பெண்ணுரிமையை வலியுறுத்திய ஓர் விவகாரத்து வழக்கு

மும்பை உயர்நீதிமன்றத்தில் கடந்த மே 3 ஆம் தேதி வந்த ஒரு விவகாரத்து வழக்கு, பெண்ணுரிமைக் கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அமர்வு நீதிபதிகள் பி.பி.மஜீம்தார் மற்றும் அனூப்போத்தா இந்த வழக்கில் எழுப்பிய கேள்விகளும் மிகவும் அர்த்தமிக்கதாகும். 30 வயது கணவன், தனது 26 வயது மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். திருமணமானவுடன் இந்த இணையர் தேனிலவுக்கு சென்றபோது மணமகள் கணவருடன், குழந்தை பிறப்புத் தடைக்கான ஆணுறை இல்லாமல் உடல் உறவு கொள்ள மறுத்துவிட்டார். ‘குழந்தை பெற்றுக் கொள்வதற்கு இப்போது உரிய நேரமல்ல; பொருளாதார ரீதியாக என்னை வளர்த்துக் கொண்ட பிறகே குழந்தை பெற்றுக் கொள்வேன்’ என்று அந்தப் பெண் கூறிவிட்டார். இது தனக்கு மன உளைச்சலை உருவாக்கிவிட்டது என்று கணவர் வழக்கு தொடர்ந்தார். ‘தனது குழந்தைக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய தன்னை பொருளாதாரத்தில் நிலைப்படுத்திக் கொள்ள விரும்பியிருக்கிறார் இந்தப் பெண்’ என்று கூறிய நீதிபதி, ‘இதில் முடிவெடுக்கும் உரிமை கணவனுக்கு மட்டுமே இருக்க முடியாது’ என்று கூறினார்.

“இந்தப் பெண்ணுக்கு சமைக்க தெரியாது; மத நம்பிக்கை இல்லாதவர்; ஊதியத்தை தன்னிடம் பங்கு போட்டுக் கொள்ள மறுக்கிறார்; உடையணிவதில் ஒழுங்குமுறை இல்லை” என்று விவாகரத்து மனுவில் கணவன் கூறியிருந்த காரணங்களை ஏற்க நீதிபதிகள் மறுத்தனர். ‘இதில் கணவனுக்கு மன உளைச்சல் ஏன் வரவேண்டும்?’ என்ற கேள்வியை நீதிபதி எழுப்பினார்.

மணமகனின் வழக்கறிஞர் வாதிடுகையில், “எனது கட்சிக்காரர் மணமகள் தேடும் விளம்பரத்தில் வேலை பார்க்கும் பட்டதாரிப் பெண்ணாகவும் கூட்டுக் குடும்பத்தில் வீட்டு வேலைகளை செய்யக் கூடிய பெண்ணாகவும் இருக்க வேண்டும் வெளியிட் டிருந்ததை ஏற்றுத்தான் மணமகள் திருமணத்துக்கு சம்மதித்தார்” என்றார்.

இதற்கு பதிலளித்த நீதிபதி மஜீம்தார், “ஒரு பெண் என்பவர் அடிமையல்ல. அவரின் கருத்துரிமையை பறித்துவிட முடியாது. வீட்டில் நடக்கும் குடும்ப சச்சரவுகளை நீங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளீர்கள். இவையெல்லாம் மன உளைச்சல் என்று ஏற்றுக் கொண்டுவிட்டால், எந்த ஒரு திருமணத்தையும் பாதுகாப்பாகக் கருதிட முடியாது” என்றார்.

“இந்தப் பெண் குடும்பத்தில் மூத்தவர்; இவருக்கு திருமணமாகாவிட்டால் அவரது தங்கைக்குத் திருமணம் நடக்காது” என்று பெண்ணின் குடும்பச் சூழலை பெண்ணின் வழக்கறிஞர் கூறியபோது, “பெண்களை பெற்றோர்கள் ஒரு சுமையாகவே கருதுகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு எப்படிப் பட்ட ஒரு வீட்டுக்குப் போகிறோம் என்பதை ஒரு பெண் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்” என்றார், நீதிபதி மஜீம்தார்.

“இந்த வழக்கு திருமணம் செய்து கொள்ளப் போகும் இளைஞர்களுக்கு வழிகாட்டக்கூடிய வழக்காகும். பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் திருமணங்களில் பெண்ணும் ஆணும் முன் கூட்டியே சந்தித்து, கலந்து பேசி, எதிர்காலத்தில் மகிழ்ச்சி யுடன் இணைந்து வாழ முடியுமா என்பதை முடிவு செய்திட வேண்டும்” என்று கூறிய நீதிபதிகள், “திருமணத்துக்குப் பிறகு கணவர் வீட்டுக்கு வரும் பெண், முற்றிலும் ஒரு புதிய சூழலுக்கு தள்ளப்படு கிறார். எனவே அவர் அன்பையும் அரவணைப்பை யும் எதிர்பார்க்கவே செய்வார். கணவரும் குடும்பத் தாரும் இதைப் புரிந்துக் கொண்டு, அந்தப் பெண் ணுக்கு தனித்து விடப்பட்ட உணர்வு இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும்” என்று நீதிபதிகள் கூறினர்.  விவகாரத்துக்கு நீதிமன்றம் அனுமதித்தது.

‘டைம்ஸ் ஆப் இந்தியா’ (மே 4) இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

பெரியார் முழக்கம் 10052012 இதழ்

You may also like...