப்படுகிறது. கல்வி என்பதற்கும், பயிற்சி என்பதற்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது. இந்திய மாணவன் கட்டுக்கட்டாகப் புத்தகம் படித்து புத்தக அடிப்படையான அறிவு அதிகம் பெற்று வெளியே வருகிறான். வெளிநாடுகளில் படிக்கிற மருத்துவ மாணவன் படித்து முடித்தவுடன் உடனடியாக ஒரு அரசு மருத்துவமனையில் பணியாற்றி, நோயாளிகளை துணிவுடன் எதிர்கொள்ளும் பயிற்சியுடன் வெளியே வருகிறான். இதற்குக் காரணம் இந்திய மருத்துவக் கல்வி புத்தகப் படிப்பின் அடிப்படையிலானது. உதாரணமாக நான் ஆஊh (ருசடிடடிபல) – சிறுநீரக அறுவையியல் துறையில் உயர் மேல்படிப்பு படித்திருக்கிறேன். ஆனால் என்னுடைய பட்டத்தைப் பெறுவதற்காக நான் எத்தனை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும் என்ற விதி கிடையாது. இந்த பரீட்சை எழுத வேண்டுமென்றால் குறைந்தபட்சம் இத்தனை அறுவை சிகிச்சை செய்த ஆதாரத்தை, அதற்கான ஒரு ஆவணத்தை வைத்திருக்க வேண்டும் என்ற விதி கிடையாது. அதே சமயத்தில் குசுஊளு நான் இங்கிலாந்து நாட்டில் படித்தேன். குசுஊளு பட்டம் பெற வேண்டு மென்றால் நான் என்னென்ன அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும் என்பதற்கான லாக் புக் (டுடீழு க்ஷடீடீமு) என்ற அந்த ஆவணத்தை கொடுத்த பிறகு தான் பரீட்சை எழுத முடியும்.
அமெரிக்காவில் ஒருவர் ஹக்ஷ ஊயசனiடிவாடிசயஉiஉ ளுரசபநசல நெஞ்சக அறுவைச் சிகிச்சை படிப்பு முடித்திருக்கிறான் என்றால் அவன் குறைந்த பட்சம் 300 திறந்த இருதய அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். இப்படி அவன் பட்டத்திற்கான அளவுகோல் பயிற்சியாக இருக்கிறது. இந்தியாவில் அப்படி இல்லை. அதை மாற்ற வேண்டும்.
இந்தியாவில் மருத்துவப் படிப்பு அன்னிய மொழியில் சொல்லி தரப்படுகிறது. நுட்பமான அறிவியலான மருத்துவம் போன்ற ஒரு படிப்பை அன்னிய மொழியில் படித்து, புரிந்து கொண்டு மிகச்சிறப்பாக விளங்குவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. இதைப் போக்க உலகம் முழுவதும் இருப்பது போல இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலுமே அவரவர் தாய் மொழியில் மட்டுமே கற்பிக்க வேண்டும். அது முடியும். தாய்லாந்து போன்ற சின்ன நாடாக இருக்கட்டும், ஜப்பானாகட்டும், சீனாவாகட்டும், ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடுகளான ஸ்பெயினாகட்டும், பிரான்சாகட்டும், ஜெர்மனியாகட்டும், ருஷ்யாவாகட்டும் எல்லா நாடுகளுமே அவரவர் தாய் மொழிகளில் தான் மருத்துவத்தை படிக்க வைக்கின்றனர். இந்தியா விடுதலை அடைந்து 70 ஆண்டுகளாகின்றன. 70 ஆண்டுகளை கடந்த ஒரு நாட்டில் இன்னமும் தன்னை ஆட்சி செய்த அன்னியன் மொழியில் மருத்துவத்தை படிப்பது எப்படிச் சரியாக இருக்க முடியும்? இந்திய மாணவர்களை, மருத்துவக் கல்வியை தத்தம் தாய் மொழிகளில் கற்பிப்பதற்கான முயற்சியை அரசு மேற்கொள்ளவே இல்லை.
இப்படி மருத்துவப் படிப்பை மேம் படுத்துவதற்கான அடிப்படை விஷயங்களை செய்யாமல் முழுக்க முழுக்க மருத்துவக் கல்விக்கான மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதில் தான் தரம் இருக்கிறது என்று சொல்லுவது ஒரு ஏமாற்று வேலை.
