“பெரியார் பங்களிப்பை எந்த விமர்சனத்தாலும் பிடுங்க முடியாது” பேராசிரியர் தொ. பரமசிவன்

தமிழ் தேசியம் என்று நாம் இன்றைக்குச் சொல்ல விரும்புகிறோம், சனநாயக நாடுகளிலே ஏற்பட்ட சிந்தனை மாற்றத்தின் விளைவாக தேசிய இனம் என்ற எண்ணம் பிறந்தது. தேசிய இன சிந்தனையே 200 ஆண்டுகளுக்குள் என்று சொல்கிறார்கள். இல்லை அதற்கு முன்னாலேயே அதற்கான குறுவித்துக்கள் தமிழ் மண்ணிலே புதைந்து கிடந்தது. மூன்று நாள் மழை பெய்தால் நான்காம் நாள் புல் தலை நீட்டுகிறது. ஏனென்றால் வித்து மண்ணில் கிடந்திருக்கிறது. தமிழ் மரபில் அந்த குறுவித்துக்கள் உண்டு. ஏனென்றால் இங்கு சேரநாடு, சோழ நாடு, பாண்டிய நாடு இப்படி இருந்தது. திருநெல்வேலி கீழ் வேம்பநாடு. அந்தப்  பக்கம் போனால் வல்லநாடு. சுத்தமல்லி பக்கம் போனால் மேல் வேம்பநாடு. பாளையம்கோட்டை கீழ் களகொற்றம். இப்படி நாடுகள்  நாடுகளா  இருந்ததினால் இளங்கோவடிகள் தமிழ்நாடு என்ற சொல்லை முதன்முதலில் பயன் படுத்தினார். சேர நாடு இல்ல, சோழ நாடு இல்ல, பாண்டிய நாடு இல்ல, தமிழ்நாடுன்னு சொல்லு. இதுதான் முதல் தொடக்கம்  இங்கே.

இஸ்லாமியர்கள் வேதம் அரபு மொழியில் இருக்கிறது. கடவுள் ஒரு அரபு என்று அவர்கள் சொல்ல மாட்டார்கள் .கிருத்தவர்கள் வேதம் பைபிள். அவர் ஹீப்ரு மொழியின் கிளை மொழியான எலாமைட்டில் பேசினார். அவர் பாலஸ்தீனியர் என்றோ யூதர் என்றோ சொல்லவில்லை. கடவுளை மொழிசார்த்தி யாரும் பார்க்கமாட்டார்கள். சைவர்களுக்கு ஒரு நெருக்கடி வருகிறது. அவர்கள் தங்களைக் காத்துக்கொள்ள கடவுளை மொழி சார்த்திப் பார்த்தார்கள். கடவுளை தமிழன் என்றார்கள். “ஆரியம் கண்டாய் தமிழன் கண்டாய்” என்று சொல்வது தேவாரம். இந்த குறுவித்துக்கள் இங்கே உண்டு. 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடந்த மாற்றங்கள் பிரெஞ்சு புரட்சி, 20ம் நூற்றண்டில் தமிழகத்தில் நடந்த மாற்றங்கள் எல்லாம் சேர்ந்து இந்த சிந்தனை வருகிறது.

