‘பெரியார் மண்’

தமிழ்நாட்டின் அரசியல் சமுதாயக் களம் பெரியார் பாதையை நோக்கி குவிந்து வருகிறது. ஊடக விவாதங்கள் ஆனாலும், பொது மேடைகள் ஆனாலும் உச்சரிக்கப்படும் சொற்றொடர் “இது பெரியார் மண்” என்பதாக மாறி விட்டது.

‘பெரியார் மண்’ என்று பெருமையோடு சமுதாய எதிரிகளிடம் மார்தட்டி தன்மானத் தமிழர்கள் கூறும் நிலையை உருவாக்கியதற்கு பெரியார் தந்த விலை சாதாரணமானதல்ல. தமிழகத்தின் ‘தனித்துவத்தை’ உருவாக்குவதற்கு பெரியாரின் தனித்துவமான போராட்டப் பாதைகளையும் தனித்துவமான சிந்தனைகளையும் இனமானத்துக்காக தன்மானத்தையே பலியிட்ட தியாகங்களையும் இந்த மண்ணின் உரமாக்கிவிட்டுச் சென்றிருக்கிறார்.

‘மக்கள் மனம் புண்படுமே; ஏற்க மாட்டார்களே” என்பது பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் தனக்கு சரியென்றுபட்டதை மக்களிடம் கூறியே தீரவேண்டும் என்ற மனத் திடம் அவரது முதல் வலிமை.

எதைச் சொன்னால் மக்களை தன் பக்கம் ஈர்க்க முடியும் என்பதை அறவே ஒதுக்கி விட்டு, அதனால் கிடைக்கும் புகழ் மயக்கத்திலிருந்து முழுமையாக தன்னை விடுவித்துக் கொண்டது. பெரியாரின் இரண்டாவது மிகப் பெரும் வலிமை ‘என்னை மகாத்மாவாக்கி விடாதீர்கள்’ என்று கூறிய பெரியார், “நான் தெய்வத் தன்மை பொருந்தியவன் என்று கருதப்பட்டால் மக்கள் என் வார்த்தையை ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள். நான் அயோக்கியன் என்று சொல்லப்பட்டால், என் வார்த்தைகள் மிகவும் ஜாக்கிரதையாக கவனிக்கப்படும்” என்றார்.

சமூகத்தில் தனது அனுபவம்; அனுபவ அடிப்படையிலான ஆராய்ச்சி சமூகத்தின் முன்னேற்றத்தைத் தடைப்படுத்தும் சக்திகள் பற்றிய ஆழமான நடைமுறை அனுபவங்களே அவரதுதத்துவங்களாக வெளிப்பட்டது.

சமூக சுயமரியாதைக்காக தனி மனித சுயமரியாதையைப் பலியிடலாம் என்ற மிக உயர்ந்த ‘மனிதம்’ வேறு எந்தத் தலைவரிடமும் காண முடியாத உயரியப் பண்பு.

“வகுப்புவாதம் பேசுகிறார்; வர்க்க உணர்வை குலைக்கிறார். இந்தியாவை உடைக்கப் பார்க்கிறார்” என்று பெரியார் காலத்தில் அவர் மீது பாய்ந்த குற்றச்சாட்டுகளே இன்று நியாயங்களின் குரல்களாக வெடித்துக் கிளம்புகின்றன.

பெரியார் பேசிய ‘வகுப்புவாதம்’ – இப்போது ‘இந்துத்துவா’ எதிர்ப்பு என்று பெயர் சூட்டி நிற்கிறது. ‘வர்க்க உணர்வை குலைக்கிறார்’ என்ற குற்றச்சாட்டு, ஜாதி ஒழிப்பே சமூக விடுதலை எனும் முழக்கமாக மாறியிருக்கிறது. ‘இந்தியாவை உடைக்கிறார்’ என்ற குற்றச்சாட்டு, ‘தமிழ் நாடு தனித்துவமானது; எங்கள் கல்வியில் பண்பாட்டு உரிமைகளில் தலையிடாதே’ என்ற இயக்கமாக உருவெடுத்திருக்கிறது.

அனிதா இன்று தமிழகத்தின் எல்லைகளைக் கடந்து உச்சரிக்கப்படும் சமூக நீதிக்கான வரலாற்றுச் சொல்; அவர் பெற்ற ‘1200க்கு 1176’ தமிழ்நாட்டின் சமூக நீதிச் சூழல் உருவாக்கித் தந்த வெளி.

பெரியார் பேசிய பகுத்தறிவு தான் இன்று பார்ப்பனியத்தை துப்பாக்கிகளைத் தூக்க வைத்திருக்கிறது. மதவாதத்தை மக்களிடமிருந்து துடைத்தெறிக்கும் மகத்தான சிந்தனைப் புரட்சிக்கு பகுத்தறிவே வழி திறக்கும் என்ற உண்மை மதவெறியர்களுக்கு புரிந்துவிட்டது. அதனால்தான் இந்துத்துவ எதிர்ப்போடு மூடநம்பிக்கைக்கு எதிரான பகுத்தறிவு சிந்தனைகளைப் பரப்பிய தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷை நோக்கி மதவெறியின் துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கின்றன. தனக்கும் அப்படி ஒரு மரணம் நேர்ந்தால் மகிழ்வேன் என்றார் பெரியார். அவர் உருவாக்கிய ‘வெகுமக்கள் தடம்’ என்ற கேடயம் அவரை பாதுகாத்தது.

முன் எப்போதையும்விட இப்போது பெரியார் தேவைப்படுகிறார் என்று பெரியார் இயக்கங்களுக்கு வெளியிலிருந்து குரல்கள் ஒலிக்கின்றன. பெரியார் இயக்கங்களையும் கடந்து இந்த சுயமரியாதைப் போராட்டக் களத்தை உருவாக்கத் துணை செய்வதும், அதை முன்னெடுப்பதுமே பெரியாரிஸ்டுகள் மீது வரலாறு சுமத்தியிருக்கும் மகத்தான கடமை.

நிமிர்வோம் செப்டம்பர் 2017 இதழ்

You may also like...