உலகத் தமிழர்கள் சாதியை ஒழிக்க மலேசியா பகுத்தறிவு மாநாடு அறை கூவல் பினாங்கில் பெரியாருக்கு சிலை

மலேசியத் தமிழர் தன்மான இயக்கம் சார்பில் பன்னாட்டுப் பகுத்தறிவு மாநாடு ஜன.27, 28, 29 தேதிகளில் கோலாலம்பூரிலுள்ள ‘பேர்ல் இன்டர் நேஷனல்’ ஓட்டலில் சிறப்புடன் நடந்தது. மாநாட்டுக் குழுத் தலைவர் முனைவர்

பெரு. அ. தமிழ்மணி, செயலாளர் ரெ.சு. முத்தையா உள்ளிட்ட மாநாட்டுக் குழுவினர் மலேசிய அரசு ஆதரவுடன் இந்த மாநாட்டை நடத்தினர். மலேசியாவில் தமிழ் அமைச்சர்கள் டத்தோ ஜி. பழனிவேலு, டத்தோ சுப்ரமணியம், டத்தோ சரவணன், முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேல் சிறப்பு விருந்தினராக மாநாட்டில் பங்கேற்றுப் பேசினர். கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ஜன. 28 ஆம் தேதி ‘பெரியார் காட்டிய பகுத்தறிவுப் பாதை’ என்ற தலைப்பில் நிறைவுரையாற்றினார்.

மா.பெ.பொ. கட்சி அமைப்பு செயலாளர் தோழர் ஆனைமுத்து, பேராசிரியர் சுப. வீரபாண்டியன், தொல். திருமாவளவன், வழக்கறிஞர் இள. புகழேந்தி, இயக்குனர் வேலு பிரபாகரன், ஓவியா, பேராசிரியர் அ. மார்க்ஸ், கவிஞர் ஆதவன் தீட்சன்யா, முனைவர் இளங்கோவன், மருத்துவர் உசேன், நடிகர் வாகை சந்திரசேகர் ஆகியோர் மாநாட்டில் தமிழகப் பிரதிதிகளாக பங்கேற்றுப் பேசினர். ஜன.30 ஆம் தேதி மாலை 5 மணியளவில் பினாங்கு மாநிலத்தில் கப்பனா பத்தாங் எனுமிடத்தில் மாநாட்டுக் குழுவால் நிறுவப்பட்டிருந்த பெரியார் சிலையை தோழர் ஆனைமுத்து திறந்து வைத்து உரையாற்றினார். உலகத் தமிழர்கள், சாதியை ஒழித்த தமிழர்களாக மாறவேண்டும் என்றும், பெரியார் ஒருவரே வழிகாட்டும் தலைவர் என்றும் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெரியார் மலாயா (மலேசியா) சுற்றுப் பயணத்தை மேற்கொள்வதற்காக 15.12.1929 இல் நாகப்பட்டிணம் துறைமுகத்தில் கப்பல் ஏறினார். அவருடன் நாகம்மையார், எஸ். இராமனாதன், அ. பொன்னம்பலனார், சாமி. சிதம்பரனார், சி.நடராசன் ஆகியோர் சென்றனர். 20.12.1929 இல் பினாங்கு துறைமுகம் வந்து இறங்கினர். 50,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் பெரியாரை வரவேற்றனர். 29.12.1929 இல் பினாங்கு அருகே உள்ள ஈப்போ என்ற நகரில் தமிழர் சீர்திருத்த மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசினார்.

மீண்டும் இரண்டாவது முறையாக 1954 ஆம் ஆண்டில் பெரியார் மலாயா நாட்டுக்குப் பயணமானார். பர்மாவில் இரங்கூனில் அம்பேத்கருடன் உலக பவுத்தர் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, அங்கிருந்து ‘சங்கோலியா’ எனும் கப்பலில் புறப்பட்டு 14.12.1954 இல் மீண்டும் பினாங்கு வந்து சேர்ந்தார். 16.12.1954 இல் கோலாப் பிறை செயின்ட் மார்க் பள்ளித் திடலில் உரையாற்றினார். அதே பினாங்கு மாநிலத் தில் இப்போது பெரியார் சிலை திறக்கப்பட்டுள்ளது வரலாற்றுச் சிறப்பாகும்.

சிலை திறப்பு நிகழ்வில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தொல் திருமாவளவன், சுப. வீரபாண்டியன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து ஜன.31 அன்று கேடா மாநிலம் சுங்கை பெட்டான் எனும் ஊரில் முன்னாள் அமைச்சர் டாக்டர் டத்தோ எஸ். சுப்பிரமணியன், அவரது துணைவியார் டத்தீன் தாமரைச் செல்வி, ‘கெடா’ மாநில திராவிடர் கழகத் தலைவர் வடிவேலு ஏற்பாடு செய்த அரங்கு கூட்டத்திலும், பிப்.1 அன்று கூலிங் நகரில் மலேசிய தி.க. தோழர் டாக்டர் முரளி மற்றும் நாரண. திருவிடச் செல்வன் ஏற்பாடு செய்த நிகழ்விலும் ‘பெரியார் சுட்டிய தமிழர் பண்பாடு’ எனும் தலைப்பில் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். மறைந்த கழகப் பரப்புரையாளர் கீசகன் மகனும், கோலாலம்பூரில் பொறியாளராக பணியாற்றி வரும் சேரலாதன், அவரது துணைவியார் பேராசிரியர் ஷாலினி, கீசகன் துணைவியார், கழகப் பொதுச்செயலாளரை கோலாலம்பூரில் அன்புடன் வரவேற்று தங்களது இல்லத்திலேயே தங்க வைத்து வழியனுப்பி வைத்தனர்.

பெரியார் முழக்கம் 23022012 இதழ்

You may also like...