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் இந்திய சுகாதாரத் துறை அமைச்சராக பதவியேற்ற போது இந்தியாவில் பொது சுகாதார நலக்குறியீடுகள், குழந்தை இறப்பு விகிதம், பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதம் ஆகியவை மிக மோசமாக இருந்தன. ஐக்கிய நாட்கள் நிறுவனம் கொடுத்திருந்த ஆடைடநnnரைஅ னுநஎநடடியீஅநவே ழுடியடள – புத்தாயிரம் ஆண்டுக்கான உடல்நலக் குறியீடுகள் எவற்றையும் இந்தியா அடைய முடியவில்லை. இந்த சூழலில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் இந்த குறியீடுகளை அடைவதற்கும், இந்தியாவின் மருத்துவத் தரத்தை மேம்படுத்துவதற்கும் ஒரே வழி கிராமப்புற சுகாதார திட்டத்தை மேம்படுத்துவது தான் என்று முடிவு செய்து தேசிய ஊரக சுகாதார இயக்கம் என்ற ஒரு மாபெரும் இயக்கத்தை துவங்கினார். உலகின் மிகப் பெரிய சுகாதார திட்டமாக வளர்ந்து, அதனடிப்படை என்பது கிராமப்புற சுகாதாரத்தை மேம்படுத்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும், அதற்கான நிதியை மேம்படுத்த வேண்டுமென்பது தான். அதுமட்டுமல்லாமல் அங்கே இருக்கிற மருத்துவர்களுக்கு அவர்கள் நேரடியாக செலவு செய்ய அவர்களிடம் நேரடியாகவே பணம் வழங்கப்பட்டது. நிதி ஒதுக்கீடு அதிகமானதால் அங்கே வசதிகள் மேம்பட்டன. கர்ப்பிணி பெண்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் போது, அதனை ஒரு தாய் வீடாக எண்ண வேண்டும் என்பதற்காக புதன்கிழமை தோறும் பரிசோதனைக்கு வரும்போது அவர்களுக்கு உணவு அளிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அது ஒரு தாய் வீடு போலவே மாற்றுவதற்காக அவர்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு மருத்துவமனையை தாய் வீடாக மாற்றிய திட்டம் தான் தேசிய ஊரக சுகாதார நல இயக்கம். இப்படிப்பட்ட திட்டங்களினால் இந்தியாவின் சுகாதார நலக்குறியீடுகள் மிக வேகமாக உயர்ந்தன. மகப்பேறு தாய் இறப்பு விகிதம் பாதியாக குறைந்தன. மிக விரைவிலே போலீயோ இந்தியாவை விட்டு ஓடியது.
அகில இந்திய அளவில் மருத்துவக் கல்விக்காக பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்காக சொல்லப்படுகிற அடுத்த முக்கிய காரணம் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எந்த கட்டுப்பாடுமின்றி இயங்கு கின்றன, தரமற்ற மாணவர்களை சேர்க்கின்றன, அவை பணக் கொள்ளை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளன என்பது தான்.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் தரமற்ற மாணவர்களை சேர்க்கின்றன என்பதிலும், அவை கட்டணக் கொள்ளை யில் ஈடுபடுகின்றன என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
ஆனால் பொது நுழைவுத் தேர்வு இதற்கு தீர்வு ஆகாது. எப்படி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவர்களை, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுத்து, அந்த தர வரிசையில் அனுமதிக்கிறதோ அதே போல தனியார் மருத்துவக் கல்லூரிக்கும் அரசு 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், தர வரிசையில் அனுமதிக்க வேண்டும். நுழைவுத் தேர்வு, கட்டணக் கொள்ளையை எந்த வகையிலும் தடுக்கவில்லை. அதே போல தரத்தையும் உறுதி செய்யவில்லை. உதாரணமாக சென்னையில் இருக்கிற எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி சென்ற ஆண்டு 60 இலட்சம் வரை கேபிடேஷன் பீஸ் வாங்கியதாகக் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி ஆண்டுக்கு 