தோழர் பழனி வீரவணக்க கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறைகூவல் முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கும் போராட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரில் நிலப் பிரபுத்துவவாதியாக தளி சட்டமன்றத் தொகுதியில் தனியான ‘வன்முறை அரசை’ நடத்தி வந்த ஆதிக்கவாதிகளை மக்களுக்காக தட்டிக் கேட்ட கிருஷ்ணகிரி மாவட்ட பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் மு.பழனி படுகொலையைக் கண்டித்து வீரவணக்கம் செலுத்தும் நினைவேந்தல் பொதுக் கூட்டம் 15.7.2012 மாலை 4.30 மணியளவில் இராயக்கோட்டை பேருந்து நிலைய மைதானத்தில் உருக்கத்துடனும் உணர்ச்சியுடனும் நடைபெற்றது. அராஜக அடக்குமுறைக்கு எதிராக பொது மக்கள் பிற்பகல 3 மணியிலிருந்தே திரளத் தொடங்கி விட்டனர். இந்த கொலை வெறியாட்டங்களைத் தட்டிக் கேட்க எவருமே கிடையாதா என்ற மனப் புழுக்கத்தில் ஏங்கிக் கொண்டிருந்த பொது மக்களின் உணர்வுகளுக்கு நம்பிக்கையூட்டுவதாக இந்தக் கூட்டம் இருந்தது.

அச்சத்தின் பிடியில் உறைந்து கிடந்த ஏழை எளிய மக்கள் அச்சத்தை உதறி எறிந்துவிட்டு ஆவேசத் துடன் திரண்டு நின்றதைப் பார்க்க முடிந்தது. இராயக்கோட்டைப் பேருந்து மைதானம் முழுவதும் மக்கள் தலையாகவே காட்சியளித்தது. முன்புறம் போடப்பட்டிருந்த இருக்கைகள் முழுமையாக நிரம்பி இருபுறங்களிலும் அடர்த்தியாக கடும் நெரிசலில் மக்கள் நின்று கொண்டு கருத்தினைக் கேட்டனர். கூட்டத்தின் இடையே மழை கொட்டத் தொடங்கியது. மக்கள் அப்படியே பேருந்து நிலையத்துக்குள் சென்று உரைகளைக் கேட்டனர். மழை நின்ற பிறகு அவர்களே முன்  வந்து இருக்கை யில் அமர்ந்தனர். தளி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது அடியாட்கள் கூட்டத்தின் கொலை வெறி யாட்டங்களையும் நில அபகரிப்புகளையும் பேசிய தோழர்கள் ஒவ்வொருவரும் அம்பலப் படுத்திய போது அந்தக் கூட்டம் பலத்த கரவொலி எழுப்பி ஆரவரித்து அந்த உண்மைகளை அங்கீகரித்தது.

மாவட்ட தலைவர் தி.குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பிரேம்குமார், கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழக மக்கள் உரிமைக் கழகம் வழக்கறிஞர் புகழேந்தி, தலித் விடுதலைக் கட்சி செங்கோட்டை யன், அயோத்திதாசர் ஆய்வு மையம் ச.இராம லிங்கம், சி.பி.ஐ.எம்.எல். (மக்கள் விடுதலை) மீ.தா. பாண்டியன், தமிழக மக்கள் புரட்சி கழக பொதுச் செயலாளர் அரங்க. குணசேகரன், தமிழக மக்கள் ஜனநாயக கூட்டமைப்பு குணா, சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி வழக்கறிஞர் ரஜனிகாந்த், மே 17 இயக்கம் திருமுருகன், மக்கள் ஜனநாயக இளைஞர் இயக்கம் தமிழ்வாணன், சி.பி.ஐ. (எம்.எல்.) விந்தை வேந்தன், தமிழ் தேசிய விடுதலை இயக்கம் மு.மோகன் ராஜ், பெ.தி.க. வழக்கறிஞர் சு.குமாரதேவன், விடுதலை சிறுத்தைகள் பொ.மு.நந்தன், பெங்களூர் கலைச் செல்வி, தமிழக மக்கள் விடுதலை முன்னணி இரா.தமிழரசன், மனித உரிமை பாதுகாப்பு கவுன்சில் க.ம.இளவரசன், காஞ்சி மக்கள் மன்றம் மகேசு, புரட்சிகர தொழிலாளர் முன்னணி மணிவாசகம், சேவ் தமிழ் செந்தில், தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சி இரா.சு.நடவரசன், தமிழ்நாடு மக்கள் பேராயம் குமணன், பெ.தி.க. தர்மபுரி மாவட்ட அமைப்பாளர் வேடியப்பன் ஆகியோர் உரையாற்றினர்.

