ஓம் சிவாய நம!

அது, 15,000 விஞ்ஞானிகள் கூடியிருந்த மாநாடு. நடந்த இடம் மைசூரு பல்கலைக்கழகம். உள்நாடு மட்டுமல்ல, வெளிநாட்டு விஞ்ஞானிகளும் கூடியிருந்தார்கள். பல ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப்பட்டன. அதிலே ஒன்று விஞ்ஞானிகளை வயிறு குலுங்க சிரிக்க வைத்துவிட்டது. சிரித்து சிரித்து வயிறு ‘புண்’பட்டு விட்டது என்றுகூட சொல்லலாம், போங்க!
“உலகத்திலேயே தலைசிறந்த சுற்றுச்சூழல்வாதி யார் தெரியுமா? எங்கள் சிவபெருமான்தான்” – இப்படி ஒரு ‘ஆராய்ச்சி’யை அள்ளிவிட்டு அகிலத்தையே குலுங்க வைத்திருப்பவர் அகிலேஷ் பாண்டே என்ற பார்ப்பனர். மத்திய பிரதேசத்தில் பல்கலைக் கழகம் ஒன்றில் பேராசிரியரான அவர் தனது கடுமையான ஆராய்ச்சியின் வழியாக கண்டறிந்த அரிய தகவல்கள் இதோ!
“சிவபெருமான் தலையில் கங்கை இருக்கிறது; அந்த கங்கை நீரை சுத்தப்படுத்தும் வேலையை சிவபெருமானே செய்கிறார். சுத்தப்படுத்தியதோடு நிற்கவில்லை; அந்த நீரை மக்களுக்கும் உயிரினங்களுக்கும் விநியோகம் செய்தவரும் அவர்தான். இவரைவிட சிறந்த ஒரு சுற்றுச் சூழல்வாதி யார் இருக்க முடியும்?”
15,000 விஞ்ஞானிகள் நிறைந்த சபையில் இப்படியெல் லாம் ஒரு ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பிப்பதில் கூச்சமோ, வெட்கமோ இல்லாத அந்த அபார துணிவு இருக்கிறதே! அதற்கு தலைவணங்கியே ஆகவேண்டும். இது என்ன அவ்வளவு சாதாரணமான கண்டுபிடிப்புகளா? முதலில் சிவபெருமானை கண்டுபிடித்திருக்கிறார்; இரண்டாவதாக கைலாசமலையில் சிவபெருமான் இருப்பதை கண்டறிந்திருக்கிறார்.
மூன்றாவதாக – அந்த சிவபெருமான் தலையில் இருப்பது கங்கைதான் என்பதை உறுதி செய்திருக்கிறார். அந்த கங்கையை சுத்தப்படுத்தும் வேலையை செய்வதும் சிவபெருமான் என்பதை நிறுவிக் காட்டியிருக்கிறார். இது மட்டுமா?
சிவபெருமான் விலங்குகளிடம் பின்பற்றிய உறவுமுறை களையும் ஆராய்ந்திருக்கிறார். சிவபெருமான், மாடு, மயில், எலி போன்ற விலங்கினங்களோடு உறவு கொண்டு, ‘உயிர்ப் பன்மைத்துவத்தை’ காப்பாற்றியிருப்பதையும் கண்டறிந்திருக் கிறார். அடேங்கப்பா! இந்த ஆய்வாளருக்கு ஒரு சிறிய விண்ணப்பம்.
சிவபெருமான் பார்வையிலிருந்து இந்த விலங்குகளை ஆய்வு செய்ததுபோல், இந்த விலங்குகளின் பார்வையி லிருந்து சிவபெருமானின் ‘சுற்றுச் சூழல்’ ஆர்வத்தை நிலை நிறுத்தியிருந்தால் ஆராய்ச்சி மேலும் ‘களை கட்டியிருக்கும்’ என்பதே நமது தாழ்மையான வேண்டுகோள்.
அடுத்ததாக மாடு, எலிகளை சந்தித்துப் பேசி, சிவபெருமான் இவைகளிடம் எப்படி எல்லாம் சுற்றுச் சூழல் கண்ணோட்டத் தோடு நடந்து கொண்டார் என்ற விவரங்களை அடுத்த அறிவியல் மாநாட்டில் இவர் சமர்ப்பிக்க வேண்டும். அந்த ஆராய்ச்சிக்கு நோபல் பரிசுகளைக்கூட தட்டிச் செல்ல வாய்ப்புகள் உண்டு!
இதே மாநாட்டில் அறிவியல் கண்டுபிடிப்புக்கான நோபல் பரிசு பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த வெங்கட்ராம கிருஷ்ணனும் கலந்து கொண்டாராம். பாண்டே ஆராய்ச்சிக் கட்டுரை இவரை அதிர வைத்திருக்கும் போலிருக்கிறது.
“இந்திய அறிவியல் மாநாட்டில் ஒரே ஒருமுறைதான் இப்போது பங்கேற்றேன். அங்கு அறிவியல் மிகமிகக் குறைந்த அளவில்தான் பேசப்பட்டது. மற்றபடி இந்த அறிவியல் மாநாடு ஒரு சர்க்கசைப்போலத்தான் நடைபெறுகிறது. இனி இந்திய அறிவியல் மாநாட்டில் நான் பங்கேற்க மாட்டேன்” என்று ‘புண்படுத்தும்’ கருத்துகளை வீசிவிட்டார் வெங்கட்ராம கிருஷ்ணன்.
இவர் இந்தியாவை, அதுவும் தமிழ்நாட்டைச் சார்ந்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி. அவரே இப்படியெல்லாம் பேசலாமா என்று நமது “புராண விஞ்ஞானிகள்” வேதனைப்பட வேண்டாம்.
விடுங்க; மோடியே, விஞ்ஞானிகள் மாநாட்டில் நமது புராணப் பெருமைகளைத்தான் பறைசாற்றிக் கொண்டிருக் கிறார். இந்த ஆள் எம்மாத்திரம்?
அறிவியலாவது; சோதனை சாலையாவது; ஆராய்ச்சி யாவது; புடலங்காயாவது; இதெல்லாம் யாருக்கு வேணும்! புராணங்களில் – வேதங்களில் – சாஸ்திரங்களில் இல்லாத விஞ்ஞானமா?
சிவபெருமானே நமக்கு வழிகாட்டி; புராணங்களே நமது அறிவியல்; சா°திரங்களே நமது ‘சயின்°’!
‘ஓம், சிவாய நம!’
– கோடங்குடி மாரிமுத்து

பெரியார் முழக்கம் 21012016 இதழ்

You may also like...