கடனுக்காக சிறையில்லை?

 

கடனுக்காக சிறைக்கனுப்பும் முறையை ரத்து செய்வதற்காக மைசூர் சட்டசபை மெம்பர் ஒருவர் ஒரு மசோதா கொண்டு வந்திருக்கிறார்.

திருவாங்கூர் சமஸ்தான கெஜட்டில் விவசாயிகள் பாதுகாப்புக்காக சர்க்கார் வெளியிட்டுள்ள விளம்பரம் ஒன்று பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதன் சாரமாவது@

இந்த அறிக்கையானது 3 மாத காலத்திற்கு அனுஷ்டானத்திலிருந்து வரும். இதன்படி பந்தக டிக்ரிகளையாவது, அல்லது விவசாயிகள் மீது ஏற்பட்டுள்ள வேறு டிக்ரிகளையாவது  3 மாத காலத்திற்கு நிறைவேற்றி வைக்கக் கூடாதென்று கவர்ன்மெண்டார் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், 6 வருஷங்களுக்கு முன் ஏற்பட்டுள்ள டிக்ரிகளை நிறைவேற்றி வைப்பதாவது, அல்லது விவசாயிகளின் ஜங்கம சொத்துக்களை ஜப்தி செய்வதையாவது இது பாதிக்காது. அதனுடன் காலாவதிக் கணக்கில் இந்தக் காலம் சேராதென்றும் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். விளைபொருள்களின் விலைவாசி மிகவும் குறைவாக இருக்கும் இந்தக் காலத்தில் விவசாயிகளுடைய நிலத்தை ஜப்தி செய்து ஏலத்திற்கு கொண்டு வருவதையோ, அல்லது அவர்களை வாரண்டில் பிடிப்பதையோ தடுக்க வேண்டுமென்பதே இந்த விளம்பரத்தின் நோக்கமாகக் காண்கிறது.

குறிப்பு@ நமது சட்டசபைகளில் பொது ஜன நன்மைக்காக என்று எந்த மசோதா வந்தாலும், அவ் விஷயத்தில் அரசாங்கத்துக்கு இஷ்டமில்லா விட்டால், பொதுஜன அபிப்பிராயத்திற்கு விடுவதாகவும் கமிட்டிகள் நியமிப்பதாகவும் கூறிக் காலங்கடத்துவதே வழக்கமாக இருந்து வருகிறது.

ஆனால், சமஸ்தானங்கள் இது போன்ற காரியங்களில் உடனே நடவடிக்கை யெடுத்துக் கொள்ள முயற்சிப்பதைப் பாராட்டுகிறோம். இனியாவது நமது அரசாங்கமும் சமஸ்தானங்களைப் பார்த்தாவது இது போன்ற விஷயங்களில் கவலையெடுத்துக் கொள்ளுமென்று நம்புகின்றோம்.

(ப.ர்)

குடி அரசு  பத்திராதிபர் குறிப்பு  21.04.1935

You may also like...