இராசீபுரம் தாலூகா

தாழ்த்தப்பட்ட மக்கள் மகாநாடு

எந்தக் கட்சியிலும் நீங்கள் சேரக் கூடாது என்று சொல்ல வேண்டியவனாய் இருக்கின்றேன்.

உங்களுக்குள் தேசாபிமானம் என்கின்ற யோக்கியமற்ற சூட்சிக்கு நீங்கள் ஆளாகக் கூடாது. அது சோம்பேறிகள், காலிகள் ஆகியவர்கள் பிழைப்புக்கு ஏற்படுத்தப்பட்ட மோக்ஷ நரகம் என்பது போன்ற மூடநம்பிக்கையாகும்.

உங்களுக்கு இன்று சுயமரியாதை அபிமானம் தான் உண்மையாய் வேண்டும். தேசாபிமானம் என்பதைப்போல் அர்த்தம் தெரியாததும் சூட்சி நிறைந்ததுமான வார்த்தை அல்ல நான் இப்போது உங்களுக்குச் சொல்லும் சுயமரியாதை என்கின்ற வார்த்தை. நீங்கள் மனித சமூகத்தில் கீழானவர்களாய் இழி மக்களாய் கருதப்படுகிறீர்கள். மிருகங்களில் மிக மிகக் கீழாகவும், இழிவாகவும், கருதப்படுகின்ற நாய், கழுதை, பன்றி ஆகியவைகளை மதிப்பது போலக்கூட நீங்கள் மதிக்கப்படுவதில்லை என்று உங்கள் வரவேற்புத் தலைவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தீர்கள். அதைத்தான் நானும் சொல்லி அந்தக் காரணத்தாலேயே உங்கள் சமூகத்துக்கு முதலில் சுயமரியாதையையும், மனிதத் தன்மையையும் ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லுகிறேன். இதை நீங்கள் மனதில் கெட்டியாய்ப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய தேசாபிமானம் என்பது உங்களுடைய சுயமரியாதையையும் முற்போக்கையும் தடுப்பதாகவே இருந்து வருகின்றது.

அதற்கு ஆகவே தேசாபிமானம் என்பது கற்பிக்கப்பட்டது என்றுகூட சொல்லலாம்.

காந்தியாருடைய தேசாபிமானத்தைப் பார்த்தாலே மற்றவர்கள் தேசாபிமானத்தின் யோக்கியதையைப்பற்றி நாம் யோசிக்க வேண்டியதில்லை.

வட்டமேஜை மகாநாட்டில் உங்களுக்குத் தனிப் பிரதிநிதித்துவம் ஒதுக்கப்படும் பட்சத்தில் அது தனது தேசாபிமானதுக்கு விரோதமானதென்றும், உயிரைவிட்டாவது உங்கள் தனிப் பிரதிநிதித்துவத்தை ஒழிப்பதுதான் தனது தேசாபிமானம் என்றும் காந்தியார் சொல்லவில்லையா?

அவரை உங்கள் தலைவர் என்றும், அவர் கொண்ட தேசாபிமானம் தான் உங்கள் தேசாபிமானம் என்றும் நீங்கள் ஒப்புக் கொள்ளுவீர்களானால் உங்கள் கட்சி என்ன ஆகி இருக்கும்.

மற்ற தேசாபிமானக்காரர்கள் தங்களுக்கு எந்தெந்த மாதிரி பிரதிநிதித்துவம் கேட்கிறார்களோ அது உங்களுக்கும் கிடைக்கும்படி ஏற்பாடு செய்து இருக்க வேண்டாமா?

கிறிஸ்தவர்கள், முகமதியர்கள், சீக்கியர்கள், நாட்டுக்கோட்டையார்கள் என்கின்ற பிரிவுக்காரர்களும், ஜாதிக்காரர்களும் தனிப்பிரதிநிதித்துவம் பெறும்போது நீங்கள் தீண்டப்படாதவர்களாய் இருக்கிறவர்கள் தனிப் பிரதிநிதித்துவம் பெறுவது தேசாபிமானத்துக்கு விரோதமென்றால் அப்படிப்பட்ட தேசாபிமானத்தின் யோக்கியதையை நான் சொல்ல வேண்டுமா என்று கேட்கின்றேன்.

ஆகவே தேசாபிமானம் என்பதும், சீர்திருத்தமென்பதும், கஷ்டப்பட்டு இழிவுபடுத்தப்பட்ட மக்கள் விடுதலை அடையக்கூடாது என்பதோடு பாமர மக்கள் சீர்திருத்தம்  முன்னேற்றம் அடையக் கூடாது என்பதுமேயாகும்.

அரசாங்கத்தார் வழங்கிய சீர்திருத்தத்தில் உங்களுக்கு சுயமரியாதை உள்ள சீர்திருத்தம் இருந்தது. அதை தேசாபிமான சீர்திருத்தம் என்னும் பூனா ஒப்பந்தம் பாழாக்கிவிட்டது.