மொழி வழி தேசியம் என்பது உண்மை யானதா பொய்யானதா? தேசிய இனத்தை வரையறை செய்யும் நான்கு அம்சங்களில் மொழி முக்கியமானது. ஒரு மொழி ஒரு குறிப்பிட்ட உற்பத்தி முறையை சார்ந்திருக்கிற மக்கள் கூட்டம் குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழுதல் இன்றைக்கு உலகம் முழுவதும் மொழிவழி தேசியத்தின் குரல்கள் கேட்கத்  தொடங்கி விட்டன. இந்தியாவில் மட்டுமல்ல. மொழிவழி தேசியத்தை பேசுகிறபோது – பெரியாருக்கு முன் – பெரியாருக்குப் பின் என்று திராவிட இயக்க வரலாற்றைப் பிரித்துப் பார்ப்பது போல் பார்க்க வேண்டும். பெரியார் 1938ல் தான் திராவிடம் என்ற சொல்லை விட்டு விட்டு தமிழ்நாடு என்ற சொல்லை பிடிக்கிறார் .’தமிழ்நாடு தமிழருக்கே ‘  என்று திருச்சியில் மாநாடு நடத்தினார். அந்த மாநாட்டில் திராவிட இயக்கம் என்றாலே வெறுத்து ஒதுக்கிய தெ. பொ. மீனாட்சி சுந்தரம் கலந்துகொண்டார். எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை, ம.பொ. சிவஞானம் கலைத் தந்தை கரு முத்து தியாகராச செட்டியார் கலந்து கொண்டனர். சாதியற்ற தமிழ் சமூகம் எம்முடையது என்று எல்லாரும் கையெழுத்துப் போட்டார்கள். பெரியாருடன் சேர்ந்ததால் தன்னுடைய கல்லூரிக்கு தியாகராசர் கல்லூரி என்று பெயர் வைத்தார். செட்டியார் என்று சாதியை சேர்க்கவில்லை. பெரியாருடன் சேராதவர்கள் செட்டியார் கல்லூரி என்று பெயர் வைத்தார்கள். இந்த விசயத்தை இந்தியாவின் எந்த மாநிலத்திலும் செய்ய முடியவில்லை. பெரியாரால் மட்டும் – தமிழ் நாட்டில் மட்டும் செய்ய முடிந்தது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் ரஷ் யா உடைபடுவதற்கு முன்பு ரசூல் கம்சதோவ் என்று ஒரு கவிஞர் வந்தார். அவர் ஒரு கவிதையை மொழிபெயர்த்துச் சொன்னார். எனது அவார் மொழி செத்துப் போவதற்கு முன் நான் செத்துப் போக வேண்டும் என்று சொன்னார். சோவியத் ரஷ்யாவின் தென்கிழக்குப் பகுதியில் அவார் என்று மொழி இருந்தது. அந்த மொழி ரஷ்ய பெருந்தேசிய இனவாதம் காரணமாக ஒடுக்கப்பட்டிருக்கிறது. அவர் பாரதிதாசன் போல் பாடுகிறார் அவர் மொழியைப் பற்றி…’ நான் சாவதற்கு முன் கேட்கும் கடைசிச் சொல் எனது அவர் மொழிச் சொல்லாக இருக்க வேண்டும். சாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும் என்பது மாதிரி அவர் அந்த ஊர் பாரதிதாசன்.

அண்மையில் பீகாரில் நடந்த மனித உரிமை மாநாட்டுக்கு போய்வந்த பேராசிரியர் சங்கரலிங்கம் சொன்னார்… இந்தி பேசுகிற மாநிலங்களில் உள்ள அறிவு ஜீவிகளுக்கு இப்போதுதான்  சிந்தனை வருகிறது. தமிழ் நாட்டுக்காரங்க சொன்னாங்க நாங்க கேட்கல. 1925 லேயே பெரியார் எழுதிய இந்துஸ்தானி பொது மொழியா என்ற கட்டுரைதான் இந்தி எதிர்ப்பு பற்றிய முதல் கட்டுரை. இந்தியை பொதுமொழியாக ஏற்றுக் கொண்டதால் எங்களுடைய அவந்தி, போஜ்புரி மைதிலி அத்தமாகினி  முதலிய மொழிகள் எல்லாம் கிட்டத்தட்ட செத்துப்போச்சு. இப்போது மீட்டெடுக்க முடியாமல் இருக்கிறோம். இப்போது இந்தி எதிர்ப்பு போராட்டம் என்றால் நாங்கள் துணைக்கு வருகிறோம் என்கிறார்கள். பல மாநிலங்களில் இதே நிலைமைதான். மைதிலி என்பது மைதிலி பார்ப்பனர்கள் பேசக்கூடியது இந்தியின் இன்னொரு வடிவம் அது. செத்தே போச்சு. ‘பிராமண பாசை’ ஒன்று இருக்கு. அதை எழுத்து மொழி ஆக்க முடியுமா? பாடமொழியாக்க முடியுமா? முடியாது. எனவே மொழிவழி தேசியம்தான் முதலில் தொடங்குவது. ஆனால் அதுவே முற்றிலுமான தீர்வும் அல்ல. அது தொடக்கப் புள்ளி அது முழுமையானது அல்ல.

