தலித்துகள் மீதான படுகொலைகள், பின்னணி, வழக்குப் பதிவு, சட்ட நடவடிக்கைகள் போன்றவை குறித்த பொது விசாரணை திருச்சி 24092017
24-9-2017, ஞாயிறு, காலை 10-00 மணியளவில் திருச்சி, செய்ண்ட் ஜோசப் கல்லூரி நூலக அரங்கில், சமீப காலமாக தமிழகத்தில் அதிகரித்துவரும் தலித்துகள் மீதான படுகொலைகள், பின்னணி, வழ்க்குப் பதிவு, சட்ட நடவடிக்கைகள் போன்றவை குறித்த பொது விசாரணை நடைபெற்றது. இதனை தமிழகத்தில் தீண்டாமை வன்கொடுமை வழக்குகளில் முனைப்பாகத் தலையிட்டு உரிய நீதி பெறுவதிலும், பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு, நிவாரணம், ஈடுசெய்நீதி ஆகியவற்றுக்காகவும் ஈடு இணையற்றப் பணியாற்றிவரும் எவிடன்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. எவிடன்ஸ் முத்து வரவேற்புரையைத் தொடர்ந்து, எவிடன்ஸ் செயல் இயக்குநர் கதிர் பொது விசாரணையின் நோக்கம் குறித்தும், தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15 தலித்துகள் கொலையானதையும் கடந்த ஒரு ஆண்டு காலத்தில் தலித் செயல்பாட்டாளர்கள் 25 பேர் கொலையுண்டுள்ளதையும் குறிப்பிட்டு உரையாற்றினார். மேலும் வன்கொடுமைத் திருத்தச் சட்டம் குறித்தும், அவற்றைப் பயன்படுத்திப் பாதிக்கப்பட்டோருக்கு இடைக்கால நிவாரணம், மாதாந்திர குடும்ப உதவிநிதி பெற்றுள்ளது குறித்தும், பாதிக்கப் பட்ட தரப்பினர்...