5 இலட்சம் வரை கட்டணம் வசூலித்தார்கள். அப்படிப் பார்க்கும் போது 5 ஆண்டு கட்டணமாக 25 இலட்ச ரூபாயும் கேபிடேஷன் பீஸ் 60 இலட்சம் சேர்த்து, 85 இலட்சம் கட்டணமாக மாணவர்கள் தர வேண்டியிருந்தது. இந்த ஆண்டு அவர்கள் கட்டணத்தை ஆண்டுக்கு 25 இலட்சமாக ஆக்கிவிட்டார்கள். அதுமட்டுமின்றி ஐந்தரை ஆண்டு ஆண்டு படிப்பில் கடைசி அரை ஆண்டுக்கும் முழு கட்டணத்தை கட்ட வேண்டும் என்று விதித்திருக்கிறார்கள். அப்படிப் பார்க்கும் பொழுது இப்பொழுது அவர்களுடைய கட்டணம் ஒன்றரை கோடியாக உயர்ந்திருக்கிறது. இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால் சென்ற ஆண்டு 60 இலட்சம் ரூபாயை கருப்புப் பணமாகவும், கட்டணமாக இருக்கின்ற அந்த 25 இலட்சம் ரூபாயை வெள்ளைப் பணமாகவும் தர வேண்டும். இப்பொழுது ஒன்றரை கோடி ரூபாயும் வெள்ளைப் பணமாக தர வேண்டும். இதில் அரசுக்கு நன்மை என்னவென்றால் அரசுக்கு வரி ஒழுங்காக சேரும். இந்த ஒன்றரை கோடி ரூபாய்க்கு, அந்த வசதி படைத்தவர் குறைந்தது 50 இலட்சம் ரூபாயை வரி கட்ட வேண்டும். அப்படிப் பார்த்தால் கோடிக்கணக்கில் வெள்ளைப் பணம் சம்பாதிக்கிற ஒருவர் மட்டும் தான் மருத்துவக் கல்லூரிக்கு போகவே முடியும் என்ற நிலை. இது என்னவாயிற்று என்றால் முதல் 3500 தரப்பட்டியலில் முதல் 3500 இருந்தவர்கள் யாருமே இந்தக் கட்டணத்தை கட்டி சேரும் நிலையில் இல்லை. 1300 இடங்களுக்கு வெறும் 100 பேர் மட்டுமே சேர்ந்தார்கள். 2வது சுற்றில் இன்னும் 100 பேர் சேர்ந்தார்கள். 3வது சுற்றில் 70 பேர் மட்டும் சேர்ந்தார்கள். தனியார் மருத்துவக் கல்லூரிகள் உச்சநீதிமன்றத்திற்கு சென்று “1300 இடங்களுக்கு வெறும் 300 மாணவர்கள் தான் சேர்ந்திருக்கிறார்கள் எனவே எங்களுக்கு தரவரிசைப் பட்டியலில் இன்னும் கீழே சென்று அனுமதிக்க அனுமதி வழங்குங்கள்” என கேட்டார்கள். உச்சநீதிமன்றம் இப்பொழுது தரவரிசைப் பட்டியலில் 50000 வரை சென்று அனுமதித்துக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்திருக்கிறார்கள். உண்மை நிலவரம் என்னவென்றால் அந்த 50000க்கும் கூட அனுமதிக்காக ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். எனவே தரவரிசைப் பட்டியலில் 4,00,009 வது இடத்தில் இருக்கிற மாணவர்கள் கூட இந்த முறை வசதி இருந்தால் தனியார் மருத்துவக் கல்லூரியிலே சேர முடியும் என்பது தான் உண்மை.
இது எப்படி தனியார் மருத்துவக் கல்லூரியின் தரத்தை மேம்படுத்துவதாக இருக்க முடியும் அல்லது அவர்களது கொள்ளையை தடுப்பதாக இருக்க முடியும்?
இது எல்லாமே ஏமாற்று வேலை.
தனியார் மருத்துவக் கல்லூரியின் தரத்தை உயர்த்த வேண்டுமென்றால் இந்திய மருத்துவக் கழகத்தை வெளிப்படை தன்மையுள்ளதாக, ஊழலற்றதாக மாற்ற வேண்டும். இந்திய மருத்துவக் கழகத்தை ஊழல் மையமாக்கியதில் மிகப் பெரிய பங்கு வகித்தது கேதன் தேசாய் என்பவர் தான். இந்த கேதன் தேசாய் வீட்டில் தான் 1300 கிலோ தங்கமும், 800 கோடி ரூபாய் காகிதப் பணமும் அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் சிறையிலே இருந்தார். பின்னர் அவர் குஜராத் மருத்துவக் கவுன்சில் தலைவரானார்! அதன் பிறகு இன்று உலக மருத்துவக் கவுன்சிலின் தலைவராகி யிருக்கிறார். அப்படிப்பட்டவர் தான் இன்று மோடி அரசுக்கு நெருக்கமாக இருக்கிறார். இந்த நீட் தேர்வின் மையப்புள்ளியாக இருக்கிறார். அந்த வகையில் இது ஊழலுக்கு எதிரான, தனியார் மருத்துவக் கல்லூரியின் கொள்ளைக்கு எதிரான போர் என்பது ஒரு பொய் பிரச்சாரம் தான்.
