தற்கால அரசியல் நிலை

 

தோழர்களே!

தற்கால அரசியல், ஜஸ்டிஸ் காங்கிரஸ் கட்சிகள், ஜில்லா போர்டு தேர்தலும் அரசியல் கட்சிகளும் என்கின்ற தலைப்புகளானது வெவ்வேறாகக் காணப்பட்டாலும் அவற்றைப் பற்றிய விஷயங்கள் இன்றைய நிலையில் பெரிதும் ஒரே தத்துவமும் ஒரே கருத்தும் கொண்டதாகத்தான் இருக்கிறது.

தற்கால அரசியலானது ஜஸ்டிஸ் காங்கிரஸ் கட்சி போராட்டங்களாகவும், அப்போராட்டங்கள் பெரிதும் தேர்தல்களையும், பதவிகளையும், உத்தியோகங்களையும் பற்றியதாகவும் இன்று அவை குறிப்பாக ஜில்லா போர்டு தேர்தல்களையும் பிரசிடெண்டு பதவிகளையும் பொருத்ததாகவுமே இருக்கின்றன.

அரசியலும் கட்சிப் போர்களும் ஸ்தல ஸ்தாபனங்களில் என்று பிரவேசித்ததோ அன்று முதலே ஸ்தல ஸ்தாபனங்களின் யோக்கியதைகளும் நாணயங்களும் அடியோடு ஒழிந்து யோக்கியப் பொறுப்பற்றவர்களுக்கும் சுயநலக்காரர்களுக்கும் தாயகமாகவும் பிழைப்புக்கிடமாகவும் ஏற்பட்டு விட்டது.

ஸ்தல ஸ்தாபனம்

ஸ்தல ஸ்தாபன நிர்வாகம் சம்மந்தப்பட்ட வரையில் அரசியல் கட்சியும் தேசாபிமான சூட்சியும் பிரவேசிக்கக் கூடாது என்பது எனது வெகுநாளைய அபிப்பிராயம். சுமார் 15 வருஷ காலமாகவே இதை நான் வலியுறுத்துகிறேன். ஸ்தல ஸ்தாபன நிர்வாகங்களைப் பொறுத்தவரை சகல பதவிகளில் இருந்தும் அனுபவம் பெற்றதை ஆதாரமாக வைத்தே சொல்லி வருகிறேன். ஸ்தல ஸ்தாபனம் என்பவற்றிற்கும் அரசியல் கொள்கை என்பதற்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது என்று ஏன் சொல்லுகிறேன் என்றால், ஸ்தல ஸ்தாபனம் என்பது ஒரு கிராமத்தையோ, நகரத்தையோ, ஜில்லாவையோ தான் பொறுத்ததாகும். அதுவும் அவற்றுள் இன்ன இன்ன காரியம் செய்ய வேண்டியது என்பதும், இன்ன விதமாய்ச் செய்ய வேண்டியது என்பதும், இன்ன நிர்வாகத்துக்கு அடங்கி இருக்க வேண்டியது என்பதும், இன்ன சட்டத்திற்கு அடங்கி நடக்க வேண்டுமென்பதும் வரையறுக்கப்பட்டதாகும்.

அதை மீறியோ அல்லது அதை அலட்சியப்படுத்தியோ எந்தக் காரியமும் செய்ய முடியாது என்பதோடு இதற்கு அதிகமான அரசியல் ஞானம் ஒன்றும் தேவையுமில்லை.

ரோட்டுப் போடுவது, ரோட்டுகளை நன்றாய் வைத்திருப்பது, குடி தண்ணீர் வசதி செய்து கொடுப்பது, பள்ளிக் கூடங்கள் ஏற்படுத்தி நிர்வகிப்பது, வைத்தியம், சுகாதாரம் ஆகிய வசதிகள் செய்வது முதலிய காரியங்களே ஸ்தல ஸ்தாபன நிர்வாகமாகும். இதற்கு அந்தப் பிரதேசத்தில் உள்ள அனுபவசாலிகளும், பரோபகார உணர்ச்சியுள்ளவர்களுமே தேவையாகும். இதற்கு ஆக தெரிந்தெடுக்கப்பட வேண்டிய ஒருவரை இவர் காங்கிரஸ்காரரா ஜஸ்டிஸ்காரரா என்று பார்க்க வேண்டியதில்லை.

