பொது நலனை சிதைக்கும் ‘மனு சாஸ்திரம்’

‘பிராமணர்களுக்கு மட்டும்’ என்று அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வெளிப்படையாக விளம்பரங்களே வருவதை ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தோம்.

அதை வெளியிட்ட ‘இந்து’ஏட்டின் மீது, பத்திரிகைக் குழுவுக்கு சென்னை மருத்துவர் இனியன் இளங்கோ புகார் கூறியதன் அடிப்படையில், ‘இந்து’ அந்த விளம்பரத்தை வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, ‘இந்து’ நாளேடு (ஜூலை8, 2012) டெல்லி, பெங்களூர், மும்பை போன்ற பெரு நகரங்களில் வாடகைக்கு வீடுகளை விடுவதில் ‘இனப் பாகுபாடு’ காட்டப்படுகிறது என்ற விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது. குறிப்பாக தலைநகரமான டெல்லியில் முஸ்லீம்கள் என்றாலே, அவர்களுக்கு வீடு வாடகைக்கு தரப்படுவதில்லை.

நகரின் ஒதுக்குப்புறத்தில் முஸ்லீம்கள் வாழும் நெருக்கடியான பகுதிகளுக்குள்ளேயே தள்ளப்படுகிறார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்தியுள்ளது.

சென்னையில் முஸ்லீம்களுக்கும், ‘தலித்’களுக்கும் இதே நிலைதான். ‘சைவமா? அசைவமா?’, அசைவக்காரர்களுக்கு வீடு இல்லை என்று கூறிவிடுகிறார்கள். மாமிச உணவு சமைக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் வாடகைக்கு விடப்படும் நிலையும் உண்டு. உணவு முறையில் புகுத்தப்பட்ட ‘மனுதர்மம்’ வாழ்க்கையில் மட்டுமல்ல; வாடகைக்கு வீடு கிடைப்பதிலும்கூட விட்டு வைக்காமல், துரத்தி துரத்தி அடிக்கிறது.

இப்படி வீடுகளில் காட்டப்படும் ‘இன வெறுப்பை’க் கண்டித்து, ஏராளமான வாசகர்கள் கடிதங்களையும் அதே ஏட்டில் (ஜூலை 9) எழுதியுள்ளார்கள். இத்தகைய ‘சாதி-மத ஒதுக்குதல்’ காரணமாகவே விரக்தியுற்ற இளை ஞர்கள் கிரிமினல் குற்ற  செயல்களை நோக்கித் தள்ளப்படுகிறார்கள் என்றும், கல்வி பரவினாலும், இத்தகைய ‘ஒதுக்குதல்’ மனப்பான்மை மாறவில்லை என்றும், ‘மூதாதையர் பின்பற்றியதுதான் இந்த ஒதுக்கி வைத்தல்’ என்று நியாயப்படுத்தப்படுகிறது என்றும், இந்தக் கடிதங்களில் கருத்துகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

‘சகிப்புத்தன்மையும்-அரவணைப்பும்’ நிறைந்த இந்து மதத்தில் இத்தகைய போக்கு நிகழக் கூடாது என்று  ‘இந்து மதப் பெருமை’யையும் விட்டுக் கொடுக்காமல், சில கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. ஒரு கடிதமாவது – ‘மனு’ என்ற மாபாதகன் விதைத்த – சீரழித்த – பார்ப்பனிய சிந்தனையின் விளைவுதான் என்று பிரச்சினையின் மய்யத்தை சுட்டிக்காட்டவில்லை.

இதே ஏட்டில், இதே நாளில் (ஜூலை 9) தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வரும் இந்தி திரைப்பட நடிகர் அமிர்கான், தீண்டாமை பற்றிய தனது கருத்துகளை பதிவு செய்துள்ளார். அதில், இந்தியாவில் தீண்டாமை நீடிக்கும் வரை வல்லரசு கனவு நிச்சயமாக பலிக்காது என்று கூறியுள்ளார். சமூக ஒற்றுமையையே ‘தீண்டாமை’ சிதைத்து விடுவதால் தான், சமூகமே ஒட்டாமல் நொறுக்கப்பட்டுக் கிடப்பதால்தான், பொதுச் சொத்துகளும், பொது சுகாதார அமைப்புகளும் நாசமாகின்றன.  அனைவருக்கும் பொதுவானவை என்ற பொது சிந்தனையே மழுங்கடிக்கப்படுகிறது சாதி தீண்டாமை சமூகத்தின் பொது ஒழுக்கத்தை பொது நலச் சிந்தனையையே குலைத்து விடுகிறது என்று படம் பிடித்துள்ளார்.

இன்னமும் மனிதன் மலத்தை மனிதன் எடுக்கும் அவலம் தொடர்வதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், பகிர்ந்து வாழும் சமூகப் பொது நலனுக்கு எதிரான ‘தீண்டாமை’ நீடிக்கும் வரை இந்தியா வல்லரசாக முடியவே முடியாது என்று உறுதியாக கூறுகிறார்.

மனுதர்ம ஒழிப்பு என்பதில் சமூக வேறுபாடுகள் மட்டுமல்ல, ஒரு தேசத்தின் பொதுமையும் பொதுநலப் பார்வையும் ஏன், சர்வதேச அரசியலும்கூட அடங்கியிருக்கிறது என்ற ஆழமானப் புரிதலுக்கு நாம் வந்தாக வேண்டும்.

பெரியார் முழக்கம் 19072012 இதழ்

You may also like...