பெண் விடுதலை பேசும் ‘இறைவி’

எவரும் தொடுவதற்கு அஞ்சும் பிரச்சினையை  திரைப்படமாக்க முன் வந்த துணிவுக்காகவே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜைப் பாராட்ட வேண்டும். அவரது

எழுத்து-இயக்கத்தில் வெளி வந்திருக்கும் ‘இறைவி’ படம் பெண்ணுரிமை என்பதையும் தாண்டி பெண்  விடுதலையைப் பேசுகிறது. ஆண்கள் தங்களிடம் கட்டி எழுப்பியிருக்கும் ‘ஆணாதிக்கம்’ என்ற ஆணவத்துடன்  எடுக்கும் முடிவுகள், பெண்களிடம் உருவாக்கும் கடும்

பாதிப்புகளையும் வலிகளையும் அழுத்தமாக உணர்த்தி யிருக்கிறார் இயக்குனர்.

சிலப்பதிகாரம் – தமிழ் தேசிய இலக்கியமாக – தமிழ் தேசியவாதிகளால் முன் வைக்கப்படுகிறது. அதில் அடங்கியுள்ள பெண்ணடிமை சிந்தனையை பெரியார்

கேள்விக்குள்ளாக்கினார். மாதவி எனும் தாசி  வீட்டுக்குச் சென்ற கணவன் கோவலன், எப்போது  திரும்பி வருவான் என்று உடலையும் உள்ளத்தையும் வருத்தி காத்திருக்கிறாள் கண்ணகி. இதேபோல் கண்ணகி, தனது  காதலன் வீட்டுக்குச் சென்றால், கோவலன் காத்திருப்பானா என்று பெரியார் கேட்ட கேள்வியை இத்திரைப்படமும் கேட்கிறது.

கைவிட்டு ஓடிய காதலனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பாத்திரம் இந்த படத்தில் காதலையும் திருமணத்தையும்  கேள்விக்கு உட்படுத்துகிறது. கொலைக் குற்றத்தில் சிறைக்குப் போய்விட்டு திரும்பிய கணவன், தனது மனைவியை மிகவும் நெருக்கமான நண்பன் ஒருவன் காதலித்த செய்தியை அறிகிறான். இதே கணவன் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து,  அவளுடன் படுக்கையையும் பகிர்ந்து கொண்டவன்தான். கணவனின் சந்தேகத்திற்கு மனைவி துணிவுடன் பதில் கூறுகிறாள். “உன்னுடைய நண்பன், அவனது காதலை என்னிடம் கூறியது உண்மைதான். நான் அதற்கு அவனிடம் பதில்  கூறவில்லை. ஊரைவிட்டு இங்கு வந்து விட்டேன்.” “அது மட்டும்தானா?” என்று கணவன் மீண்டும் கேட்கிறான். அப்போது மனைவி கூறும் பதில்தான் பெண்ணுரிமையின் உச்சம். “படுத்திருந்தேனா என்று கேட்கிறாயா? அதற்கு நான் உனக்கு  பதில் கூறப் போவது இல்லை. இந்தக் கேள்வியை கேட்கும் உரிமையும் உனக்கில்லை” என்று நெத்தியடி தருகிறாள். தன்னை  ‘பத்தினி’யாக நிரூபிக்கும் அவசியமில்லை என்பதே இதில் அடங்கியுள்ள கருத்து. படத்தின் இறுதிக் காட்சியில்  தொடர்வண்டி நிலையத்தில் கதாநாயகன் சூர்யா பேசும் வசனம், படத்தின் மய்யக் கருத்தை உடைத்துப் பேசுகிறது.

“பொறுத்துப் பொறுத்துப் போவதற்கு நாங்க என்ன பொம்பளைங்களா? நான் ஆண்; ஆண்-அது நெடில்; பெண்-அது குறில்.”  ஆண் ஆதிக்க உணர்வு கொண்ட கொலையுண்ட கணவர்களின் இரண்டு மனைவியர்கள், கணவர்களை இழந்த பிறகு  தங்கள் குழந்தைகளுடன் பேசும் இறுதிக் காட்சிகளில் அவர்கள் விடுதலை பெற்ற மனஉணர்வுக்கு வந்துவிட்டதாகவே  இயக்குனர் உணர்த்துகிறார். “மழையில் நனைவோம்” என்று குழந்தைகளுடன் பேசி, தங்களின் மன உணர்வை  வெளிப்படுத்துகிறார்கள். மனிதன் என்ற சொல்லுக்கு பெண்பால் சொல் இல்லை. இயக்குனர் ‘மனிதி!’ என்ற சொல்லை

அறிமுகப்படுத்துகிறார். ‘மனிதியே வெளியில் வா’ என்ற முத்தாய்ப்பான பாடல் வரிகளுடன் படம் முடிகிறது. ‘இறைவன்’

என்ற சொல்லுக்கு, பெண்பால் ‘இறைவி’ – சங்க இலக்கியங்களில் கூறப்பட்ட இந்த சொல் வழக்கொழிந்து நிற்கிறது.  இயக்குனர் இதையே படத்தின் தலைப்பாக்கியிருக்கிறார்.

‘விபச்சாரி’ என்ற சொல்லுக்கு ‘விபச்சாரகன்’ என்ற ஆண்பால் சொல் ஏன் இல்லை? ‘விதவை’ என்ற சொல்லுக்கு  ‘விதவன்’ என்ற ஆண்பால் சொல் ஏன் இல்லை? – இது பெரியார் கேட்ட கேள்வி. அதே திசையில் இயக்குனரும்  சிந்தித்திருக்கிறார். படம் நீண்டு கொண்டே போவதும், இடையிடையே சோர்வுகளைத் தருவதும் உண்மைதான் என்றாலும்

அதையும் தாண்டி துணிவுடன் பெண் விடுதலையைப் பேசும் இத் திரைப்படத்தையும் எழுதி இயக்கிய கார்த்திக் சுப்புராஜையும்  பாராட்ட வேண்டும்.

– இரா

பெரியார் முழக்கம் 09062016 இதழ்

You may also like...