‘பாவமன்னிப்பு’ விற்பனைக்குத் தயார்

ஆயிரக்கணக்கான வருடங்களுக்குமுன் – நாம் எவ்வளவோ உயர்ந்த நாகரிகமும் முற்போக்கும் பெற்றிருந்த காலத்தில், ஆங்கிலேயர்கள் மிக மோசமான வாழ்க்கை நடத்தி வந்தார்கள். அக்காலத்தில் நம்மைவிட மிக மோசமாக மத சம்பந்தமான பழக்க வழக்கங்களை அனுஷ்டித்து வந்தார்கள். அக்காலத்தில் அவர்கள் நிலை, இன்றைய நமது  கேவல நிலையைவிட மிக மோசமாகவும், மானக் கேடாகவுமே இருந்து வந்திருக்கிறது. உதாரணமாக, அக்காலத்தில் அவர்கள் தங்கள் பாவங்களுக்கு மன்னிப்புப் பெற ஒரு சுலபமான முறையைக் கடைப்பிடித்து நம்பச் செய்து வந்தார்கள். இன்று நமது நாட்டில் புரோகிதர்களால் நாம் ஏமாற்றப்படுவது போலவே  அங்குள்ள பாதிரிமார்களால் அவர்கள் ஏமாற்றப்பட்டு வந்தார்கள்.

அதாவது, ‘பாவமன்னிப்புச் சீட்டு’ வாங்குவது என்பதாகும். ஒருவன் எத்தகைய தீச்செயலையும் செய்துவிட்டுப் பாதிரியாரிடம் சென்று, “அய்யா!

நான் இன்ன பாவம் செய்தேன். அதற்கு ‘மன்னிப்பு டிக்கெட்’ வேண்டும்” என்று கேட்டதும், உடனே பாதிரியார், அந்தந்தப் பாவத்தின் நிலைக்குத் தக்கபடி கிரயம் போட்டுப் பணம் வாங்கிக் கொண்டு டிக்கெட் கொடுத்து விடுவதும் அங்கே இருந்தது. அந்த டிக்கெட்டுகளை கடைகளிலும், சந்தைகளிலும் கட்டுக்கட்டாகக் கட்டிப் போட்டுக் கொண்டு விற்று வந்தார்கள். சந்தைகளில் மற்ற சாமான்கள் விற்பதுபோல பாவமன்னிப்பு டிக்கெட்டுகளும் விசேஷமாக விற்கப்பட்டு வந்தன. இம்மூடக் கொள்கையிலிருந்து ஜன சமூகத்தை விழிக்கச் செய்ய அநேக சீர்திருத்தக்காரர்கள் அக்காலத்தில் தோன்றினர்.

ஒரு பாதிரியார், முக்கியஸ்தர், ஒரு சீர்திருத்தக்காரர், அப்பாதிரியாரிடம் சென்று, ‘இதுவரை செய்த பாவங்களுக்குத் தான் மன்னிப்புக் கொடுக்கின்றீர்களே! இனிமேல் புதிதாகச் செய்யப் போகும் பாவங்களுக்கும் மன்னிப்புச் சீட்டு இருக்கிறதா?’ என்று கேட்டதற்கு அப்பாதிரியார்,

‘ஆம்! இருக்கிறது’ என்று கூறி, ‘இனிமேல் செய்யப்போகும் பாவத்தை மன்னிப்புச் செய்வதற்காக’ என்று பணம் வாங்கிக் கொண்டு ஒரு டிக்கெட்டைக் கொடுத்தார். அந்த டிக்கெட்டை அச்சீர்திருத்தக்காரர் வாங்கி வைத்துக் கொண்டு ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தார். சந்தையில், அப்பாதிரி டிக்கெட்டுகளை எல்லாம் விற்றுவிட்டுப் பணத்தை மூட்டை கட்டிப் போட்டுக் கொண்டுவரும் வழியில், அவனை அடித்து அவனிடமிருந்த பணத்தையெல்லாம் பிடுங்கிக் கொண்டார்.

அச்சீர்திருத்தக்காரரைப் பார்த்துப் பாதிரியார், “நான் பாவ மன்னிப்பு டிக்கெட் விற்பவரல்லவா? உலகிற்கே நன்மை செய்யும் என்னை இவ்விதம் துன்பப்படுத்திப் பணத்தையும் பிடுங்கிக் கொள்வது பெரும் பாவமல்லவா?” என்று கேட்டதற்கு – அச் சீர்திருத்தக்காரர், “கோபித்துக் கொள்ளாதீர்கள். தவறாக நான் ஒன்றும் செய்துவிடவில்லை. இதோ இந்தப் பாவத்திற்கும் மன்னிப்பு டிக்கெட் வைத்திருக்கிறேன். அதை, உம்மிடம்தான் முதலில் வாங்கினேன். நீர்தானே – இனிமேல் செய்யும் பாவத்தையும் இந்த டிக்கெட் மன்னித்துவிடும் என்று கூறினீர்” என்று சொன்னாராம்.

அவ்வளவு மோசமான நிலையில் இருந்த அவர்கள் பாதிரிமார்களின் ஆதிக்கத்தை ஒழித்த பின்பே சுயமரியாதை பெற்றுத் தங்கள் நாட்டைத் தாங்களே ஆளுந்திறமையுடன் மட்டுமல்லாமல், உலகிலேயே பெரும் பகுதியை ஆளும் நிலைமையையும் பெற்றுள்ளார்கள்.

(பெரியார் பேச்சு –

‘வைக்கம் வீரர் சொற்பொழிவு’ நூலிலிருந்து – 1928)

பெரியார் முழக்கம் 23062016 இதழ்

You may also like...