தர்மராஜ்ய தர்பார்

 

ஒரு  கனவு

யார் எழுதினால் என்ன?

1.9.35ந்தேதி “”குடி அரசில்” “”தர்மராஜ்ய விளம்பரம்” என்று ஒரு கட்டுரையும், 15.9.35 ந் தேதி “”குடி அரசில்” “”தர்மராஜ்ய ஸ்தாபனம்” என்ற கட்டுரையும் எழுதி இருந்தேன். இப்போது “”தர்மராஜ்ய தர்பார்” என்ற கனவைப் பற்றி எழுதுகிறேன்.

தர்மராஜ்ய பூபதி, ராமராஜ, கிருஷ்ண தேவ, மஹாவீர, புஷ்யமித்ரவர்மன், ஆடையாபரண அலங்கிருதனாய், அப்ஸர ஸ்தீரிகள் முன் செல்ல, நாற்படைகள் அணி வகுத்து நிற்க, வேதப்பிராமணர் ஆசி கூற, பல சிற்றரசர்கள் புடை சூழ, தர்பார் மண்டபத்தில் பிரவேசித்தார்.  சபையில் இருந்த எல்லோரும் எழுந்து நின்று நமஸ்கரித்து, “”ஜயவிஜயீபவ! ஜயவிஜயீபவ!! ஜயவிஜயீபவ!!!” என்று ஜய கோஷஞ் செய்தனர். இரத்தினங்கள் ஒளி வீச ஒய்யார நடை நடந்து, அரசன் சிங்காதனத்தமர்ந்தனன்.

மந்திரிகள்@ வந்தனந் தந்தோம் மஹாராஜ்!

அரசன்@ கல்யாண்! கல்யாண் மந்திரிகளே!

மந்@ ராஜபூபதி! நமது தர்மராஜ்யம் ஸ்தாபனமாகி இன்றைக்கு இரண்டு தினங்களாகின்றன. நேற்றைய தர்பாரில் அரசியல் விஷயங்களைக் கவனிக்கப் போதிய நேரமில்லாததால் பரத நாட்டிய விமர்சனத்தோடு தர்பார் கலைந்தது. இன்றைய தர்பாரில் தங்கள் முன்னிலையில் சங்கீதம், பரதநாட்டியம்,  இவ்விரண்டு கலைகளிலும் தேர்ச்சி பெற்ற பாரசீக நாட்டுப் பெண்மணி ஒருத்தியும், காஸ்மீகர நாட்டுக் கன்னியர் இருவரும் தங்கள் கலைத் திறமைகளைக் காட்ட ஆவலோடு தங்கள் உத்திரவை எதிர்பார்த்திருக் கிறார்கள். அரசாங்க விஷயங்கள் சில அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டியிருக்கின்றன. தங்கள் இஷ்டம் எதுவோ தெரிவிக்க வேண்டுகிறோம்.

அர@ பிரதானீ! நமது குடிபடைகளின் கலைத் தேர்ச்சியைக் கவனித்துச் சன்மானிப்பதும் நமது கடமையல்லவா? அரச காரியங்களில் சேர்ந்ததல்லவா? ஆகையால் முதலில் சங்கீத, நாட்டிய விற்பன்னிகளின் பயிற்சி நடக்கட்டும்.

ஆஸ்தான ஆச்சார்ய ஸ்வாமிகள் குறுக்கிட்டு,

“”அரசே! நான் சொல்வதைக் கவனியும்! நம்முடைய தர்மராஜ்யம் இன்னும் வலுப்பெறவில்லை. ஆரம்பத்திலேயே, அரசன் தேச காரியங்களைக் கவனியாமல் ஆடல் பாடல்களில் காலங்களிக்கிறான் என்று ஜனங்கள் சொல்ல இடந்தரலாகாது. மேலும் நம்முடைய தர்மராஜ்யத்திற்கு ஆரம்ப காலத்தில் பல விரோதிகள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஒழித்து ராஜ்யத்தைப் பலப்படுத்துவது முதல் கடமை. இது விஷயமாக  உள்நாட்டு மந்திரியார் தேசத்தில் பல மாகாணங்களிலிருந்து விசேஷ வர்த்தமானங்களை அறிந்து சில திட்டங்களைச் சமூகத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறக் காத்திருக்கிறார். ஆகையால், முதலில் வழக்கம் போல் தேச விசாரணை செய்து நீதி செலுத்திப் பின் ஆடல் பாடல்களைக் கவனிக்கலாம்.”