பூனா ஒப்பந்தத்தை உங்களில் சிலர் ஆதரிப்பது எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் மிக மிக ஆச்சரியமாய் இருக்கிறது.

அதாவது நீங்கள் மேல்ஜாதிக்காரர்களைப் போய் வோட்டு கேட்க வேண்டுமாம். மேல் ஜாதிக்காரர்கள் உங்களை வந்து ஓட்டு கேட்க வேண்டுமாம். இதில் பரஸ்பர ஸ்நேகம் ஏற்படுமாம்.

இது “”மைனா பிடிக்கின்ற வித்தை”யே ஒழிய இதில் நாணயமோ அறிவுடமையோ இல்லை.

பார்ப்பார் அதிகாரியாய் இருக்கிற கச்சேரிக்குள் நீங்கள் போக வேண்டுமானாலே சர்க்கார் உத்திரவும், பொதுத் தெருவில் நீங்கள் நடக்க வேண்டுமானாலே பினல் கோட் சட்டமும் வேண்டி இருக்கிறபோது நீங்கள் பார்ப்பன அக்கிராரத்தில் நடந்து போய் அவர்கள் வீட்டு வாசல் நடை கடந்து உள் ஆசாரத்தில் படுத்து வயிற்றைத் தடவிக் கொண்டிருக்கும் பார்ப்பானிடம் போய் ஓட்டுக் கேட்க முடியுமா? மற்றும் அதுபோலவே தன்னை மேல்ஜாதிக்காரன் என்றும் உங்களைத் தீண்டத்தகாதவன் என்றும் கருதிக் கொண்டிருக்கும் மற்ற ஜாதியாரிடமாவது நீங்கள் போய் ஓட்டுக் கேட்க முடியுமா?

அவர்களாவது உங்கள் சேரிக்கு எலும்பையும் தோலையும் குப்பையையும் மயிரையும் மிதித்துக் கொண்டு வந்து ஓட்டுக் கேட்டு விடுவார்களா? அவ்வளவு மனமாற்றம் ஏற்பட்டிருக்குமானால் உங்களை கோவிலுக்குள் விடுவதாக வாக்குறுதி கொடுத்து பூனா ஒப்பந்தம் செய்து கொண்ட காந்தியார் இன்று பொது ஜனங்கள் அதற்குத் தயாராய் இல்லை ஆதலால் அது சம்மந்தமாக ஒரு சட்டமும் கொண்டு வரக்கூடாது என்று சொல்ல முடியுமா?

இந்திய சட்டசபைக்குச் சென்ற காங்கிரஸ் தேச பக்தர்களாவது சமூக சீர்திருத்த சம்மந்தமாக எவ்வித சட்டமும் கொண்டுவர முடியாது என்று சொல்லுவார்களா?

ஒரு தோட்டியை விட்டு உங்கள் எல்லோரையும் இழுத்துவரச் செய்து தங்கள் இஷ்டப்படி ஓட்டு போடாவிட்டால் உதைப்பேன் என்று எச்சரிக்கை செய்து வெளிப்படையாய்ச் சொல்லிவிட்டுப் போகும்படி செய்வார்களே ஒழிய உங்களை வந்து ஓட்டுக் கேட்பார்களா?

அப்படியே நீங்கள் கேட்பதாகவே வைத்துக் கொண்டாலும் உங்களில் சுதந்திரபுத்தி உள்ளவர்களுக்கு ஓட்டுப் போட்டுவிடுவார்களா?

அப்படியே போடுகிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும் அதனால் இரண்டு ஜாதிக்கும் அதாவது பற ஜாதிக்கும் பார்ப்பார ஜாதிக்கும் பரஸ்பர நம்பிக்கை ஏற்பட்டு விடுமா?

இன்று பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்றவர்களுக்கு ஒரே தொகுதி இருந்தும் ஒருவருக்கொருவர் ஓட்டுக் கேட்டும் இன்று இரு ஜாதியும் பரஸ்பர சினேகமாய் இருக்கிறார்களா?

இதுவெல்லாம் உங்களை ஏமாற்றச் செய்யும் சூட்சியே அல்லாமல் உண்மையில் நாணயமான காரியமல்ல என்பதை மனதில் இருத்துங்கள்.

இன்று இந்நாட்டில் முகமதியர் இந்துக்கள் என்பவர்களை ஓட்டுக் கேட்காததினாலும் இந்துக்கள்  என்பவர்கள் முகமதியர்களை ஓட்டுக் கேட்காததினாலும் ஒருவரை ஒருவர் தெருவில் விடாமல் உதைத்து விரட்டுகிறார்களா?

ஆகவே நீங்கள் தேசாபிமானம், மகாத்மா என்கின்ற வார்த்தைகளுக்கு உட்பட்டதின் பயனால் உங்கள் சுயமரியாதை வழியைத்தான் அடைத்துக் கொள்ளப் போகிறீர்கள்.

குறிப்பு:            06.10.1935  குடி அரசு  சொற்பொழிவு தொடர்ச்சி.

குடி அரசு  சொற்பொழிவு  13.10.1935

You may also like...