மேற்கண்ட விஷயங்களைப் பொறுத்தவரை எந்தக் கட்சியிலும் கொள்கை வித்தியாசமில்லை. நிர்வாகத்தில் நாணயக் குறைவு இருப்பதோ அசிரத்தை இருப்பதோ ஓட்டர்களுக்குப் பணம் கொடுப்பதோ, மெம்பர் களுக்குக் கண்ட்ராக்ட்டுக் கொடுப்பதோ மெம்பர்களும், தலைவர்களும் இதில் பணம் சம்பாதிப்பதோ முதலாகிய கெட்ட காரியங்கள் இன்று எந்தக் கட்சியிலும் கொள்கையாக இல்லை.

அபேக்ஷகர் யோக்கியதை

அந்தப்படி ஏதாவது நடக்குமானால் அது தனிப்பட்ட நபர்களின் காரியமே ஒழிய கட்சிக் கொள்கையின் திட்டம் என்று எந்த மடையனும் சொல்ல முடியாது. இந்தக் காரியங்கள் இன்று காங்கிரஸ் கட்சியின் பேராலும் காங்கிரஸ் அபிமானத்தாலும் ஸ்தல ஸ்தாபனங்களுக்கு வந்த அனேக பிரசிடெண்டுகளிடமும், மெம்பர்களிடமும் தாராளமாய் இருந்து வருகிறது. அதை நான் பல தடவை எடுத்துக் காட்டி வந்திருக்கிறேன்.

சென்னை, கோவை முதலிய ஸ்தல ஸ்தாபனங்களில் உள்ள காங்கிரஸ் அங்கத்தினர், தலைவர்கள் ஆகியவர்களுடைய யோக்கியதையே இதற்குத் தகுந்த உதாரணமாகும்.

தேசாபிமானிகள், தேசபக்தர்கள் என்று ஸ்தல ஸ்தாபனங்களைக் கைப்பற்றிய சில தோழர்களுடைய யோக்கியதையை நன்றாய்க் கவனித்துப் பார்த்தால் “”தேசாபிமானம் என்பது காலிகளின் கடைசி வாழ்க்கை மார்க்கம்” என்று சொன்ன அறிஞரின் ஞான மொழி எவ்வளவு சரியானது என்பது எவ்வளவு ஞானமற்றவனுக்கும் விளங்கும். இந்த ஜில்லா போர்டு தேர்தலுக்காகக் காங்கிரஸ்காரர்கள் தங்கள் கட்சி சார்பாய் சில ஆட்களை நிறுத்தி தங்கள் கட்சிக்கே ஓட்டுக்கொடுக்க வேண்டுமென்று பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இதுபோலவே மற்றும் பல இடங்களிலும் செய்து வருகிறார்கள். அப்படிச் செய்வதில் தங்கள் யோக்கியதைகளையும் ஸ்தல ஸ்தாபன விஷயமாய் மற்ற கட்சிக்காரர்களிடம் இல்லாத தங்கள் கொள்கைகளையும் சொல்லியோ அல்லது அதற்குத் தகுதியாகத் தங்கள் நபர்கள் இருப்பதையோ சொல்லிப் பிரசாரம் செய்யாமல் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களை வைவதும் தாங்களே தேசாபிமானிகள் என்றும், அரசாங்கத்தோடு போர்புரிகிறவர்கள் என்றும், ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் தேசத்துரோகிகள் என்றும், அவர்கள் அரசாங்கத்துக்கு அடிமைகள் என்றும், மக்களை ஏமாற்றிவிட்டார்கள் என்றும், தாங்கள் யோக்கியமாய் நடந்து கொள்ளுகின்றவர்கள் என்றும் பாமர மக்களிடம் அயோக்கியத்தனமாய்ப் பேசி விஷமப் பிரசாரம் செய்கிறார்கள்.