அர@ குருமகாராஜ்! தங்களிஷ்டம் போல் நடக்கின்றேன். பிரதான்! நமது தேசத்தில் மாதமும் மாரி பெய்து குடி ஜனங்களிட்ட பயிர்கள் தழைத்தோங்கி ÷க்ஷமமாயிருக்கின்றனரா?

மந்@ அரசே! வருணபகவானது அனுக்கிரகத்தால் மாதமழை குறைவின்றிப் பெய்கின்றது. குடிகள் யாதொரு குறைவுமின்றி வாழ்கின்றனர்.

அர@ தேவலாயங்களில் திரிகால பூஜைகள் தினந்தோறும் தவறாமல் நடக்கின்றனவா?

மந்@ நாட்டிலுள்ள சர்வ தேவாலயங்களிலும் காலமுறை தவறாமல் பூஜைகள் நடந்து வருகின்றன.

அர@ வேதப் பிராமணர் வேதாகமங்களை ஓதி வருகின்றனரா? அவர் செய்ய வேண்டிய, யாகயெக்ஞாதிகள் யாதொரு இடையூறின்றி நடத்தப் படுகின்றனவா?

மந்@ அரசே! தங்களது ஆக்ஞா சக்கரத்தின் கீழ், அந்தணர்கள் யாதொரு குறையும் இன்றி யாகயெக்ஞங்களைச் செய்து கொண்டும், வேதமோதிக் கொண்டும் வருகின்றனர். இவ் விஷயத்தில் நாங்கள் சர்வ ஜாக்கிரதையாக நடந்து வருகிறோம்.

அர@ சிற்றரசர்கள் தாங்கள் கட்ட வேண்டிய பகுதிப் பணங்களைச் சரிவரக் கட்டி வருகிறார்களா? பொக்கிஷம் நிறைந்துள்ளதா. பொக்கிஷக் கணக்குகளை அவ்வப்போது பரிசோதித்து வருகிறீர்களா?

மந்@ பிரபோ! சிற்றரசர்களின் கப்பங்கள் தடையின்றி வந்து சேர்கின்றன. பொக்கிஷத்திற்கு போதிய திரவியம் இருக்கிறது. பொக்கிஷக் கணக்குகளும் சரியாய் இருக்கின்றன.

அர@ நமது நாட்டில் உள்ள தர்மசத்திரங்களில் எல்லாம், விதிப்படி பிராமண போஜனம் நடந்து வருகிறதா?

மந்@ ஹிமோத்கிரி முதற்கொண்டு, கன்னியாகுமரி வரையுள்ள தங்கள் நாட்டில் ஆங்காங்கு ஏற்பட்டுள்ள சத்திரங்களில் எல்லாம் அரசிறைப் பணத்தில், அந்தணாளர்களுக்குத் தேவையான எல்லாம் குறைவின்றி அளிக்கப்பட்டு வருவதாக ஆங்காங்குள்ள மாகாணத் தலைவர்கள் தினந்தினம் அறிக்கை செய்து வருகின்றனர். இது விஷயத்தில் அசிரத்தைக் காட்டுபவர்களைக் குறித்து அவ்வப்போது கண்டிப்பான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஆகையால் பிராமணோத்தமர் களுக்கு யாதொரு குறைவும் நேர்வதில்லை மஹராஜ்!

அர@ வைசியர்கள் தங்கள் குல நீதிப்படி தங்கள் கடமைகளைச் செய்து வருகின்றனரா?

மந்@ வைசிய ஜாதியார் எல்லோரும் தங்கள் நீதிக்குட்பட்டுக் குல தருமங்களைக் கடைப்பிடித்து நடந்து வருகின்றனர்.

அர@ நான்காம் வருணத்தோராகிய சூத்திரர்கள் தங்கள் ஜாதித் தர்மப்படி மற்ற மூன்று வருணத்தவர்களுக்கும் வேண்டிய ஊழியங்களைச் செய்து வருகின்றனரா?