சாதி ஒழிப்புதான் தமிழ்த் தேசியம் பேசு வதற்கான முன் நிபந்தனை. பாதுகாப்பற்றவனின் புகலிடமாக சாதி இருக்கிறது என்று நான் அளித்த பேட்டி ‘ஆனந்த விகடனி’ல் வந்தது. சாதியைக் கடந்து சக மனிதனுக்குப் பாதுகாப்புத் தர முன்வருகிற போது நாம் சாதிக்கு எதிராக காய் நகர்த்துகிறோம் என்று பொருள். தொழிற் சங்கங்கள் தர வேண்டிய பாதுகாப்பை தொழிற் சங்கங்கள் தரவில்லை. அரசியல் காட்சிகள் தரவேண்டிய பாதுகாப்பைத் தரவில்லை. ஆளுங் கட்சிகள் தனிமனிதனுக்கு தரவேண்டிய பாதுகாப்பை தரவில்லை. இந்தப் பாதுகாப்பை தேசிய இனம் சார்ந்த உணர்வுகள் தருவதாக இருந்தால் தேசிய இன உணர்வு காப்பாற்றப் படும். கூர்மை அடையும். அது காப்பாற்றப்பட வேண்டும் கூர்மை அடைய வேண்டும் என்பது நமது விருப்பம். இந்தப் புத்தகத்தை (பெரியாரும் தமிழ்த் தேசியமும்) அனைவரிடமும் எடுத்துச் செல்லும் போதுதான் நாம் விரும்பிய திசையில் ஒரு ரெண்டு அடியாவது உருப்படியாக எடுத்து வைக்க முடியும். மீறி உங்களுக்கு அய்யப்பாடு இருந்தால் எஸ்.வி.ஆர் – வ.கீதா எழுதிய சுயமரியாதை சமதர்மம் நூலைப் படியுங்கள் .

சமதர்மக் கோட்பாடும் தேசிய இனப் பிரச்சனையில் அடக்கம். இந்தியாவில் முதன் முதலில் கம்யூனிஸ்ட் அறிக்கை தரப்பட்ட மொழியும் தமிழ்தான் இடமும் தமிழ்நாடு தான். செய்தவரும் பெரியார்தான். அந்தக்காலத்தில் இரும்புத்திரை நாடு என்று பெயர்பெற்ற ரஷ்யாவிற்குப் போய்ட்டு வந்தார். பின்னாடி திரிபுவாதங்கள் வருகிறபோது அவர் ஜீவானந்தத்தைக் கண்டிக்கிறார். “பொது வுடைமைக்கு நீங்கள்தான் பாஷ்யக்காரரா? ரஷ்ய பொதுவுடமை எனக்கு நேரிலும் தெரியும்” என்றார். இன்று மகா ‘இன்டலக்சுவல்’ (அறிவு ஜீவிகள்) சொல்லுவதை அன்றைக்கு பெரியார் சொல்லி இருக்கிறார்.அங்கு இருக்கும் நிர்வாண மன்றத்தில் அவர் உறுப்பினராக இருந்திருக் கிறார். அங்கிருந்த பெண்விடுதலை அவருக்குப் பிடித்தது. பெண்கள் டாக்சி ஓட்டுவதைப் பார்க்கிறார். அதுபோல நம் நாட்டிலும் வரவேண்டும் என்று நினைத்தார். எனவே ‘இடது சாரியிசம்’ என்பது தேசிய இனத்தின் மற்றொரு நிபந்தனை. இன்று உலகத்தை பாதிக்கக் கூடிய சுற்றுச் சூழல் அதுவும் தேசிய இனப் பிரச்சனையின் முன் நிபந்தனையில் ஒன்று. தேசிய இன உணர்வுகள் தான் மண்ணையும் மணலையும் காப்பாற்றப் போராடுகின்றன.

