மேட்டூர் செயலவையில் தீர்மானம் 7 தமிழர் விடுதலை: தமிழக அரசின் துரோகம்

மேட்டூரில் கூடிய செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தண்டனைக் குறைப்புக்கான அதிகாரங்களை மாநில அரசுகளுக்கு வழங்கும் அரசியல் சட்டத்தின் 161வது பிரிவில் உச்சநீதி மன்றம் தலையிட முடியாது, மாநிலங்களுக்கு அந்த உரிமை உண்டு என்று ஏழு தமிழர் விடுதலை தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம் தெளிவாக்கியிருக்கிறது, எனவே தான்  மாநில அரசுக்குரிய இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி 7 தமிழர் விடுதலைக்கு – தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் மனித உரிமை அமைப்புகள், தமிழின உணர்வாளர்கள்,   திரைப் படத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

7 தமிழர் விடுதலைக்கு தனது ஆதரவை தமிழக முதலமைச்சர் ஏற்கெனவே சட்டமன்றத்தில் தெரிவித் துள்ளார்.  இவ்வளவுக்குப் பிறகும் ஆயுள் சிறைவாசியாக சிறையில் வாடும் நளினி தன்னை அரசியல் சட்டத்தின் 161வது பிரிவின் கீழ் விடுதலை செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு உச்சநீதி மன்றத்தின் மீது பழியை சுமத்தி விடுதலைக்கு மறுத்திருப்பது அதிர்ச்சி தருகிறது. தமிழ்நாடு அரசு 7 தமிழர் விடுதலையில் ஏற்கனவே எடுத்த நிலைப்பாட்டில் உறுதி காட்டத் தயாராக இல்லை என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.  தண்டனைக் குறைப்புக்கு மத்திய அரசு அனுமதி தேவை என்று வாதிட்டாலும்கூட, பரோலில் விடுதலை செய்ய மாநில அரசுக்கு முழு உரிமை உண்டு, தமிழ்நாடு அரசு பரோலில் விடுதலை செய்யக்கூட தயாராக இல்லை, சட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்தி

7 தமிழர் விடுதலைப் பிரச்சனையை கைகழுவிவிடும் தமிழக அரசின் இந்த அணுகுமுறை நம்பிக்கைத் துரோகம் ஆகும். பம்பாய் குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நடிகர் சஞ்சய்தத் – ஏர்வாடா சிறையிலிருந்து தண்டனைக் குறைப்பு செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார், ஏர்வாடா சிறையின் கண்காணிப்பாளருக்கே தண்டனைக் குறைப்பு அதிகாரம் உண்டு என்று மகாராஷ்டிரா ஆட்சி கூறுவதை இந்தச் செயலவை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டுவர விரும்பு கிறது. இந்நிலையில், தமிழக அரசு தனக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள 161ஆவது பிரிவின் கீழான அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏழு தமிழர்களை மட்டுமின்றி, நீண்டகாலமாய் சிறையில் வாடும் ஆயுள் சிறைவாசிகளையும் விரைவில் விடுதலை செய்யுமாறு திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

அய்.நா.வில் ஈழத் தமிழர் பிரச்சினை

சர்வதேச மன்றமான அய்நாவின் மனித உரிமை ஆணையத்தில் ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. மாற்றத்திற்கான நீதி  (கூசயளேவைiடியேட துரளவiஉந) என்ற கோட்பாட்டின்கீழ் அய்.நா. இந்த பிரச்சினையை அறிவுறுத்துகிறது. போரில் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணோட்டத்தில் அவர் களுக்கான நீதி,  மறுவாழ்வு,  குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை என்ற அம்சங்கள் இந்த கோட்பாட்டில் அடங்கியுள்ளன. போர்க் குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானத்தை இந்திய அரசு தலையிட்டு, உள்நாட்டு விசாரணையே நடத்தலாம், அக்குழுவில் வெளிநாட்டினர் இடம் பெறலாம் என்று சிதைத்தது. இதற்கு ஒப்புக் கொண்டு, தானே தீர்மானத்தை முன்மொழிந்த இலங்கை, இப்போது உள்நாட்டு பிரமுகர்கள் மட்டுமே அடங்கிய உள்நாட்டு விசாரணையே நடத்த முடியும் என்று அறிவித்துள்ளது. தமிழ்ப் பகுதியிலிருந்து இராணுவ வெளியேற்றம், பறிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் தமிழர்களிடம் ஒப்படைத்தல், பயங்கரவாத தடை சட்ட நீக்கம் உள்ளிட்ட இலங்கை அளித்த உறுதிமொழிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை .

அய்.நா.வில் இடம் பெற்றுள்ள பல்வேறு நாட்டின் பிரதிநிதிகளிடம் இந்தக் கருத்துக்களை எடுத்துக்கூறி, கருத்தளவில் ஆதரவு திரட்டும் பணிகளை புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் பல்வேறு – தமிழர் அமைப்புகள் தீவிரம் காட்டி செயல்பட்டு வருகின்றன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் – சர்வதேச கிரிமினல் நீதிமன்றங்களில் போர்க்குற்ற விசாரணைகளில் வாதாடிய அனுபவம் பெற்ற புகழ்பெற்ற சட்டவல்லுநர்களைக் கொண்ட கண்காணிப்பு நிபுணர் குழு ஒன்றை இதற்காக நியமித்து பெரும் பொருட் செலவில் கண்காணித்து வருவது குறிப்பிடப்பட வேண்டியதாகும். ஈழத் தமிழர் விடுதலையை அரசியல் தளத்தில் முன்னோக்கி நகர்த்துவதிலும், அது குறித்த விவாதங்களை – புரிதலை அரசியல் கண்ணோட்டத்தில் மக்களிடம் கொண்டு செல்லும் கடமையையும் திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று இந்த செயலவை அறிவிக்கிறது.

கிராமப்புற மாணவர்களை

அச்சுறுத்தும் நுழைவுத் தேர்வு

மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதிக்கு இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என ஒரு மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்ட நிலையிலேயே, உச்சநீதிமன்ற ஆயம் ஒன்று வழங்கியுள்ள தீர்ப்பு போன்ற இடைக்கால ஆணை சமூக நீதியில் அக்கறையுள்ள அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது.

மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு பாடத் திட்டங் களும், மாநிலத்துக்குள்ளேயும் பலவகைப் பாடத் திட்டங் களையும் கொண்டுள்ள ஒரு துணைக் கண்டத்தில் ஒரே வகையான நுழைவுத் தேர்வு, அதுவும் பணக்கார, நகர்ப்புற, மேல்தட்டு மக்கள் பயின்றுவரும் சி.பி.எஸ்.ஈ பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட நுழைவுத் தேர்வு என்பது கிராமத்திலிருந்து முதல்தலைமுறையாய், போதிய ஆசிரியர்களும், கட்டமைப்பு வசதிகளு ம்இல்லாமல், பெரும்பாலும் பொறுப்பற்று நடந்துவரும் அரசுப் பள்ளிகளில் படித்துவரும் மாணவர்கள்மீது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது எவராலும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு செய்தியாகும். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து, மருத்துவம்,  பொறியியல் கல்விக்கு சேரும் தகுதிபெற்ற, கிராமப்புற மாணவர்கள் கூடுதலாக நுழைவுத் தேர்வு எழுதும்போது தேவையான மதிப் பெண்களை எடுக்க முடிவதில்லை. இந்த நுழைவுத் தேர்வுக்காக பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து, பெருநகரங்களில் மட்டுமே நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து, அங்கேயே தங்கிப் படிக்க வேண்டியுள்ளது. இவை போன்ற காரணங்களுக்காகவே இந்த நுழைவுத் தேர்வுமுறை தமிழ்நாட்டில் சட்டப்படியே இரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசால் நடத்தப்படும் ஏ.ஐ.ஐ.எம்.எஸ்., ஜிப்மெர், பி.ஜி.ஐ. போன்ற மருத்துவக் கல்லுரிகளுக்கு எந்தவொரு பொது நுழைவுத் தேர்வும் இல்லாத நிலையில், மாநிலங்களால் நடத்தப்படும் மருத்துவக் கல்லுரிகளுக்கு மட்டும் அடுத்த கல்வி ஆண்டு முதல் கட்டாயமாக பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசும், உச்சநீதி மன்றமும் உறுதி செய்துவிட்டன .

தனியார் நடத்தும் மருத்துவக் கல்லூரிகள் இலட்சக்கணக்கில் நன்கொடை பெற்று மதிப்பெண் தகுதி ஏதுமின்றி மாணவர்களை சேர்த்து வியாபாரம் நடத்துகின்றன. அந்த தனியார் வணிகக் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால் பிளஸ் டூ தேர்வில் நல்ல மதிப் பெண் பெற்று,  அரசு நடத்தும் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு கூடவே கூடாது .

தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வுமுறையே இல்லாத போது (2004-2005) கிராமப்புற மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரியில் பெரும் எண்ணிக்கையில் சேர்ந்தனர்.  நுழைவுத் தேர்வு முறை அமலுக்கு வந்த பிறகு மருத்துவக் கல்லூரிக்கு உரிய மதிப்பெண் தகுதி பெற்றிருந்தும் நுழைவுத் தேர்வில் மதிப்பெண் பெற முடியவில்லை. விண்ணப்பித்த 1195 கிராமப்புற மாணவர்களில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தவர்கள் 227பேர்தான். (அன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்த திமுக ஆட்சி இந்த விவரங்களை உயர்நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்தது)

ஆக, கிராமப்புற, முதல்தலைமுறை, அடித்தட்டு, ஏழை உழைக்கும் பிரிவு மாணவர்களுக்கு பெரும் கேடாய் உள்ள பொது நுழைவுத் தேர்வுக்கு எதிராக, கழகத்தின் முன்னணி அமைப்பான தமிழ்நாடு மாணவர்க் கழகம் எடுக்கும் முயற்சிக்கு கழகத் தோழர்கள் ஒத்த கருத்துள்ள அனைத்துத் தரப்பினரின் ஆதரவைப் பெற்றுத் தந்து ஒத்துழைக்குமாறு இச்செயலவைக் கேட்டுக் கொள்கிறது.

 

மலக்குழியில் இறங்க எந்திரங்கள்:

தமிழக அரசுக்கு கழகம் வற்புறுத்தல்

மனித மலத்தை மனிதர்களே எடுக்கும் இழிவு -உலகிலேயே இந்தியத் துணைக் கண்டத்தில் தான் நிலவி வருகிறது. ஜாதியத்தின் மனிதநேயமற்ற கொடூரத்திற்கு இதைவிட வேறு சான்று தேவை இல்லை. இந்த இழிவுக்கு முற்றுப்புள்ளி வைத்து 1993ஆம் ஆண்டிலும்,  அதற்குப் பிறகு அதைவிட கடுமையாக 2013லும் சட்டங்கள் வந்துவிட்டன! ஆனால் மத்திய அரசின் பொதுத் துறைகளிலும் – மாநிலங்களின் உள்ளாட்சிகளிலும் இந்த இழிவு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. காரணம் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சமுதாயம் ஜாதி அமைப்பில் – புறந்தள்ளப்பட்டவர்கள் என்பதுதான். ‘மனுதர்மம்’ இப்போதும் சட்டங்களையும் தகர்த்துக் கொண்டு உயிரோடு இருக்கிறது. மலக் குழிகளில் சுத்தம் செய்ய துப்புரவு தொழிலாளர்கள் இறக்கி விடப்படுகிறார்கள். மூச்சுத் திணறி அங்கேயே பிணமாகிறார்கள்.

இப்படிஒரு அவலம் நிகழ்வதற்கு ஆட்சியாளர்கள் வெட்கப்படுவதே இல்லை.

அண்மையில் அரசு பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அதிகாரிகளே மலக்குழியில் துப்புரவுத் தொழிலாளர்களை இறங்கச் செய்ததில் இரண்டு பேர் மரணமடைந்துவிட்டனர். தனியார் நிறுவனங்கள், இதே சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கண்துடைப்புக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகூட, பொதுத்துறை அதிகாரிகள்மீது எடுக்கப்படுவது இல்லை.  மனித உயிர்களிலேகூட ஒடுக்கப்பட்ட மக்களின் உயிருக்கு மதிப்பில்லை. மலக்குழிகளில் – மனிதர்களை இறக்காமல் எந்திரங்களை பயன்படுத்தும் வாய்ப்புகள் இருந்தும், தொடர்வண்டி நிலையங்களில் – மலம் எடுப்பதற்கான எந்திரங்கள் வந்த பிறகும், இதற்கு பெரும்பொருள் செலவாகும் என்று ஆட்சியாளர்கள் கூறுவது – வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும். மலக்குழிகளில் மனிதர்களை இறக்கிவிடும் அதிகாரிகள்மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, இந்த அவலத்தை இனியும் தொடர அனுமதிப்பது மன்னிக்க முடியாத குற்றம் என்று இந்த செயலவை வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டில் மட்டுமாவது இந்த அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் இயந்திரங்களை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவந்து ,  தமிழக அரசு இந்தியத் துணைக் கண்டத்தின் பிற மாநிலங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று இந்த செயலவைவலியுறுத்துகிறது.

(மேட்டூர் செயலவைத் தீர்மானம்)

பெரியார் முழக்கம் 30062016 இதழ்

You may also like...