தேசாபிமானம்

தேசபக்தி, தேசாபிமானம் என்கின்ற பேச்சே இந்துக்கள் அகராதியில் கிடையவே கிடையாது. புராண காலங்களிலானாலும் மற்ற தமிழ் அரசர்கள் காலங்களிலானாலும் சாஸ்திரம், புராணம், தமிழ் இலக்கிய இலக்கணம் ஆகிய எதிலும் தேசாபிமானம் அரசர்களோடு உரிமைக்கு போராடுதல் ஆகிய வார்த்தைகளே காண முடியாது.

அரசர்களை, கடவுளாகவும், கடவுளவதாரமாகவும், கடவுள் தன்மை பெற்றவர்களாகவும் பாவிக்க வேண்டும் என்பது ஆரியர்களின் சித்தாந்த மாகும். அரசரோடு எதிர்த்தால் அந்நாடும் அந்த நபர்களும் அழிந்து போகும் என்றும் நரகம் கிடைக்குமென்றும் அனேக ஆதாரங்கள் இருக்கிறது.

வேண்டுமானால் ஆரியர்கள் அனாரியர்கள் சண்டைகளும், அபிமானம் துவேஷம் ஆகியவைகளும், ஆரியர்கள் கருப்பு நிறக்காரர்களை ஒழிக்கப் பிரார்த்தனைகளும் சூட்சிகளும் நடந்ததாகவும் அதற்கேற்ற அரசை ஸ்தாபிக்க முயற்சித்து வெற்றி பெற்றதாகவும், வேதம் புராணங்கள் ஆகியவைகளில் காணக் கிடக்கின்றன.

இந்த நாட்டில் ஜாதி மதப் பூச்சாண்டிகளுக்கு யோக்கியதை அற்றுப் போனதோடு அவற்றின் வண்டவாளங்கள் வெளிப்படுத்தப்பட்ட பின்பேதான் தேசாபிமானப் பூச்சாண்டி பார்ப்பனர்களால் கண்டுபிடிக்கப் பட்டதே ஒழிய வேறில்லை.

ஆகவே மக்களை ஏமாற்றப் பார்க்கும் ஒரு தந்திரம் தான் தேசாபிமானமே அல்லாமல் அதில் அருத்தம் கிடையாது.

ஜஸ்டிஸ் கட்சி என்ன கெடுதி செய்தது யாரை ஏமாற்றிற்று

எப்படி இருந்த போதிலும் ஜஸ்டிஸ் கட்சியானது மக்களுக்கு என்ன கெடுதி செய்தது என்பதையும், மக்களை எதில் ஏமாற்றியது என்பதையும், எந்தக் காங்கிஸ்வாதியோ ஏதாவது ஒரு தேச பக்தனோ இன்று விரல் மடக்க முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்.

பொது ஜனங்களை ஏமாற்றிக் காசு பறித்து காலிகளுக்கும் கூலிகளுக்கும் கொடுத்து ஏவி விட்டு வையச் செய்வது தேசாபிமானமாக ஏற்பட்டு விடாது.

ஜஸ்டிஸ் கட்சி பொது ஜனங்களிடம் ஒரு வருஷத்தில் சுயராஜ்யம் வாங்கித் தருகின்றேன் என்று யாரை ஏமாற்றி எத்தனை கோடி ரூபாய்களை வசூல் செய்தது?

இதோ தெரிகிறது சுயராஜ்யம் அதோ தெரிகிறது சுயராஜ்யம்; இன்னமும் கொஞ்சம் பணம் கொடுங்கள் என்று எப்போதாவது சொல்லி யாரை ஏமாற்றிற்று?

கதர் கட்டினால், கைராட்டினம் சுற்றினால் சுயராஜ்யம் வருமென்று அதற்காக எத்தனை லக்ஷ லக்ஷ ரூபாய் வசூல் செய்தது?

ஜயிலுக்குப் போனால் தான் சுயராஜ்யம் வருமென்று எத்தனை பேரை ஜயிலுக்கு அனுப்பிற்று?

உதைபட்டால் அடிபட்டால் தான் சுயராஜ்ஜியம் வருமென்று எத்தனை பேரை அடி உதை படச் செய்தது?