நாடு முழுவதும் மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு சொல்லப்படுகிற மூன்றாவது காரணம் இந்தியா முழுமையும் ஒரே மாதிரியான தரம் இருக்க வேண்டுமென்பது.
இதுவும் ஒப்புகொள்ள முடியாத ஒரு காரணமே.
முன்பே குறிப்பிட்டது போல ஒரே மாதிரியான தரம் இருக்க வேண்டுமென்றால், ஒரே மாதிரியான கட்டுமான வசதிகள் அமைத்து தரப்பட வேண்டும். இந்தியா முழுமையும் இருக்கிற மருத்துவக் கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் தரத்தை ஒரே மாதிரியாக இருப்பதற்கான முயற்சியும், திட்டங்களும் வகுக்க வேண்டும்.
மாணவர்களின் தரத்தை அதிகரிப்பதன் மூலம் கல்லூரியின் கல்வி தரத்தை அதிகரிப்போம் என்பது அபத்தமான வாதம். இன்னும் சொல்லப்போனால், இப்படிப் பட்ட முயற்சியினால் டெல்லியில் இருக்கிற எய்ம்ஸ் மருத்துவமனையும், சென்னையில் இந்திய மருத்துவக் கழகத்தின் ஊழலினால் அனுமதி பெற்று இயங்கி வருகிற டி டி நாயுடு மருத்துவக் கல்லூரியும் எப்படி ஒரே மாதிரியான தரத்தை எட்ட முடியும்? திறமையுள்ள மாணவன், அதிக மதிப்பெண் எடுத்த மாணவன் டி டி நாயுடு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்று தகுதியில்லா மருத்துவக் கல்வி பெறும் நிலையே ஏற்படும்.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான அடிப்படை கட்டுமான வசதி, நாடு முழுவதும் ஒரே மாதிரியான சுகாதாரமான குடிநீர் பெறுவதற்காக முயற்சி எடுக்க வேண்டும். அது வரவேற்கப்பட வேண்டிய முயற்சி, நாடு முழுவதும் ஒரே மாதிரியான தரமான சாலைகள் அமைக்க முயற்சி செய்ய வேண்டும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான தரத்திலான மருத்துவக் கல்வியைக் கொடுப்பதற்கு முன்னால் நாடு முழுவதும் ஒரே மாதிரியான தரமான ஆரம்ப கல்வியைக் கொடுக்க வேண்டும். நான் நாடாளுமன்றத்தில் “நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத் திட்டத்தை நீங்கள் ஏன் கொடுக்க முடியாதென” கேட்டபோது, “இந்தியா மிகப் பெரிய ஒரு நாடு. பல்வேறு விதமான சமூக, அரசியல், பொருளாதார, கல்வி பின்புலன்களில் இருந்து மாணவர்கள் படிக்க வருகிறார்கள். நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி கொடுத்தால் அவர்களால் பயன்பெற முடியாது, எனவே ஒரே மாதிரியான கல்வி கொடுக்க இயலாது” என்று பதில் தரப்பட்டது. ஆரம்பக் கல்விக்கே இது பொருந்துமானால் மருத்துவக் கல்விக்கு ஏன் பொருந்தாது?
நாடு முழுவதும் தரமான, ஒரே மாதிரியான கல்வி என்பது முதல் வகுப்பில் இருந்து தொடங்கப்பட வேண்டும். அதே சமயம் அந்தக் கல்வியும் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. உதாரணமாக தருமபுரி மாணவனுக்கு அதியமான் வரலாறு முழுமையாக தெரிந்திருக்க வேண்டும். திருச்சி மாணவனுக்கு திருச்சி கோட்டையின் பெருமைமிக்க வரலாறு தெரிந்திருக்க வேண்டும். அதற்கு ஏற்றாற் போல் பாடம் இருக்க வேண்டும். ஒரே மாதிரியான என்று சொல்வதன் மூலம் அந்தந்தப் பகுதி மாணவர்கள் தங்கள் பரம்பரை களையும், பாரம்பரியங்களையும், பெருமை களையும் அறிய முடியாமல் போய்விடக் கூடாது.