“தொல்லை உள்ளம் ஒன்றுண்டு பிறர் நாட்டின் சுதந்திரத்தை பறிக்க எண்ணல்” என்பார் பாரதிதாசன். கேரளாவில் ஒரு லாரி  மணல் அள்ளமுடியாது. தமிழ் நாட்டிலிருந்து அவ்வளவு மணலும் போய்க்கிட்டிருக்கு. தமிழ் சமூகம் முன்னேறுமா என்ற நம்பிக்கை நமக்கு இல்லாமலே போச்சு. விதிவிலக்காக சில நிகழ்வுகள்தான் இன்னும் கங்கு அணைய வில்லை என்று காட்டுகிறது. காட்டிய ஒரு விசயம் முல்லை பெரியாறு. அந்தப் பிரச்சனையில் தான் தமிழன் ஊரை மறந்து மொழியை மறந்து சாதியை மறந்து கட்சிப் பற்றை மறந்து ஓன்று சேர்ந்தான். அதை முன்னெடுத்த வைகோ போன்றவர்கள் அதை தேசிய இனப்பிரச்சினையின் ஒரு பகுதியாகப் பார்த்தார்களே தவிர நதி நீர் பிரச்சனையாகப் பார்க்கவில்லை. முல்லைப் பெரியாறு விசயத்தில் நடந்தது. தமிழன் உருப்படுவான் என்று ஒரு நம்பிக்கை. சாதியை மீறி தமிழன் ஓன்று சேருவான் என்று அந்த நிகழ்வு காட்டியது அந்த  உணர்வைப் பாதுகாக்க வேண்டும், வளர்க்க வேண்டும்

எல்லாத் திசைகளில் இருந்தும் தனித்த உணர்வுடைய இனத்திற்கு சிக்கல் வருகிறது. ஆந்திராக்காரன் வழிதப்பி போனவனை சுட்டுக் கொல்கிறான். சரியாகப் போய் கொண்டிருக்கும் ஆற்றை வழி தப்ப வைத்து கேரளாக்காரன் ஒரு நெருக்கடி கொடுக்கிறான். தமிழ் நாட்டை வடிகாலாகத்தான் வைத்திருப்போம் என்று கர்நாடகத்துக்காரன் தெளிவாக இருக்கிறான். எட்டுத் திசைகளில் இருந்தும் பதினாறு கோணங்களில் இருந்தும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிற ஒரு இனம் தன்னை உணர வேண்டும். அடுத்த இனத்தை பகைக்க வேண்டும் என்றில்லை – பெரியார் அப்படிச் சொல்ல மாட்டார். மலையாளி – தெலுங்கன் – கன்னடன் நம்ம சகோதரன்தான். அவனும் நம்மை அப்படி நினைக்கணும்.

ஒற்றை ஆளாக பல நிலைகளில் கருத்துச் சொன்னவர் பெரியார். முதுகுளத்தூர் கலவரம் நடந்தபோது ஒற்றை ஆளாக கருத்து சொன்னார். ஆதிக்க சாதி வெறியைக் கண்டித்தார். அதனால் அவரைப் பைத்திக்காரன் உருப்படாதவன் -அவர் கட்சி தேறாதுன்னாங்க. அவர் கட்சி நடத்தவில்லை. ஓட்டும் கேட்க வில்லை. ஆனாலும் அவர் வரலாற்றில் நிற்கிறார். தமிழக வரலாற்றில் பெரியாரின் இடத்தை எந்த விமர்சனத்தாலும் பிடுங்க முடியாது. பெரியார் பிற்படுத்தப்பட்டோருக்குத்தான் கட்சி நடத்தினார். தாழ்த்தப்பட்டோருக்கு  அல்ல என்று எழுதுகிறார்கள். பல தலித் ஆவணக் காப்பகங்களில் போய் பாருங்கள் கீழ வெண்மணி விசயத்தில் ஓவ்வொரு கட்சி தலைவரும் என்ன நிலைப்பாடு எடுத்தார்கள், பெரியார் என்ன நிலைப்பாடு எடுத்தார் என்று அன்றைய செய்தித் தாள்களோடு ஆவணங்கள் இருக்கு.