சட்டம் மீறினால், சத்தியாக்கிரகம் செய்தால் சுயராஜ்யம் வருமென்று எத்தனை பேரை சண்டித்தனம் செய்யும்படி தூண்டிற்று.

சர்க்கார் பேரில் துவேஷம் ஏற்படும்படி செய்வதே நமது கடமை என்றும், சட்டசபைகளை பகிஷ்கரிப்பதே சுயமரியாதை என்றும் வீரப் பிரதாபம் பேசிவிட்டு ராஜபக்தி, ராஜ விசுவாச சத்தியம் செய்து கொண்டு எந்தெந்த சட்டசபையில் எங்கெங்கு மானம்கெட்டு உட்கார்ந்து படி வாங்கிப் பிழைத்துத் திரிந்தது?

எந்தெந்தத் தேர்தலில் சமயத்துக்குத் தக்க பொய்யான வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்றவுடன் குட்டிக்கரணம் போட்டது?

எந்தெந்த தேர்தலில் கழுதைகளும் நாயுந்தான் சட்டசபைக்குப் போகும் என்று சொல்லி கழுதைக்கு அட்டை கட்டி ஓட்டுப் போடும்படி கேட்டுவிட்டு இப்போது கழுதைக்கும், நாயுக்கும் பதிலாகப் போய் மண்டி போட்டுச் சலாம் செய்கிறது?

எந்தெந்த சட்டசபைகளை கள்ளுக்கடை என்று சொல்லிவிட்டு இப்போது அந்தச் சட்டசபைகளுக்குக் காசி யாத்திரை போல் போய் தொங்கிக் கொண்டு இருக்கிறது?

இவை ஒன்றும் ஜஸ்டிஸ் கட்சி செய்யவில்லையே?

அது எந்த ராஜாங்கத்தையும் அழித்து விடுவதாகவோ கவிழ்த்து விடுவதாகவோ ஒருவரிடமும் ஒப்பந்தம் பேசி ஒரு காசுகூட அட்வான்சோ, உண்டியல் பிச்சையோ எடுக்கவே இல்லையே.

ஜஸ்டிஸ் கொள்கை

அது ஏற்பட்டதற்குக் காரணமும் அதன் கொள்கையும் ஒரே ஒரு விஷயம் தானே.

அதாவது தேசாபிமானம், சுயராஜ்ஜியம் என்னும் பேரால் மக்களை 35 வருஷ காலம் ஏமாற்றி மோசம் செய்து சுயநலம், சுயவகுப்பு அபிமான நலம் அடைந்து வந்த பார்ப்பனர்களின் பித்தலாட்டத்தை வெளியாக்கி அரசியல் பிரதிநிதித்துவத்திலும், உத்தியோகத்திலும் சகல வகுப்பு மக்களுக்கும் சம உரிமையும், சம சந்தர்ப்பமும் ஏற்படும்படி செய்வது என்னும் கொள்கையையே பிரதானமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது என்பதாகும்.

இந்தக் கொள்கையுடன் ஜஸ்டிஸ் கட்சியை ஆரம்பித்த தலைவர்கள் யார் என்பது பார்த்தாலோ,

வெகுகாலமாகக் காங்கிரசில் இருந்து தேசபக்த பட்டம் பெற்று அரசாங்கக் கண்காணிப்புக்கு ஆளாகி சதா சர்வகாலம் இ.ஐ.ஈ. உத்தியோகஸ் தர்களுக்கு மத்தியில் இருந்த தேசாபிமானி என்று கருதப்பட்ட தோழர் டாக்டர் நாயர் அவர்களாலும், சர். தியாகராயச் செட்டியாராலும் ஏற்படுத்தப்பட்டதே ஒழிய கவர்னராகவும், மந்திரியாகவும், பிரதம காரியதரிசியாகவும் வரவேண்டும் என்று ஆசை கொண்டு சதா நாக்கில் தண்ணீர் சொட்ட விட்டுக் கொண்டிருக்கும் “”தேசீய வீரர்கள்” என்று தங்களுக்குத் தாங்களே தலைமை சூட்டிக் கொள்ளும் நபர்களால் ஏற்படுத்தப்பட்டதல்ல.

