பகுத்தறிவு

பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருக்கிறீர்கள். சுதந்திரத்தையும் சமுத்துவத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்கத் தயாரா யிருக்கிறீர்கள். ஆனால், உங்கள் பகுத்தறிவைச் சிறிதளவுகூடப் பயன்படுத்தத் தயங்குகிறீர்கள். இதில் மாத்திரம் ஏன் வெகுசிக்கனம் காட்டுகிறீர்கள்? இந்நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது? – (கு.1.11.36;5:1)

 

மந்திரியாவதைவிட, முதல் மந்திரியாவதைவிட, கவர்னராவதைவிட, கவர்னர் ஜெனரலாவதைவிட, அதற்கும் மேலான மகாத்மா ஆவதைவிட முதலில் நாமெல்லாம் மனிதர்களாக வேண்டும். மனிதர்களாக வேண்டுமானால் முதலாவது பகுத்தறிவு விளக்கமாக ஆகவேண்டும். இயற்கைச் சிந்தனாசக்தி வளர்க்கப்பட வேண்டும். – (வி.6.12.47;1:3)

ஒரு சேலை வாங்கினால்கூட சாயம் நிற்குமா? அதன் விலை சரியா? இதற்கு முன் இவர் கடையில் வாங்கிய சேலை சரியாக உழைத்திருக்கிறதா? இக்கடைக்காரர் ஒழுங்கானவர்தானா? என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்துத்தான் வாங்குகிறோம். இப்படிப்பட்ட சில்லறைக் காரியங்களுக்கெல்லாம் பகுத்தறிவை உபயோகிக்கும் நாம் சில முக்கியமான விசயங்களில் மட்டும் பகுத்தறிவை உபயோகிக்கத் தவறிவிடுகிறோம். இதனால் ரொம்பவும் ஏமாந்தும் போகிறோம். இதை உணர்த்துவதுதான் பகுத்தறிவின் அவசியத்தை வற்புறுத்துவதுதான் எனது முதலாவது கடமை. – (கு.1.5.48;12:2)

You may also like...