மந்@ அவ்வாறே நடந்து வருகின்றனர். ஆனால் சிற்சில இடங்களில் மட்டும் ஒரு சிலர் முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றனர். மிலேச்சர்கள் அரசாட்சியில் எல்லோரும் சமம் என்று செய்து வந்த வழக்கத்தினால் இம்மாதிரி சிலர் பேசி வருகின்றனர். நாளடைவில் நமது பிராசீன தர்மம் பிரகாசிக்கப் பிரகாசிக்க எல்லாம் சரிப்பட்டு விடும் மஹராஜ்!

அர@ சந்தோஷம் மந்திரிகளே! வாழ்க வந்தணர் வாழ்க வந்தணர் வானவர் ஆனினம்…. அச்சமயம் உள்நாட்டு மந்திரி எழுந்து “”மஹராஜ்” இப்பொழுதுதான் தென்னாட்டில் நமது சிற்றரசர் சத்தியமூர்த்தியாரிடமிருந்து ஒரு தூதன் மிக முக்கியமானதும்  அவசரமானதுமான தகவல்களைக் கொண்டு வந்து சேர்ந்திருக்கிறான். அவற்றைக் கேட்டருள வேண்டும்.

அர@ நீரே விஷயத்தைச் சீக்கிரம் சொல்லும்.

உ.நா.மந்.@ நமது தர்மராஜ்ய ஆதிபத்தியத்தைத் தேச மஹாஜனங்கள் எல்லோரும் சந்தோஷமாக வரவேற்கிறார்கள். ஆனால் தென்னாட்டில் மட்டும் சில இராக்ஷச வார்சுகள் தங்கள் அரசாட்சிக்கு உட்படுவதில்லை யென்றும், தர்மராஜ்யத்தை வெறுப்பதாகவும், நமது சட்டத்திட்டங்களுக்குப் பணிவதில்லையென்றும் பகிரங்கமாகச் சொல்லிக் கொண்டு தென்னாட்டு ஜனங்களிடம் ராஜத் துவேஷப் பிரசங்கங்களைச் செய்துகொண்டு வேதத்தையும், மதத்தையும், நீதி சாஸ்திரங்களையும் நிந்தித்து ஜனங்களை அராஜகத்திலும், நாஸ்திகத்திலும் செலுத்தி வருகின்றனர்.

அர@ ஆ! அவ்வளவு தைர்யமா அவர்களுக்கு!

உ.நா.மந்.@ ஆம் மஹராஜ்! அவ்வசுரப்படை நாளுக்கு நாள் பெருகி வருவதாகவும், அவர்களின் தலைவர்களாகிய பொப்பிலி அரக்கன், ஈரோட்டு ராம ராக்ஷதன், கோவை ஷண்முகாசுரன், சென்னை ராமாசுரன், மதுரை சௌந்திரபாண்டியாசுரன் முதலானவர்களும், தலைவிகளாகிய நீலி, காமி, குஞ்சி, பூரணி முதலானவர்களும், மிக்க நெஞ்சத் துணிவும், எதற்கும் அஞ்சாத வீரமும் உடையவர்களென்றும், அவர்கள் செய்கின்ற அட்டூழியங்களை ஆஸ்திக ஜனங்களாகிய சனாதனிகளும், முக்கியமாகத் தேவர்களும், பூசுரர்களும் சகிக்க முடியாமல் தர்மராஜ்ய பூபதியாகிய ராமராஜாவிடம் சரண் புகுவதாகத் தெரிவிக்கிறதாகவும், சிஷ்டர்களாகிய சற்ஜனர்களைக் காப்பாற்றி ரக்ஷிக்க முன் வரவேண்டுமென்று கோருவதாகவும் நமது சிற்றரசர் தெரிவிக்கின்றார்.

அர@ அப்படியானால் நாம் செய்ய வேண்டியதென்ன? மந்திரி பிரதானிகளே, சபையோர்களே, இவ்விஷயத்தில் உங்கள் கருத்தைத் தெரிவிக்கக் கோருகிறேன்.