இந்தக் கூட்டத்திற்கு பார்வையாளராக வந்திருந்த லக்ஷ்மணய்யா என்பவர், “நான் எம்.எல்.ஏ. இராமச் சந்திரனால் 36 ஏக்கர் நிலத்தை  பறிகொடுத்தவன். எனவே அவருடைய அக்கிரமத்தைப் பற்றி சில நிமிடம் பேச எனக்கு வாய்ப்புக் கொடுங்கள்” என்று தாமாக முன் வந்து மேடையேறி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். தனது தாய்மொழியான தெலுங்கு மொழியிலேயே பேசியஅவர்,  தனக்கோ தனது குடும்பத்துக்கோ தெரியாமலேயே தமக்கு சொந்தமான நிலம் அபகரிக்கப்பட்டிருந்ததை பத்திரப் பதிவு அலுவலகம் சென்ற பிறகே தெரிய வந்தது என்று கூறினார். இந்த உண்மையை உங்களிடம் தெரிவித்து விட்டதால் எனக்கு எது வேண்டுமானாலும் நேரலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்திய அவர், அதற்கு தயாராகவே வந்துள்ளதாகக் கூறியபோது கூட்டம் உணர்ச்சி மயமானது.

கூட்டத்தில் பேசிய கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், “தொகுதி தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் சுகவனம் பேச வந்தபோது இதே கும்பலால் தாக்கப்பட்டார். தி.மு.க. சட்டமன்ற உறப்பினர் செங்குட்டுவன் பேச வந்த போதும் தாக்குதலுக்கு உள்ளானார். ஆளுங் கட்சியான அ.இ.அ.தி.மு.க.வில் நாகராஜரெட்டி இருந்தாலும் எம்.எல்.ஏ. தளி இராமச்சந்திரன் ஆட்களால் இரண்டு முறை கொலை முயற்சி தாக்குதலுக்கு உள்ளாகி, உயிர்தப்பி இப்போதும் நடமாட முடியாத நிலையில் உள்ளார். இவ்வளவுக்குப் பிறகும் காவல்துறையின் ஆதரவோடு மகாராசாவைப் போல் வலம் வந்து கொண்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரனும் அவரது அடியாள் கூட்டமும் பெரியார் திராவிடர் கழகத்தோழர் பழனி மீது கை வைத்த பிறகு தான் இப்போது அம்பலப் பட்டு அச்சத்தின் பிடியில் தலைமறைவாக திரி கிறார்கள். தமிழக வரலாற்றிலேயே ஒரு சட்டமன்ற உறுப்பினர் கொலை வழக்கில் தேடப்பட்டு தலைமறைவாகி இருப்பது இதுவே முதல் முறை என்று ஊடகங்கள் கூறுகின்றன.

கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது அந்த இயக்கத்தின் போராளிகள் தலைமறை வானார்கள். அப்போது அவர்களுக்கு அடைக்கலம் தந்தது பெரியார் இயக்கத் தோழர்கள். அதற்கு நன்றி தெரிவித்து மறைந்த பொதுவுடைமை இயக்கத் தலைவர் தோழர் எம்.கல்யாணசுந்தரம் கழகத்துக்கு கடிதமே எழுதினார். “கொள்கைக்காக தலை மறைவை மேற்கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி இருந்த காலம் மாறி, இப்போது கொலைக் குற்றத்துக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. தலைமறைவாக இருப்பதும், அதை அக்கட்சி நியாயப்படுத்துவதும், உண்மையிலே அக்கட்சிக்கு ஏற்பட்ட கொள்கைச் சரிவு. இதற்காக வேதனைப்படுகிறோம். தலைமறைவாகத் திரியும் குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்படும் வரை பெரியார் திராவிடர் கழகம் இதைவிடப் போவதில்லை. தமிழகம் முழுதும் இதற்கான இயக்கங்களை நடத்துவோம்” என்று குறிப்பிட்டார்.

இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையில், 2 ஆண்டுகளாக பெரியார் திராவிடர் கழகத்தில் இணைந்து செயல்பட்ட தோழர் பழனி மீது எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் கும்பலுக்கு ஆத்திரம் வந்தததற்கான காரணங்களை விளக்கினார். தங்களைத் தவிர வேறு எந்த அமைப்பும் தங்கள் பகுதியில் செயல் படக் கூடாது என்று தளி சட்டமன்ற உறுப்பினரும், அவரது அண்ணனும் அவர் களின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கும்பலும் செயல்பட்டனர். தங்கள் தொகுதிக்குள் வந்த தி.மு.க. நாடாளுமன்ற சட்டமன்ற உறுப் பினர்கள்கூட தாக்கப் பட்டனர். தோழர் பழனி அப்பகுதியில் பெரியார் திராவிடர் கழகத்தை நோக்கி இளைஞர்களை திரட்டினார். நாகமங்கலம் பஞ் சாயத்து தலைவர் தேர்தலில் எம்.எல்.ஏ. இராமச் சந்திரனின் மாமா மனைவி வனிதா போட்டியிட்ட போது அவரை எதிர்த்து தி.மு.க., அ.தி.மு.க.வினரே போட்டியிட அஞ்சினார்கள். ஆனால் கழகத் தோழர் மாருதி, தனது தாயார் நாராயணம்மாளை போட்டியிட வைத்தார். அது மட்டுமல்ல, தேர்தலை கள்ள ஓட்டுகள் போடாமல் நேர்மையாக நடத்த முயன்றார். அந்தத் தேர்தலில் நாராயணம்மாள் 130 வாக்குகளில் தோல்வி அடைந் தாலும் தங்களது வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடும் துணிச்சல் வந்து விட்டதா என்று ஆத்திரப்பட்டார்கள். அதற்காக சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி இருந்தார்கள்.

நீலகிரி வரதராஜசாமி கோயில் திருவிழாவில், தனது தாயாரை போட்டியிட வைத்த கழகத் தோழர் மாருதியின் சித்தப்பா அன்னையப்பாவை, எம்.எல்.ஏ. ஆட்கள் வம்புக்கிழுத்து மோதலை உருவாக்கி தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட நாராயணம்மாள் வீட்டுக்குள் நுழைந்து அவரது கணவரையும் 3 மகன்களையும் எலும்பு முறியும் அளவுக்கு தாக்கினார்கள். சிகிச்சைக்காக ஓசூர் மருத்துவமனையிலே அவர்கள் சேர்க்கப்பட்டபோது நள்ளிரவிலே சட்டமன்ற உறுப்பினரே தனது அண்ணன் – அடியாட்களுடன் மருத்துவமனைக்குள்ளேயே நுழைந்து சிகிச்சைப் பெற்று வந்த தோழர்களையே மூர்க்கத்தனமாகத் தாக்கினர். உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தங்களை நேரில் வந்து தாக்கியது சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரனும் அவரது ஆட்களும் தான் என்று அடிப்பட்ட தோழர்கள் வாக்கு மூலம் தந்தும், காவல்துறை அவர் பெயரை பதிவு செய்யவில்லை.  அந்தப் பகுதி மக்களுக்கு தமிழ் எழுதவோ படிக்கவோ தெரியாது. அதை காவல்துறை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இராமச்சந்திரன் பெயரை புகாரில் சேர்க்காமலே தவிர்த்து வருகிறது.

