தூத்துக்குடியில் “நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்புப் பரப்புரை”ப் பயணம்
தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 27.08.2016 சனிக்கிழமை அன்று மத்தியில் ஆளும் மோடியின் பி.ஜே.பி. அரசால் – கல்வி, வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் பட்டியல் இனத்தினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்புப் பரப்புரைப் பயணம் தூத்துக்குடி முதல் ஆழ்வார்திருநகரி வரை கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
27.08.2016 காலை 9.00 மணிக்கு தூத்துக்குடி பாளை சாலையில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் சிலை அருகே தொடங்கிய பரப்புரைப் பயணத்தை ஆதித்தமிழர் கட்சி மாநில துணைப் பொதுச்செயலாளர் க. கண்ணன் தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் பொறிஞர். சி. அம்புரோசு, தோழர்.கோ.அ. குமார் ஆகியோரது உரையைத் தொடர்ந்து கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் பயணத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினார். முன்னதாக தந்தை பெரியார்-புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு பரப்புரைச் செயலாளர் மற்றும் மாவட்ட தலைவரால் மாலை அணி விக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி சிதம்பரநகர் – ஸ்பிக் நகர் – பழையகாயல் – வடக்கு ஆத்தூர் – காயல்பட்டினம் போன்ற பகுதிகளில் மதிய உணவிற்கு முன் பரப்புரைப் பயணக்குழுவினர் பரப்புரையை மேற்கொண்டனர். இப்பகுதிகளில் செ.செல்லத்துரை, கோ.அ.குமார், வே.பால்ராசு, அணைக்கரை பால்வண்ணன், பொறிஞர். சி. அம்புரோசு, பரப்புரைச் செயலாளர் பால்பிரபாகரன் ஆகியோர் உரையாற்றினர். மதிய உணவினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தென்மண்டலச் செயலாளர் சொ.சு.தமிழினியன் (சமநீதி எழுத்தாளர் ஏபி.வள்ளிநாயகம் சகோதரர்) தனது இல்லத்தில் ஏற்பாடு செய்தார். காயல் பட்டிணம் நகர விசிக சார்பில் பயணக் குழுவிற்கு வரவேற்பு அளிக்கும் வகையில் அழகாபுரியில் வரவேற் பளித்தனர். கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரனுக்கு சால்வை அணிவித்து பயணக் குழுவை வரவேற்றனர். மதிய உணவிற்கு பின் ஆறுமுகநேரி அம்மன்புரம்-குரும்பூர் பகுதிகளில் பரப்புரை நடைபெற்றது. இப்பகுதியில் நடைபெற்ற பரப்புரையில் சொ.சு.தமிழினியன் கலந்து கொண்டார். இப்பகுதியில் விசிக தோழர்கள் பயணக் குழுவை வரவேற்றனர். மாலை 6.15 மணிக்கு ஆழ்வார் திருநகரியை அடைந்தபோது எல்லைபகுதியில் வி.சி.க. தோழர்கள் திரளாக நின்று வரவேற்பு கொடுத்தனர். விசிக உடன்குடி ஒன்றிய செயலாளர் சங்கர், திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதி செயலாளர் திருவள்ளுவன் ஆகியோர் கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் மற்றும் மாவட்டத் தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு அவர்களுக்கும் சால்வை அணிவித்தனர். தாமிரபரணி ஆற்றுபாலம் அருகில் அமைக்கப்பட்டுள்ள கழகத்தின் முன்னாள்மாவட்டத் தலைவர் நாத்திகன் இ.சேது இராமசாமி நினைவு கொடிக்கம்பத்தில் விசிக தென் மண்டல செயலாளர் சொ.சு. தமிழினியன் கழகக் கொடியை ஏற்றி வைத்தார். மாலை 6.30 மணிக்கு நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்புப் பொதுக்கூட்டம் தொடங்கியது. மாவட்டத் தலைவர் பொறிஞர். சி. அம்புரோசு தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஆழ்வை ஒன்றிய தலைவர் நாத்திகம் ப.முருகேசன், விளாத்திக்குளம் ஒன்றியச் செயலாளர் மாரிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆழ்வை ஒன்றியச் செயலாளர் இரா. உதயக்குமார் வரவேற்புரையாற்றினார்.
நிகழ்வின் தொடக்கமாக காவை. இளவரசனின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் சண்முகவேல், சொ.சு.தமிழினியன் உரை யாற்றினர். தமிழினியன் தனது உரையில், “பெரிய கட்சிகளே செய்ய தயங்கும் இப்பணியினை திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள். கை பணத்தை செலவு செய்து இவர்கள் செய்யும் பணி இவர்கள் நன்மைக்காக அல்ல, மக்களின் நன்மைக்காக மட்டுமே. இவர்கள் பதவி சுகத்தை அனுபவிப்பவர்கள் அல்ல. இந்த மக்கள் பதவி சுகத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே போராடுகிறார்கள். மக்கள்மத்தியில் பிரச்சாரம் செய்கிறார்கள்.