சம காலத்தில் காந்தியை விமர்சனம் செய்தார். மார்க்சிஸ்டுகளை விமர்சனம் செய்தார். சாதி ஒழிப்பு ஒன்றில் இருந்துதான் எல்லாவற்றையும் தொடங்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். அந்த வகையில் பெரியாரிய சிந்தனைகள் தேசிய இனப்பிரச்சனைக்கு வழிகாட்டுகிற சிந்தனைகள். அதனால் தான் ‘சுதந்திர’ நாளை அவர் துக்க நாள் என்றார். அறுபது ஆண்டுகளை கழித்து இப்போது வந்த சுதந்திரம் துக்க சுதந்திரம் என்று நாம் ஒப்புக் கொள்கிறோம். திரும்ப திரும்ப பார்ப்பான் அவரை வெள்ளைக்காரன் ஏஜென்ட் என்று சொன்னான். சுதந்திரம் முதலாளிகளுக்கானது என்று இந்தியாவிலே அவர் ஒருவர்தான் சொன்னார். இன்னும் தெளிவாக வடநாட்டு முதலாளிகளுக்கானது என்றார். இன்று கார்பொரேட் என்கிறோம் கார்பொரேட் என்ன தமிழன் கையிலா இருக்கிறது? டாடா-பிர்லா-அம்பானி-சிந்தியாக்கள்  கையில்தானே  இருக்கிறது. மதவாத மொழியிலே சொன்னால் அவர் வருவது உணர்ந்த தீர்க்கதரிசி.. இப்படித் தான் நடக்குமென்று கணித ஆசிரியன் போல் கணக்கிட்டுச்  சொன்னார். அவர் திராவிடநாடு பேசியபோது மாநிலங்கள் பிரிக்கப்படவில்லை. பிரிக்கப்பட்டபோது தமிழ்நாடு தமிழருக்கே என்றார். அவர் மாறுதலுக்கு தயாராக இருந்தார். சாதி ஒழிப்பைத் தான் அவர் தேசிய இன  அரசியலுக்கான அடிப்படையாக  வைத்திருந் தார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த நூலை மாணவர்களுக்கு பாடமாக சொல்ல வேண்டும். தோழர் கொளத்தூர்மணி, தோழர் தியாகு, தோழர் தமிழேந்தி, தோழர் செந்தில்  ஆகிய அனைவரின் கட்டுரைகளும் நன்றாக உள்ளன. இந்த நூலை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கேள்வி : சாதி ஒழிப்பு தமிழ்தேசியத்திற்கான முன்நிபந்தனை என்று சொன்னீர்கள். இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமா?

சாதி என்பது என்னைப்  பொறுத்த வரையில் அது எந்த அளவுக்கு குரூரத்தனமாய் உடையதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு எதார்த்தத்தில் உண்மைத் தன்மை உடையதாக இருக்கிறது. அதுதான் சாதி உண்மையுமல்ல பொய்யுமல்ல என்று கூறினேன். சாதி ஒழிப்பு என்பதைவிட சாதி கரைப்பு என்பதுதான் சாத்தியம். இங்குள்ள இஸ்லாமிய நண்பர்கள் இஸ்லாம் இங்கு வருவதற்கு முன்பே இருந்தார்கள், இங்குள்ள சாதியின் ஏதோ ஒரு துகளாக இருந்தார்கள். எந்த சாதியிலிருந்து அவர்கள் இஸ்லாமுக்குள் வந்தார்கள் என்பதற்கு ஆவணங்கள் இல்லை. நாலு தலைமுறை – ஐந்து தலைமுறை என்று கலந்து கலந்து சாம்பாரில் உப்பைப்போல் கரைந்து போனார்கள். கரைந்த விசயத்தை மீட்டெடுக்க முடியாது. வெட்டிப் போடப்பட்ட விசயத்தை மீட்டு எடுக்கலாம். சாதி தொலைந்து விடுகிறது இஸ்லாமுக்குள் போங்க என்று பெரியார் சொன்னார். அதிலும் சிக்கல் வந்தது மீனாட்சிபுரத்தில் நடந்த மதமாற்றம் குறித்து ‘கருப்பாயி என்கிற நூர்ஜகான்’ என்ற புத்தகம் ஒன்று கிறித்துவர் எழுதியது; இன்னொன்று இஸ்லாமியர் எழுதியது. புதுமைப்பித்தன் ‘நாசகார கும்பல்’ என்று சுயசாதி விமர்சனம் எழுதியது போல இந்த நூற்கள் அமைந்தன. மதம் மாறியும் ஜாதி அடையாளம் முற்றாக அழிந்து விடவில்லை. சாதியின் நகர்வு அதிகாரத்தை நோக்கியதாக உள்ளது.