2010 அக்டோபரில் திருச்சியில் தீண்டாமை சுவரை இடிக்கும் போராட்டத்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்தியபோது இந்தப் பகுதியி லிருந்து இரண்டு வேன் களில் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் திராவிடர் கழகத்தில் இணைந்த பிறகு அப்பகுதி தோழர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை. அந்தப் பகுதியைச் சார்ந்தவர்கள் வேறு ஒரு இயக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வெளியே வருவதும் இதுவே முதல்முறை. ஊர் திரும்பிய பிறகு முழு நேரமும் கறுப்புச் சட்டை அணியத் தொடங்கினர்.  வேறு அமைப்பு தங்கள் பகுதியில் வளரத் தொடங்கியதைப் பொறுக்க முடியாத இராமச்சந்திரன் ஆட்கள் கழகத் தோழர் களை மிரட்டி ஒருதோழரின் கருப்புச் சட்டையைப் பறித்து தீ  வைத்தனர்.

இந்தப் போக்குகளைக் கண்டித்து 28.4.2012 இல் கெலமங்கலத்தில் எங்கள் கழக சார்பில் கண்டனப் பொதுக் கூட்டம் நடத்தினோம். அதில், இறுதியில் நான் பேசிய போது இராமச்சந்திரன் ஆட்களின் வன்முறை அடாவடியை எதிர்த்து ‘மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு’ ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தபோது, மக்கள் ஆரவாரத்துடன் கரவொலி எழுப்பி வரவேற்றனர். அதற்குப் பிறகு இராமச்சந்திரன், தா. பாண்டியன் போன்ற தலைவர்களை அழைத்து, ஒரு கூட்டத்தைக் கூட்டினார்.  அதில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சேதுராமன் என்பவர் இந்தப் பகுதியில் இரண்டு அமைப்புகள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றன என்றும், ஒன்று மார்க்சிய லெனினிய கட்சி மற்றொன்று பெரியார் திராவிடர் கழகம் என்றும், தா. பாண்டியன் முன்னிலை யிலேயே பேசினார். தங்களின் வன்முறை அடாவடி நில அபகரிப்புகளை எதிர்க்கும் அமைப்புகள் வேர்விடத் தொடங்கிவிட்டதே என்ற ஆத்திரமே தோழர் பழனியை படுகொலை செய்வதற்குக் காரணம் என்று குற்றம்சாட்டுகிறோம்.

இப்போது இப்பிரச்சினை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. அவருடைய கவனத்துக்கு முழுமையாகப் போகவில்லையோ என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது.

எனவே அடுத்த கட்டமாக தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு ஒத்த கருத்துள்ள அமைப்புகளை இணைத்து வலிமையான போராட்டத்தை அடுத்த 10 அல்லது 15 நாட்களில் நாம் நடத்த வேண்டும். இது நமது முதல் நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

இரண்டாவதாக இங்கே ஏழை மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீட்டு, அந்த மக்களிடம் நாம் ஒப்படைக்க வேண்டும்.

நாம் ஏற்கனவே மக்கள் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தொடங்கும் திட்டத்தை அறிவித்தோம்.

அந்த அமைப்பின் வழியாகவே மக்களுக்கு – இழந்த நிலங்களை மீட்டுத் தரும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

தொழிலதிபர் விஜயமல்லய்யாவிடமிருந்த நிலங்களை தளி சட்டமன்ற உறுப்பினர் மீட்டு, மக்களுக்கு வழங்கியதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புகழ் பாடுகிறார்கள்.

அப்படியானால் தளி இராமச்சந்திரன் மற்றும் அவரது கும்பலிலிருந்து

இந்த நிலங்களை  மீட்கும் நடவடிக்கைகளில் பங்கேற்க அவர்களையும் அழைப்போம்” – என்றார் கொளத்தூர் மணி.

தளி இராமச்சந்திரனின் எல்லை மீறிய அடாவடி களுக்கு எதிராக மக்கள் சக்தி திரண்டு விட்டது என்பதை உணர்த்துவதாகவே இந்தக் கூட்டம் இருந்தது.

– நமது செய்தியாளர்

பெரியார் முழக்கம் 19072012 இதழ்

You may also like...