இவர்களுக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பணியினை பற்றியும்” விரிவாக உரையாற்றினார். நிறைவாக கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் தனது உரையில் பி.ஜே.பி. ஆட்சியில், ஆர்.எஸ்.எஸ். கும்பல்கள் செய்து வரும் இந்து மயமாக்கலையும் அதனால் ஏற்படும் கேடுகளையும் விளக்கினார் – புதிய கல்வி கொள்கை மருத்துவ கல்விக்கு நுழைவு தேர்வு-சமஸ்கிருத திணிப்பு, வேலை வாய்ப்பில் புறக்கணிப்பு போன்றவற்றை விளக்கி உரையாற்றினார். இறுதியில் மாவட்டச் செயலாளர் ச. இரவி சங்கர் நன்றி கூறினார். தோழர்களுக்கு இரவு உணவு ஆழ்வை ஒன்றிய கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப்பயணத்தில் ஆதித்தமிழர் கட்சி மாவட்ட மாணவரணி செயலாளர் கில்லு மற்றும் தோழர்களும் கலந்து கொண்டனர். பயணத்திற்கான ஏற்பாட்டை மாவட்டத் தலைவர் பொறிஞர். சி. அம்புரோசு, மாவட்டச் செயலாளர் ச. இரவிசங்கர், மாவட்டத் துணைத் தலைவர் வே. பால்ராசு, தோழர். கோ.அ.குமார், இரா. உதயக்குமார்,ப. முருகேசன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
பயணத்தில் கலந்து கொண்ட கழகத் தோழர்கள்
பால். பிரபாகரன் (மாநில பரப்புரைச் செயலாளர்), பொறிஞர். சி. அம்புரோசு (மாவட்டத் தலைவர்), ச. இரவிசங்கர் (மாவட்டச் செயலாளர்); வே. பால்ராசு (மாவட்ட துணைத் தலைவர்), பால். அறிவழகன் (மாவட்ட அமைப்பாளர்), ச.கா. பாலசுப்பிரமணியன் (மாவட்ட துணைச் செயலாளர்), அ. பிரபாகரன் (தமிழ்நாடு மாணவர் கழகம்), கோ.அ.குமார், சா.மாரிச்சாமி (விளாத்திக்குளம் ஒன்றியச் செயலாளர்), அணைக்கரை பால் வண்ணன் (நெல்லை மாவட்டத் தலைவர்), சு. அன்பரசு (நெல்லை மாவட்ட அமைப்பாளர்), குறும்பை மாசிலாமணி (கீழப்பாவூர் ஒன்றியத் தலைவர்), ச. சுப்பையா (கீழப்பாவூர் ஒன்றியச் செயலாளர்), சங்கர் (கீழப்பாவூர் ஒன்றிய பொருளாளர்), சந்திர சேகர், செ. செல்லத்துரை, சக்திராஜ், வெற்றிமணி, அறிவழகன், திலீபன், பெரிய சாமி, சேனல் கரை ரமேஷ், குலசேகரம் சேவியர், அய்யனார், சி.ஆ. காசிராசன், இரா. உதயக்குமார், ப. முருகேசன்.
தோழர்களை உற்சாகமூட்டிய நிகழ்வு
பயணக்குழுவினர் பயணத்திற்கு இடையில் தேனீருக்காக தென் திருப்பேரையில் நின்று தேனீர் குடிக்கும்பொழுது துண்டறிக்கைகளை கடைகள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கினர். அவ்வழியே காரில் வந்த இசுலாமியர்கள் துண்டறிக்கையினை வாங்கி படித்ததோடு தோழர்கள் பணியினை பாராட்டிய தோடு மகிழ்ச்சியினை தெரிவித்தனர். ஐந்து நூறு ரூபாயை உண்டியலில் போட்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும் தோழர்கள் காயல்பட்டணம் பகுதியில் துண்டறிக்கை கொடுத்து உண்டியல் ஏந்திய போது ஒரு கடைக்காரர் கடை உரிமையாளர் இல்லை என தெரிவித்து உண்டியலில் பணம் போட மறுத்து விட்டார். தோழர்கள் துண்டறிக்கையினை படியுங்கள் என மகிழ்வுடன் கூறிவிட்டு வந்துவிட்டனர். தோழர்களை துண்டறிக்கை கொடுத்துவிட்டு அதே வழியில் வந்தபோது கடை உரிமையாளர் இல்லை என சொன்ன நபர் தோழர்களை அழைத்து நன்கொடை கொடுத்து உற்சாகப்படுத்தினார்.
பெரியார் முழக்கம் 08092016 இதழ்