மந்@ மஹராஜ்! இந்த ராக்ஷசக் கூட்டத்தை வளரவிட்டால் நமது ராஜ்யத்திற்கே ஆபத்து வரும் என்பதில் சந்தேகமில்லை. ஆகையால் இவ்வசுரர்களையும் அவர்கள் தலைவர்களையும் முதலில் அழித்து ஒழிக்க வேண்டியது நமது கடமை. துஷ்டர்களை சம்ஹாரம் செய்வது ராஜ தர்மமும் ஆகும். தென்னாட்டில் நமது சிற்றரசர் இடத்துள்ள சேனையால் இந்த ராக்ஷசப்  படையுடன் போர் செய்து ஜயிக்க முடியாது. ஆகையால் இங்கிருந்து ஒரு சைன்யத்தை நமது வீரர் சேனாதிபதி சர்தார்சிங் தலைமையின் கீழ் உடனே அனுப்பி வைக்க வேண்டும் மஹராஜ்!

அர@ ஆம், அது நல்ல யோசனைதான் அப்படியே செய்வோம். இன்னும் இரண்டு தினங்களில் தர்ம ரக்ஷண்யா சேனையுடன் சர்தார் இங்கிருந்து புறப்படவுள்ளார் என்றும், ஒன்றுக்கும் அஞ்ச வேண்டாம் என்றும் நமது சிற்றரசருக்குத் தேறுதல் சொல்லித் தென்னாட்டுத் தூதனை இப்போதே அனுப்பி வைக்க வேண்டியது, குருதேவ்! இந்த ராக்ஷசர்களை யழிக்க இன்னும் என்ன முயற்சியெடுத்துக் கொள்ள வேண்டும். அதையும் தெரிவிக்கக் கோருகிறேன்.

குருதேவ@ அரசே, சேனையை அனுப்பி நமது ராணுவப் பலத்தைக் கொண்டு துஷ்டர்களாகிய அவ்வசுர கூட்டத்தை அறவே ஒழித்துவிடுவது தான் சரியான முறை என்றாலும், உலக நிந்தனை ஏற்படாதபடி, சில முறைகளைக் கையாள வேண்டும். ராக்ஷசர் செய்யும் குற்றங்களை நமது தர்பாரில் விசாரித்து அவர்கள் பேரில் ஏற்படும் குற்றங்களையும், அக் குற்றங்களுக்குத் தர்மசாஸ்திரங்களில் விதிக்கப்படும் தண்டனைகளையும், நாடெங்கும் விளம்பரப்படுத்த வேண்டும். இவ்விஷயமாக நான் மந்திரிகளுடன் கலந்து யோசித்து ஒரு அறிக்கையைத் தயாரித்திருக்கிறேன். அந்த அறிக்கையை உள்நாட்டு மந்திரி இப்போது சமூகத்தில் வாசித்துக் காட்டுவர். பின் இதைத் தேசத்திலுள்ள பத்திரிகைகளில் எல்லாம் பிரசுரிக்கப்படும்.

