‘யோகா’வை முன்னிறுத்தி மதப் பிரச்சாரமா?

‘யோகா’வை சர்வதேச அளவில் அங்கீகரிக்கச் செய்து விட்டதில் மோடிக்கு அப்படி ஒரு பெருமை. ஜூன் 21 ‘யோகா நாள்’! மோடி அமைச்சர்கள் அத்தனை பேரும் ஆங்காங்கே ‘யோகா’ செய்யும் நிர்ப்பந்தம். ‘யோகா’ என்பது மூச்சுக் கலை பயிற்சி என்கிறார்கள். இதை ஏற்பதும் ஏற்க மறுப்பதும் அவரவர் விருப்பம் சார்ந்தது. பிரச்சினை எங்கே வருகிறது என்றால், இதை இந்து மதத்தோடு முடிச்சுப் போடும் போதுதான். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இயங்கும் இந்திய தூதரகங்கள், சர்வதேச நாளில் நடத்தும் ‘யோகா’ நிகழ்ச்சிகளுக்கு  ‘சங் பரிவார்’ முன்னணி அமைப்புகளுடன் இணைந்து செயல் படுகின்றன. இந்துத்துவ அரசியலுக்கு யோகாவை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் இவர்களின் உள்நோக்கம் மிகவும் அற்பமானது.

மோடியின் யோகா குரு எச்.ஆர். நாகேந்திரா. இவர் பெங்களூருவிலுள்ள ‘விவேகானந்தா யோகா அனுசந்தான் சமந்தானா’ என்ற பல்கலைக்கழகத்தின் வேந்தராக வும் இருக்கிறார். அரசு ஆலோ சனைப்படி இவரது தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு ‘யோகா’வை பாடத் திட்டத்தில் சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. யோகா பாட திட்டத்தில் பகவத் கீதை, இராமா யணம், மகாபாரதம், நாரத பக்தி சூத்திரம், ராஜயோகம், சமஸ்கிருத சுலோகங்கள், மந்திரங்கள், பஜனைப் பாடல்களை இணைத்தார்கள். (என்ன காரணத்தினாலோ ஆர்.எஸ்.எஸ். கொள்கை, மோடியின் ‘சாதனை’களை யோகா பாடத் திட்டத்தில் சேர்க்காமல் விட்டு விட்டார்கள்) மத்திய மனித வள அமைச்சகத்திடம் குழுவின் பாடத் திட்டம் சமர்பிக்கப்பட்டது. அவ்வளவுதான். உடனே ‘பிசியோதெரபி’ (உடல் இயக்கப் பயிற்சி மருத்துவம்) மருத்துவப் படிப்பு பாடத் திட்டத்தில் இணைக்குமாறு பல்கலைக்கழக மான்யக் குழு அனைத்து ‘பிசியோதெரபி’ கல்வி நிறுவனங் களுக்கு சுற்றறிக்கையை அனுப்பியது. ஆனால் ‘பிசியோதெரபிஸ்ட்’ மருத்துவர் சங்கம் இதை ஏற்கவில்லை.

“தற்போது, ‘பிசியோதெரபி’ பட்டப் படிப்பில் 5000 மணி நேரம் பாடம் நடத்தப்படுகிறது. பாடத்தை முழுமையாக பயிற்றுவிக்க இருக்கும் நேரமே போதாமல் உள்ளது. இதில் ‘யோகா’ பாடத்தைக் கட்டாய மாக்கினால் ‘பிசியோதெரபிஸ்ட்’ படிப்பு கடுமையாக பாதிக்கும். அதுமட்டுமல்ல, ‘பிசியோதெரபி’ மருத்துவக் கல்வி நிறுவனங் கள் சர்வதேச அங்கீகாரத்துடன் உலகம் முழுதும் இயங்குகின்றன. ஆனால், ‘யோகா’ வுக்கு மருத்துவப் பயன் உண்டு என்பது இதுவரை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட வில்லை” என்று பிசியோதெரபிஸ்டுகள் சங்கத் தலைவர் அண்ணாமலை கூறிவிட்டார்.  எதிர்ப்புக்கு பிறகு பல்கலைக்கழக மான்யக் குழு சுற்றறிக்கையை திரும்பப் பெற்றுக் கொண்டு விருப்பமுள்ளவர்கள் படிக்கலாம். பாடத் திட்டத்தில் இடம் பெறாது என்று அறிவித்து விட்டது.

இராம்தேவ், ஜக்கி வாசுதேவ், இரவிசங்கர் போன்ற ‘கார்ப்பரேட்’ ஆன்மிகவாதிகள் கூறுவதாலேயே யோகா அறிவியல் ஆகிவிடாது.

ஒரு மனிதனின் உடல் என்பது வாழ்வு நிலை, அது நிர்ணயிக்கும் அரசியல் கொள்கை, மருத்துவ விஞ்ஞானம் மற்றும் சமூகத்தோடு தொடர்புடையது. தன்னை சூழ்ந்து நிற்கும் பிரச்சினைகளோடு பிணைந்துள்ள மனநிலைகளை துண்டித்துவிட்டு, மூச்சுப் பயிற்சிகளால் மட்டுமே தீர்வுகளைக் கண்டுவிட முடியாது. அன்றாட வாழ்க்கைக்காகவே போராடும் மக்களிடம் யோகாவின் ‘மகத்துவங்களை’ப் பேச முடியுமா? மலக் குழிக்குள் மூச்சை அடக்கி மூழ்கி, விஷ வாயுக்களோடு போராடும் மனிதர்களும், கல்விக் கட்டணச் சுமை, வீட்டுக் கடன், தொழில் பிரச்சினை, ஜாதிய ஒடுக்குமுறை, குடும்பச் சுமை என்ற வாழ்க்கைப் பிரச்சினை களில் சிக்கி மூச்சுத் திணறிப் போய் நிற்பவர்களிடம் மூச்சுப் பயிற்சி மட்டும் தீர்வாகி விடுமா? என்று சமூகவியலாளர்கள் எழுப்பும் கேள்விகளில் நியாயம் இல்லை என்று புறந்தள்ளி விட முடியுமா?

பெரியார் முழக்கம் 23062016 இதழ்

You may also like...