பெண்கள்  நாடு

 

ஆண்களுக்கு  வேலையில்லை

பாலித்தீவு  என்பது  கிழக்கிந்திய  தீவுகளில்  ஒன்றாகும்.  அந்த  நாட்டின்  நடவடிக்கை  மிகவும்  ஆச்சரியப்படத்தக்கதாகும்.  பெண்கள்  எந்த  வேலைக்கும்  லாயக்கற்றவர்கள்;  சமையல்  செய்வதற்கும்,  பிள்ளை  பெறுவதற்கும்  தான்  லாயக்கானவர்கள்  என்று  எண்ணிக்  கொண்டிருக்கும்  முழு  மூடர்களுக்கு  வெட்கத்தை  யுண்டாக்கத்தக்க  நாடாகும்.

அந்தத்  தீவில்,  பெண்மக்களுக்கே  எல்லாச்  சுதந்திரமும்  இருந்து  வருகிறது.  நம்  நாட்டில்  ஆண்  மக்களுக்கு  இருக்கின்ற  எல்லா  உரிமையும்  அந்நாட்டில்  பெண்  மக்களுக்கு  இருக்கின்றது.

அத்தீவில்,  வயலில்  கலப்பை  பிடித்து  உழுவதும்  பெண்மக்கள்.  பிறர்  வயல்களில்  பண்ணையாளாக  இருந்து  வேலை  செய்வதும்  பெண்மக்கள்.  இவ்வாறு பயிர்த்தொழில் வேலை முழுவதையும் பெண்மக்களே செய்கிறார்கள்.

தானியங்களைச்  சந்தைகளுக்கு  எடுத்துக்  கொண்டுபோய்  விற்பனை  செய்து அதன் மூலம் வரும் பணத்தை வரவு செலவு செய்வதும் பெண்மக்கள்தான்.  இந்த  வேலைகளுடன்,  புருஷன்  மார்களையும்,  குழந்தைமார்களையும்  வைத்துப்  பாதுகாத்து  வருகின்ற  வேலையையும்  பெண்மக்களே  செய்து  வருகிறார்கள்.

இன்னும் தென்னைமரம் ஏறுதல், சந்தைகளிலும் கடைகளிலும்  வியாபாரம்  செய்தல் ஆகிய  எல்லாவற்றையும்  பெண்களே  செய்துவருகிறார்கள்.

இவ்வாறு  எல்லா  வேலைகளையும்  பெண்மக்களே  செய்து  வரும்போது  ஆண்மக்களால்  அந்த  நாட்டில்  என்ன  வேலை  நடைபெறுகிறது  என்று  பார்த்தால்,  குழந்தைகளை  உண்டாக்கும்  சிருஷ்டித்  தொழில்  ஒன்று  மாத்திரமே  நடைபெறுகிறது,  இதற்காகவே பெண்களும்  அவர்களை  ஆதரித்து  வருகிறார்கள்.

எப்படி  இருந்தாலும்  பெண்கள்  உடல்  அமைப்பிலேயே  பலவீன மானவர்கள்;  அவர்  ஆண்  மக்களால்  செய்யப்படும்  எல்லா  வேலைகளையும்  செய்ய  முடியாது.  ஆகையால்  பெண்மக்களுக்கு  ஆண்கள்  செய்கின்ற  எல்லா  வேலைகளிலும்  பயிற்சியளிப்பது  கூடாது  என்று  சொல்லுபவர்கள்  இதற்கு  என்ன  சொல்லக்கூடும்  என்று  கேட்கிறோம்.

குடி அரசு  கட்டுரை  10.03.1935

You may also like...