ஆகவே இப்படிப்பட்ட ஜஸ்டிஸ் கட்சி அதாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையை நிர்த்தாரணம் செய்யத் தோன்றிய ஜஸ்டிஸ் கட்சியானது எந்த மக்களிடமாவது ஒன்றைச் சொல்லி மற்றொன்றைச் செய்து ஏமாற்றி இருக்கிறதா?

ஜஸ்டிஸ் வாக்குறுதி

ஜஸ்டிஸ் கட்சி எந்த தேர்தலுக்கு நின்றாலும் ஜனங்களிடம் யோக்கியமாய் நாணயமாய் உண்மையைச் சொல்லி அதாவது,

நாங்கள் சர்க்காரிடம் ஒத்துழையாமை செய்ய மாட்டோம் என்றும்,

சட்டம் மீற மாட்டோம் என்றும்,

சட்டத்திற்கும் சமாதானத்துக்கும் களங்கம் ஏற்படும்படி சர்க்காராலும் பொது ஜனங்களாலும் கருதும்படி நடக்க மாட்டோம் என்றும், சீர்திருத்தத்தை உடைக்க மாட்டோம் என்றும்,

அதிக சீர்திருத்தம் பெறவும் மக்களுக்கு நன்மை செய்யவும் மந்திரி வேலையை ஏற்று வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ கொள்கைப்படி எங்களால் கூடியதைத்தான் செய்வோமென்றும்,

பொது ஜனங்களிடம் வாக்குக் கொடுத்துத்தான் ஓட்டு வாங்கி இன்று அந்தப்படி நிர்வாகம் செய்து வருகிறார்களே ஒழிய, அதுவும் இன்று நேற்று அல்லாமல் இந்த 20 வருஷ காலமாய் அதே கொள்கையோடு பொது ஜன ஓட்டுப் பெற்று தொடர்ந்து நிர்வாகம் செய்து வருகிறார்களே ஒழிய  வருஷத்துக்கு ஒரு கொள்கை மாற்றியோ மாதத்துக்கு ஒரு திட்டம் மாற்றியோ பொது ஜனங்களை ஏமாற்றியோ ஏதாவது காரியம் செய்து வருகிறார்களா என்று கேட்கிறேன்.

எதற்கு ஆக ஜஸ்டிஸ் கட்சியைத் தூற்றுவது?

அது செய்த தவறுதல் இன்னது என்றாவது அயோக்கியத்தனம் இன்னது என்றாவது இன்று எந்த மனிதனாவது விரல் விடமுடியுமா என்று கேட்கிறேன்.

பல பொறுப்பற்ற அயோக்கியர்களும் கூலிகளும் காலிகளும் ஜஸ்டிஸ் கட்சி பெண்கள் தாலி அறுத்ததென்றும், தேசாபிமானிகளையும் தேசபக்தர்களையும் அடித்து உதைத்து துன்பப்படுத்திற்றென்றும், வரி குறைக்கவில்லை என்றும், மழை பெய்விக்கச் செய்யவில்லை என்றும் குலைக்கின்றனர்.

இவைகள் எல்லாம் ஜஸ்டிஸ் கட்சிக்கு சம்பந்தப்பட்ட வேலை அல்ல என்பதும் இதற்கெல்லாம் ஜஸ்டிஸ் கட்சி பொறுப்பாளி அல்லவென்றும் அரசியல் அரிவரி படித்த மடையனுக்குக் கூடத் தெரியும்.

ஜாதிப் போரோ கட்சிப் போரோ நடத்துவதாய் இருந்தால் யோக்கியமாய், மானமாய், ஆண்மையாய் வீரர்களைக் கொண்டு போர் நடத்த வேண்டும். ஆனால் இன்று நம் பார்ப்பனர்கள் யோக்கியம், ஆண்மை, மானம், வீரம் ஆகியவைகளை அடியோடு துலைத்து விட்டு மானமற்ற காலிகளையும், எச்சிலை வாழ்வுக்காரர்களையும் பிடித்து இம்மாதிரி தப்பான பிரசாரத்தைக் கொண்டு அதுவும் கல்வி அறிவு என்பது 1000க்கு 50 பேருக்குகூட இல்லாத பாமர மக்களிடையிலும் 1000க்கு 10 பேருக்குக் கூட கல்வி அறிவில்லாத பெண் மக்களிடையிலும் விஷமப் பிரசாரம் செய்து ஏய்ப்பதென்றால் இது மானமுள்ள ஜாதிப் போராட்டமோ ஆண்மையுள்ள அரசியல் கிளர்ச்சியோ ஆகுமா என்று கேட்கிறேன்.