உ.நா.மந்.@ அரசே! நமது குருதேவருடைய யோசனையின்படி தயாரித்திருக்கும் அறிக்கையாவது: வேத சம்மதமாகவும், கடவுள் சம்மதமாகவும் ஸ்தாபிக்கப்பட்ட நமது தர்ம ராஜ்யத்திற்கும், நமது தேசப் பிராசீன தர்மத்திற்கும், வர்ணாஸ்ரம தர்மத்திற்கும் எதிரிடையாகப் பிரசாரஞ் செய்து, தேவர்களுக்கும், பூசுரர்களுக்கும், வேத வேள்விகளுக்கும் விரோதமாக ஜனங்களைக் கிளப்பிவிட்டு, நாட்டில் குழப்பஞ் செய்து கொண்டு நாள்தோறும் பிரம்மத் துரோகம், ராஜத் துரோகம், தேசத் துரோகம், தர்மத் துரோகம் முதலான குற்றங்களைச் செய்து கொண்டும், நமது சத்பிரஜைகளாகிய சனாதனிகளையும், வர்ணாஸ்ரமிகளையும் சதா இழிவுபடுத்தியும் இம்சித்தும் வருவதாகத் தென்னாட்டிலுள்ள நமது சிற்றரசர் அறிக்கை செய்வதாலும், மேற்படி குற்றங்கள் முற்றிலும் உண்மையென்று நமது குருதேவர்களும், ரிஷீஸ்வரர்களும், மந்திரி பிரதானிகளும், சமஸ்தான புரோகிதர்கள், ஜோஸ்யர்கள், நிமித்திகர்கள், ஒற்றர்கள் முதலானவர்களால் ருஜுப்படுத்தப்படுவதாலும், கீழ்க்கண்ட அரக்கர்களுக்குத் தர்ம சாஸ்திரங்களில் கூறியபடி கீழ்க்கண்ட தண்டனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இவர்கள் எல்லோரும் இன்று முதல் தர்மராஜ்ய பிரஸ்டர்கள் ஆவார்கள். இவ்வரக்கர்களுக்காவது, இவர்களைச் சேர்ந்தவர்களுக்காவது, நமது நாட்டிலுள்ள பிரஜைகள் ஒருவரும் யாதொரு சகாயமும் செய்யக்கூடாது. இது அரசன் ஆணை. தர்மராஜ்ய விரோதிகளான அரக்கர்களை அழிப்பதற்கு ஒத்தாசை புரியும் நமது பிரஜைகளுக்கு அவரவர் சேவைக்குத் தக்கபடி சன்மானஞ் செய்யப்படும். தேச விரோதிகளென்று பிரஸ்டம் செய்யப்பட்ட அரக்கர்களைப் பற்றிய விவரமும் அவர்கள் ஒவ்வொருவரையும் வீழ்த்துபவர்களுக்கு ஏற்படுத்தியுள்ள சன்மானங்களையும் கீழே குறிப்பிட்டிருக்கிறோம்.

