சேலம் (மேற்கு) மாவட்டக் கழகம் தீவிரம்: 200 ஊர்களில் 5 கட்ட பரப்புரை இயக்கங்கள்

சேலம் மேற்கு மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 20.6.2012 மாலை 5 மணிக்கு மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளி வளாகத்தில் கூடியது. கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முல்லைவேந்தன், மாவட்ட செயலாளர் சூரியகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்களும் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பொறுப்பாளர்களும், தோழர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

  • சேலம் மேற்கு மாவட்டங்களிலுள்ள அனைத்து ஒன்றியங்களையும் உள்ளடக்கி 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாதிய வாழ்வியல் எதிர்ப்பு மற்றும் நவம்பர் 26 மனுதர்ம எரிப்புப் போராட்ட விளக்கப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

முதற்கட்டமாக வருகிற 29.6.2012 மாலை நங்கவள்ளியில் பிரச்சாரப் பயண துவக்க விழா பொதுக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி பயணத்தை தொடங்கி வைக்கிறார்.

முதல் கட்ட பிரச்சாரப் பயணம் சூன் 30, சூலை 1 ஆகிய தேதிகளிலும், இரண்டாம் கட்டமாக சூலை 14, 15, நான்காம் கட்டமாக சூலை 21, 22, அய்ந்தாம் கட்டமாக சூலை 28, 29 ஆகிய தேதிகளிலும் சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுற்றுப்பயணம் நிகழ்த்தி, மேச்சேரியில் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

  • பிரச்சாரப் பயண செலவினங்களுக்காக மேட்டூர் நகர கழகம் ரூ.25,000, கொளத்தூர் ரூ.25,000, மேட்டூர் ஆர்.எஸ். ரூ.25,000, காவலாண்டியூர் ரூ.25,000, லக்கம்பட்டி ரூ.5,000, தார்க்காடு கிளை ரூ.5,000, உக்கம்பருத்திக்காடு சார்பாக ரூ.10,000, நங்கவள்ளி கிளைக் கழகம் சார்பாக ரூ.5,000 என, அனைத்து பகுதிகள் சார்பாக ரூ.1,25,000, பங்களிப்பு செய்வதென உறுதியளிக்கப்பட்டது.
  • இதுவரை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழுக்கு சேலம் மேற்கு மாவட்டம் சார்பாக 800 சந்தாக்கள் அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் ஒருவார காலத்தில் மேலும் 200 சந்தாக்கள் சேர்த்து ஆயிரம் சந்தாக்களை நிறைவு செய்து தருவதென தீர்மானிக்கப்பட்டது.
  • மேட்டூர் வட்டார பகுதிகளிலுள்ள அரசு துறைகளான காவல் துறை வருவாய் துறை, மருத்துவத் துறை, கல்வித் துறை, மின் துறை போன்றவற்றில் ஊழல் மிகுந்து காணப்படுவதும், ஏழை எளிய மக்களை இத்துறைகள் முற்றாக புறக்கணிப்பதும் வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் கழகம் முன் முயற்சி எடுத்து சமூக அக்கறையுள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம், கண்டன பொதுக் கூட்டம், உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தல் போன்ற முயற்சிகளில் ஈடுபடுவதென தீர்மானிக்கிறது.

இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஒருங்கிணைப்பாளர்களாக கீழ்க்கண்ட தோழர்கள் நியமிக்கப்படுவதென தீர்மானிக்கப்பட்டது.

அண்ணாதுரை – மாவட்ட அமைப்பாளர்; பாசுக்கர் – நகர தலைவர்; சம்பத்குமார் – நகர செயலாளர்.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் குமரப்பா நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.

பெரியார் முழக்கம் 28062012 இதழ்

You may also like...