கையில் கதாயுதம்!
உ.பி.யில் தேர்தல் வரப் போகிறது அல்லவா? அதற்காக பிரதமர் வழக்கமாக பங்கேற்கும் ‘இராம லீலா’ கொண்டாட்ட மும், புதுடில்லியிருந்து ‘கான்பூருக்கு’ இடம் மாற்றப்பட்டுவிட்டது.
பிரதமர் முன்னிலையிலேயே ‘இராவணன் உருவம்’ எரிக்கப்பட்டிருக் கிறது! ‘இராவணன்’ பயங்கரவாதத்தின் அடையாளம் என்று பேசியிருக்கிறார் மோடி. அப்போது அவரது கையில் பூக்கொத்து இருந்ததாக நினைத்து விடாதீர்கள். கையில் ‘கதாயுதம்’ என்ற புராண கால ஆயுதத்தைத் தான் வைத்துக் கொண்டிருந்தார். எதிரிகளை மண்டையில் அடித்து சாகடிப் பதற்காக, புராண காலங்களில் கண்டு பிடிக்கப்பட்ட ஆயுதம் இது! மேடையில் மரத்துக்குப் பின்னால் நின்று, ‘வாலி’யை இராமன் சாகடிப்பதற்குப் பயன்படுத்தி னானே அந்த ‘வில்-அம்பு’ எனும் ஆயுதமும், மோடிக்கு பரிசாக வழங்கப்பட்டதாம். இவ்வளவு ‘புராண கால ஏவுகணைகளை’ யும் ஏந்திக் கொண்டுதான் இராவணன் பயங்கரவாதி என்றும், பயங்கரவாதத்தை ஒழிப்போம் என்றும் கூவியிருக்கிறார் மோடி.
இராமன், சீதையை கடத்தியது பயங்கர வாதம் என்றால், ‘இராமன்-இலட்சுமணன் அண்ட் கோ’, இராவணன் சகோதரி ‘சூர்ப்பனகை’யின் முகத்தையும் மார்பையும் சிதைத்ததற்கு என்ன பெயர்? ‘கருணை’ச் சிதைப்பா?
இராமனின் அன்றைய ‘வெளியுறவு தூதர்’ அனுமான், அண்டை நாடான இலங்கைக்குள் ‘விசா’ இல்லாமல் அத்துமீறி நுழைந்து நாட்டையே தீ வைத்து எரித்தது, பயங்கரவாதமா? அல்லது நல்லெண்ணத் தூதா?
கேட்டால், இலங்கையே ‘இராவணன் ஆக்கிரமித்த இந்திய’ பகுதிதான் என்று சொல்வார்கள் போலிருக்கிறது!
வடக்கே அயோத்தியிலிருந்து புறப்பட்ட இராமன், ஏன், இலங்கைக்கு பக்கத்திலுள்ள தென்னகப் பகுதி காடுகளை ஆக்கிரமித் தான்? இது இராமனின் ஆக்கிரமிப்பு இல்லையா? படையெடுப்பு அல்லவா? இதைக் கேட்டால் தேசப் பாதுகாப்பு என் பார்கள்! அல்லது ‘சர்ஜிக்கல் ஆபரேஷன்’ என்று பெயர் சூட்டி விடுவார்கள்.
‘சுரா பானம்’ என்ற அன்றைய ‘டாஸ்மாக்’ சரக்கைக் குடித்தவர்கள் ‘சுரர்கள்’. அந்த போதையை வெறுத்த வர்கள் ‘அசுரர்கள்’. அந்த ‘அசுரர்’களை அழிப்பதற் கும், பிணமாக்குவதற்கும் ‘அவதாரம்’ எடுத்த தேவர்கள், பரமசாதுக்களாம்! வாயில் விரலை வைத்தால்கூட கடிக்கத் தெரியாத வர்களாம்! ஆனால், இவர்களின் பயங்கர வாத படுகொலைக்கு உள்ளானவர்கள் பயங்கரவாதிகளாம்!
அசுரர்களை அழித்துக் கொலை செய்வதை விழாக்களாகவே கொண்டாடு கிறார்கள்.
அதற்குப் பெயர் ‘சூரசம்ஹார’மாம்!
பார்ப்பன அகராதியில் எல்லாமே தலைகீழ்தானப்பா! மோடியை – காந்தி என்பார்கள்; அமித்ஷாவை – சாந்த சொரூபி என்பார்கள்; எச். ராஜாவை – தேசபக்தன் என்பார்கள்.
– கோடங்குடி மாரிமுத்து
பெரியார் முழக்கம் 27102016 இதழ்