நான் இந்து அல்ல – நீங்கள்? என்று நான் ஒரு புத்தகம் எழுதியுள்ளேன். இந்து என்ற சொல் கெட்டவார்த்தை என்று நான் வகுப்பில் மாணவர் களிடம் பேசியுள்ளேன். சகல விதமான ஏற்றத் தாழ்வுகளையும் நியாயப் படுத்துகிற சொல் அது. அந்த சொல் சங்க இலக்கியத்தில் இருக்கா? தேவாரம் திருவாசகத்தில் இருக்கா? எதிலும் இல்லை. 1799இல் இந்திய நீதி நெறி சட்டங்களைத் தொகுத்து அதற்கு ‘இந்து லா’ என்று பெயர் வைத்தான். பிரிட்டிஷ்காரன் நீதிமன்றம் போனால் பகவத்கீதை வைத்து சத்தியம் செய்யச் சொல்கிறான். மதமா சாதியா எது கொடுமையானது என்றால் – கொடுமை யானது சாதி. அதைப் புரிந்து கொண்ட பார்ப்பனர்கள் இந்தியாவில் எத்தனை முறை வேண்டு மானாலும் மதம் மாறலாம். ஆனால், சாதி மாற முடியாமல் செய்து விட்டார்கள். நான் வயிற்றுக்குள் இருக்கும் போதே தோலில் சாதி பச்சை குத்தி விடுகிறான். வெளியே வந்து சிதையில் போகும்வரை பச்சை அழிவதில்லை. எம்.ஜி.ஆர் குத்தச் சொன்ன பச்சை அழிந்து விடும். இது அழியாது. இன்றும் அரசியல் சட்டம் அப்படித் தான் உள்ளது. “கேஸ்ட்லஸ்  என்று சொன்னால் வாக்காளர் அட்டையில்கூட எழுத மறுக்கிறார்கள். அதற்கு எந்த புரவிசனும் இல்லை என்கிறார்கள். மதம் சீக்கிரம் அம்பலமாகிவிடும். சாதி ஆகாது. ஓராண்டில் மோடியின் சாயம் வெளுத்து விட்டது. ஆனால் சாதியின் சாயம் வெளுத்திருக்கா? ஓரளவு வெளுத்தது தமிழ் நாட்டில்தான்.

பெரியார் மண்ணில் சாதி மறுப்பு திருமணத்திற்காக கவுரவக் கொலை நடப்பது கேவலம்தான். இதே தருமபுரி நாயக்கன் கொட்டாயில் இந்தக் கொலைக்கு முன்னால் ஏகப்பட்ட சாதி மறுப்பு திருமணம் நடந்துள்ளது. அப்போது பிரச்சனை வரவில்லை. இப்போ பிரச்சனை பண்ணியது திரும்பத் திரும்ப பெரியார் பெயரைச் சொன்ன மருத்துவர் இராமதாஸ்தான். ஒரு காலத்தில் பெரிய புரட்சியாளர்ன்னு அவரை நம்பினேன். ஒரு எம்.பி. சீட்டுக்காக அவர் திட்டமிட்டு செய்ததுதான்.

கேள்வி – தீண்டாமை – சாதி ஒழிப்பிற்கான வழிமுறை என்ன?

பதில் – தனிமனிதனாக இதற்கு தீர்வு கூறமுடியாது. நான் சொன்னால் அது ஆசையா  இருக்கும். தவறான கணக்கா இருக்கும். திரும்ப திரும்ப பேசி அனுபவங்களின் விளைவாக முடிவு எடுப்போம். அருப்புக் கோட்டை அருகே ஒரு கிராமத்தில் 63 பெண்கள் சாதி மறுப்பு திருமணம் செய்துவிட்டார்கள். பெற்றோர் அவர்களை ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் அதை ஏற்றுப் பழகிக் கொண்டு விட்டார்கள். ஒரு 20 ஆண்டுகள் கழித்து அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு சாதி இருக்கா கரைந்து விட்டதான்னு பார்ப்போம். மீனாட்சிபுரத்தில் சாதி கல்லு மாதிரி இருக்கு. 2000 வருடமா இருப்பதை மாற்ற பெரியார் அறுபது ஆண்டுகள் சலிக்காமல் சாகும் வரை  போராடினார். அதுபோல் நாமும் இருக்க வேண்டும்.

எழுத்தாக்கம் : வே.ராமசாமி

நிமிர்வோம் செப்டம்பர் 2017 இதழ்

You may also like...