எனவே நுழைவுத் தேர்வின் மூலம் ஒரே மாதிரியான தரம் கிடைக்கும் என்பது பொய்யான பிரச்சாரம், ஒப்புக்கொள்ள முடியாத ஒரு பிரச்சாரம். .
பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படு வதற்கு சொல்லப்படுகிற இன்னொரு காரணம் மாணவர்களிடையே இது சமநிலையை உருவாக்கும் என்பது இதுவும் பொய்யே.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பேசும் போது “நாமக்கல் மாவட்டத்தில் சென்ற ஆண்டு 905 பேர் ஆக்ஷக்ஷளு படிப்பிற்கு தேர்வு பெற்றிருந்தார்கள். இந்த ஆண்டு அது 105 ஆக குறைந்திருக்கிறது. இது தான் நுழைவுத் தேர்வின் பலன்” என்று குறிப்பிட்டார்கள். அவர் சொல்லாமல் விட்டது தருமபுரி போன்ற பின்தங்கிய மாவட்டத்தில் சென்ற ஆண்டு மருத்துவக் கல்லூரிக்கு தேர்ச்சி பெற்றவர்கள் 225 பேர், இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர்கள் வெறும் 82 பேர். மூன்றில் ஒன்றாக குறைந் திருக்கிறது. இதே போல தான் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் 242 ல் இருந்து வெறும் 82ஆக குறைந்திருக்கிறது.
நான் ஆக்ஷக்ஷளு படித்த காலத்தில், தருமபுரி, கிருஷ்ணகிரி இணைந்த ஒரே மாவட்டமாக தருமபுரி மாவட்டம் இருந்த காலத்தில் 4 மாணவர்கள் தேர்ச்சி பெற்றோம். இந்த நான்கு, நானூறாக அதிகரித்ததில் மருத்துவர் அய்யா அவர்களின் இடஒதுக்கீடு போராட்டத்தின் மிகப் பெரிய பங்கு உண்டு. இந்த இட ஒதுக்கீட்டின் பலனை இப்பொழுது இல்லாமல் செய்திருக்கிறார்கள்.
பாஜகவின் வாதம் என்பது தருமபுரி மாவட்டத்தில் எம்பிசி மாணவர்களுக்கு கிடைக்கவில்லையென்றாலும் அது சென்னை யில் இருக்கிற இன்னொரு எம்பிசி மாணவர்களுக்கு தான் போய் சேர்கிறது. இது இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து அல்லவே என்பது. இது மேற்புறமாக பார்த்தால் நியாயமாகத் தோன்றலாம். ஆனால் இதில் நியாயம் இல்லை. நான் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்தவன், தருமபுரி மாவட்டத்தில் இருந்து ஆக்ஷக்ஷளு படித்துவிட்டு, ஆளு படித்துவிட்டு, ஆஊh படித்துவிட்டு தருமபுரி மாவட்டத்திலேயே பணிபுரிகிறேன். நான் அரசுப் பணியில் சேர்ந்த அதே சமயத்தில் சென்னையில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்து வந்து இந்த மாவட்டத்தில் பணியில் சேர்ந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறுதல் பெற்று எல்லோருமே சென்றுவிட்டார்கள்.
இந்த மாவட்டத்தில் மருத்துவ சேவை மேம்பட வேண்டுமென்றால், இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக மருத்துவப் படிப்பில் இணைய வேண்டும். இன்னும் எளிமையாக சொல்ல வேண்டு மென்றால் கிராமப்புற மாணவர்களுக்கு அதிகமான அளவில் மருத்துவப் படிப்பில் படிக்க வாய்ப்பு கிடைத்தால் தான் கிராமப்புற மருத்துவ சேவை மேம்படும்.