ஜஸ்டிஸ்காரர்கள் ஜெயிலுக்கு போகவில்லை என்று காங்கிரஸ்காரர்கள் சொல்லுகிறார்கள். ஜஸ்டிஸ்காரர்கள் ஜெயிலுக்கு போவதால் பயன் உண்டு என்று கருதினால் காங்கிரசுக்காரர்களைவிட 10 பங்கு பேர் ஜெயிலுக்கு போக முடியும். ஜெயில் என்பது தேள், பாம்பு நிறைந்த இடம் அல்ல.

நானும் 7, 8 தரம் போய்வந்துதான் இருக்கிறேன். அங்கு தேச பக்தர்களுக்கு தினமும் அல்வாவும், அக்காரவடிசலும், நெய்யும், தயிரும், பாலும், கட்டிலும், மெத்தையும், மேஜையும், நாற்காலியும் தாண்டவ மாடுவதை நேரிலேயே பார்த்துத்தான் இருக்கிறேன்.

உண்மை தெரிய வேண்டுமானால் என்னைப் பொறுத்தவரை சர்க்கார் கொடுத்த கட்டிலும், மெத்தையும், நாற்காலியும் மற்ற சில சவுகரியமும் வேண்டாம் என்று தூக்கி வீசி எறிந்துவிட்டு சும்மா இருந்துவிட்டு வந்தேன். வேண்டுமானால் ராஜமேந்திர ஜெயில் சூப்ரண்டுக்கு எழுதி கேட்டுக் கொள்ளலாம்.

தோழர்கள் சத்தியமூர்த்தி முதல் ராகவாச்சாரி வரையில் அவரவர்கள் வீட்டில் அனுபவிக்கும் யோக்கியதைக்கு மேல் 10 பங்கு அனுபவித்து வந்தார்கள்.

இன்றும் ஜெயிலில் போகிற ஆட்களுக்குத் தகுந்தபடி சிபார்சுக்குத் தகுந்தபடி பார்ப்பன சொந்தக்காரர்களுக்குத் தகுந்தபடி காசுக்குத் தகுந்தபடி நடக்கின்ற முறை இருக்கிறது என்பது கிரிமினல் கைதிக்குக் கூடத் தெரியும்.

ஆதலால் ஜஸ்டிஸ் கட்சியாருக்கு ஜெயில் ஒரு பூச்சாண்டி அல்ல என்றே சொல்லுவேன். மற்றபடி காங்கிரஸ்காரர்கள் கும்பல் கும்பலாக ஜெயிலுக்கு போனார்கள் என்று வைத்துக் கொண்டாலும் கடைசியாக தாங்கள் செய்தது தவறு என்று உணர்ந்தோ அல்லது சர்க்காரை ஏமாற்ற என்று கருதியோ “”இனிமேல் அப்படிச் செய்யவில்லை எங்களைத் திறந்து விடுங்கள்” என்று எழுதி காந்தியார் கையொப்பமிட்ட பிறகு வெளியில் வந்தவர்களே ஒழிய காலாவதி கடந்து வந்தவர்களோ அல்லது சுயராஜ்ஜியம் ஏற்பட்டு ஜெயில்களை உடைத்துக் கொண்டு வெளி வந்தவர்கள் அல்ல அல்லது வந்தவுடன் மறுபடியும் ஜெயிலிலே வாசமாய் இருந்தவர்கள் என்றாவது யாரையாவது சொல்ல முடியுமா? என்று கேட்கிறேன்.

காந்தி இர்வின் ஒப்பந்தம் என்ன என்று கேட்கிறேன்.