  1. “பொப்பிலி அரக்கன்’ அரக்கர்களுக்கெல்லாம் தலைவன். இவன் குபேரனுக்கு நிகரான சம்பத்துடையவன். பல மாய்கைகள் கற்றவன். வாலியைப் போல் எதிர்ப்பவர் பலத்தையிழுத்துக்கொள்பவன். இராவணனைப் போல் ஏழரைக் கோடி ஆயுள் பெற்றவன். மிகுந்த புஜபல பராக்கிரமம் பொருந்தியவன். எவ்வித ஆபத்துக்கும் சளைக்காதவன். இவனை ஜயிப்பது மிகவும் கஷ்டம். ஆகையால் இவனிடம் யுத்தத்திற்குப் போகிறவர்கள் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவன் செய்து வரும் அக்கிரமங்களுக்கு ஆயிரம் முறை தூக்கிலிட்டுச் சித்திரவதை செய்வதும் போதிய தண்டனையாகாது. இவனிடத்தில் எள்ளளவும் தாட்சண்யமோ, இரக்கமோ கொள்ளக் கூடாது. யாரும் இவனைக் கண்டவிடத்தில் சுட்டுக் கொல்லலாம். இவனை வீழ்த்தி வருபவர்களுக்குப் பதினாயிரம் பொன் பரிசு கொடுப்பதுடன், இந்திர நாட்டுச் சுந்தரிகளில் இஷ்டமானவர்களை மணந்து கொண்டு, கோசல நாட்டில் 19 கிராமங்களை ஜாகீர் பெற்று அரசப் பிரியனாக வாழலாம்.
  2. ஈரோட்டு ராம ராக்ஷசன்: இவனே இந்த அரக்கர்களுக்கெல்லாம் குருவும், தந்தையும் போன்றவன். எண்ண முடியாத மாயாஜாலங் கற்றவன். எவரையும் மயக்கக்கூடிய வாக்குச் சாதுர்யமுள்ளவன். எதற்கும் அஞ்சாத திடமான நெஞ்சம் படைத்தவன். தேவர்களையும், பூசுரர்களையும் எள்ளி நகையாடுபவன். தென்னாட்டில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சிக்கெல்லாம் காரணகர்த்தா இவனே. அனேக வாலிபர்களையும், பெண்களையும் மயக்கித் தன் படையில் சேர்த்து வருபவன். இவன் ஒருவன் ஒழிந்தால் மற்ற அரக்கர்களெல்லாம் எளிதில் அடங்கி விடுவார்கள். ஆகையால் இவனைத் தாட்சண்யமின்றி வதை செய்து வருபவனுக்கு பதினாயிரம் பொன்னும் 16 கிராம மான்யமும், இந்திரலோக மாதர் இருவர்களும் சன்மானஞ் செய்யப்படுவதுடன், வடநாட்டில் ஒன்றின் சிற்றரசப் பதவியும் வழங்கப்படும்.
  3. கோவை ஷண்முகாசுரன் முன் சொன்ன இருவர்களைவிட ஒரு விதத்திலும் இளைத்தவனல்ல, இவன் அதிசூக்கும புத்தி நுட்பமும், அறிவும் படைத்தவன். அத்தோடு திரண்ட ஐஸ்வர்யமும் படைத்தவன். மிலேச்ச நாட்டு ஜனங்களால் பெரிதும் அபிமானிக்கப்படுபவன். இவன் செல்வாக்குப் பெற்றிருக்கும்வரை நமது ராஜ்யத்திற்கு ஆபத்தாகும். ஆகையால் இவனை யாரும் நிர்த்தாட்சண்யமாகக் கண்டவிடத்து வதை செய்யலாம். அவ்வாறு வீழ்த்தி வருபவர்களுக்கு முன் சொன்ன மாதிரியே சன்மானங்கள் வழங்கப்படும்.
  4. சென்னை ராமாசுரன், (5) மதுரைப் பாண்டியாசுரன் இவர்களிருவர்களும் இராக்ஷதப் படையின் தீர்மான தலைவர்கள் எதற்கும் அஞ்சாத வீரர்கள். இந்த அரக்கர் சேனாதிபதிகளை அழித்துக் கொல்பவர்களுக்கு ஐயாயிரம் பொன்னும், பத்துக் கிராம ஜாகீரும், அப்ஸர நாட்டுக் கன்னியர்களில் ஒருத்தியும், தர்ம ராஜ்ய சேனையில் சேனாதிபத்யமும் வழங்கப்படும். மற்றுமுள்ள ராக்ஷதப் படைத் தலைவர்கள் தலைவிகளைப் பற்றிய விவரங்களையும் அவர்களை அடக்குவதற்கு ஏற்படுத்தப்பட்ட சன்மானங்களையும், எல்லாக் கொத்தவால் சாவடிகளிலும் கண்டு கொள்க.

மஹராஜ்! இந்த அறிக்கையை இன்றே நாடெங்கும் விளம்பரஞ் செய்ய வேண்டும். உத்தரவு கொடுப்பீராக.

அர @ சபாஷ் மந்திரி! நீர் வாசித்த இவ்வறிக்கையை நாம் மனமுவந்து அங்கீகரிக்கின்றோம். நமது தர்மராஜ்ய பாதுகாப்புக்காக நமது குருமஹராஜ் செய்துள்ள யோசனைகள் எல்லாம் நமக்குச் சம்மதமேயாகும்.

அரசன் தன் அங்கீகாரத்தைத் தெரிவித்ததும் சபையோர் எல்லோரும் ஜயகோஷம் செய்தனர். தேவர்கள் பூமாரி பெய்தனர். அந்தணர் ஆசி கூறினர்.

ஆனால் இந்த ஆரவாரத்தினிடையே மிலேச்ச ராஜ்ய இரு போலீஸ்களும், சர்ஜண்டுகளும், 4 போலீஸ் சிப்பாய்களும் எப்படியோ மண்டபத்தினுள் வந்து தர்ம ராஜ்ய பூபதியையும், மந்திரிகளையும் பார்த்து, “”உங்கள் நாடகத்தை முடியுங்கள். உடனே எங்களோடு எழுந்து வாருங்கள்” என்று சொல்லவும், சபா மண்டபத்திலிருந்தவர்கள் எல்லாரும் ஒரு வினாடியில் எங்கோ மறைந்துவிட்டனர். மேடையில் இருந்த சிலர் நடுநடுங்கி எழுந்து போலீசார் பின் சென்றனர்.

குடி அரசு  உரையாடல்  06.10.1935

You may also like...