நுழைவுத் தேர்வு சமநிலையை ஏற்படுத்தவே எற்படுத்தாது. இப்பொழுதே நாமக்கல்லில் இருக்கிற, சேலத்தில் இருக்கிற தனியார் பள்ளிக்கூடங்களில் ஆறாம் வகுப்பு முதலே நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளை எடுக்கத் தொடங்கிவிட்டார்கள். இதற்காக இராஜஸ்தானில் இருந்து ஹடடநn என்ற தனியார் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஒப்பந்தப்படி பயிற்சி பெறுவதற்கு ஒரு ஆண்டுக்கு, ஒரு மாணவனுக்கு ஒரு இலட்சம் ரூபாய் கட்டணம், இந்தக் கட்டணம் வழக்கமான கல்விக் கட்டணத்திற்கு மேல் அதிகமாக செலுத்த வேண்டிய கட்டணம். இதை மாணவர்கள் எங்களால் செலவு செய்ய முடியாது என்று சொன்ன போது ஆறாம் வகுப்பை இரண்டு பிரிவுகளாக பிரித்து, நுழைவுத் தேர்விற்கு பணம் செலவளிக்க கூடிய மாணவர்கள் ஒரு பிரிவும், செலவளிக்க முடியாத மாணவர்களுக்கு என்று ஒரு பிரிவாகவும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆறாம் வகுப்பிலேயே அந்தப் பிஞ்சு மனதில் ‘’உனக்கு உயர் தொழில் கல்வி படிக்க வாய்ப்பு இல்லை’’ என்பது பதிய வைக்கப்படுகிறது. பிஞ்சு மனங்களுக்கு இதை விட மன உலைச்சல் ஏற்படுத்த முடியுமா?
அதே போல ஞinயேஉடந, ஆகாஸ், குஐஐகூ – துநுநு என்று வரிசையாக பல நிறுவனங்கள் மிக வேகமாக சென்னையில் இருக்கிற பள்ளிகளோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு ஆறாம் வகுப்பு முதல் நுழைவுத் தேர்விற்காக ஆயத்தமாகி கொண்டிருக்கின்றன.
ஒரு ஆய்வில் வருகிற காலங்களில் நுழைவுத் தேர்விற்கான இந்த வணிகம் பத்தாயிரம் கோடி ரூபாயை எட்டும் என்று சொல்லப்படுகிறது. இனி வரும் காலங்களில் வசதியுள்ள பணக்கார, நகர்ப்புற மாணவர்கள் மட்டுமே தொழில் கல்விகளில் சேர முடியும் என்பதும், கிராமப்புற அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் முற்றிலும் ஒதுக்கப்படுவார்கள் என்பது தான் உண்மை.
இந்தியா என்ற பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டின் ஸ்திரத் தன்மை, பரவலாக்கப்பட்ட அதிகாரத்திலேயே இருக்கிறது. 1922ம் ஆண்டு உருவான சோவியத் ரஷ்யா என்ற மிகப்பெரிய நாடு 70 ஆண்டு களுக்குள்ளாகவே உடைந்து சுக்குநூறாகி, 15 நாடுகளாக பிரிந்தது. அதற்குக் காரணம் சோவியத் யூனியன் முழுமைக்கும் ரஷ்ய மொழியைத் திணிக்க முயற்சி செய்ததும், மாஸ்கோ என்ற ஒரு நகரில் குவிக்கப்பட்ட அதிகாரத்தோடு இருந்த மையப்படுத்தப்பட்ட அதிகார அமைப்பும் தான்.
அதே சமயம் அமெரிக்கா என்ற நாடு 250 ஆண்டுகள் நெருங்கும் தருவாயில் வலிமைப் பெற்று விளங்குவதற்குக் காரணம் அமெரிக்கா வில் இருக்கிற 50 மாகாணங்கள் சுய உரிமைப் பெற்று பரவலாக்கப்பட்ட அதிகாரத்தோடு விளங்குவது தான். அமெரிக்காவில் ஒரு மாநிலத்தில் தூக்கு தண்டனை உண்டு, அடுத்த மாநிலத்தில் கிடையாது. இப்படிப்பட்ட அதிகார பகிர்வுகளால் தான் அந்த நாடு சிறந்து விளங்குகிறது.
இப்பொழுது இருக்கிற ஜனநாயக ஆட்சி முறை தொடர வேண்டுமென்றால், அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும்.
(கட்டுரையாளர் : முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)
நிமிர்வோம் அக்டோபர் 2017 இதழ்