“”காந்தியார் இனிமேல் சட்டம் மீறக் கூடாது”

“”சர்க்கார் எல்லாரையும் திறந்துவிட்டு விட வேண்டியது” என்பதல்லாமல் அதில் ஏற்பட்ட சுயராஜ்யம் என்ன என்று கேட்கிறேன். அது மாத்திரமா? இன்றைய காங்கிரஸ் தீர்மானம் தான் என்ன?

“”காங்கிரஸ் சட்ட மறுப்பை சத்தியாக்கிரகத்தை நிறுத்தி வைத்து விட்டது (கைவிட்டு விட்டது)” ஆதலால் (பொய்யாகவோ மெய்யாகவோ) “”சட்டமறுப்பில் நம்பிக்கைக் கொண்ட காந்தியார் காங்கிரசை விட்டு விலகிக் கொண்டார்” என்பதல்லாமல் வேறு என்ன?

அன்றியும் சட்டமறுப்பைக் கைவிட்ட பிறகு காங்கிரஸ் சர்வாதிகாரி (காந்தியார்) வைசிராயை தாங்களாகவே வலுவில் பேட்டி காண ஆசைப்பட்டும் பல தடவை ஆசைப்பட்டும் “”பேட்டி கொடுக்க முடியாது” என்று சொல்லியும் காங்கிரசின் சுயமரியாதையானது இந்திய சட்டசபைக்கும் போய் வைசிராயைப் பார்த்து எழுந்து நின்று தலை வணங்க வேண்டும் என்று ஆசைப்பட்டதே ஒழிய மானத்தோடு வாழ முடிந்ததா என்று  யோசித்துப் பாருங்கள்.

“”ஜஸ்டிஸ் கட்சியாருக்கு அவமானம் ஏற்பட்டவுடன் அவர்கள் ஏன் ராஜீனாமா செய்யவில்லை” என்று கூலிப் பிரசாரர்கள் கேட்கிறார்கள்.

ஜஸ்டிஸ் கட்சியார் அவமானப்படும்படியாக அவர்கள் கொள்கை இவ்வளவு மோசமாக எங்கும் தோற்கடிக்கப்படவில்லை.

அன்றியும் தோற்கடிக்கப்பட்டால் வெளியில் வந்து விடுவதாக யாரிடமும் சொல்லவுமில்லை.

ஆனால் காங்கிரஸ்காரர்கள் தீர்மானம் 45 தடவை குப்பைத் தொட்டியில் போடப்பட்டது.

ஒருவருக்காவது சொரணையோ சூடுள்ள ரத்த ஓட்டமோ சிறிதுகூட இருப்பதாகக் காட்டிக்கொள்ள முடியவில்லை.

ஒவ்வொரு அவமரியாதைக்கும் புருஷனைச் சாகக் கொடுத்த பெண் போல் முக்காடு போட்டுக் கொண்டு பிரயாணப்படியை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்வதும் மறுபடியும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஓடுவதுமாய் இருக்கிறார்கள். இவ்வளவு அவமானம் பெற்றும் அந்தப் பதவியை பூணூல் உச்சிக் குடுமி போல் காப்பாற்றுகிறார்கள்.

ஆகவே இவர்கள் எந்த முகத்தைக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சியை குறை கூற முடியும். எனவே தோழர்களே, இப்படிப்பட்ட ஜில்லா போர்டு தேர்தலுக்கு உங்களில் பெரும்பாலோருக்குப் புரியாத கட்சி விஷயங்களால் குழப்பமடையாமல் உங்களுக்கு நேரில் தெரிந்த பொதுநல ஊக்கமுள்ளவர் களையும் பொதுநல வாழ்வில் சுத்தமுள்ளவர்களையும் தேர்ந்தெடுங்கள்.

குறிப்பு:            02.10.1935 ஆம் நாள் முதல் 06.10.1935 ஆம் நாள் முடிய  திருநெல்வேலி மாவட்ட சுற்றுப் பயணத்தின்போது ஆற்றிய  சொற்பொழிவுகளின்  சுருக்கம்.

குடி அரசு  சொற்பொழிவு  13.10.1935

You may also like...